Book : The Bridges of Madison County
Author : Robert James Waller
Pages : 171
First Edition : 1992
காதல்வயப்படுவது மிகவும் இயற்கையானது ஆனால் பிரியநேர்கையில் அக்காதலை இறக்கும் வரையிலும் மனதோடு சுமந்து சுகிப்பதென்பது எத்தனை ஆச்சரியமானது. வாழ்க்கையில் எதோ ஒரு புள்ளியில் தன்னை வசப்படுத்தும் ஓர் மனதை சந்திக்க நேர்ந்து, இத்தனை நாள் வாழ்ந்ததும், ஏங்கியதும் இச்சந்திப்பிற்காகத்தான் என உணரும் தருணம் அளவற்ற ஆனந்தத்தை மனது அனுபவிக்கும் அல்லவா? ஆனால் அதை தொடர்ந்து அனுபவிக்க முடியாதென்றும் இனி வாழ்நாளில் எப்பொழுதும் சந்திக்கவோ தொடர்பில் இருக்கவோ முடியாதென்பதும் எத்தனை வேதனையான விஷயம். அவ்வாறு நிகழ்ந்த ஒரு சந்திப்பை சொல்வதே இக்கதை.
45 வயதான பெண்மணி Francesca தன் வீட்டிற்கு அருகில் இருக்கும் பாலத்திற்கு வழி கேட்டு வரும் 52 வயதான Robert Kincaid, புகைப்பட கலைஞரை கண்டதும் ஈர்க்கப்படுகிறாள். அவரும் அவ்வாரே உணர்கிறார். தொடர்ந்து பேசுகிறார்கள், ஒன்றாக வெளியில் செல்கிறார்கள். அவளின் கணவரும் இரண்டு பிள்ளைகளும் வெளியூர் சென்று திரும்ப நான்கு நாட்களாகும் என்பதால் அந்த நான்கு நாட்களும் சேர்ந்தே அவள் வீட்டில் வசிக்கிறார்கள். குடும்பத்தினர் திரும்பி வரும் தினத்தன்று பிரிகிறார்கள். அவள் கணவனிடம் பேசி புரியவைத்து அவளை தன்னுடன் அழைத்துச்செல்வதாக கூறுகிறார். மறுக்கிறாள்…பிறகெப்போதும் தன்னை தொடர்புகொள்ள வேண்டாமென்கிறாள்….பிரிகிறார்கள். என்றாவது தொடர்புகொள்ளவோ சேர்ந்து வாழவோ விரும்பினால் தன்னை தொடர்புகொள்ள வேண்டிய முகவரியையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்துச் செல்கிறார். அவளோ தன் குடும்பச்சூழலையும் பொறுப்புகளையும் உணர்ந்து தொடர்புகொள்ளாமல் இருக்கிறாள். ஆனால் அக்காதல் அவள் வாழ்க்கைக்கு புத்துணர்வைக்கொடுக்கிறது. இறக்கும்வரை தொடர்புகொள்ளாமலே கிட்டதட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக தங்கள் காதலை மனதில் சுமந்து இருவரும் இறக்கிறார்கள்.
சிறிய புத்தகம்….முதல் பாதி வெகு சாதாரணமாக அவர்களின் சந்திப்பை விவரிப்பதாய் அமைந்திருந்தாலும் கடைசி 50 பக்கங்களில் அற்புதமாக முடிக்கப்பட்டிருக்கிறது கதை. அவளை விட்டு பிரிந்து சென்ற பின்னர், Robert Kincaid அவள் நினைவோடு தனித்து வாழ்ந்ததை விவரிக்கும் இடங்களும், இறுதியாக அவளுக்கு எழுதிய கடிதமும் வெகுஅருமை. இக்கதை திரைப்படமாகவும் 1995ல் வெளிவந்துள்ளது.
//காதல்வயப்படுவது மிகவும் இயற்கையானது ஆனால் பிரியநேர்கையில் அக்காதலை இறக்கும் வரையிலும் மனதோடு சுமந்து சுகிப்பதென்பது எத்தனை ஆச்சரியமானது. வாழ்க்கையில் எதோ ஒரு புள்ளியில் தன்னை வசப்படுத்தும் ஓர் மனதை சந்திக்க நேர்ந்து, இத்தனை நாள் வாழ்ந்ததும், ஏங்கியதும் இச்சந்திப்பிற்காகத்தான் என உணரும் தருணம் அளவற்ற ஆனந்தத்தை மனது அனுபவிக்கும் அல்லவா? //
அப்படியா? அதுக்கெல்லாம் குடுத்துவச்சிருக்கனும்
நன்றி அறிமுகத்துக்கு
ஒரு காதல் ஒரு ஜென்மம்!
வாழ்வில் வரும் ஒரு சிறுபொழுது வாழ்வையே வாங்கிக்கொள்வது காதலில் மட்டும்தான்
உங்கள் விமரிசனங்கள் அருமை, வாழ்த்துக்கள்