Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கவிதையென்றும் சொல்லலாம்’ Category

களஞ்செதுக்குதல்

நம்பிக்கைகள் பொய்த்துப்போன
ஓர் உச்சி வேளையில்
நினைவுகளில் நீந்தவும்
திராணியில்லாமல்
களஞ்செதுக்கப்படுகிறது
 
திரளும்
அன்பையும் வெறுப்பையும்
உணர்ந்து கொள்ள
சிறு கால அவகாசமோ
இடைவெளியோ
தேவையாய் தான் இருக்கின்றது
 
மண்வெட்டிகளின் அவசியம்
உணரும் போது
இறுக்கங்களை தளர்த்தும்
மண்புழுக்கள்
பிரதானப்படுவதேயில்லை 

********************************

தூண்டாவிளக்கு 
 
பதில்களுக்கான கேள்விகளற்றும்
தீர்மானங்களுக்கான சிந்தனைகளற்றும்
விரிந்து கொண்டுள்ள
எழுத்தின் இயல்புகளை 
ரகசியங்களென்று
திரிக்கத் தெரிந்திருக்கிறது
யாவருக்கும். 
 
காலங்காலமாய்
தூண்டாவிளக்குகள்
எரிந்து கொண்டேதானிருக்கின்றன
 
எல்லா விழித்தலிலும்
பார்த்தல் சாத்தியம் என்கிறீர்கள்
 
நகர்ந்து கொண்டிருக்கிறது
விழித்த பகல் சிரித்தபடி

 

Read Full Post »

இலைகள் உதிரா மரம்
 
இருக்கத்தான் செய்கின்றது
எல்லோரிடத்தும்
ஓர் கதை
 
பொதுவில் சொல்லவும்
மறைத்துச்சொல்லவும்
ரகசியமாய் சொல்லவும்
தனக்குள் சொல்லிக்கொள்ளவும்
 
அதன்
வடிவமும் முடிவும்
மட்டுமே மாறி மாறி
வதைபட்டுக்கொண்டிருக்க
 
இலைகள் உதிரா
மரக்கிளைகளைக் கொண்ட
உணர்வுகளற்ற
நீர்த்த வெளியில்
துள்ளுவது
எதுவாக இருந்துவிடமுடியும்?

Read Full Post »

தாழ்வாரங்களை தாண்டி
வீட்டினுள் நுழைந்திட்ட
ஒன்றிரண்டு அட்டைகளை
காண நேரிடும்
அடைமழைக்காலத்து
பின்னிரவு பொழுதுகளில்
ஈரம் உலறாத
உடைகளின் வாடை
நாசியை நிறைக்க
உள்ளுக்குள் தேங்கி
விசும்புகின்ற எண்ணங்களை
கோர்த்து வலைப்பின்னி
சிக்கிய ஜீவன்களை
சிதைத்துக்கொண்டிருக்கும்
மனதினை
புறம் தள்ளி
காப்பாற்றுவதற்காகவாவது
துரோகம் பாவம்
இன்னபிறவற்றை
காலைக்கென ஒத்திவைக்க
பழகவிடு

Read Full Post »

காட்டழல் 
 

காரணம் அறியாமல் பெருகும் கண்ணீருக்கு
ஆதரவாய் எனையே  நாடுகிறாய்

துளைவழி கேட்கும் உனது கேவல்கள்
மரண ஓலத்தை நினைவூட்டி
அச்சுறுத்துகின்றன

உடனிருந்து அழும்போது
பகுத்துப்பார்க்கத்தெரிந்த மனதிற்கு
தொலைவொலி
பதறச்செய்வதாகவேயிருக்கின்றது

காற்றை மட்டுமே
போர்த்தி வாழும் இவ்வாழ்வில்
யாவும் கைகூடுமென்ற
என் அபத்த ஆறுதலுக்கான மறுமொழிகளை
எப்போதும் தயாராகவே வைத்திருக்கின்றாய்

எனினும்
காட்டழல் பாகுபாடின்றி
அனைத்தையும் சேர்த்தழிக்கும்
வித்தை அறிந்ததென்று
அமைதியாகின்றேன்

Read Full Post »

அடர்கருப்பில் ஊரடங்கி
வான் பூத்து ஒளிரும் நேரம்
துடைத்து மெழுகி
திடமாய் வைத்திருக்கும் பரப்பில்
சாம்பலாய் சுழன்று பரவும் 
சக்கர நினைவுகளை
நிறம் மாற்றுமென்
பிரயத்தனங்கள் அறிந்து
அவை
நான் நெருங்கவியலா
மலையடிவார
புற்களினடியில் 
தஞ்சம் புகுவதை
ஊறும் எறும்புகள்
பார்த்துச் சிரிக்கின்றன

Read Full Post »

இதுவும் அதுவுமல்லாத
பிற எதுவாகினும்
அவை நம்மை
இட்டுச்செல்லும்
அருவியின் சாரலுக்கும்
பறவையின் கூட்டிற்கும்
.
.
.
பின்
ஓர் அற்புத
மரணத்திற்கும்

Read Full Post »

என்றுமே நிறைந்திடாத
உள்ளடுக்குகளின் இருப்பை
எவ்விடுக்குகளிலும்
கசிய விடாது
பத்திரப்படுத்துமென்
விழிப்புணர்வை
அறிந்தே அவளும்
ஊற்றிச்சென்றாள்
அவை 
பாறைகளில்
திட்டுத்திட்டாக தேங்கி
காற்றுக்கு தளும்பும்
மழைநீராகின்றது

Read Full Post »

செடிகளும் மரங்களும்
மண்ணரிப்பைத் தடுக்குமென்று
நீரூற்றி
உரமிட்டு
பதமாக வளர்த்த
மரங்களின் கிளைகளை
தன் இருப்பை உணர்த்தியபடி
அசைத்துக்கொண்டிருக்கும் காற்று  
கண்ணாடி சன்னல் வழி 
பார்த்துக் கொண்டிருக்குமெனக்கு
ரகசியமாய் கூறிற்று
மண்ணிற்கு
எவ்வேரிடத்தும்
அகப்பட்டுவிடாமல்
தான் அலைக்கழிக்கும்
திசை நகர்ந்து கொண்டிருக்க
விருப்பமென்று

Read Full Post »

சிலிர்ப்போடும் சலிப்போடும்
நாளும் எதிர்ப்படும் 
மனிதர்களில் 
பலருக்கும்
பலதாக இருக்க
அது
மலைக்கோயிலின்
செங்குத்தான படிகளை  
மூச்சுத்திணற
சிரமப்பட்டு ஏறி
நடுநிசியில் உச்சி அடைய
அவ்விடம் சூழ்ந்திருக்கும்
மௌனமாகிறது
எனக்கு
 

Read Full Post »

image-1
கல்தூண்களை துளைத்து
வெளிவரும் விழிகளுக்கு
உழுது பயிரிட்டும்
விளைநிலமாகாது
பாளம் பாளமாக வெடித்த
வெற்றிடங்களே
காணக்கிடைக்கின்றதெனினும்
அந்தியில்
பறவைகள் எப்போதும்
தம் கூடுகள் நோக்கியே
பறக்கின்றன
 

Read Full Post »

Older Posts »