Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சித்தர் பாடல்கள்’ Category

பிறப்பதும் இறப்பதும் பிறந்திடா திருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
இறப்பதும் பிறப்பதும் பிறந்தவீ டடங்குமே
– சித்தர் சிவவாக்கியர்

சித்தர் பாடல்கள் பரம்பொருளை மனதில் வைத்து எழுதிய பாடல்கள் எனினும் நிறைய பாடல்கள் காதல் உணர்வுகளுக்கும் மிகப்பொருத்தமாக இருக்கிறது.  உதாரணத்திற்கு இப்பாடல் எத்தனை அழகாய் காதல் நிறைந்த உள்ளத்தை பாடுவதாக அமைந்திருக்கிறது. காதல் பிறப்பதும் இறப்பதும், பிறக்காமலே இருப்பதும், அதை மறப்பதும் நினைப்பதும்…மறந்ததை மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்ளுதளும், அவற்றை மீண்டும் துறப்பதும் தொடுப்பதும், சுகித்து உட்கொள்ளுதலும்…இறப்பதும் பிறப்பதும்…..இவை அனைத்தும் அவனுள் அடக்கமே. 

நெஞ்சு படபடக்கிறது
நீர்வீழ்ச்சியென்று
அருவியை
யாராவது
சொல்லிவிட்டால்…
– விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன் மணிவிழா பற்றி குங்குமம் வார இதழில் வந்த பதிவு இணையத்தில் வாசிக்க கிடைத்தபோதுதான் இந்தக்கவிதை அறிமுகமானது.  ஏராளமான கவிதைகள் இருந்தும் இக்கவிதையை அவரை பற்றிய குறிப்புடன் இட்டிருக்கிறார்களே ஏனென முதல் வாசிப்பில் எண்ணத்தோன்றியது.  .
ஏன் இந்தப்படபடப்புன்னு யோசிக்கும்போது புரிந்தது…அருவியை நீர்வீழ்ச்சி என்பது எத்தனை அபத்தமானது.  வீழ்வதெல்லாம் வீழ்ச்சி அல்லவே.  விழுதலும் எழுதலும் நகர்தலும் தொடர்தலும் வாழ்வின் இயல்பாகிப்போனப்பிறகு பிரம்மாண்டமாக கொட்டும் அருவியை எங்ஙனம் நீர்வீழ்ச்சியென்று அழைப்பது.

பத்திரத்துக்கு
முந்தின இரவில் போட்டதை
அணைக்க விட்டுப் போயிருக்கலாம்.
திங்கட்கிழமை முதல்பஸ் பிடித்து
வேலைபார்க்க வெளீயூர் போகிற
அப்பாவை வழி அனுப்பிய மகள்
அடுப்பில் பால் பொங்க
ஓடிப்போயிருக்கலாம்
அயத்துப் போய்.
அதிகாலையில்
வாசல் தெளிக்க ஏற்றி
‘கோலம் நல்லா வந்த’
நிறைவில்
குதுகலமாக மறந்து
போயிருக்கலாம்.
புதிதாக புழங்கும்
விருந்தினர் யாரோ
விசிறிக்கு அழுத்திய பொத்தானில்
வெளியே இந்த
விளக்கு எரிவது தெரியாமல்
அறைக்குள் இருக்கலாம்.
உச்சி வெய்யிலில்
தெருவில் போகிற எனக்கு
உறுத்திக் கொண்டிருக்கிறது
ஒரு வெளிச்சத்தில்
இன்னொரு வெளிச்சம் தோற்பது.
-கல்யாண்ஜி (தொகுப்பு : அந்நியமற்ற நதி)

ஒரு வெளிச்சத்தில் இன்னொரு வெளிச்சம் தோற்பது எத்தனை சோகமான விஷயம்.  மறதியால் நிகழ்ந்ததெனினும், ஒரு வெளிச்சம் இன்னொரு வெளிச்சத்தால் தோற்கடிக்கபடுவது அவலம் இல்லையா.  ஒன்றைவிட மற்றொன்று பெரியதாக வருமெனில் அங்கே ஒன்று தோற்றுத்தான் ஆகவேண்டும்.  ஆச்சரியம் என்னவெனில் தோற்கடிக்கப்பட்ட வெளிச்சம் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டே இருப்பினும், என்றுமே வெளிச்சமாகவே, வேண்டிய பொழுதுகளில்  வெளிச்சம் கொடுத்துக்கொண்டே நிலைக்கும். 

உடைந்த
இரு ஐஸ் துண்டுகள்
மெல்லத் திரும்பிவிட்டன
தம் பூர்வீக வெளிகளுக்கு

அறியக்கூடும்
இந்த ஆகாயமோ
இந்தக் காற்றோ
இந்தக் கடலோ
உடைந்த இரு ஐஸ் துண்டுகளின்
ஏகாந்தமான தொடுதல்களை

நாமிருந்தோம்
அவல சாட்சிகளாய்

ஒரு ஐஸ்கட்டியின்
நுண்ணிய முறிவுகளுக்கு

ஒரே கோப்பையில்
அருகருகே மிதக்க வேண்டியிருக்கும்
அதன் நிர்பந்தங்களுக்கு

பாதி மூழ்கி
பாதி எழும்
மீள முடியாத
அதன் விதிகளுக்கு

எப்படி நெருங்கி வந்தாலும்
ஒட்ட இயலாத
அதன் உடல்களுக்கு

நம் சில்லிட்ட கைகளோடு
– மனுஷ்ய புத்திரன் (தொகுப்பு – இடமும் இருப்பும்)

இயலாமைகளும், கட்டாயங்களும், முறைமைகளும், கசந்த கடமைகளும் சூழ்ந்த நிர்ணயிக்கப்பட்ட வாழ்வை அவலத்துடன் வாழ்ந்து உருகி வடிவிழக்கும் அவதியை ஐஸ்கட்டியின் முறிதல்கள் அழுத்தமாக உணர்த்திச்செல்கிறது.  ‘ஒரே கோப்பையில் அருகருகே மிதக்க வேண்டியிருக்கும் அதன் நிர்பந்தங்களுக்கு’, ‘பாதி மூழ்கி பாதி எழும் மீள முடியாத அதன் விதிகளுக்கு’, ‘எப்படி நெருங்கி வந்தாலும் ஒட்ட இயலாத அதன் உடல்களுக்கு’   அடடா…மனிதவாழ்க்கையையல்லவா சுட்டுகின்றது இவ்வரிகள். 

Entering the forest he moves not the grass
Entering the water he makes not a ripple. 
அவன்
வனத்தில் நுழையும்போது
புற்கள் நசுங்குவதில்லை
நீரில் இறங்குகையில்
சிற்றலையும் எழுவதில்லை
– ஜென் கவிதைகள்  (தமிழில் யுவன் சந்திரசேகர், தொகுப்பு : பெயரற்ற யாத்ரீகன்)

அவன் எந்த மனதில் பிரவேசித்தாலும் அங்கு அவன் சின்ன காயத்தையோ சலனத்தையோ கூட ஏற்படுத்தாதவன் என்ற மென்மையை சொல்கிறது.

அவன் பேச்சில…..சொல்ல விழையும் கருத்துக்களில் எம்மனமும் புண்படுவதே இல்லை என்ற அவனின் திறமையை….சஞ்சலமுறச்செய்யாத அவனின் நேர்த்தியை சொல்கிறது

அவன் வரவின் சுவடோ எங்குமே பதியப்படாமல், எந்த மனதிலும் அவனுக்கான அலைகள் எழாமல்…அவன் நிராகரிக்கப்படுவதை சொல்கிறது.

ஒரு கவிஞன் அங்கீகரிக்கப்படாமல் போனதை….புறக்கணிக்கப்பட்டதை சொல்லும்விதமாகவும் இருக்கிறது. 

நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இன்னும் எத்தனை வண்ணத்துப்பூச்சியை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறதோ இக்கவிதை.  இதை போல் பலபொருளை தன்னுள் தாங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு கவிதை.

நிசப்தம்
விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன் விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன
– வா. மணிகண்டன் (தொகுப்பு – கண்ணாடியில் நகரும் வெயில்)

இக்கவிதையை வாசித்துமுடித்த நொடியில் தோன்றியது இதுதான்…..இரவில் கிழிந்த மனதிற்கு எவ்வளவோ சமாதானம் சொல்லிமுடித்தப்பின்னரும் எழும் மனக்கூச்சலை வலிந்து அடக்கி அமைதியாக்க முற்பட்டு நிசப்தம் நிரம்பி வழிய, அக்கையறு நிலையில் நிதானமாக கண்களிலிருந்து கண்ணீர் உதிர்க்க துவங்குகின்றது. 

எந்த சமரசத்துக்கும் இடம்தராத
கலகக்காரனின் வேடத்தை அணிந்துகொண்டேன்
நினைவின் கிடங்கிலிருந்து
என் குழந்தையின் புன்னகைக் கீற்றினை
எடுத்துக்கொண்டேன்
இதுவரை எழுதப்படாத பாடல் ஒன்றை
எழுதி வைத்துக் கொண்டேன்
ஆறுதல் செய்யவியலாமல்
கிளைக்கும் அச்சத்தை
அடக்கிக்கொண்டேன்
இன்றிரவு நிகழவிருக்கும்
வெறுமையை எதிர்க்கவென
– முபாரக்

ஒரு மரணம் அல்லது பிரிவு நிகழ்ந்த பின் தொடரப்போகும் முதல் இரவில் வெறுமையின் கோரக் கைகள் எத்தனை கொடூரமாய் தாக்கிச் சிரிக்கும்.  அறிந்தே நிகழும் வெறுமையை போராடி தோற்கடிக்கவும் முடியுமா?  வெறுமையை வேறு எதை கொண்டு நிரப்பினாலும், எதிர்த்தாலும், வெறுத்தாலும் நம்மை குதறாமல் அது விடப்போவதென்னவோயில்லை.  எனினும் தோற்கடிக்கப்படவேண்டிய ஆயத்தங்களை செய்துக்கொண்டே இருக்கிறோம்.  அது நம்மை முட்டாளாக்கி இன்னும் கொடூரமாகத்தாக்கி திக்குமுக்காடவைக்கும்.

இங்கிருந்து நான் போன
பின்னும்
சம்பங்கிப்பூ பூக்கும்
வேருக்குள்
எவ்வளவு வைத்திருக்கிறதோ

வானம் நீருற்றும்வரை
வாடி
அதற்குப்பின்னும் துளிர்த்து
சம்பங்கிப்பூ பூக்கும்
– தேன்மொழி (தொகுப்பு : இசையில்லாத இலையில்லை)

ஒரு நிரந்தர நீங்குதல் உண்டாக்கும் வேதனை படாரென்று தாக்கி மெல்ல மனதினுள் பரவும். ஆரம்பத்தில் தாங்கிக்கொள்ளக்கூடியதாகவே தோன்றும்.  வேருக்குள் தங்கியிருக்கும் நீர் கொடுக்கும் தைரியத்தில் வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் நாட்கள் நகரும்.  தேக்கிவைத்த நீர் வரண்ட நேரத்தில் மீண்டும் நீரூற்றிய கரத்திற்கு ஏங்கிவாடும். இயற்கை கருணையோடு நீர்வார்க்கலாம்…அதிகம் பொழிந்து வேரோடு சாய்த்து அழிக்கலாம்.  தேவைக்கேற்ப ஊற்றிய கரங்கள் போலாகாதெனினும் பிறகரங்கள் ஊற்றும் நீருண்டு மீண்டும் துளிர்க்கலாம்.  நீங்கிய கரத்தின் ‘பூக்கும்’ என்ற நம்பிக்கையிற்காகவும், நீங்கிய கரம் குற்றவுணர்விலிருந்து மீளவும் மீண்டும் பூப்பதாய் பூத்துக்காட்டலாம். 

நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று
பந்தமின்றி வீடுமின்றி பாவகங்கள் அற்றது
கந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே
– சித்தர் சிவவாக்கியர்

எப்போதுமே நிலையாக நின்றதன்று, இருந்தன்று, எதிர்பட்டதன்று, கூறமுடியுமானதன்று, பந்தமற்று, வீடற்று, உருவமற்று, மணமற்று, கேள்வியற்று கேடில்லாத மனவானிலே முடிவற்று நிற்குமொன்றை எப்படி விளக்குவேன்.

Read Full Post »

உடம்புயிர் எடுத்ததோ உயிருடம் பெடுத்ததோ
உடம்புயிர் எடுத்தபோது உருவமேது செப்புவீர்
உடம்புயிர் இழந்தபோது உயிரிறப்ப தில்லையே
உடம்புமெய்ம் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே! (1)

ஆதியான தொன்றுமே அநேகநேக ரூபமாய்
சாதிபேத மாயெழுந்து சர்வசீவ னானபின்
ஆவியோடு ஆடுகின்ற மீண்டுமிந்த சென்மமாம்
சோதியான ஞானியர்க்குஞ் சுத்தமா யிருப்பரே. (2)

மலர்ந்ததாது மூலமாய் வையக மலர்ந்ததும்
மலர்ந்தபூ மயக்கம்வந் தடுத்ததும் விடுத்ததும்
புலங்களைந்து பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இனங்கலங்கி நின்றமாயம் என்னமாய மீசனே. (3)

உயிரும் நன்மையால் உடலெடுத்து வந்திருந்திடும்
உயிருடம்பு ஒழிந்தபோதில் ரூபரூப மாயிடும்
உயிர்சிவத்தின் மாய்கையாகி ஒன்றையொன்று கொன்றிடும்
உயிரும்சக்தி மாய்கையாகி ஒன்றைஒன்று தின்னுமே. (4)

நெட்டெழுத்து வட்டமே நிறைந்தபல்லி யோனியும்
நெட்டெழுத்தில் வட்டமொன்று நின்றதொன்று கண்டிலேன்
குட்டெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தில் வட்டமொன்றில் நேர்படுமவ் வீசனே. (5)

Read Full Post »

அவ்வெனும் எழுத்தினால் அகண்டுயேழு மானதும்
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றதும்
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்
அவ்வுமுவ்வு மவ்வுமாய் அமர்ந்ததோ சிவாயமே. (1)

அவ்வுதித்த மந்திரம் அகரமாய் உகரமாய்
எவ்வெழுத் தறிந்தவர்க் கெழுபிறப்ப திங்கில்லை
சவ்வுதித்த மந்திரத்தைத் தற்பரத் திருத்தினால்
அவ்வுமுவ்வு மவ்வுமாய் அமர்ந்ததோ சிவாயமே. (2)

மூன்றுமண்ட லத்திலும் முட்டிநின்ற தூணிலும்
நான்றபாம்பின் வாயிலும் நவின்றெழுந்த வட்சரம்
ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றுமோர் எழுத்துளே சொல்லவெங்கு மில்லையே. (3)

மூன்றும்மூன்றும் மூன்றுமே மூவர்தேவர் தேடிடும்
மூன்றும்மஞ் செழுத்துமாய் முழுங்குமவ் வெழுத்துளே
ஈன்றதாயு மப்பரும் எடுத்துரைத்த நாதமய்
தோன்றுமண்ட லத்திலே சொல்லவெங்கு மில்லையே. (4)

நவ்விரண்டு காலதாய் நவின்றமவ் வயிறதாய்
சிவ்விரண்டு தோளதாய் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் எழுந்துநின்ற நீர்மையால்
செவ்வையொத்து நின்றதோ சிவாயமஞ்செ ழுத்துமே. (5)

அவ்வெழுத்தி லுவ்வுவந் தொகாரமும் சனித்ததோ
உவ்வெழுத்து மவ்வெழுத்து மொன்றிலொன்று நின்றதோ
செவ்வையொத்து நின்றலோ சிவபதங்கள் சேரலாம்
இவ்வையொத்த ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே. (6)

Read Full Post »

விண்ணிலுள்ள தேவர்கள் அறியொணாத மெய்ப்பொருள்
கண்ணிலாணி யாகவே கலந்துநின்ற எம்பிரான்
மண்ணிலென் பிறப்பறுத்து மலரடிகள் வைத்தபின்
அண்ணலாரும் எம்முளே அமர்ந்து வாழ்வதுண்மையே. (1)

அறத்திறங் களுக்கும்நீ அண்டமெண் திசைக்கும்நீ
திறத்திறங் களுக்கும்நீ தேடுவார்கள் சிந்தைநீ
உறக்கம்நீ உணர்வுநீ உட்கலந்த சோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறைவதேது மன்றுளே. (2)

விண்கடந்து நின்றசோதி மேலைவாச லைத்திறந்து
கண்களித்த உள்ளுளே கலந்துபுக் கிருந்தபின்
மண்பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
என்கலந்த ஈசனோடு இசைந்திருப்ப துண்மையே. (3)

உருத்தரிப்ப தற்குமுன் உடல்கலந்த தெங்ஙனே
கருத்தரிப்ப தற்குமுன் காரணங்க ளெங்ஙனே
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு தெங்ஙனே
குருத்திருத்தி வைத்தசொல் குறித்துணர்ந்து கொள்ளுமே! (4)

அக்கரம் அனாதியோ ஆத்துமம் அனாதியோ
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ
தக்கமிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ
தற்பரத்தை ஊடறுத்த சற்குரு வனாதியோ. (5)

நாலொடாறு பத்துமேல் நாலுமூன்று மிட்டபின்
மேலுபத்து மாறுடன் மேவிரண்ட தொன்றவே
கோலியஞ் சனைத்துளே குருவிருந்து கூறிடில்
தோணுமேனி நாதமாய்த் தோற்றிநின்ற கோலமே. (6)

ஐயன்வந்து மெய்யகம் புகுந்தவாறது எங்ஙனே
செய்யதெங் கிளங்குரும்பை நீர்புகுந்த வண்ணமே
ஐயன்வந்து மெய்யகம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தரோடு வாய்திறப்ப தில்லையே. (7)

நட்டதா பரங்களும் நவின்றசாத் திரங்களும்
இட்டமான ஓமகுண்டம் இசைந்தநாலு வேதமும்
கட்டிவைத்த புத்தகம் கடும்பிதற்று இவையெல்லாம்
பெட்டதாய் முடிந்ததே பிரானையான் அறியவே. (8)

உருக்கலந்த பின்னலோ உன்னைநான் அறிந்தது
இருக்கிலென் மறக்கிலென் நினைத்திருந்த போதெல்லாம்
உருக்கலந்து நின்றபோது நீயும்நானும் ஒன்றலோ
திருக்கலந்த போதலோ தெளிந்ததே சிவாயமே. (9)

அல்லிறந்து பகலிறந்து அகபிரம்மம் இறந்துபோய்
அண்டரண்ட மும்கடந்து அநேகநேக ரூபமாய்
சொல்லிறந்து மனம்இறந்த சுகசொரூப உன்மையைச்
சொல்லியாற என்னில்வேறு துணைவரில்லை யானதே. (10)

உம்பர்வான கத்தினும் உலகுபார மேழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
எம்பிரானை யல்லது ஏற்றமிக்க தில்லையால்
எம்பிரானை யல்லது தெய்வமில்லை யில்லையே. (11)

பூவிலாய ஐந்துமாய்ப் புனலில்நின்ற நான்குமாய்த்
தீயிலாய மூன்றுமாய்ச் சிறந்தகாலி ரண்டுமாய்
வேயிலாய தொன்றுமாய் வேறுவேறு தன்மையாய்
நீயறாமல் நின்றநேர்மை யாவர்காண வல்லரே. (12)

அந்தரத்தில் ஒன்றுமாய் அசைவுகாலி ரண்டுமாய்
செந்தழல்கள் மூன்றுமாய் சிறந்தஅப்பு நான்குமாய்
ஐந்துபாரி லைந்துமாய் அமர்ந்திருந்த நாதனைச்
சிந்தைவைத் திருந்ததை யாவர்காண வல்லிரே. (13)

நீரிலே முளைத்தெழுந்த தாமரையி னோரிலை
நீரிலே கூடிநின்றும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப்ப ராபரம்
பாரிலே கூடிநின்ற பண்புகண்டி ருப்பிரே. (14)

தங்கியே தரித்தவச்சு நாலுவால் துளையதாம்
பொங்கியே எழுந்ததந்தப் புண்டரீக வெளியிலே
அங்கியுட் சனித்தபோது வடிவினுள் ளொளியுமாய்
கொம்புமேல் வடிவுகொண்டு குருவிருந்த கோலமே. (15)

வாடிலாத பூமலர்ந்து வண்டினோசை நாலிலே
ஓடிநின் றுருவெடுத் துகாரமா யலர்ந்ததும்
ஆடியாடி அங்கமு மகப்படக் கடந்தபின்
கூடிநின் றுலாவுமே குருவிருந்த கோலமே. (16)

மின்னெழுந்து மின்பரந்து மின்னொடுங்கு மாறுபோல்
என்னுணின்ற என்னுளீசன் என்னுளே யடங்குமே
கண்ணுணின்ற கண்ணினீர்மை கண்ணறி விலாமைபோல்
என்னுணின்ற என்னியானை யானறிய வில்லையே. (17)

மண்கிடார மேசுமந்து மலையிலேறி மறுகுவார்
எண்படாத காரியங்க ளியலுமென்று கூறுவார்
தம்பிரானை நாள்கடோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடிவாழ்வ தில்லையே. (18)

தந்தைதாய் தமரும்நீ சகலதே வதையும்நீ
சிந்தைநீ தெளிவுநீ சித்திமுத்தி தானும்நீ
வித்துநீ விளைவுநீ மேலதாய வேதம்நீ
எந்தைநீ இறைவநீ யென்னை யாண்டஈசனே. (19)

பரமுனக்கு எனக்குவேறு பயமுமில்லை பாரையா
கரமுனக்கு நித்தமும் குவித்திடக் கடமையான்
சிரமுருக்கி அமுதளித்த சீருலாவு நாதனே
புரமெனக்கு நீயளித்த உண்மையுண்மை உண்மையே. (20)

Read Full Post »