Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘திரைப்படம்’ Category

Magonia

Magonia

பல்வேறான முடிச்சுக்களால் பிணைக்கப்படும் உறவுகளின் உணர்வுகளை அழுத்தமாய்ச்சொல்லும் வெவ்வேறு மூன்று கதைகளை உள்ளடக்கமாய்க் கொண்ட இந்த டச்சுத்திரைப்படம் 2001ஆம் ஆண்டில் வெளிவந்தது. அன்பை, நெகிழ்வைப் பேசும் படைப்புகள் அனைவருக்குமே மிக நெருக்கமானவையாகத்தான் இருக்கமுடியும். மூன்று கதைகளுமே ஒரு தந்தை தன் சிறு மகனை சந்திக்கும்போது கூறுவதாக அமைந்திருக்கிறது. ஒன்றிற்கொன்று தொடர்பில்லாத கதைகள் எனினும் அவை மூன்றுமே மனம் நெகிழச்செய்யும் உணர்வுகளைக்கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது.

1.

தினமும் பள்ளிவாசலில் ஓதுவதற்கு ஒரு முதியவரை முதுகில் சுமந்துச் செல்கிறான் அவ்வீட்டில் இருக்கும் பெண்ணை காதலிக்கும் ஒர் இளைஞன். ஓதும் வரை அவரை தாங்கிப்பிடித்து நிறுத்தி பின் மீண்டும் அவரை வீட்டிற்கு சுமந்து செல்கிறான். வயதாகிவிட்டதால் ஓதும்போது குரல் கரகரத்து இடையில் இருமலுடம் மிகுந்த சிரமங்களுடனேயே அவர் இப்பணியை விடாது மேற்கொண்டு வருகிறார். மக்கள் அவர் ஓத்தத்துவங்கிய உடனேயே காதுகளை அடைத்துக்கொண்டு வீட்டினுள் சென்று கதைவுகளை அடைக்கின்றனர்.

பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டுவரும் இறைபணியை, தனதான கடமையாக்கிக்கொண்ட வேலைகளை செய்ய உடல் ஒத்துழைக்காமல் போகும்போது ஏற்படும் வேதனையை அம்முதியவர் தன் கண்களில் தேக்கி வைத்திருக்கிறார். இப்பணியை அவர் தொடர்ந்து செய்ய வேண்டாம் எனச்சொல்லவோ அவரை தடுத்து நிறுத்தவோ இயலாமல் தவிக்கும் அப்பெண்ணின் சங்கடங்களும், முதியவரிடம் பேசி அவருக்கு விளங்கவைக்கவும், நமக்கு பிடித்தமானவற்றை சமயங்களில் விட்டுவிலகவேண்டிய கட்டாயத்தையும் உணர்த்த முயற்சிக்கும் இளைஞனின் தெளிவும், இருவரும் முதியவர் மேல் வைத்திருக்கும் அன்பும் மரியாதையும் அருமையான வசனங்களால் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

ஒருகட்டத்தில் தன் வீட்டில் இருக்கும் பெண்ணே அவர் ஓதும் சப்தம் தாளாமல் காதை பொத்திக்கொண்டதை கண்டு ஓதுவதை முதியவர் நிறுத்த இளைஞன் ஓதத்துவங்குகிறான். பின் நிகழும் சம்பவங்களெல்லாம் உடையப்போகும் மனங்களில் அடுக்கடுக்காக ஏற்றிவைக்கப்படும் பாரமாக அதிகரித்துக்கொண்டுவந்து காதலர்களின் பிரிவில் முடிவடைகின்றது.

2.

மலைபிரதேசத்தில் இயற்கை எழிலை காண சுற்றுலா மேற்கொள்ளும் மத்தியவயதை கடந்த தம்பதியர்களின் வாகனம் பழுதுபடவே அவர்கள் பயணம் தடைபடுகின்றது. கணவன் வாகனத்தை பழுதுபார்த்துக்கொண்டிருக்க, தற்செயலாக வந்தடைந்துவிட்ட இடத்தை சுற்றிப்பார்த்து அதன் அழகை ரசிக்கிறாள் மனைவி. சற்று தள்ளி உயரமான இடத்தில் ஒரு வீடு தென்படவே அங்கு செல்கின்றனர்.

ரம்மியமான சூழல், எளிமையான வீடு, ஆடம்பரமற்ற நகர்வு, அங்கு வசிக்கும் இளைஞன் மற்றும் வயதானவரின் வாழ்க்கை முறை ஆகியவற்றைக் கண்டு லயித்துப்போகிறாள். இவர்கள் தான் உண்மையான வாழ்கையை வாழ்கிறார்களோ என்று எண்ணுகிறாள். அவ்விடத்தில் அடுப்பை பற்றவைக்கக்கூட புராதன முறையில் நெருப்பை உண்டாக்குவதை கண்டு வியக்கிறாள்.

வேறு எதையோ தேடிப்போக எதிர்ப்பாராத ஆசுவாசம் கிடைக்கப்பட்டவளாய் நிம்மதி அடைகிறாள். உறக்கம் வராத நிசப்தமான இரவில் அங்கிருக்கும் இளைஞன் பாடத்துவங்க அவன் நெஞ்சில் புதைந்து அவள் அழும் காட்சி ஓர் அற்புத கவிதையெனலாம். பாடலின் மொழி புரியாவிட்டாலும் நம்மையும் நெகிழ்த்துக்கின்றது அப்பாடல். இக்கதையும் உறவுகள் என்றுமே சந்திக்கவிரும்பாத எதிர்ப்பாரா பிரிவைக்கொண்டே முடிக்கப்பட்டிருக்கின்றது.

3.

ஆறாண்டுகளுக்கு முன் வந்துச்சென்ற ஒரு மாலுமிக்காக காத்திருக்கும் காதலியின் இக்கதை ‘இயற்கை’ தமிழ்ப்படத்தின் கதையைக்கொண்டு முடிவு மட்டும் வேறுவிதமாக அமைந்திருக்கின்றது.

காதலன் திரும்பி வருவதற்கான எந்த நிச்சயமும் இல்லாமல் போனாலும் நிச்சயம் திரும்பி வருவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, அவனுக்கான காத்திருப்பு தரும் வேதனை, பிறரின் பரிகாசங்கள் தரும் வலி, தான் விரும்பி நேசிக்கும் ஒருத்தி இன்னொருவனுக்காக ஏங்கி காத்திருக்கும் சோகம், அவளை விட்டு விலக நேரும் அதிர்ஷ்ட்டமின்மை என பல சங்கடங்களை கொண்டு நகர்கின்றது இக்கதை.

ஒருவனுக்காக காத்திருத்தல் என்பதை அப்பெண் தனக்கான பாதுகாப்பு கவசமாக அணிந்துக்கொள்கின்றாளோவெனத் தோன்றியது. ஆறாண்டுகள் இல்லாமல் போனவனை மறந்து இன்று பிரிந்துப்போனவனுக்காகக் காத்திருக்கத்துவங்குவதாக முடிக்கப்பட்ட இக்கதையும மென்மையான நெகிழ்வுகளைக் கொண்டு சொல்லப்பட்டிருக்கின்றது.

**

தந்தை மகனுக்கு சொல்வதாக அமைந்த இம்மூன்று கதையில் வரும் தந்தை மகன் உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் இறுதியில் சந்திப்பது பிரிவையே. அதுவும் இக்கதையின் இறுதி காட்சிகள் சற்றும் எதிர்ப்பார்க்காதவை. சட்டென படம் முடிவடைந்து விட்டதும் திரையை சிலகணங்கள் வெறித்து அமரச்செய்துவிட்டது. கதையாக சொல்லப்படாது நிகழ்வாக நகரும் தந்தை மகன் பற்றிய கதை மற்ற மூன்றைவிடவும் அதிரச்செய்தது.

அழுத்தமான அடர்த்தியான வசனங்கள், அருமையான காட்சிப்பதிவு, மீண்டும் கேட்கத்தூண்டும் பாடல், அன்பான உள்ளங்கள் என நிறைவைத்தரும் அனைத்தையும் கொண்டுள்ள இப்படம் ‘வாழ்வின் நிலையான பாசங்கள் எல்லாம் அவற்றை விட்டுப்பிரிந்து செல்லும் போதே அவற்றின் நெருக்கமும் உறவும் பலப்படும்படி இருக்கும்’ என்ற நா. பார்த்தசாரதியின் வரிகளை நினைவூட்டியது.

படம் – Magonia
இயக்குனர் – Ineke Smits
மொழி – Dutch
வெளியான வருடம் – 2001
விருதுகள் – மூன்று

நன்றி : அகநாழிகை சமூக கலை இலக்கிய இதழ் – அக்டோபர் 2009

Read Full Post »

the-match-factory-girl_000எவ்விதமான சலனங்களோ, களிப்புகளோ, ஆரவாரங்களோ, நண்பர்களுடனான விவாதங்களோ, அரட்டைகளோ, இல்லாத ஒரே மாதிரியான இயந்திர வாழ்வு எத்தனைச் சலிப்பு மிக்கதாய் இருக்கும்!. அதுவும் இளமைக்காலங்களில் அத்தகையத் தனிமை ஒரு சாபமே. அவளுக்கான வாழ்வும் அத்தகையதே. தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை, பேருந்து பயணம், பயணத்தின் துணையாக புத்தகங்கள், வீடு திரும்பியதும் சமையல் மற்றும் பிற வேலைகள், கிளப், பியர் மீண்டும் மறுநாள் காலை தொழிற்சாலை. தொடரோட்டமாக இப்படியே நகர்ந்துக்கொண்டிருக்கும் வாழ்வில் அவள் புன்னகைக்க கூட காகித மாந்தர்கள் மட்டுமே உதவுகின்றனர்.

சம்பளம் வாங்கிய நாளில் கடையில் பார்த்த தனக்குப் பிடித்த உடையை வாங்கிக்கொண்டதற்கு தாய் அவளை அடித்தும், தந்தை அதை திருப்பி கொடுத்துவிட்டு வரும்படி அதட்டியும் கேளாமல் அவ்வுடை அணிந்து கொண்டு கிளப்பிற்குச் செல்கிறாள். அங்கு ஒருவன் அவளிடம் வந்து அவளை தன் இருப்பிடத்திற்கு அழைத்துப் போகிறான். அடுத்தநாள் காலை அவள் படுக்கைக்கு அருகில் இருக்கும் மேசையில் பணம் வைக்கப் பட்டிருக்கிறது. அவள் அவ்வீட்டைவிட்டு கிளம்பும் முன் தன் தொடர்பு எண்ணை எழுதி தன்னை அழைக்கும்படி குறிப்பெழுதி வைத்து விட்டு வந்துவிடுகிறாள்.

அதுவரை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தவளுக்கு அவனின் வருகை மாற்றங்களை அளிக்கிறது. அவன் தன்னை தொடர்பு கொள்வான் எனக் காத்திருந்து ஏமாற்றமடைகிறாள். சில நாட்களில் தான் கருவுற்றிருப்பதையும் அறிகிறாள். இச்செய்தியை பகிர்ந்து கொள்ளக்கூட அவளுடன் ஒருவரும் இல்லை. தன்னுடன் பணிபுரியும் பெண்ணிடம் இதைக்கூற அவள் அப்படியா என்று கேட்டுவிட்டு நகர்கிறாள். தன் நிலையைப்பற்றி விரிவாக அவனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். அதற்கு பதில் கடிதமாக அவன் காசோலையை அனுப்பி வைக்கிறான். பின் எவ்வாறாகத் தன் வாழ்க்கையை எதிர்கொள்கிறாள், எப்படி செயல்படுகிறாள் என்பதே பிற்பகுதிக் கதை.

சாதாரண கதைதானெனினும் செய்வதற்கு வேறு எதுவுமே இல்லாத அல்லது வேறு எதுவுமே செய்யத்தோன்றாத அமைதியான ஒரு பின்மதியப்பொழுதில் வசனங்கள் மிகக்குறைவான இப்படம் பார்ப்பதற்கு நன்றாகவே இருந்தது. தனக்காக யாருமே இல்லாதவளுக்காக உதிர்க்கப்படும் ஒரு சிறு புன்னகையும் கூட எத்தனை அடர்த்தியும் வலிமையும் மிக்கதாக மாறிவிடுகிறது!. அது அவளுள் எத்தனை நம்பிக்கையும் பிடிப்பையும் வளர்த்துவிடுகிறது! என்பதை அவள் அவனுக்கு எழுதும் கடிதம் உணர்த்துகின்றது.

ஒரே மாதிரியாக தொடரும் வாழ்க்கை ஓரிரவில் அவளுக்கு மனதளவில் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது எனினும் சில நிகழ்விற்கு பின் மீண்டும் அதே சுழற்சியில் இயங்கத் தன்னை தயார்படுத்திக் கொள்கிறாள். எல்லா உணர்வு வெளிப்பாடுகளும் சிறு புன்னகையைக் கொண்டோ அல்லது ஒரு துளி கண்ணீரைக் கொண்டோ மிதமாகவே காட்டப்பட்டிருக்கிறது.

Aki Kaurismaki எழுதி இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் கதாபாத்திரங்களும் மிகக் குறைவு. எவ்வித மிகைப்படுத்தல்களும் அதீதங்களுமில்லாமல் மௌனமாகக் கதையை நகர்த்தியிருப்பதே இதை முழுவதுமாக பார்க்கச்செய்தது. In focusல் இரண்டு மாதங்களுக்கு முன்பு இவரின் The Man without a past (2002), Lights in the dusk (2006) படங்கள் ஒளிபரப்பப்பட்ட போது பார்க்க இயலாமல் போனது இப்போது வருத்தமாகவே உள்ளது.

Read Full Post »

Offside

offsideதொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக விளையாட்டுக்களைக் கண்டு இரசிப்பதை விட விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று, மக்களுடன் ஆரவாரித்து பெரும் சப்தங்களுக்கிடையில் ஒரு ஆட்டத்தை காண்பதென்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் இரானில் விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று போட்டிகளைக் காண பெண்களுக்கு அனுமதி இல்லை.

2005 உலகக்கோப்பைக்குத் தேர்வாகப்போகும் அணியை அறியும் போட்டி இரான் மற்றும் பெகரைன் நாடுகளுக்கிடையே நடக்கிறது.அந்த ஆட்டத்தைக் காண சில பெண்கள் ஆண்களை போன்று உடையணிந்து தேசிய கொடியை முகத்தில் வரைந்துக்கொண்டு ஆண் ரசிகர்கள் கூட்டமாக செல்லும் வாகனங்களில் பயணிக்கின்றனர். சில ஆண்கள் இவர்களை பெண்கள் என்று கண்டுபிடித்தும் எதுவும் சொல்லாமல் விட்டுவிடுகின்றனர். அதிக கட்டணத்தில் கருப்பில் டிக்கட் எடுத்து நுழைந்தும் சில பெண்கள் பிடிபட்டுவிடுகின்றனர். அவ்வாறு பிடிக்கப்பட்ட ஆறு பெண்களை கொண்டு கதையை இளமைத் துள்ளளோடு சொல்லி இருக்கிறார் Jafar Panahi.

பிடிபட்டுவிட்டோமே என்ற கவலை சிறிதும் இல்லாது ஆட்டம் என்னவாகும், யார் வெல்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பிலும், அவர்களை பிடித்து வைத்திருக்கும் காவலதிகாரிகளை கிண்டல் செய்துக்கொண்டும், ஒவ்வொருவராய் வந்து சேரும் பிடிபட்ட பெண்களை வரவேற்றபடியும், அரங்கத்தில் ஓசை எழும்போதெல்லாம் அங்கிருக்கும் காவலதிகாரியை என்னவானது என்று பார்த்து கூறும்படி ஏவியும், அவர்களை அதட்டும் அதிகாரியிடம் திரும்பத்திரும்ப வாயடித்துக்கொண்டும் பரபரப்பான ஆரவாரத்தோடு நகர்கிறது படம்.

பெண்களுக்கென்று தனி கழிப்பறை இல்லாத இடத்தில், பிடிபட்ட பெண்ணொருத்தி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சொல்ல அவளை யார் கண்ணிலும் படாதவாறு அழைத்துச்செல்ல ஒரு காவலதிகாரி படும் அவஸ்தைகளும், ஆண்கள் கழிப்பறையில் அவன் மெனக்கெடல்களும், அதனால் அவன் சந்திக்க நேரும் கடுப்புகளும் வசவுகளும் பின் அவள் கழிப்பறையிலிருந்து தப்பித்து சென்றுவிட்ட ஏமாற்றத்தையும் நகைச்சுவையோடு அற்புதமாக காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.

காவலதிகாரிகளாக நடித்திருந்த எல்லோரும் வெகு சிறப்பாகச் செய்திருக்கின்றனர். அங்கு சென்று அவர்கள் உயிரை எடுப்பதை விட வீட்டிலிருந்தே பார்த்து தொலைத்திருக்கலாமே என்ற எரிச்சலும் இந்தக்கூட்டத்தில் வந்து இப்படி அகப்பட்டு கொண்டுவிட்டனரே என்ற கரிசனமும் கலந்த உணர்வை அழகாக வெளிக்காட்டி இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அவர்களுக்கென கமென்ட்ரி சொல்லவும் ஒருவன் ஒப்புக்கொள்கிறான். அவர்களின் தலைமை அதிகாரியின் ஆனைக்கு உட்பட்டே இவர்களை பிடித்து வைத்திருக்கின்றனர் என்பதும் அவர்களுக்கு அதில் அத்தனை ஈடுபாடில்லை என்பதும் அவர்கள் செய்கையிலிருந்து விளங்குகிறது.

தன் பெண் அங்கு சென்றிருக்கக்கூடும் என்று தேடிக்கொண்டு வரும் ஒரு பெரியவர் பெண்கள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று காவலதிகாரியிடம் விசாரிப்பது பரிதாபமாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணாக பார்வையிடும் அவர் தன் பெண்ணின் தோழியை அடையாளம் கண்டுக்கொண்டு இதென்ன வேஷம் இதற்கு தானா உங்களை படிக்க அனுப்புகிறோம் என்று அவளை அடிக்கச்செல்கிறார். காவலதிகாரிகள் அவரை தடுத்து சமாதானம் கூறி அனுப்பும் காட்சியும் சிறப்பானது.

ஏன் மற்ற நாட்டு பெண்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர், இரானிய பெண்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதில்லை என்று ஒரு பெண் வினவ கூட்டமாக ஆட்டத்தை காணவரும் ஆண்கள் அவர்களை கேலி செய்ய கூடுமென்றும், ஏராளமான கெட்ட வார்த்தைகள் கேட்க நேரிடும் என்றும் அவர்களின் பாதுகாப்பு கருதியே அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ஒரு காவலதிகாரி சொல்கிறான். பிற நாட்டு பெண்களுக்கு அவர்கள் மொழி தெரியாததால் மோசமான வசவுகளும் வார்த்தைகளும் அவர்களுக்கு புரியாது என்பதால் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்கிறான். கழிப்பறைக்கு அழைத்துச்சென்ற காவலன் அப்பெண்ணின் கண்களை மூடிக்கொள்ள சொல்கிறான் கழிப்பறை சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் மோசமான வார்த்தைகளை அவள் படிக்கக்கூடாதென்பதற்காக. இப்படி போர்த்தி போர்த்தி பாதுக்காப்பாக வளர்க்கப்படும் பெண்களின் மனநிலை எவ்வாறாக இருக்கும்?

விளையாட்டு முடிய சிறிது நேரம் இருக்கும்போதே உயரதிகாரி அங்கு வந்து அவர்களை தலைமைச்செயலகத்துக்கு அழைத்து வரும்படி கூற எல்லோரும் சிற்றுந்தில் ஏற்றப்படுகின்றனர். அத்தனை நேரம் கேலியும் கிண்டலுமாக இருந்த பெண்கள் சற்று இறுக்கம் கொள்வதும், அவர்களுடன் ஏற்றப்படும் மற்ற பையனின் உரையாடல்களும், அதிகாரியின் உடையணிந்து ஆண் வேடம் இட்டு வந்த பெண் தனக்கு மட்டும் தண்டனை கூடுதலாக இருக்கும் என்று வருத்தம் கொள்ளுதலும், வழியில் தங்கள் வீடு வந்து விட்டதாகவும் தான் இங்கு இறக்கி நடந்து சென்று விடுவேன் என்று தன்னை இறக்கிவிடும் படியாக கோறும் பெண்ணின் அப்பாவித்தனமும், அவளை கேலி செய்யும் மற்ற பெண்களின் உரையாடல்களும், வண்டியில் அவர்கள் கமென்ட்ரி கேட்க ஏண்டனாவை பிடித்துக்கொண்டே வரும் காவலதிகாரியின் கரிசனமும், ஆட்டத்தின் இறுதி நேர பதட்டமும், இறந்து போன தனது நண்பனின் நினைவிற்காகவே முதல் முறையாக தான் அரங்கத்திற்கு வர முயற்சித்தகாக கூறும் பெண்ணின் நெகிழ்ச்சியும் வெகு சிறப்பாக அமைந்திருக்கின்றன.

எந்த ஒரு பெண்ணின் பெயரும் சொல்லப்படவில்லை இப்படத்தில். புகைபிடிப்பதாக வரும் பெண்ணின் அடாவடித்தனமான கிண்டலும், சுட்டிதனமும், மிகுந்த பேச்சுக்களும் அபாரம். இறுதியில் சுபமாகவே முடிக்கப்பட்ட இப்படம் நமது கல்லூரிகால கலாட்டாக்களையும் சேட்டைகளையும் நினைவூட்டத் தவறவில்லை.

Read Full Post »

BandsVisitPoster

இஸ்ரேலிய இயக்குனரான Eran Kolirin எழுதி இயக்கிய முதல் திரைப்படமான The Band’s Visit ஐ சென்ற வாரம் காண நேரிட்டது. 2007ல் வெளிவந்த படமிது. அரபு மொழிப்படமென்றாலும் பெரும்பாலான வசனங்கள் ஆங்கிலத்திலேயே இருந்தன. எளிமையான திரைக்கதையை மிக அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இதன் இயக்குனர்.

எந்த ஊரானாலும், என்ன மொழி பேசினாலும், எல்லா மனித மனங்களும் அதன் அடி வேர்களில் துயரையே சுமந்துக்கொண்டு அலைகின்றனவோ எனத் தோன்றுகிறது.  நமக்கு தெரிந்தவர்களிடம் நமக்கான ஒரு போலி முகத்தை உருவாக்கிக்கொண்டு அதுவே நீடிக்க வேண்டுமென்பதற்காக அந்த நேர உணர்வுகளைக் கூட அப்படியே வெளிக்காட்டிக்கொள்ளாமல் போலிப் புன்னைகையுடனேயே திரிகிறோம். ஆனால் எங்கோ முகம் தெரியாத ஊரில்  முன்பின் அறிந்திடாத ஒரு நபரிடம் எந்தப் போலித்தன்மையுமில்லாமல் நம்மை துயரில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் அல்லது உறுத்திக்கொண்டிருக்கும் சோகங்களை எவ்விதத் தயக்கமுமின்றி எதிர்பாராவிதமாகக் கொட்டிவிட முடிகிறது. 

எகிப்து நாட்டின் காவல் துறையிலிருக்கும் எட்டு நபர் கொண்ட ஒரு இசைக்குழு அரபு கலாச்சார மையத் திறப்பு விழாவிற்கு  இசை நிகழ்ச்சி நடத்த வரவழைக்கப்படுகின்றனர்.  அவர்கள் இஸ்ரேலில் வந்து இறங்கியதும் அவர்களை வரவேற்க யாரும் வரவில்லை.  தாங்களே பேருந்தை பிடித்து  ஓரிடத்தில் இறங்கி அங்கிருக்கும்  சிறிய உணவகத்தை நடத்திவரும் பெண்ணிடம் விசாரிக்கும் போதுதான் தாங்கள் இடம் தவறிவிட்டதை அறிகின்றனர்.

அவர்கள் வந்து இறங்கியதுதான் அன்றைக்கான கடைசி பேருந்தென்பதால் அவர்களுக்கான உணவையும் தங்குவதற்கான இடத்தையும் ஏற்பாடு செய்கிறாள் அப்பெண்மணி.  அவள் வீட்டில் இருவரும், அங்கிருக்கும் மற்ற இரண்டு நபர்கள் வீட்டில் பிறருமாக அக்குழுவில் உள்ளவர்கள் தங்குவதற்குச் செல்கின்றனர். 

அந்த ஓரிரவில் பரிமாறிக்கொள்ளப்படும் பரிவுகளும், அனுபவங்களும், உணர்வுகளும், கரிசனங்களும், உதவிகளும் நகைச்சுவை கலந்த மென்சோகத்துடன் சொல்லப்பட்டிருக்கின்றது. 

உடன் சுமக்க வருபவர்களிடம் கொட்டித்தீர்க்காத எதைஎதையோ எதேச்சையாய் எதிர்படும் ஏதோ ஒரு தோளில் இறக்கிவைத்து இளைப்பாறுவது போல் அவர்கள் கடந்து வந்த பாதையின் நிழல்களை, தயக்கங்களை, ஏமாற்றங்களை, ஏக்கங்களை, விரக்திகளை, நெகிழ்ச்சிகளை, முயற்சிகளை, தங்களின் குற்ற உணர்வுகளை பகிர்ந்துக்கொள்வதை நகைச்சுவை கலந்து காட்சிப்படுத்தியிருப்பது அழகு. 

அடுத்த நாள் காலை அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்று அங்கு அருமையான இசையுடன் கூடிய ஒரு பாடலைப்பாடி படத்தை நிறைவு செய்கின்றனர்.

Read Full Post »

The Circle

The Circle

இரானியத் திரைப்படங்கள் பெரும்பாலும் எளிமையான வாழ்வையும் அன்பையும் மட்டுமே பேசுபவை என்ற எதிர்ப்பார்ப்பில் இப்படத்தைப் பார்த்தால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சும்.  தனித்து ஆக்கப்பட்ட பெண்கள், சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட பெண்கள், தங்களுக்கான வாழ்வை தக்கவைத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் என பலரின் வாழ்வில் சில நிமிடங்கள் அவர்களுடன் சேர்ந்து நம்மையும் பயணிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர்.  அவர்களின் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது? இதற்கு முன் எப்படி இருந்தனர்? இனி எப்படி அவர்கள் வாழ்க்கை தொடரும்? என்கிற பல கேள்விகளை நமக்குக் கொடுத்துவிட்டு வழிபோக்கர்களை போல் சில நிகழ்வுகளை மட்டுமே பார்க்கத் தந்திருக்கிறார். 

The Mirror, The White Balloon போன்ற படங்களை மகிழ்வோடும் சிறுவர்களின் நடிப்பை சிலாகித்து பிரம்மிப்போடும் பார்த்து விட்டு இப்படத்தை பார்க்கும் போது ஒரு வித அச்சமே மேலோங்கி இருக்கிறது.  ஆண்வயமான சமூகத்தில் பெண்கள் தனித்து இயங்குவதென்பது அத்தனை எளிதானதாக இல்லையெனினும், பல போராட்டங்களுக்கு மத்தியில் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதே ஆசுவாசமானதாக இருக்கிறது. 

ஒரு பெண் பெண்குழந்தையை பிரசவிக்கிறாள் என்ற செய்தியுடன் படம் துவங்குகிறது.  அவளின் தாய் கவலைபடுகிறார்.  ஆண் பிள்ளை பிறக்கும் என்றார்கள் இப்போது அவள் கணவரின் வீட்டாரிடன் எப்படி சொல்லி சமாளிப்பது என் வருந்துகிறார். 

சிறையில் இருந்து தப்பி வந்த பெண்களின் கைகளில் பணமில்லாத திண்டாட்டம், விடுதலையாகி வந்த பெண்களின் வீட்டாரின் அனுகுமுறை, அவர்கள் தங்கள் வாழ்க்கையோடு செய்துக்கொள்ளும் சமரசங்கள், ஆண் இல்லாமல் தனித்து குழந்தையை வளர்க்க முடியாமல் தெருவில் சிறு குழந்தையை விட்டுவிட்டு ஓடவேண்டிய கட்டாயம், இந்தச் சிரமங்களை அறிந்து கருவிலேயே குழந்தையை கலைக்க நினைப்பவளின் தோல்விகள் என பலரின் துயரங்களில் ஒரு சிறு பகுதியை காட்டியிருக்கிறது இப்படம்.  இவையெல்லாம் ஒரே பெண்ணின் வாழ்வின் பல கட்டங்களில் சந்திக்க நேரும் துயரங்கள் எனவும் பல பெண்களின் வாழ்க்கை முறை இப்படித் துயர்மிகுந்ததாகத் தானிருக்கிறது எனவும் கொள்ளலாம்.

இறுதியாக ஒரு பாலியல் தொழிலாளியை பிடித்துச் சென்று சிறையில் அடைக்கின்றனர்.  அங்குள்ள காவலதிகாரி ஒரு பெண்ணின் பெயரை சொல்லி அவள் இங்கு இருக்கிறாளா என்று வினவுகிறார்.  படம் அத்துடன் நிறைவு பெறுகிறது.  அது படத்தின் ஆரம்பத்தில் பெண் பிள்ளையை பிரசவித்ததாக காட்டும் பெண்ணின் பெயர். 

எல்லோரும் வாழத்தானே பிறந்திருக்கிறோம். பிறகு ஏன் சூழ்நிலைகள் இப்படி தடம்புரட்டிச்சிரிக்கின்றது. அந்த ஒரு பெயரின் உச்சரிப்பில் முழு படத்திற்கான நோக்கம் பொதித்து வைக்கப்பட்டிருகின்றதோவென எண்ணத்தோன்றியது.  எத்தனை பெரிய விஷயத்தை சோகத்தை அவலத்தை ஒரு பெயரின் உச்சரிப்பில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இதன் இயக்குனர் Jafar Panahi என்று வியப்பாகவும் இருந்தது. இதுதான் அவர்களின் வட்டம் அவர்களுக்கான வாழ்வு. 

Jafar Panahi யின் மற்ற படங்கள் The Wounded Heads, Kish, The Friend, The Last Exam, The White Balloon, Ardekoul, The Mirror, Crimson Gold & Offside.

Read Full Post »

உலகப்படங்களை பார்க்க விருப்பமுள்ளவர்களுக்கென மிகச்சிறந்த படங்களை ஒளிபரப்பி வருகிறது UTV World Movies. அனைத்து மொழி படங்களையும் எங்கும் தேடி அலையாமல் சுலபமாக வீட்டிலேயே பார்க்கக் கிடைப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

 பர்மா பஜாரில் தேடித்தேடி எடுத்து பேரம் பேசி 10-15 டிவிடிகள் மொத்தமாக வாங்கி வந்தால் அவற்றில் நிச்சயம் இரண்டு மூன்று படங்களின் டிவிடி வேலை செய்யாமல் கடைகாரரை திட்டிக்கொண்டிருப்போம். கடைகளில் வாடகைக்கு எடுக்கலாமென்றால் அவசர அவசரமாக பார்த்து படத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டியதாக இருக்கும். சில படங்கள் கிடைப்பதும் இல்லை. இணையத்தில் தரவிறக்கம் செய்யலாமென்றாலோ காத்திருந்து தரவிறக்கம் செய்ய போட்டு விட்டு போய் சில மணி நேரங்கள் கழித்து வந்து பார்த்தால் சிலது பாதியிலேயே நின்று போய் இருக்கும்.

இப்படி பட்ட கடுப்புகளையெல்லாம் களைந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் UTV World Movies channelக்கு மாற்றினால் கண்டோனீஸ், ஜபானீஸ், பெர்ஷியன், போலிஷ், கொரியன், ஸ்பானிஷ் என பல மொழிகளிலும், டிராமா, ஹாரர், ரொமான்ஸ், காமெடி, திரில்லர், ஆக்ஷன் என பல வகைகளிலும் நல்ல படங்கள் பார்க்க கிடைக்கின்றன.

‘50 Movies to see before you die’ என்ற பகுதியில் மாதம் ஒரு தயாரிப்பாளரோ, இயக்குனரோ, நடிகரோ அவர்களின் விருப்பப் படங்களை தேர்வு செய்கின்றனர். இம்மாதம் Waltz with Bashir திரைப்படத்தின் தயாரிப்பாளரான ரோமன் பால் (Roman Paul) தேர்விலான Divided we Fall படம் ஒளிபரப்பப்பட்டது.

‘Movie of the month’ல் தேர்வு செய்யும் படங்கள் விருதுகள் வாங்கிய படங்களாகவே பெரும்பாலும் தேர்வு செய்யப்படுகின்றன.  ஒவ்வொரு மாதத்தின் கடைசி சனிக்கிழமை இரவு இந்திய நேரம் 8.30 மணிக்கு ஒளிபரப்பாவதால் இதையும் தவரவிடாமல் பார்க்க முடிகின்றது. இம்மாதம் ஒளிபரப்பாகவிருக்கும் படம் எமிலி (2001).

 ‘In focus’ என்ற தலைப்பில் மாதம் ஒரு சிறந்த இயக்குனரின் நான்கு படங்களை தேர்வு செய்து வாரம் ஒரு படமாக ஒளிபரப்புகின்றனர். படத்துடன் அவர்களை பற்றிய விவரங்களும் அளிக்கப்படுவது தனிச்சிறப்பு. இம்மாதம் Takeshi Kitanoவின் படங்களை ஒளிபரப்புகின்றனர்.

இவை மட்டுமல்லாமல், ‘Film Club Choice’, ‘Timeless Classics’, ‘Platinum Collection’ என பல தலைப்புகளில் அற்புதமான படங்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

இரானிய படங்களான The Taste of Cherry, Song of Sparrows, The Circle, OffSide, The White Balloon, Crimson Gold போன்ற திரைப்படங்களை தற்செயலாக சானலை மாற்றியபோது பார்க்க கிடைத்தது வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

தவிற்க முடியாத காரணத்தினால் ஒரே முறையில் பார்த்து முடிக்க முடியாத சில படங்களை அடுத்து எப்போது ஒளிபரப்புகின்றனர் என்று அவர்களின் இணையப்பக்கத்தில் உள்ள வார அட்டவனையை பார்த்து தெரிந்துகொள்ளலாம். எல்லா படங்களும் இரண்டு மூன்று முறை ஒளிபரப்புவதால் நல்ல படங்களை தவர விட்டுவிட்டோமே என்று வருந்த வேண்டிய அவசியமே இல்லை.

கிடைக்கும் நேரங்களில் சிறிது நேரமெனினும் இத்தகைய படங்களின் முன் அமர்ந்து முழுமையாக பார்க்க இயலாவிடினும் சில பகுதிகளையாவது பார்த்துவிடுவது வழக்கமாகிவிட்டது. விருப்பமுள்ளவர்கள் இவ்விணைய தளத்திற்குச் சென்று தங்களுக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

Read Full Post »