Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கஸோ இஷிகுரோ’ Category

அன்றாட அலுவல்கள் நெறிக்கும் அவசரச் சூழல்களில் உழன்றுக் கொண்டிருக்கும் பலருக்கும் எதிர்கொள்ள வேண்டிய பணிகளில் மட்டுமே கவனமிருக்க கடந்தவைகள் கடந்தவையாகவே நிலைத்துவிடலாம். ஓடிக்கடக்கும் காலங்களில் தற்செயலாக சில தினங்கள் சிறு அவகாசம் கிடைத்தால் தன் வாழ்நாளில் காலம் ஆசிர்வதித்த அல்லது நிராகரித்த பல கணங்கள் நினைவிலிருந்து துளிர்க்கும். அத்தகைய நினைவுகளில் மூழ்கி புதிய பரிமாணங்களோடு தொடரும் நினைவோட்டத்தில் எல்லாவித உணர்வுகளும் கலந்திருக்கக்கூடும். ஓய்விற்கு பிறகு தொடரவேண்டிய ஓட்டத்தில் இவ்வுணர்வுகள் தடங்கள்களாக மாறும் அபாயங்களும் உண்டு.

கஸோ இஷிகுரோ எழுதிய The Remains of the day முதிர்ந்த வயதில் அபூர்வமாக தனக்கு கிடைத்த ஆறு நாட்கள் ஓய்வில் அவர் மேற்கொள்ளும் பயணமும், பயணத்தினூடாக அவர் சந்திக்கும் இடங்களும், மனிதர்களும், அனுபவங்களும் கொண்டும் நகரும் நிகழினூடே கடந்தவைகளும் கதையாக பகிரப்பட்டிருக்கின்றன. வேலை வேலை என்று தன் காலம் அனைத்தையும் யாரோ ஒருவருக்காக உழைத்து கழித்துவிட்ட பிறகும் எஜமானருக்கு விஸ்வாசமாக இருந்ததிற்காக பெருமிதம் கொள்ளும் அந்த முதியவரின் மனநிலையை வாசிக்க சற்று ஆயாசமாகவே இருந்தது. இன்றைய சூழலுக்கு இவையெல்லாம் அந்நியபட்டே நிற்கின்றன.

1989 ஆண்டு புக்கர் பரிசை வென்ற இந்நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. புத்தகத்தை விட திரைக்கதை இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்றே தோன்றுகின்றது. சொல்லப்படாதவைகளை எழுத்தின் வாயிலாக உணர்ந்துக்கொள்வதைவிட திரையின் வாயிலாக உணர்ந்துகொள்வது இன்னும் அதிக அழுத்தத்தை தரக்கூடும். இப்புத்தகம் அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றபோதிலும் வாசிப்பை பாதியில் நிறுத்திவிடத் தோன்றவில்லை. ‘கைட் ரன்னர்’ புத்தகத்தின் பக்கக்குறி ஆரம்ப சில பக்கங்களில் இருந்ததை பார்த்த தோழி இதை இன்னும் வாசிக்கவில்லையா என்றதற்கு படம் பார்த்துவிட்டதால் வாசிக்கப்போவதில்லையென்றேன். இது தவறான அனுகுமுறை என்றும் முதலில் புத்தகத்தை வாசித்துவிட்டு பிறகு அதை திரைப்படமாகவும் பார்ப்பது நல்ல அனுபவமாக இருக்குமென்றாள். இம்முறை இதை நடைமுறைபடுத்திப் பார்க்கவேண்டும்.

இங்கிலாந்தில் போர் சூழலுக்கு முந்தைய காலகட்டங்களில் நிகழும் இக்கதை பல வித அரசியல் கூறுகளோடும், தனிமனித நேர்மை, விஸ்வாசம், கடமையுணர்ச்சி என பலவற்றை தொட்டுச்செல்வதோடு, எது தன்மானம் என்பதையும் அதன் வரையரைகளையும் கால மாற்றத்திற்கும் மனித குணங்களுக்குமேற்ப அது வித்தியாசப்படுவதையும் கதைசொல்லியின் வாயிலாக விரிவாக பேசுகின்றது. பல ஆண்டுகள் கழித்து தன்னுடன் வேலை செய்த பெண்மணியை பார்க்க பயணிக்கும் ஆறு நாட்களை ஒவ்வொரு நாளையும் ஒரு பகுதியாக காலை, மதியம், மாலை என விவரித்து கொண்டே வந்து அவளை சந்தித்த ஐந்தாம் நாளை மட்டும் விழுங்கிவிட்ட போக்கு அருமையாக இருந்தது. நான்காம் நாளுக்கு பிறகு ஆறாவது நாளில் அவளுடனான சந்திப்பும் உரையாடலும் ஒரு நினைவாகவே தொடரும்போது உணரப்படாதவைகளும் உணர்த்தப்படாதவைகளும் என்றென்றைக்கும் அவ்வாறே நீடித்துவிடுவதே சில சந்தர்ப்பங்களில் நல்லதென்றே தோன்றியது. காலம் கடந்து அறியப்படும்போது ‘after all, there’s no turning back the clock now’ என்ற சப்பைக்கட்டை மட்டுமே ஆறுதலுக்காக சொல்லிக்கொள்ள முடியும்.

2005ல் வெளியான இவரது ஆறவது நாவலான ‘Never Let me Go’ ‘The Remains of the day’ விட அதிகமாகவே பிடித்திருந்தது. கிளோனிங்கால் உருவான மனித உயிர்களை பற்றிய அறிவியல் புனைவு இது. எந்த ஒரு அறிவியல் விவரங்களுக்குள் நுழையாமலும் அதே சமயம் அவர்கள் சந்திக்க நேரிடும் அபாயங்களை நுட்பமாக விளக்கியும் அதனூடே முக்கோணக்காதல் கதையை அறிவியலோடு கலந்து அளித்திருக்கின்றார் கஸோ இஷிகுரோ. இதிலும் கதை சொல்லியான ஒரு க்ளோனின் வாயிலாக அவர்களின் சிறுவயது முதல் சராசரி குழந்தைகள் போல் அவர்கள் வளர்க்கப்படும் விதத்திலிருந்து துவங்கி படிப்படியாக வளர்ந்து இறுதியில் தங்கள் உறுப்புகளை தானம் செய்து மடிகின்றவரை அமைதியான நதியைப்போல நகர்கின்றது இக்கதை.

இவர்களின் உருவாக்கம் பற்றியோ அல்லது எப்படி மரணிக்கின்றார்கள் என்பது பற்றியோ பேசாமல் இவர்களின் இடைப்பட்ட காலத்தை மட்டுமே பேசியிருக்கின்றது. இவர்களின் மரணத்திற்கு கூட death என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ‘complete’ என்றே சொல்லியிருக்கின்றார். அதே போல் ‘deferral’, ‘carer’, ‘possible’ போன்ற வார்த்தைகளும் கூட வேறு பரிமாணங்கள் கொண்டவை. அவர்களின் உறுப்புகளை தானம் கொடுப்பதற்காகவே அவர்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றார்கள், சிலருக்கு ஒன்றிரண்டு தானங்கள் வரையே தாக்குப்பிடிக்க முடியும், சிலருக்கு நான்கு வரை கூட கொடுக்க இயலும், அவர்களால் உடல் உறவு கொள்ளமுடியும் ஆனால் பிள்ளைகளை பெற முடியாது போன்ற தகவல்கள் அவர்களின் பருவத்திற்கேற்ப படிப்படியாக அவர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் சில செய்திகள் வதந்திகளாகவும், சில கற்பனைகளாகவும் அவர்களிடம் உலாவுகின்றன. கதையின் முற்பகுதி விளையாட்டாக நகர பிற்பகுதி கதையின் ஆரம்பத்தில் நிலவிய பல புதிர்களுக்கு விடைகளாகமாறி அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இவ்விறு கதைகளிலுமே பல ஆண்டுகள் கடந்த பிறகு நடந்த சம்பவங்களை கதை சொல்லி திரும்பிப்பார்ப்பதாகவே அமைத்திருக்கின்றார் இஷிகுரோ. கதைசொல்லியின் நினைவிலிருந்து சொல்லப்படும் சம்பவங்கள் எவ்வித வரையரைகளுக்கு உட்படாமலும் அதே சமயம் எல்லாவித உணர்வுகளுக்கு உட்பட்டும் எழுதுவது விருப்பமானதாக இருக்கின்றதென்கின்றார். Remains of the day கதாபாத்திரத்தின் நினைவுகள் சில முக்கிய நிகழ்வுகளை, தவறுகளை, தவறவிட்ட தருணங்களை, குற்ற உணர்வுகளை நினைவு கூறுகின்றது. ஆனால் Never let me go கதாபாத்திரத்தின் நினைவுக்கூறல் மிகுந்த கருணைமிக்கவை. அந்நினைவுகள் அவளுக்கு ஒரு ஆறுதளாக நிம்மதியாக தேற்றுதலாக அமைகின்றது. தனக்கு நெருக்கமாக தன்னுடனிருந்தவர்கள் ஒவ்வொருவராக மடிந்துபோக தன்முன் இருக்கும் வெறுமை உலகில் அவளுக்கு துணையாக இருப்பது அந்நினைவுகளே என்கிறார்.

Never let me go வின் கதை களம் மிக நுட்பமானதும் முக்கியமானதும் கூட. ஆனால் அவை மிக மேலோட்டமாகவே கையாளப்பட்டிருக்கின்றது. கதைசொல்லியின் வாயிலாக விரியும் இக்கதை அவள் அறிந்த தெரிந்துக்கொண்ட சிறு பகுதியை மட்டுமே கதையாக உருவாக்கியிருக்கின்றது. இவர்களை உருவாக்கும் அமைப்பை பற்றியோ அவற்றின் செய்லபாட்டு முறைகளோ பேசப்படவில்லை. உறுப்புகளின் தானத்தை பற்றி மீண்டும் மீண்டும் பேசப்பட்டாலும் அவைகளின் outline மட்டுமே கூறப்படுகின்றது. சிகிச்சைகளும் அதில் ஏற்படும் சிக்கல்களும் ஓரிரு வரிகளில் அடங்கிவிடுகின்றன.

‘Times’ தேர்வு செய்த நூறு சிறந்த நாவல்களில் ‘Never let me go’ இடம்பெற்றுள்ளது. 2005 புக்கர் தேர்வு பட்டியலில் இந்நாவலும் இருந்தது. ஆனால் தற்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் John Banville ‘The Sea’ நாவல் புக்கர் பரிசை வென்றது. கடந்த ஆண்டு ‘Never Let me go’ திரைப்படமாகவும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இஷிகுரோவின் பிற படைப்புகள் A Pale view of hills, An artist of the floating world, The Unconsoled & When we were orphans. 2000 ஆம் ஆண்டு புக்கர் பரிசு தேர்வு பட்டியலில் When we were orphans இருந்தது. இஷிகுரோ இரு படங்களுக்கு திரைகதையும் எழுதியிருக்கின்றார் – The Saddest Music in the World & The White Countess. ஆறு நாவல்களுக்கு பிறகு 2009ல் Nocturnes சிறுகதை தொகுப்பு வெளியானது. இதிலுள்ள ஐந்து சிறுகதைகளுமே இசையுடனும் இரவுடனும் தொடர்புடையது.

நன்றி : 361˚ சிற்றிதழ்

Read Full Post »