எழுத்தாளர் சிறுகதை எழுதுவதற்காக மிகுந்த கவனத்தோடு தட்டச்ச தொடங்கினார். சமீபகாலமாக குறுங்கதைகளை எல்லோரும் சிலாகிக்கின்ற போதிலும் இவர் நேர்மையானவரெனின் தான் கதைகளை வெறுப்பதையும் பிரத்யேகமாக குறுங்கதைகளில் அறவே நாட்டமில்லாததையும் ஒப்புக்கொள்வார். இருந்தும் தந்திரங்களை பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டும் சுருங்கச்சொல்வதில் ஆர்வமுள்ள பலரில் தானும் ஒருவரென காட்டிக்கொள்ள வேண்டியதாயிற்று. எனவேதான் அசாதாரணமாக தட்டச்சு பலகையில் நகர்ந்துக்கொண்டிருக்கும் தன் விரல்கள் ஒவ்வொரு வார்த்தையாக உருவாக்கிக்கொண்டிருக்க அவை முழுமையான வாக்கியங்களாக தொடர பதற்றத்துடன் எதைப்பற்றி எழுதுவதென்று கூட தீர்மானித்திருக்காத நிலையில் பார்த்துக் கொண்டிருந்தார். தீர்மானிக்காமலே வெகுதூரம் தொடர்ந்து எழுத்தில் பயணிப்பதென்பது அவருக்கு பழக்கமாகிவிட்டிருந்தது. சிலநேரங்களில் நூறுபக்கங்களை தாண்டிய பிறகே எதை பற்றி எழுதுகிறார் என்ற உணர்வு வரும். பல நேரங்களில் இருநூறுபக்கங்களுக்கு மேலும் விஷயத்திற்கே வராமலும் எழுதியிருக்கின்றார். எழுத்தின் நீளம் என்றுமே அவருக்கு ஒரு தொந்தரவாக இருந்ததில்லை. எத்தனை நீளமோ அத்தனை சிறப்பு, ஒவ்வொரு புதிய வரியும் ஒரு ஆசிர்வாதம். வரிகள் வரிகளாக சேர்த்துக்கொண்டே செல்வது நீளத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் படைப்பின் தகைமையையும் விவரிக்கின்றது. எனவேதான் உண்மையாக கதைக்கு சம்பந்தமே இல்லையென்றாலும் ஒன்று…இரண்டு…..ஏன் ஐம்பது வரிகளுக்கு மேலும்கூட விரித்துச் சொல்லிக் கொண்டிருப்பாரே தவிர ஒருபோதும் சுருங்கச் சொன்னதேயில்லை. அப்படியிருக்க இக்கதையை எழுதுவதற்காக கிட்டத்தட்ட ஒரு அளவுகோலை எடுத்து அளக்க வேண்டியிருந்தது. எத்தனை விபரீதபோக்கு! இது பல மைல்களை சாதாரணமாய் ஓடிக் கடக்கும் தொடர் ஓட்டப்பந்தய வீரரை நூறு மீட்டர் தொலைவு கம்பீரமாக ஓடச்சொல்வது போலுள்ளது. சிறுகதையில் ஒவ்வொரு புதிய வரியும் கூடுதலான ஒரு வரி அல்ல. மாறாக கதையின் வரிகளை குறைக்கும் ஒரு வரி. அதிலும் ‘ஒரு வரியிலிருந்து முப்பது வரிக்குள்’ கதையை எழுதிதரும்படி ஞாயிறு துணை இதழ் பிரிவிலிருந்து தொலைபேசிய வெல்வட் குரல்காரி கூறியதால் குறிப்பாக இக்கதையில் முப்பது வரிகளை குறைக்கும் ஒரு வரி. விருப்பமில்லாமல் விரல்களை தட்டச்சு பலகையிலிருந்து எடுத்துவிட்டு இதுவரை எழுதிய வரிகளை கணக்கெடுத்தார். இருபத்தி மூன்று. நியமித்த எல்லையை அடைய இன்னும் ஏழு வரிகளே உள்ளன. அவருடைய வருத்தத்தை பற்றி எழுதிய வரியும் இவ்வரியும் சேர்த்து இன்னும் எழுத வேண்டிய வரிகள் குறைந்து விட்டன. ஆறு. கடவுளே! எழுதாமலிருக்கும் போது அவருக்கு எந்த ஒரு கற்பனையும் உதிக்காததால் எல்லா யோசனைகளும் மற்றுமொரு வரியை முழுங்கிக்கொண்டிருக்க இருபத்தி ஆறாவது வரியில் இன்னும் நான்கு வரிகளே மீதமுள்ள நிலையில் கதைக்கான கருவை இன்னும் கண்டடையவில்லை என்பதை உணர்கின்றார். கொஞ்ச நேரமாகவே தனக்கு இக்கதையில் சொல்ல எதுவுமே இல்லையோ என்ற சந்தேகம் இருந்தது. பொதுவாக எவ்வாறோ பக்கம் பக்கமாக எழுதி சமாளித்துவிட்டாலும் இப்பாழாய் போன கதை அவரின் திரையை கிழித்துவிடும் அபாயமிருப்பதால் இருபத்தி ஒன்பதாம் வரியை அடையும்போது பெருமுச்செறிந்தார். முழுமையான தோல்வியென இதனை கொள்ளமுடியாத திருப்தியில் கால நேரத்தை பதிவு செய்தார் முப்பதாவது வரியில்.
மூலம் : Quim Monzó – Catalan Language
ஆங்கிலம் வழி தமிழில் : நதியலை
நன்றி : Words Without Borders
நன்றி : காற்றுவெளி மார்ச் 2010 அச்சிதழ்
நல்லாயிருக்குங்க,
நதியில் இருக்கிறது அலை.
ரொம்ப நல்லா இருக்குங்க.
நல்லாயிருக்குங்க
ரொம்ப நல்லாயிருந்தது
நன்றி அகநாழிகை, சுந்தர், ஜெகதீசன் & ரௌத்ரன்
Irumurai paditthapin than ore alavu purindadhu..Kurigiya neratthil varum mudivugal en oru vidhamana padhattatthai kudukkindrana !!!
vaazhga
cu
கதையுடைய நடை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்