Book : We the Living
Author : Ayn Rand
Pages : 446
First Edition : 1936

The Fountain Head உயரத்தில் இப்புத்தகம் இல்லையெனினும் இதையும் அயன் ராண்டின் மிகச்சிறந்த படைப்பென்றே சொல்லலாம்.
ரஷ்ய புரட்சிக்கு பின் நிகழும் சம்பவங்களின் பின்னனியில்…அருமையான கதை, எதிர்ப்பார்த்திடாத முடிவு, கூர்மையான வாக்கிய அமைப்புகள், மனதை உலுக்கும் நிகழ்வுகள், அதை விவரித்த விதங்களென பல அற்புத அம்சங்களை கொண்ட புத்தகம், இதை கதையென்றே பார்க்க முடியவில்லை, ஒரு நிஜ சம்பவமாகவே உணரத்தோன்றுகிறது. கிரா, அவளின் காதலன் லியோ, நண்பன் அண்டிரி இவர்களை சுற்றி பின்னப்பட்ட கதை.
ஒரு ராணுவ அதிகாரியின் மரணத்தில் தொடங்கி கதையில் வரும் அனைத்து மரணங்களும் சொல்லப்பட்ட விதம் மிகவும் அருமை. அம்மரணங்களின் தாக்கத்தை வார்த்தைகளால் நம்முள் சர்வசாதாரணமாக இறக்கிவைத்து அதை கடந்து செல்ல சிரமமாக்கி விடுகிறார் அயன்ராண்ட். மரணத்தையொத்த சம்பவம் ஒன்றும் அதே போல விவரிக்கப்படுகிறது. சைபீரியச் சிறைக்கு அனுப்பப்படுபவர்கள் திரும்பி வருவதில்லை, அங்கு என்ன ஆகிறார்கள் என்ற தகவலும் இல்லை. எதிர்புரட்சி செய்த காரணத்தினால் ஒருவனை பத்து வருடம் சைபீரிய சிறைக்கு அனுப்புகிறார்கள். செல்ல வேறு இடமின்றி மறைவாக இருக்க தன் காதலி ஐரினா வீட்டில் இறுதியில் அவன் தங்கியிருந்ததினால், அவனுக்கு உதவி செய்த காரணத்திற்காக, அவன் செயல்களில் அவளுக்கு எந்த சம்பந்தமும் இல்லையெனினும் அவளுக்கும் பத்து வருட சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. சிறைக்கு செல்லும் முன் கிராவிடம் இவ்வாறாக ஐரினா பேசுகிறாள்
“நான் பயப்படவில்லை…விட்டுவிட்டேன்….எதையோ புரிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் அவ்வளவுதான். ஆனால் அதை எவராலும் விளக்க முடியுமெனத் தோன்றவில்லை. இதுவே என்னுடைய முடிவென எனக்குத்தெரியும். தெரிந்தும் என்னால் இதை நம்ப முடியவில்லை, உணரமுடியவில்லை…வினோதமாக இருக்கிறது. வாழ்க்கை வாழக்கிடைக்கிறது….மிக உன்னதமானது…அரியது…மிகவும் அழகான ஒரு புனிதப்பொக்கிஷத்தைப்போலானது என்றெண்ணி வாழத்தொடங்குகிறோம். யாருக்கும் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாமல் அது இப்போது முடிவடைகிறது. அதற்காக அவர்கள் வித்தியாசமாக நடந்துக்கொள்கிறார்கள் என்றில்லை. எனதான இப்பொக்கிஷத்தை பற்றியும், இதில் புரிந்துக்கொள்ள எதுவோ இருக்கின்றதென்றும் அவர்களுக்குத் தெரியாது அவ்வளவுதான். அது என்னவென்று என்னாலும் புரிந்துக்கொள்ள இயலவில்லை. ஆனால் நம் அனைவராலும் புரிந்துக்கொள்ள வேண்டிய எதுவோ ஒன்று இருக்கிறது…அது என்ன? என்ன?”
அத்தண்டனையை தடுக்க அவளின் தந்தை எல்லா முயற்சிகளும் செய்து தோற்கிறார். பாசமான தந்தை தன் பிள்ளைகள் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதை இவ்வரிகள் உணர்த்தும்.
“இது அத்தனை குதூகலமான இடம் கிடையாது. வாழ்வில் எதையுமே எதிர்ப்பார்க்கவியலா நிலையில் இங்கு தங்களிடம் கடைசியாக எஞ்சி இருக்கின்ற உடமைகளை விற்றுக்கொண்டிருக்கும் அனைத்து மனிதர்களுக்காகவும் நான் வருத்தப்படுகிறேன். ஆனால் என்மட்டில் இது வேறுமாதிரியானது….என் நிலையை நான் பொருட்படுத்தவில்லை. ஏராளமான புதிய பொருட்களை வாங்கிக்கொள்ள எனக்கு காலமுண்டாகும். நான் விற்கவியலாத, இழக்கவும் முடியாத, யாரும் பொதுவுடமையாக்கிவிட முடியாதது என்னிடம் உள்ளது. எனக்கு எதிர்காலமிருக்கிறது, வாழும் எதிர்காலம்….என் குழந்தைகள்.”
சைபீரிய சிறைக்கு செல்லுமுன் தன் காதலனை திருமணம் செய்துக்கொள்ள மகள் ஆசைப்படுவதால் அதை உயர் அதிகாரிகளின் ஒப்புதல் வாங்கி நடத்தி வைக்கிறார். அவர்கள் இருவரும் சைபீரியாவில் வெகு தொலைவில் உள்ள வெவ்வேறு சிறைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள் என்றறிந்து ஒரே இடத்திலிருக்கும் சிறைக்கு அனுப்ப எல்லா முயற்சியும் எடுத்தும் அவளின் தந்தையால் எதுவும் செய்யமுடியாமல் போக, இறுதியாக தன் மகனிடம் இதற்கு உதவி கேட்டு அவன் மறுக்குமிடம் சில்லிடவைக்கிறது.
இக்கதையில் மிகவும் பிடித்த கதாபாத்திரம் ஆண்டிரி. நிதானமான பேச்சும், நேர்மையான குணமும், காதலுக்காக ஏங்குமிடங்களும், அவன் வளர்ந்த விதங்களும், போர்முனையில் அவனுக்கு கிடைத்த அனுபவங்களும் மிக நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கிறது. கிராவுடனான அவனின் உரையாடல்கள் அணைத்துமே சிறப்பானது. அவற்றிலிருந்து சில வரிகள்…
“அவனுடைய வார்த்தைகள் அவளுடைய வார்த்தைகளோடு போராடிக்கொண்டிருந்தது, ஆனால் அவன் கண்களோ அவளுடைய கண்களை உதவிக்கு நாடியது. அவள்…அவன் பேசிய வார்த்தைகளுக்கு ‘இல்லை’ என்றாள் ஆனால் அதை பேசிய குரலுக்கோ ‘ஆமாம்’ என்றாள்.”
“கடவுள் – எப்பெயரை வைத்து கடவுளை அழைக்க நினைத்தாலும் அது அதிகபட்ச சாத்தியத்தின் அவனின் உயரிய புரிதலாகும். எவனொருவன் தன் உயரிய புரிதல்களை தன்னின் சாத்தியத்திற்கு மேலும் மேன்மையானதாக வைக்கிறானோ அவன் அவனை பற்றியும் அவன் வாழ்க்கையை பற்றியும் குறைவாக நினைத்துக்கொள்கிறான். உன் வாழ்கையை பற்றி நீயே உயர்வாக எண்ணுவதும், மிக நல்லதையே, சிறப்பானதையே, சாத்தியப்படுமனைத்தையுமே இங்கு இப்போதே உனக்கு சொந்தமாக்கிக்கொள்ள வேண்டுவதும் எத்தனை அரிய பொக்கிஷமென்று தெரியுமா உனக்கு. சொர்கத்தை கற்பனை செய்துக்கொண்டு அதை பற்றி கனவுகாண்பதில்லை ஆனால் அதை உரிமையோடு கோரவேண்டும். நீயும் நானும் வாழ்க்கையின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம். ஆனால் உனக்கு வாழ்கைக்காக போராடவேண்டும், கொல்லவேண்டும்….வாழ்க்கைக்காக இறக்கவும் வேண்டும், ஆனால் எனக்கோ வாழ்க்கையை வாழ மட்டுமே வேண்டும்.”
“எனக்கு என்ன வேண்டுமென்பதை எப்போதுமே நான் அறிந்துவைத்திருக்கிறேன். உன் தேவைகளை நீ அறிந்திருந்தால் அதை நோக்கியே நீ நகர்வாய். சில சமையங்களில் மிக வேகமாகவும் சில சமையங்களில் ஒரு வருடத்திற்கு ஒரு அடி மட்டுமே எடுத்துவைத்திருப்பாய். வேகமாக நகரும் பொழுது மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கலாம்….எனக்குத் தெரியவில்லை. இதன் வித்தியாசத்தை நான் எப்போதோ மறந்துவிட்டேன். நகர்ந்துக்கொண்டே இருக்கும் பட்சத்தில் இது ஒரு பொருட்டல்ல.”
கிராவின் காதலன் லீயோவின் மருத்துவச்செலவுக்கு பணமில்லை என்பதால் பலரிடமும் உதவி கேட்கிறாள். எல்லா இடத்திலும் உதவி மறுக்கப்படுகிறது. அவள் கடைசியாக ஒர் உயர் அதிகாரியிடம் மன்றாடும் விதம் வாசிக்கும் நமக்கே உதவி செய்ய ஒப்புக்கொள்வாறென எண்ணத்தோன்றுகிறது. ஆனால் சற்றும் எதிர்ப்பார்க்கா விதத்தில் வெகு சாதாரணமாக நிராகரிக்கப்படுவாள்.
எல்லா நேர்மையான வழியும் அடைபடும்போது நேசிப்பவனின் உயிரைக்காப்பற்ற, அவனை எப்படியாவது குணப்படுத்திவிடவேண்டும் என்ற ஆவலில் தன் நண்பன் ஆண்டிரியின் காதலை ஏற்கிறாள். அவனை காதலிப்பதாக நடிக்கிறாள். அவனிடமிருந்து தன் ஏழ்மையான குடும்பத்தின் செலவுக்கென பண உதவி பெறுகிறாள். அதை தன் காதலனனின் மருத்துவச் செலவுக்கு பயன்படுத்துகிறாள். தன்னை அவள் காதலிக்கறாள் என்று அறிந்து ஆண்டிரி மகிழ்கிறான். அவளுக்காக எல்லாம் செய்கிறான். அதில் சந்தோஷம் அடைகிறான் இவ்வாறு…
“இவ்விஷயங்கள் அனைத்தும் இவ்வுலகில் உள்ள எவருக்கும் எந்த அர்த்தத்தையும் தருவதில்லை. ஆனால் எனக்கு தருவதுண்டு. ஒவ்வொரு மணி நேரத்தையும் நோக்கத்தோடு செலவிட வேண்டுமென வாழ்ந்துக்கொண்டிருந்த நான், எனக்காக மட்டும் என்பதல்லாது வேறு எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் இருத்தலுக்கான உணர்வை தீடீரென்று கண்டுபிடிக்கிறேன். இப்படி இருப்பதை பற்றி நான் தர்க்கம் கூட செய்யமுடியாத, சந்தேகிக்க முடியாத, சண்டையிட முடியாத அளவுக்கு எவ்வளவு புனிதமானது இது என்பதை காண்கிறேன். என் சுயசந்தோஷத்தை மட்டுமே நியாயப்படுத்தும் வாழ்க்கை சாத்தியமாகிறதென்பதை அறிகிறேன். பிறகு சட்டென மற்ற அனைத்துமே வித்தியாசமாக தெரிகிறது எனக்கு.”
காதலை நிராகரிப்பதைவிட அதை ஏற்றுக்கொண்டதாக நடிப்பது எத்தனை கொடூரமானது. காதலை தவிர நண்பனின் உதவிபெற வேறு எந்த வழியை தேர்ந்தெடுத்திருந்தாலும் அத்தனை நெருடலாக இருந்திருக்காது. ஆண்டிரி இதை அறியவரும்போது அவனிடன் சென்று பேசுகிறாள். மிக அற்புதமான நான்கைந்து பக்கங்கள் கொண்ட உரையாடல் அவை. ஏன் அப்படி நடந்துக்கொண்டாள் என்பதற்கான விளக்கமாக அமையும் அவள் பேச்சை நிதானமாக கேட்டு தன்னை அவள் காதலிக்கவில்லை என்பது தெரிந்தும் அவளிடம் மிகவும் கரிசனமாக உன் நிலையில் நான் இருந்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பேன் என் காதலுக்காக…..உனக்காக என்று முடியும் அவர்களின் அப்பேச்சு ஆண்டிரியின் கதாப்பாத்திரத்தை மிகச் சிறந்த மனிதனாக காட்டியிருக்கிறது.
ஆண்டிரியாலையே சில குற்றங்களுக்காக லியோ கைது செய்யப்பட்டு, கீராவின் காதலன் என்றறிந்த பின்னர் அவன் முயற்சிகளாலையே மீண்டும் விடுவிக்கப்பட்டவுடன், அவர்களின் வீட்டிற்கு சென்று ஆண்டிரி பேசுமிடம் கிராவின் மேலான அவனின் அதீத நேசத்தை காட்டுகிறது. அவ்விடத்திலிருந்து அவன் கிளம்பி வெளியே சென்றவுடன் அவனிடம் பேச கிரா ஓடுகிறாள். அப்போது அவன்….
“இப்படி இருப்பது நல்லதென உனக்குத்தோன்றவில்லையா. எதையுமே சொல்லிக்கொல்லாமல் நாம் இருவருமே புரிந்துக்கொண்டோம் என்றுணர்ந்து…..நம் மௌனங்களுக்கே விட்டுவிடுவோம். அந்த அளவுக்கு நாம் இப்பொழுதும் மனமொத்து இருக்கிறோமல்லவா?” என்று கூறிவிட்டு செல்லுமிடம் சிலிர்ப்பூட்டுகிறது.
சாதிக்க துடிக்கும் இளம்பெண்…காதலுக்காக காதலனுக்காக வீட்டைவிட்டு வெளியில் வந்து அவனுடன் தங்கி அவன் உடல்நலத்திற்காக நண்பனை ஏமாற்றி காதலனை உயிர்பிழைக்கச் செய்து…நண்பனை இழந்து…அவன் தற்கொலைக்கு தான் காரணமோ என்று வருந்தி…கடைசியில் காதலனையும் பிரியுமிடம் மிகவும் நெகிழ்ச்சியானது. பிரிந்தும் நிலைக்கும் அவளின் காதலும், இத்தனை நிகழ்ந்த பிறகும் தன் லட்சியப்பாதையில் முன்னேறத்துடிக்கும் அவளின் தைரியமும் ஆச்சிரியத்தில் ஆழ்த்துகிறது. இதை அயன்ராண்ட் கிட்டதட்ட தன் சுயசரிதை என்றே கூறுகிறார் முன்னுரையில். இறுதியாக கதை இவ்வரிகளில் நிறைவடையும் போது கனக்கிறது மனது.
“அவள் புன்னகைத்தாள். இறந்துக்கொண்டிருக்கிறாளென அவளுக்குத்தெரியும். இனிமேல் அது ஒரு பொருட்டல்ல. எந்த ஒரு மனித வார்த்தையும் எப்பொழுதும் சொல்லிவிடமுடியாத எதையோ ஒன்றை அவள் அறிந்துக்கொண்டாள். இப்பொழுது அது அவளுக்குத்தெரியும். இதற்காக காத்திருந்தவள் இப்போததை உணர்கிறாள்…இருந்ததைப்போல…வாழ்ந்ததைப்போல. வாழ்க்கையை சப்தமில்லாத துதிப்பாடலைப்போல, ஆழமான சிறிய துவாரத்திலிருந்து பனியில் சொட்டிக்கொண்டிருக்கும் சிகப்பு துளிகளைப்போல, அச்சிகப்பு துளிகள் கசிந்துக்கொண்டிருக்கும் அடிஆழத்தைப்போல உணர்கிறாள். ஒரு கனம் அல்லது முடிவின்மை – எதுவாக இருப்பின் என்ன? வாழ்க்கை, தோற்கடிக்கமுடியாதது, இருந்தது, இன்னும் இருக்கலாம். அவள் புன்னகைத்தாள்…இத்தனை சாத்தியமாயிற்றே என்ற அவளின் கடைசி புன்னகை.”
———————————-
மொழிபெயர்ப்பு கச்சிதமாக வரவில்லையென்பதால் ஆங்கிலவரிகளையும் இடுகிறேன்.
You know, this is not a cheerful place. I feel so sorry for all these people here, selling the last of their possessions, with nothing to expect of life. For me, its different. I don’t mind. What a few knick knacks more or less? I’ll have time to buy plenty of new ones. But I have something I can’t sell and can’t lose and it can’t be nationalized. I have a future. A living future. My children.
His words struggled with hers, but his eyes searched hers for support. She said ‘no’ to the words he spoke, and ‘yes’ to the voice that spoke them.
Because, you see, God-whatever anyone chooses to call God – is one’s highest conception of the highest possible. And whoever places his highest conception above his own possibility thinks very little of himself and his life. It’s a rate gift, you know, to feel reverence for your own life and to want the best, the greatest, the highest possible, here, now, for your very own. To imagine a heaven and then not to dream of it, but to demand it. You see, you and I, we believe in life. But you want to fight for it, to kill for it, even to die-for life. I only want to live it.
Well, I always know what I want. And when you know what you want- you go towards it. Sometimes you go very fast, and sometimes only an inch a year. Perhaps you feel happier when you go fast, I don’t know. I’ve forgotten the difference long ago, because it really doesn’t matter, so long as you move.
And all those things, they have no meaning for anyone on earth, but me, and when I’ve lived a life where every hour had to have a purpose, and suddenly I discover what its like to feel things that have no purpose but myself, and I see suddenly how sacred a purpose that can be so, that I cant even argue, I cant doubt, I cant fight it, and I know, then, that a life is possible whose only justification is my own joy-then everything, everything else suddenly seems very different to me.
I’ve given up and I am not afraid. Only there’s something I would like to understand. And I don’t think anyone can explain it. You see, I know it’s the end for me. I know it, but I can’t quite believe it, I can’t feel it. Its so strange. There is your life. You begin it, feeling that its something so precious and rare, so beautiful that its like a sacred treasure. Now its over, and it doesn’t make any difference to anyone, and it isn’t that they are indifferent, its just that they don’t know, they don’t know what it means, that treasure of mine, and there’s something about it that they should understand. I don’t understand it myself, but there’s something that should be understood by all of us. Only what it is? What?
Kira, don’t you think its better –like this? He whispered. ‘If we don’t say anything –and just leave it to….to our silence, knowing that we both understand, and that we still have that much in common?
She smiled. She knew she was dying. But it did not matter any longer. She had known something which no human words could ever tell and she knew it now. She had been awaiting it and she felt it, as if it had been, as if she had lived it. Life had been, if only because she had known it could be, and she felt it now as a hymn without sound, deep under the little hole that dripped red drops into the snow, deeper than that from which the red drops came. A moment or an eternity- did it matter? Life, undefeated, existed and could exist. She smiled, her last smile, to so much that had been possible.
Read Full Post »