Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மொழிபெயர்ப்பு’ Category

சீன எழுத்தாளரான கௌ ஷிங்ஜென் (Gao Xingjian) இலக்கியத்திற்கான நோபல் பரிசை 2000ஆம் ஆண்டு வென்றவர். இவர் நாவல் ஆசிரியர் மட்டுமல்லாது கட்டுரையாளர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், இயக்குனர், விமர்சகர் மற்றும் ஓவியரும் கூட. இவருடைய நாடகங்கள் இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஓவியங்கள் சர்வதேச கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ளன.  தனது புத்தக அட்டைப்படங்களுக்கு தனது ஓவியங்களையே பயன்படுத்தியுள்ளார்.  இவரது நாவல்களான Soul Mountain மற்றும் One Man’s Bible தனித்துவமானதாக கருதப்படுகின்றன.  இவருடைய சிறுகதை தொகுப்பான  “Buying a Fishing Rod for My Grandfather”யிலிருந்து Temple & In the park சிறுகதைகளை மொழிபெயர்க்க முயற்சித்திருக்கின்றேன்.

*******************************************************************************

கோயில்

நாங்கள் வெகு மகிழ்ச்சியாக இருந்தோம். மிகுந்த நம்பிக்கையுடனும், காதலுடனும், பரிவுடனும் நெகிழ்வோடும் கூடிய தேன்நிலவிற்கேற்ற உற்சாக உணர்வுகளோடு இருந்தோம். திருமணத்திற்கென பத்து நாட்களும் ஒரு வாரம் கூடுதல் விடுமுறையுமென பதினைந்து நாட்களே விடுமுறை இருந்தபோதிலும் ஜியாவும் நானும் இப்பயணத்திற்கென மீண்டும் மீண்டும் திட்டமிட்டோம். வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான நிகழ்வு, எங்களுக்கு அதைவிட வேறு எதுவுமே முக்கியமாகப் படாததால் கூடுதல் விடுமுறைக்கு விண்ணப்பித்தால் என்னவென்று தோன்றியது. ஆனால் என் மேலாளர் ஒரு கருமி. யாராவது அவரிடம் விடுமுறைக்கு விண்ணப்பிக்கச் சென்றால் போராடவேண்டும். எப்போதுமே உடன் ஒப்புதல் அளிக்கமாட்டார். நான் விண்ணப்பித்த இரு வாரங்களை திருத்தி ஞாயிற்றுக் கிழமையையும் சேர்த்து ஒரு வாரமென மாற்றிவிட்டு, “சொன்ன தேதியில் மீண்டும் வேலையில் சேருவாயென எதிர்ப்பார்க்கின்றேன்” என்றார் விருப்பமற்று.

“நிச்சயமாக, அதிக நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டால் சம்பளக்கழிப்பை எங்களால் சமாளிக்க முடியாது” என்றேன். அதற்கு பிறகே விடுமுறைக்கான தனது ஒப்புதல் கையெழுத்தை இட்டார்.

இனி நான் தனிமனிதனல்ல. எனக்கென்று குடும்பமுண்டு. இனி சம்பளம் வாங்கிய முதல் வாரத்தில் நண்பர்களுடன் உணவு விடுதிகளுக்குச் சென்று நினைத்தபடி செலவழிக்க முடியாது. எப்போதும் போல யோசிக்காமல் செலவழித்து பின் மாத இறுதியில் சிகரெட் வாங்கக்கூட பணமில்லாமல் பாக்கெட்டிலும் அலமாரிகளிலும் சில்லரைகளை தேடிக்கொண்டிருக்க முடியாது. அந்த விவரத்திற்குள் எல்லாம் இப்போது நுழையவில்லை. இப்போது என்ன சொல்கிறேன் என்றால் நான் – நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தோம். திருமணத்திற்கு முன் அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. இருவருமே சில சிரமமான நாட்களை கடந்திருக்கின்றோம், வாழ்க்கை பாடங்களை அனுபவித்து அறிந்திருக்கின்றோம். இந்நாட்டில் நிலவிய அழிவுக்குரிய காலகட்டங்களில் எங்கள் குடும்பங்கள் பல இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்திருக்கின்றன. இப்போதும் கூட எங்கள் முன்னோர்களின் விதிகளை நினைத்து மனக்கசப்பு உண்டாகும். ஆனால் அதைப்பற்றியும் இப்போது பேசப்போவதில்லை. நாங்கள் மிக மகிழ்ச்சியானவர்கள் என்பதே இப்போது முக்கியம்.

எங்களுக்கிருந்தது அரை மாத விடுமுறையே. அது அரைத்தேனிலவு தான் என்றாலும் அதைவிடவும் இனிமையானதாக இருந்திருக்க முடியாது. எவ்வளவு இனிமையாக இருந்தது என்பதைப் பற்றிப் பேசப்போவதில்லை. உங்களுக்கே தெரிந்திருக்கும் நீங்கள் எல்லோருமே அதை அனுபவித்திருப்பீர்கள், ஆனால் இந்த குறிப்பிட்ட இனிமை எங்களுக்கே உரியது. உங்களிடம் மிக கச்சிதமான ஒரு அறத்தின் கோயிலைப் பற்றிச் சொல்ல வேண்டும். கோயிலின் பெயர் அத்தனை முக்கியமில்லை. மேலும் அது ஒரு பாழடைந்த கோயில், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் புகழ்வாய்ந்த ஸ்தலமுமில்லை. அப்பகுதிகளில் வாழும் மக்களைத் தவிர்த்து வெளியுலகம் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. அங்கு இருப்பவர்களிலும் கூட வெகு சிலருக்கே அக்கோயிலைப் பற்றி தெரிந்திருக்கக் கூடுமெனத் தோன்றியது. நாங்கள் செல்ல நேர்ந்த கோயில், விளக்குகளும் ஊதுவத்திகளும் ஏற்றி பிரார்த்திக்கும் பிற கோயில்களைப் போலில்லை. கல்லில் பதித்திருந்த மறைந்துக் கொண்டிருக்கும் எழுத்துக்களை வெகு துல்லியமாக கவனித்தாலன்றி கோயிலின் பெயரையும் கூட அறிந்து கொண்டிருக்க முடியாது. அங்கு இருப்பவர்கள் அதனை பெரிய கோயிலென்றழைத்தனர். ஆனால் பிற பெரிய கோயில்களுடன் ஒப்பிடுகையில் அது பெரிய கோயிலே அல்ல. நகரத்திற்கப்பாலுள்ள மலையிலிருக்கும் அக்கோயில் ஒரு இரண்டுமாடி வீட்டை விட சற்றுப் பெரியதாக இருக்கக்கூடும். சிதிலமடைந்து அதன் மேற்கூரைகள் காற்றில் ஆடிக்கொண்டும், சிதைவுகளில் எஞ்சிய வாயிற் கல்கதவுகளுடனும், சரிந்த சுற்றுக்கட்டுச்சுவர்களுடனும் காட்சியளித்தது. அச்சுவர்களின் செங்கற்கள் விவசாயிகளின் வீட்டுச்சுவர்களாகவோ அல்லது அவர்களின் பண்ணையின் வேலியாகவோ மாறியிருக்கக்கூடும். வெகு சில செங்கற்களே தென்பட்டன. எங்கும் புதர்கள் மண்டிக்கிடந்தன.

எனினும் தூரத்தில் அவ்வூரின் சிறு தெருவிலிருந்து காணும் போது சூரிய ஒளியில் மினுங்கும் மஞ்சள் ஓடுகள் எங்கள் கண்களை ஈர்த்தன. நாங்கள் அவ்வூருக்கு தற்செயலாக வந்து சேர்ந்தோம். எங்கள் ரயில்வண்டி புறப்பட வேண்டிய நேரம் கடந்தும் பளாட்பார்மிலேயே இருந்தது. ஏதேனும் தாமதமாகிய விரைவு வண்டி கடப்பதற்காக காத்திருக்க நேர்ந்திருக்கலாம். ரயிலில் ஏறியிறங்கிக் கொண்டு சிதறிக்கிடந்த பயணிகள் அனைவரும் இருக்கைகளில் வந்து அமர்ந்திருந்தனர். வாயிலின் அருகில் பேசிக் கொண்டிருந்த பரிசோதகர்களைத் தவிர்த்து நடைமேடையில் யாரும் நின்றிருக்கவில்லை. ஸ்டேஷனிற்கு அப்பால் சாம்பல் நிறம் போர்த்தி விரிந்த பள்ளத்தாக்கு தெரிந்தது. அதற்கப்பால் அடர்ந்த மரங்களை கொண்ட மலைகள் சூழ்ந்த அசாத்திய அமைதியுடன் ஒர் பழைய ஊர் தென்பட்டது.

திடீரென எனக்கொரு எண்ணம் உதித்தது. “இவ்வூரை சுற்றிப்பார்த்தாலென்ன?” என்றேன். எதிரில் அமர்ந்து அன்பாய் பார்த்துக்கொண்டிருந்த ஜியா மெலிதாக தலையசைத்தாள். அவள் கண்கள் பேசுவதாகத் தோன்றியதெனக்கு, ஒருவருக்கொருவர் உணர்வுகளை ஒத்திசைவுகளோடு பரிமாறிக்கொண்டோம். ஒரு வார்த்தை கூட பேசாமல் எங்கள் பைகளை எடுத்துக்கொண்டு ரயில்பெட்டியின் கதவருகே விரைந்தோம். நடைமேடையில் குதித்து இருவரும் சிரித்தோம்.

அடுத்த ரயிலில் கிளம்பிவிடலாம் என்றேன். கிளம்பாமல் இங்கேயே தங்கிவிட்டாலும் பரவாயில்லை என்றாள் ஜியா. நம் தேனிலவில் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஓரிடம் நமக்குப் பிடித்திருந்தால் அங்கு செல்வோம், தொடர்ந்து பிடித்திருந்தால் அங்கேயே சில நாட்கள் தங்குவோம் என்றாள். எங்கு சென்றாலும், புதுமணத் தம்பதியரின் குதூகலமும் மகிழ்ச்சியும் எங்களோடிருந்தது. உலகத்திலேயே மிக சந்தோஷமானவர்களாக இருந்தோம். ஜியா என் கைகளைப் பற்றியிருந்தாள், நான் பைகளைப் பிடித்துக்கொண்டிருந்தேன். நடைமேடையிலிருக்கும் பரிசோதகர்களும், ரயில் வண்டியின் சாளரம் வழி எங்களை பார்க்கும் எண்ணற்ற ஜோடிக் கண்களும் பொறாமைப்பட வேண்டுமென்று நினைத்தோம்.

நகரத்திற்குத் திரும்புவதைப் பற்றி இனி எங்களை நாங்களே குழப்பிக்கொள்ள வேண்டாம். பெற்றோர்களிடத்தும் உதவிகேட்டு நிற்க வேண்டாம். வேலையைப் பற்றியோ இன்ன பிறவற்றைப் பற்றியோ கவலைகொள்ளவும் தேவையில்லை. எங்களுக்கென்று சொந்த வீடு உண்டு. எங்களுக்கேயான சொந்த வீடு, ரொம்பப் பெரிய வீடில்லை என்றாலும் அது மிக வசதியான வீடு. நான் உனக்கானவன் நீ எனக்கானவள், ஜியா நீ என்ன சொல்ல நினைக்கின்றாயென எனக்குத்தெரியும் : இனி நம் உறவு நிலையானது. அப்படியென்றால் என்ன? எங்கள் சந்தோஷத்தில் எல்லோருக்கும் பங்குண்டு என்று தானே அர்த்தம். எங்களுக்கிருந்த ஏராளமான பிரச்சனைகளால் உங்கள் எல்லோரையும் தொந்தரவு செய்திருக்கின்றோம், எங்களால் நீங்கள் எல்லோரும் வருத்தப் பட்டிருக்கிறீர்கள். இதற்கு என்ன கைமாறு செய்வது? எங்கள் திருமணத்திற்கு பின் அருமையான விருந்து வைத்து உபச்சாரம் செய்தா? இல்லை, எங்கள் சந்தோஷத்தை கொண்டு உங்களுக்கு கைமாறு செய்கிறோம். நான் சொல்வதில் எந்தத் தவறும் இல்லைதானே?

இப்படித்தான் மலைப்புரத்திலிருக்கும் அவ்வூருக்கு சென்றடைந்தோம். ஆனால் தொலைதூர ரயில்பெட்டியின் ஜன்னலிலிருந்து பார்த்ததைப்போன்று அமைதியான சூழலிற்கு, துளியும் சம்பந்தமில்லாமலிருந்தது அவ்வூர். சாம்பல் நிற மேற்கூறைகளுக்கு அடியில் வீதிகளும் சாலைகளும் சலசலத்திருந்தன. காலை ஒன்பது மணி, மக்கள் காய்கறிகளையும், கிர்ணிப்பழங்களையும், மரத்திலிருந்து அப்போது தான் பறிக்கப்பட்ட ஆப்பிள்களையும் பேரிக்காய்களையும் விற்றுக்கொண்டிருந்தனர். அது போன்ற ஊரிலிருக்கும் தெருக்கள் அகலமாக இருப்பதில்லை, மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் டிரக்குகளும் அடைத்துக் கொண்டிருந்தன. ஓட்டுனர்கள் பலவகையான ஒலிகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். காற்றில் தூசு பறந்துக் கொண்டிருந்தது, அழுக்கு நீர் காய்கறிக் கடைகளிலிருந்து ஒரு புறம் வழிந்து கொண்டிருந்தது, பழத்தோல்கள் வீதிகளெங்கும் சிதறிக்கிடந்தன, கோழிகள் வாங்கியவர்கள் கைகளில் படபடத்துக் கொண்டிருந்தன. இக்காட்சிகள் தான் அந்த ஊரை மிக நெருக்கமாக உணரச்செய்தது.

பட்டப்படிப்பை முடித்து விட்டு அப்படியான புறநகர் ஊர்களுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தபோது உணர்ந்ததை போலல்லாமல் வித்தியாசமாக உணர்ந்தோம். இப்போது நாங்கள் வெறும் ஊர் சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள். அவ்வூர் மக்களிடையே நிலவும் சிக்கலான உறவுகளுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவ்வெண்ணமே நகர்வாழ் மக்களான நாங்கள் சற்று மேலோங்கியவர்களாக உணரச்செய்தது. ஜியா என் கைகளை இறுக பற்றினாள், அவளருகில் சாய்ந்தேன், மக்களின் விழிகள் எங்கள் மேல்விழுந்ததை உணர்ந்தோம். ஆனால் நாங்கள் அவ்வூரை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் எங்களைப்பற்றிப் பேசவில்லை அவர்களுக்கு தெரிந்தவர்களைப் பற்றியே கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.

இப்போது அதிக காய்கறிக்கடைகள் இல்லை, மக்கள் நடமாட்டமும் வெகு குறைவாகவே இருந்தது. சந்தை இரைச்சலையும் அமளிகளையும் தாண்டி வந்திருக்கின்றோம். கடிகாரத்தை பார்த்தபோது ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அந்த நீளமான தெருவை கடக்க அரைமணி நேரம் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கின்றோமெனத் தெரிந்தது. இத்தனை சிறிய கால அவகாசத்தில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷனிற்குள் நுழைந்து அடுத்த ரயிலிற்காக காத்திருப்பது நன்றாக இருக்காது. மேலும் ஜியா இரவை அவ்வூரில் தங்கி கழிப்பதை பற்றி நினைத்துக் கொண்டிருக்கின்றாள். அவள் அப்படி கூறவில்லை என்றாலும் அவள் முகத்தில் படர்ந்திருந்த ஏமாற்றம் அதை விளக்கிற்று. கைகளை பகட்டாக வீசிக்கொண்டு எங்களை நோக்கி ஒரு மனிதர் நடந்து வந்தார். ராணுவ அதிகாரியாக இருக்கக்கூடும்.

தங்கும் விடுதிக்கு செல்லும் வழி காட்ட முடியுமா ? என்று கேட்டேன்.
ஜியாவையும் என்னையும் ஒரு நொடி பார்த்தார், பிறகு அந்தப்பக்கமாக சென்று இடதுபக்கம் திரும்புங்கள் என்று உற்சாகமாக வழி காட்டினார். அங்கு தெரியும் சிகப்பு மூன்று மாடி கட்டிடம் தான் தங்கும் விடுதி என்றார். யாரையாவது அங்கு சந்திக்க வேண்டுமா என்று அக்கறையாக கேட்டார். அவரே எங்களை அங்கு கூட்டி சென்று காண்பிக்க வேண்டுமென்ற அக்கரையோடு இருந்தது அவருடைய தொனி. நாங்கள் சுற்றுலா பயணிகள் என்றும் அங்கு சுற்றிப்பார்ப்பதற்கான பிரதான இடங்கள் இருக்கின்றதாவெனவும் கேட்டேன். அவர் தலையை தடவுவதைப் பார்த்தால் அப்படி ஒன்றும் பெரிதாக இருப்பதாக தோன்றவில்லை எனக்கு.

சற்று யோசித்தப்பிறகு குறிப்பாக அவ்வூரில் அப்படி ஒரு இடமும் இல்லை, ஆனால் ஊருக்கு மேற்கில் இருக்கும் மலையில் ஒரு பெரிய கோயில் உள்ளது, அங்கு செல்ல வேண்டுமென்றால் செங்குத்தான மலையை ஏறவேண்டுமென்றார்.

அது ஒரு பிரச்சனையே இல்லை, நாங்கள் மலையேறுவதற்காகவே வந்திருக்கின்றோம் என்றேன்.

ஆமாம், மலையேறுவதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்றாள் ஜியா.

தெருக்கோடிக்கு கூட்டிச்சென்றார். மலையும் அதன் உச்சியில் உள்ள பழைய கோயிலும் சூரிய ஒளியால் பிரகாசிக்கும் அதன் ஓடுகளும் என் கண்ணுக்கு நேரெதிராக தெரிந்தது. ஜியா அணிந்திருக்கும் உயரமான காலணிகளை கவனித்த அவர், நீங்கள் நதியை கடந்து செல்ல வேண்டுமே என்றார்.
“ஆழமானதா?” என்று கேட்டேன்.
“முட்டிக்கு மேலிருக்கும்”
ஜியாவை பார்த்தேன்
என்னை சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்து “அது பரவாயில்லை, நான் சாமாளித்துக்கொள்வேன்” என்றாள்.
அவருக்கு நன்றி கூறிவிட்டு அவர் காட்டிய திசையில் நடக்கத்துவங்கினோம். புழுதி நிறைந்த தெருவிற்குத் திரும்பிய பிறகு உயரமான காலணிகளை அணிந்திருக்கும் ஜியாவைப் பார்த்து சங்கடப்படாமலிருக்க முடியவில்லை. ஆனால் அவள் என் முன் திடமாக நடந்துச் சொன்றாள்.

அவள் வேகத்திற்கு ஈடுகொடுத்துக்கொண்டே “நீ நிஜமாகவே ஒரு லூசு” என்றேன்.

“உன்னுடன் இருக்கும்வரை” நினைவிருக்கின்றதா ஜியா, என்னை உரசி நடந்துக் கொண்டே இதைச்சொன்னாய் நீ.

நதிக்கரைக்கு செல்லும் பாதையில் தொடர்ந்தோம். மனித உயரத்திற்கும் மேல் இருபுறமும் சோளம் நீண்டு வளர்ந்திருந்தன. பசுமையான நிழல்வெளியில் நடந்துச் சென்றோம். எங்களுக்கு முன்னும் பின்னும் ஆள் நடமாட்டமே இல்லை. ஜியாவை கைகளில் ஏந்தி மென்மையாக முத்தமிட்டேன். அதனால் என்ன? இதை பற்றி அவள் பேச வேண்டாமென்கின்றாள். அதனால் நாம் மீண்டும் அறக்கோயிலைப் பற்றிய பேச்சிற்கு போவோம். நதியின் அக்கரையில் மலையின் உச்சியிலிருந்தது அந்தக் கோயில். இங்கிருந்து பார்க்கும் போது மினுங்கும் மஞ்சள் ஓடுகளுக்கிடையில் கொத்துக் கொத்தாக வளர்ந்திருக்கும் களைச்செடிகளை பார்க்க முடிந்தது.

நதி மிகவும் குளுமையாகவும் தெளிந்தும் இருந்தது. எங்கள் காலணிகளை ஒரு கையிலும் ஜியாவின் கையை மற்றொரு கையிலும் படித்துக்கொண்டேன், ஜியா தன் உடையை மற்றொரு கையால் தூக்கிக்கொண்டாள். வெற்றுக் கால்களுடன் தொடர்ந்தோம். வெறுங்கால்களுடன் நடந்து வெகு காலம் ஆகிவிட்டது, ஆற்றுப் படுகையிலிருக்கும் மென்மையான கற்களும் கூட கால்களை உறுத்தின.
“பாதத்தில் ரொம்ப குத்துதா” என்று ஜியாவிடம் கேட்டேன்.
“பிடித்திருக்கின்றது” என்றாய் நீ மென்மையாக. நம் தேனிலவில் கால் நோக நடப்பதும் இனிமையாகவே இருந்தது. உலகின் எல்லா இன்னல்களும் ஆற்று நீரில் கரைந்து விடுவதாய் தோன்றியது. ஒரு நொடி சிறுவர்களாய் மாறினோம். சுட்டிப் பிள்ளைகளாய் நீரில் துள்ளிக்குதித்து விளையாடினோம்.

ஜியாவின் கையை இறுக பற்றிக்கொள்ள அவள் ஒவ்வொரு பாறையாக தாவிக் கொண்டிருந்தாள் இடையிடையே பாடல்களையும் முணுமுணுத்தபடி. ஆற்றைக் கடந்த பிறகு சிரித்துக் கொண்டும் கத்திக் கொண்டும் ஓடியபடியே மலை ஏறினோம். ஜியாவின் காலில் அடிப்பட்டுவிட்டது, எனக்கு மிகவும் சங்கடமானது. என்னைத் தேற்றினாள். இதனாலென்ன பரவாயில்லை, காலணிகளை மாட்டியவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்றாள். என்னுடைய தவறு என்றேன். என்னை மகிழ்விக்க என்ன வேண்டுமானாலும் செய்வேனென்றாள், தன் பாதங்களில் வெட்டுப்பட்டாலும் பரவாயில்லையென்றாள். சரி சரி இதைப்பற்றி மேற்கொண்டு பேசவில்லை. ஆனால் நாங்கள் பெரிதும் மதிக்கும் நண்பர்கள் நீங்கள், எங்கள் கவலைகளையும் ஏக்கங்களையும் பகிர்ந்துக் கொண்டதைப்போல் போல் சந்தோஷங்களையும் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.

இப்படித்தான் ஒருவழியாக மலையுச்சிக்கு ஏறி கோயிலின் முன்னிருந்த புறவாயிலிற்கு வந்தடைந்தோம். சரிந்திருந்த முற்றத்தின் வேலிச்சுவற்றிற்கு இடையிலிருந்த சிறுகால்வாயில் நீர்வாங்கு குழாயிலிருந்து தூய்மையான நீர் ஓடிக்கொண்டிருந்தது. முற்றமாக இருந்த இடத்தில் யாரோ காய்கறிச் செடிகளைப் பயிறிட்டிருந்தனர். அதற்கடுத்து எருக்குழி இருந்தது. முன்பெப்போதோ உற்பத்தி குழுவினருடன் சேர்ந்து கிராமங்களில் உரமிட்டதை நினைவு கூர்ந்தோம். அந்த கடுமையான கால கட்டங்கள் ஓடும் நீர் போல கடந்து சில துக்கங்களையும் மகிழ்ச்சியான நினைவுகளையும் எங்களிடையே விட்டுச் சென்றிருக்கின்றன. நம் அன்பும் கூட அதில் அடங்கும். கீர்த்திவாய்ந்த சூரிய ஒளியின் அரவனைப்பில் எங்கள் பாதுகாப்பான அன்பினில் யாருமே இடையிட முடியாது. இனி யாருமே எங்களை துன்புறுத்தவும் முடியாது.

பெரிய கோயிலிற்கு பக்கத்தில் சாம்பிராணி ஏற்றுவதற்கான இரும்பாலான விளக்கு இருந்தது. அது நகர்த்துவதற்கோ அல்லது உடைப்பதற்கோ முடியாத அளவிற்கு மிகப்பெரியதாக இருந்ததால் பழைய கோயிலிற்கு துணையாகவும் வாயிலிற்கு முன் நிற்கும் காப்பாளனாகவும் அங்கேயே தங்கிவிட்டிருக்கின்றது. கதவு தாழிடப்பட்டிருந்தது. விரிசல் விழுந்த ஜன்னல்களில் பலகைகள் ஆணிகளால் அடிக்கப்பட்டிருந்தன. ஆனால் அதுவும் இப்போது தகர்ந்துப்போயிருந்தது. அங்கு பயிர்செய்வோர்கள் பெரும்பாலும் அவ்விடத்தை தற்போது கிடங்காகப் பயன்படுத்தக்கூடும்.

மிக அமைதியாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை யாருமேத் தென்படவில்லை. கோயிலிற்கு முன்னிருந்த பழைய மரங்களுக்கிடையில் புகுந்து மலைக்காற்று உறுமிக்கொண்டிருந்தது. எங்களுக்கு இடையூறு செய்ய எவருமில்லை. மரநிழலிலிருந்த புல்வெளியில் படுத்து ஓய்வெடுத்தோம். என் கைகளில் தலைவைத்து ஜியா படுத்திருந்தாள். மெல்லிய இழையோடே சட்டென நீல வானில் மறையப்போகும் மேகத்தை பார்த்தபடி படுத்துக்கிடந்தோம். விவரிக்க முடியா மகிழ்ச்சியிலும் நிறைவோடும் நிறைந்திருந்தோம்.

சூழ்ந்திருந்த அமைதியில் ஆழ்ந்து அங்கேயே படுத்துக்கிடந்திருந்திருப்போம், ஆனால் காலடியோசையை கேட்டு ஜியா சட்டென எழுந்து உட்கார்ந்தாள். நானும் எழுந்து நின்று யாரென பார்க்க வேண்டியதாயிற்று. கற்கள் பதித்த பாதையில் ஒருவர் கோயிலை நோக்கி நடந்து வந்துக்கொண்டிருந்தார். தலையில் சடைமுடியுடனும் நீண்டு வளர்ந்த தாடியுடனுமான தடிமனான மனிதராக இருந்தார். கடுகடுப்புடன் இருந்தார். அடர்ந்து வளர்ந்த புருவங்களுக்கடியிலிருக்கும் முறைப்பான கண்களால் எங்களை அளந்தார். காற்று மிக குளுமையாய் வீசியது. நாங்கள் ஆர்வமாய் பார்ப்பதை கவனித்தவர் தன் பார்வையை கோயில் பக்கம் சற்றுத் திருப்பினார். காற்றில் மினுங்கும் ஓடுகளுக்கு இடையில் அசையும் செடிகளை ஓரக்கண்ணால் பார்த்தார்.

சாம்பிராணியேற்றும் இரும்பு விளக்கின் முன் நின்று அதை ஒரு கையால் தட்டி ஒலியெழுப்பினார். அவருடைய முறுக்கேறிய கடினமான விரல்களும் பார்ப்பதற்கு இரும்பால் ஆனதைப்போன்றே இருந்தன. அவருடைய மற்ற கையில் நைய்ந்துப்போன கதர் பையை வைத்திருந்தார். அங்கு காய்கறிகளை பயிரிட தொடர்ந்து வருபவர்களைப்போல் அவர் தோன்றவில்லை. புல்தரையின் மேல் கிடக்கும் ஜியாவின் உயரமான காலணிகளையும் எங்கள் பயணப்பைகளையும் கவனித்தவர் மீண்டும் எங்களைப் பார்த்தார். ஜியா உடனே தன் காலணிகளை மாட்டிக்கொண்டாள். எதிர்ப்பாரா வண்ணம் எங்களிடம் பேசத் துவங்கினார்.

வெளியூரிலிருந்து வந்திருக்கிறீர்களா? இந்த இடம் பிடித்தமானதாக இருக்கின்றதா? நான் தலையசைத்தேன். நல்ல கால நிலை என்றார். அவர் மேலும் பேசத்துடிப்பதை போன்று தோன்றியது. அடர்ந்து வளர்ந்த புருவங்களுக்கடியிலிருக்கும் கண்களில் தீவிரத்தன்மை சற்று குறைந்தார்ப்போன்று தோன்றியது. பார்ப்பதற்கு நியாயமானவராகவும் இருந்தார். தோலாலான காலணிகளை அணிந்திருந்தார். அதன் அடிப்பகுதி ரப்பர் டயர்களால் ஒட்டப்பட்டிருந்தது. அது இடையிடையே கிழிந்தும் போயிருந்தது. அவருடைய காலுரைகள் ஈரமாக இருந்ததால் ஊரிலிருந்து ஆற்றை கடந்துதான் அங்கு வந்திருக்கின்றார் என்பது புரிந்தது.

பார்ப்பதற்கு எழில் நிறைந்ததாகவும் மிகக்குளுமையாக இருக்கின்றது இங்கு என்றேன்
உட்காருங்கள், நான் சற்று நேரத்தில் கிளம்பிவிடுவேன் என்றார். எங்களுக்கு இடையூறாக வந்துவிட்டதாக நினைத்து மன்னிப்புக்கோறும் வகையிலிருந்தது அவருடைய தொனி. அருகிலிருந்த புல்தரையில் அவரும் அமர்ந்துக்கொண்டார். அவர் பைகளை திறந்தபடி முலாம்பழம் சாப்பிடுகிறீர்களா? என்றார். இல்லை வேண்டாம் என்றேன் உடனே. ஆனால் என்னிடம் ஒன்றை எறிந்துவிட்டார். நான் அதை பிடித்து உடனே திருப்பி எறியப்பார்த்தேன்.

ஒன்றுதானே, என் பாதி பையை இப்பழம் தான் நிறைத்திருக்கின்றது என்று கணமான தன் பையை தூக்கி காண்பித்தார். பேசிக்கொண்டே அடுத்த முலாம்பழத்தை கையில் எடுத்தார். என்னால் வேண்டாமென்று சொல்ல முடியவில்லை. அதனால் என்னிடமிருந்த நொருக்குத்தீனி பொட்டலத்தை பயணப்பையிலிருந்து எடுத்து திறந்து அவரிடம் நீட்டினேன். எங்கள் திண்பண்டங்களை சாப்பிட்டுப்பாருங்கள் என்றேன். ஒரு சிறிய கேக் துண்டை மட்டும் எடுத்து தன் பையில் வைத்துக்கொண்டார். இதுபோதுமெனக்கு என்று சொல்லிவிட்டு எங்களைச் சாப்பிடச்சொன்னார். முலாம்பழத்தோல்களை உறிக்கத்துவங்கினார். “சுத்தமானமவை, ஆற்றில் இவற்றை கழுவிக் கொண்டு வந்தேன்” பழத்தோலை ஒரு பக்கம் தூற எறிந்துவிட்டு கதவுப் பக்கம் நோக்கி குரல் எழுப்பினார். “போதும், சிறிது ஓய்வெடுத்துக்கொள், இங்கு வந்து கொஞ்சம் பழம் சாப்பிடு.”

“இங்கு நீளமான கொம்புடைய வெட்டுக்கிளிகள் இருக்கின்றன” கதவிற்கப்பாலிருந்து சிறுவனின் குரல் கேட்டது. பிறகு கையில் கூண்டுடன் சரிவில் சிறுவன் தென்பட்டான்.

ஏராளமானவைகள் இருக்கின்றன. நான் உனக்குப் பிறகு பிடித்துத்தருகின்றேன் என்று பதிலளித்தார்.

சிறுவன் எங்களை நோக்கித் துள்ளி குதித்து ஓடிவந்தான்.

இப்போது பள்ளி விடுமுறையா? என்றேன். அவர் உறித்ததைப்போன்றே நானும் முலாம்பழத்தை உறித்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை, அதனால் இவனை வெளியில் கூட்டிவந்தேன் என்றார். என்ன கிழமை என்று கூட மறந்துப்போய் எங்கள் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தோம். முலாம்பழத்தை ஒரு கடி கடித்துவிட்டு என்னை பார்த்து புன்முறுவலித்தாள் ஜியா, அவர் நல்ல மனிதர் என்ற அர்த்தத்தில். சொல்லப் போனால் இவ்வுலகில் பல நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.

சாப்பிடு, அந்த அங்கிளும் ஆண்டியும் இதை தந்தார்கள், என்றார் கேக்கையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம். இந்த ஊரிலேயே வளர்ந்த சிறுவன் இதைப்போன்றதொரு கேக்கை இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பில்லை. உடனே எடுத்து சாப்பிட்டான்.

உங்கள் மகனா? என்றேன்.

அவர் பதிலளிக்கவில்லை. முலாம்பழங்களை எடுத்துக்கொண்டு விளையாடச்செல், பிறகு வெட்டுக்கிளிகளைப் பிடித்துத்தருகின்றேன் என்றார் சிறுவனிடம்.

“எனக்கு ஐந்து வெட்டுக்கிளிகள் பிடிக்க வேண்டும்” என்றான் சிறுவன்.

“சரி பிடிச்சிடலாம்”

கையில் கூண்டுடன் சிறுவன் ஓடிச்சென்றதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய கண்களின் ஓரத்தில் ஆழ்ந்த சுருக்கங்கள் இருந்தன.

ஒரு சிகரெட்டை எடுத்தபடி அவன் என்னுடைய மகன் இல்லை என்றார். சிகரெட்டை பற்றவைத்து ஆழ்ந்து புகைத்தார். எங்களுடைய அதிர்ச்சியை உணர்ந்து, அவன் எனக்கு மிகவும் நெருக்கமான என்னுடைய ஒன்றுவிட்ட தம்பியின் மகன். அவனை தத்தெடுத்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன், ஆனால் என்னுடன் வந்து தங்க இவன் விரும்புவானாவெனத் தெரியவில்லை என்றார்.

அவர் உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றார் என்பது புரிந்தது.

“உங்கள் மனைவி?” என்றாள் ஜியா இதை கேட்பதை தவிர்க்க இயலாதவாறு. ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. சிகரெட்டை ஆழ்ந்து புகைத்தவாறு எழுந்து சென்றுவிட்டார்.

குளுமையான மலைக்காற்று வீசிக்கொண்டிருந்தது. மஞ்சள் நிற ஓடுகளுக்கிடையில் செடிகளின் உயரத்திற்கு வளர்ந்திருந்த பசுமையான புற்களும் சேர்ந்து காற்றில் அசைந்துக் கொண்டிருந்தன. நீல வானில் மிதந்து வந்த மேகங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்த மேற்கூரைக்கு அருகில் இருந்தைப் பார்ப்பதற்கு கோயிலே சாய்வாக இருப்பதைப்போன்றுத் தோன்றியது. மேற் கூரையின் ஓரத்திலிருந்த ஓர் உடைந்த ஓடு விழுந்து விடுவதைப்போன்று தொங்கி ஆடிக்கொண்டிருந்தது. அது பல ஆண்டு காலம் விழாமல் அங்கேயே அவ்விதம் தங்கிவிட்டிருக்கவும் கூடும்.

முன்பெப்போதோ சுவராய் இருந்த சிதிலங்களின் மீது அவர் நின்று வெகுநேரம் மலைத்தொடர்களையும் பள்ளத்தாக்குகளையும் பார்த்துக்கொண்டிருந்தார். நாங்கள் இருக்கும் மலையை விட தூரத்தில் தெரிந்த மலைத்தொடர்கள் உயரமாகவும் செஞ்குத்தாகவும் இருந்தன. ஆனால் அந்த மலைச்சரிவுகளில் எந்த படிமுறை வேளாண்மையோ வீடுகளோ தென்படவில்லை.

நீ அவரிடம் அப்படி கேட்டிருக்கக்கூடாது என்றேன்

“சரி நிறுத்து” ஜியா வருத்தத்துடன் இருந்தாள்.

“இங்க ஒரு வெட்டுக்கிளி இருக்கு” என்ற பையனின் குரல் மலையின் மறுபக்கத்திலிருந்து ஒலித்தது. ரொம்ப தூரத்திலிருந்து கேட்பதைப்போன்று இருந்தாலும் மிகத்தெளிவாகக் கேட்டது.

முலாம்பழம் நிறைந்திருந்த பை அசைந்தபடியே அத்திசை நோக்கி நடக்க ஆரம்பித்தவர் எங்கள் கண்பார்வையிலிருந்து மறைந்தார். ஜியாவின் தோளில் கை வைத்து என்பக்கம் இழுத்தேன்.

வேண்டாம் என்று திரும்பிக்கொண்டாள்.

உன் தலைமுடியில் புல் ஒட்டிக்கொண்டுள்ளது என்று விளக்கி காய்ந்த சருகை அவள் தலையிலிருந்து எடுத்தேன்.

அந்த ஓடு இப்போது விழப்போகிறது என்றாள். சற்று தொங்கலாக ஆடிக் கொண்டிருக்கும் உடைந்த ஓட்டை அவளும் கவனித்திருக்கின்றாள். அது இப்பவே விழுந்து விட்டால் நல்லது இல்லையென்றால் யாரையாவது காயப்படுத்திவிடும் என்று முணுமுணுத்தாள்.

அது விழ இன்னும் சற்று காலமாகும் என்றேன்.

அவர் நின்றிருந்த இடத்திற்கு சென்றோம். பள்ளத்தாக்கின் ஒரு பகுதியில் பயிர்நிலம் பரந்து விரிந்திருந்தது. அடர்ந்த பயிர்கள் அறுவடைக்காகக் காத்திருந்தன. எங்களுக்கு கீழிருந்த சரிவின் சமமான பகுதிகளில் சில மண்குடிசைகள் இருந்தன. அதன் அடிப்பாதி சுவர்களில் புதிதாக பளிச்சென சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தது. அவர் சிறுவனின் கையை பிடித்தபடி கீழிறங்கிக் கொண்டிருந்தார். சட்டென கடிவாளத்தில் இருந்து விடுபட்ட குதிரையைப் போன்று சிறுவன் தாவிக்குதித்து முன் ஓடிச்சென்று மீண்டும் திரும்பி ஓடிவந்தான். அவனுடைய கூண்டை அவரிடம் ஆட்டிக்காட்டுவதைப்போன்று இருந்தது.

“அவர் சிறுவனுக்கு வெட்டுக்கிளிகளை பிடித்துத் கொடுத்திருப்பார் என்று தோன்றுகிறதா? ஜியா நீ என்னிடம் இதை கேட்டது நினைவிருக்கின்றதா?

“நிச்சயமா” என்றேன். “நிச்சயமா”

ஐந்து வெட்டுக்கிளிகளை பிடித்துக்கொடுத்தார் என்றாய் நீ துடுக்காக.

இதுதான் நாங்கள் எங்கள் தேன்நிலவில் போய்வந்த அறக்கோயில், இதை பற்றித்தான் உங்கள் எல்லோருக்கும் விவரிக்கவேண்டுமென்றேன்.

****************************************************

பிகு : தமிழில் எழுத லகுவாக இருக்குமென்பதால் Fanafang என்ற பெயரை ஜியா என்று மாற்றியிருக்கின்றேன்.

Read Full Post »

கான்ஸ், ப்ரான்ஸ்
21 மே 2010

தொன்னூறுகளில் கலைப்படங்களின் நட்சத்திரமான கியரோஸ்டமி கடந்த பத்து ஆண்டுகளாக நிழற்படத்துறையிலும் (still photography) திரைப்பட பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறார். இவர் Taste of Cherry படத்திற்கு கான்ஸ் திரைப்படவிழாவின் முக்கிய விருதான Palme d’Or விருதை 1997ஆம் ஆண்டு வென்றவர். ஜூலியட் பினோச்சும் வில்லியம் ஷிமல்லும் நடித்துள்ள இவரது சமீபத்திய படமான ‘Certified Copy’ கான்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட உள்ளது. சில தந்திரமான பிரதிபளிப்புக்களும் நம்பிக்கைகளை பற்றிய தத்துவ எண்ணங்களும் தொன்னூறுகளில் வெளியான ‘close-up’ படத்தைப்போன்றே இருந்தாலும் முதன் முதலில் இரானிற்கு வெளியே படமாக்கப்பட்ட ‘ceritified copy’ சிறந்த படமாக இருக்கின்றது.

இவ்வருட கான்ஸ் திரைப்பட விழாவின் போஸ்டர்களில் முக்கிய முகமான பினோச்சிற்கு இப்படம் மிகச்சிறந்த பெயரை பெற்றுத்தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவர் ப்ரான்ஸ், ஹாலிவுட்டைக்கடந்து தாய்வான் இயக்குனரான Hou Hsiao-hsien மற்றும் இஸ்ரேல் இயக்குனரான Amos Gitaiயின் படங்களிலும் நடித்துள்ளார். அடுத்து நடிக்கப்போவது சீன இயக்குனரான Jia Zhangkeயின் படம் என்கிறார்.

ஊடகங்களுக்கான திரையிடலில் சில எதிர் விமர்சனங்களை கண்டிருந்தாலும் ‘Certified Copy’ மிகுந்த உற்சாகமான வரவேற்பையும் கான்ஸ் திரைப்படவிழாவில் முன்னனி இடத்தை வகிக்கக்கூடிய எதிர்ப்பார்ப்பையும் பெற்றுள்ளது.

இவ்வருட கான்ஸ் திரைப்பட தேர்வுகளின் நடுவர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டிய இரானிய இயக்குனரான ஜாபர் பனஹி டெஹரான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையை பற்றி கியரோஸ்டமி மிகுந்த வருத்தத்துடன் பேசினார். பனஹியை கௌரவிக்கும் வகையில் எல்லா திரைப்பட போட்டி திரையிடல்களிலும் அவருக்கான இருக்கை காலியாகவே இருக்குமென அறியப்படுகின்றது.

திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட அப்பாஸ் கியரோஸ்டமியுடன் டென்னிஸ் லிம் கண்ட நேர்காணலிலிருந்து ஒரு பகுதி :

கேள்வி : இங்கு இருக்கும்போது ஜாபர் பனஹியை ஆதரித்தும் இரானிய அரசை கண்டனம் செய்தும் குரல்லெழுப்புகின்றீர். டெஹரானில் வசிக்கும் நீங்கள் உங்களின் அடுத்தப் படத்தையும் இரானிலேயே படம்பிடிக்க தீர்மானித்துள்ளீர். இதனால் எழப்போகும் விளைவுகளை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா?

பதில் : எனது படப்பிடிப்பு அனுமதியை ரத்து செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. மேலும் எனது படங்கள் இரானில் வெளியிடப்படுவதில்லை. அதற்கு மேல் அவர்கள் வேறு என்ன செய்யமுடியும். ஆரம்பத்தில் ஜாபர் பனஹியின் பாஸ்போர்டை எடுத்துக்கொண்டது போல் என்னிடத்தும் நடத்துக்கொள்ளலாம் என்ற நினைக்கின்றேன்….தெரியவில்லை என்ன நடக்குமென்று.

கேள்வி : ‘Certified copy’ என்ற படம் தங்களின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் வேறானது என்று பலரும் கூறுகின்றனர். நீங்களும் அப்படி கருதுகிறீர்களா?

பதில் : நான் என்னுடைய உழைப்பை பற்றிய முழுமையான கருத்தைக்கொண்டவனல்ல. ஒவ்வொரு படமாக செய்கின்றேன். இந்த நேரத்தில் இப்படம் மிகவும் நெருக்கமானதாக இருக்கின்றது. அதனால் இது என் கண்ணை மறைக்கின்றது, என்ன செய்தேன் என்பதை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. உதாரணத்திற்கு ‘The wind will carry us’ (1999) படத்தை உருவாக்கியபோது பார்த்தேன். பிறகு சமீபத்தில் மீண்டும் அதை கண்டெடுத்தேன். பத்து வருடங்கள் கழித்து வேறு பார்வைகள் கொண்டு வேறு விதமாக அதை என்னால் பாக்கக்கூடுமெனத் தோன்றியது. தற்பெருமையாக கருதவேண்டாம். எனக்கு அப்படம் பிடித்திருந்தது. வேறொருவரின் படமாக என்னால் அதை பார்க்க முடிந்தது.

கேள்வி : இரானிற்கு வெளியில் நீங்கள் படமாக்கிய முதல் திரைப்படம் இது. எப்போதும் தொழில் முறை நடிகர்கள் அல்லாதவர்களை வைத்து வேலை செய்யும் நீங்கள், இத்திரைப்டத்தில் தேர்ந்த நடிகர்களை கொண்டு அவர்களை ஒரு மொழியல்ல மூன்று மொழிகள் பேசவைத்து இயக்கியிருக்கின்றீர்கள். எழுதி இயக்கும் முறைகளில் இத்தடவை எதாவது வித்தியாமான வழிகளை கையாண்டீர்களா?

பதில் : எப்போதும் போல் பார்ஸியில் எழுதினேன். நடிகர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசவேண்டும் என்பதைபற்றியோ, மொழிபெயர்க்கப்படவேண்டும் என்பதை பற்றியோ முதலில் கவனம் செலுத்தவில்லை. படப்பிடிப்பின் போதும் சூழல்கள் தான் வேறாக இருந்ததே தவிர செயல்முறைகள் அடிப்படையில் ஒன்றாகவே இருந்தன. ஜூலியட் போன்ற நட்சத்திரங்களுடன் வேலை செய்வது சற்று பதற்றமாக இருந்தது. புதியதாவகவும் வித்தியாசமாகவும் இருக்குமென்று நினைத்தேன். ஆனால் எங்களுக்கிடையில் நல்ல புரிதல் இருந்தது. அவர் தேர்ந்த தொழில் முறை நடிகை என்றாலும் அப்படி நடந்துக்கொள்ளவில்லை.

கேள்வி : அவர் தேர்ந்த தொழில் முறை நடிகை என்றாலும் அப்படி நடந்துக்கொள்ளவில்லை என்று எந்த விதத்தில் கூறுகிறீர்கள்?

பதில் : தொழில் முறை நடிகர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவார்கள் செல்வார்கள். இதயரீதியாக அல்லாமல் தொழில் ரீதியாகவே அனுகுவார்கள். இரான் உட்பட எல்லா இடங்களிலும் பெரும்பாலான நடிகர்கள் அப்படிதான் நடந்துக்கொள்வர்கள். ஆனால் ஜூலியட் அப்படி இல்லை. அவர் அவராகவே இருந்தார். அவரின் அருமையான திறமைகளையும் அனுபவங்களையும் வெளிக்கொணர்ந்தார். என்னுடன் முன்பு பணிபுரிந்தவர்கள் நடந்துக்கொண்டது போலவே இவரும் இருந்தார். இதயபூர்வமாக நடித்தார்.

கேள்வி : தற்போது முடிக்கப்பட்ட இப்படம் அதன் மூல திரைகதைக்கு சமீபமானதாக இருக்கின்றதா அல்லது படப்பிடிப்பின் போது மாற்றங்கள் செய்யப்பட்டனவா?

பதில் : வரிசை படியே படப்பிடிப்பு நடத்தினோம். முதல் பகுதி முழுவதுமாக எழுதப்பட்டிருந்ததால் அதன்வழியிலேயே பயணித்தோம். இரண்டாவது பகுதியை ஒவ்வொரு நாளும் மீண்டும் எழுதினோம். சில காட்சிகளை நீக்கினோம் சிலவற்றை முழுவதுமாக மாற்றி அமைத்தோம்.

கேள்வி : உங்களுடைய பல படங்களில் காரில் நீண்ட வசனங்கள் பேசுவதாக அமைந்துள்ளன. அதுபோல் ‘Certified Copy’யிலும் ஆரம்பக்கட்ட காட்சிகளுண்டு. The Taste of cherryயிலும் நீங்களே கண்ணில் படாத ஓட்டுனராகவோ பயணியாகவோ காரோட்டும் காட்சிகளில் நடித்திருந்தீர்கள். இப்படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகளை அமைத்துள்ளீர்களா?

பதில் : இம்முறை மிகவும் நேர்த்தியான தேர்ந்த நடிகர்கள் என்பதால் நான் புகைப்பட இயக்குனருடனும், ஒலி நிபுனருடனும், மொழிபெயர்ப்பாளருடனும் பின் இறுக்கையில் ஒளிந்திருந்தேன். நான் அங்கு இருக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை. Taste of cherryயில் கேமராவிற்கு முன் தனியாக நிற்கும் நடிகர்களுக்கு நான் உடன் இருக்கவேண்டிய தேவை இருந்தது.

என்னுடைய அடுத்த படமும் ஒரு சாலைப்படம் தான். என்னுடைய ‘Ten on 10’ படத்தில் ஏன் இது போன்ற கார் ஓட்டும் காட்சிகளை வைக்கின்றேன் என்று விளக்குவேன். காரில் இருப்பது எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கின்றது. கேமராவின் இருப்பை மிகக்குறைவாகவே உணரவைக்கும் இடங்களில் காரும் ஒன்று. மறக்கமுடியாத படங்களில் ஒன்றான ஸ்பீல்பெர்கின் ‘Duel’ படம் ஹிட்ச்காகின் படங்களை நினைவுபடுத்தினாலும் ஹிட்ச்காகின் படங்களை விட இது எனக்கு மிகவும் பிடித்தமானது.

என்னை காரில் ஒரு கேமராவுடனும் பூட்டிவிடுவதானால் கூடவே ஒரு நடிகையும் இருந்தால் நான் ஆட்சேபிக்கவேமாட்டேன். காரை விட்டு வெளியேற மாட்டேன் என்று உறுதியளிப்பேன். இரானிற்கு திரும்பும் போது பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டால் என்னை சிறையில் அடைக்காமல் காரில் பூட்டிவிடும்படி சொல்லலாம் அவர்களிடம்.

பிகு : இவ்வருடம் ‘Uncle Boonmee Who Can Recall His Past Lives’ என்ற தாய் படம் கான்ஸ் திரைப்பட விழாவின் முக்கிய விருதான the Palme d’Or ஐ பெற்றுள்ளது. Certified Copyயில் நடித்த ஜூலியட் பினோச்சிற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது

மூலம் :
http://artsbeat.blogs.nytimes.com/2010/05/21/a-double-bill-with-binoche-and-kiarostami/

மொழிபெயர்ப்பு : நதியலை

நன்றி : உன்னதம் ஜூன் 2010 இதழ்

Read Full Post »

சாய்வு நாற்காலியில் அமர்ந்து நிம்மதிப் பெருமூச்செறிந்தார் சஷ்மல்.

மிகவும் உகந்த இடமான வடக்கு பீஹாரில் இருக்கும் காட்டு பங்களாவை தேர்வுசெய்திருந்தார். வேறு எந்த இடமும் அத்தனை நிம்மதியாய் அமைதியாய் பாதுகாப்பாய் இருந்திருக்க முடியாது. அறையும் கூட வெகு திருப்திகரமாய் இருந்தது. ராஜா காலத்து பழைய திடமான வீட்டுச்சாமான்களால் ஈர்க்கும்விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பெரிய கட்டிலில் தூய்மையான, துளியும் கறைகளில்லாத படுக்கை விரிப்புகள் சீராக விரிக்கப்பட்டிருந்தன. குளியலறையும் வசதியாகவும் சுத்தமாகவும் இருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியாக குளிர் காற்று மென்மையாய் வீசியது, அதனுடன் சில்வண்டின் ரீங்காரமும் சேர்ந்துக்கொண்டது. மின்சாரம் தடைபட்டிருந்தும் கூட அஃதொரு பெரிய குறையாகத் தெரியவில்லை. கல்கத்தாவில் அடிக்கடி தடைபடும் மின்சாரம் மண்ணெண்ணெய் விளக்குகளின் அருகில் அமர்ந்து வாசிக்க அவருக்கு கற்றுத்தந்திருந்தது. அவர் அப்படி வாசிப்பதற்கு மிகவும் பழகிவிட்டிருந்தார். பங்களாவில் இருக்கும் விளக்குகள் சாதாரண கண்ணாடிகளை கொண்டிருந்தாலோ என்னமோ அவருக்கு தன் வீட்டிலுள்ள விளக்குகளை விட அது அதிக வெளிச்சம் தருவதைப்போலிருந்தது. மிகவும் பிடித்தமான துப்பறியும் நாவல்களை தன்னுடன் நிறைய கொண்டுவந்திருந்தார்.

அப்பங்களாவில் ஒரே ஒரு பணியாளைத் தவிர வேறு யாருமில்லை. யாரையும் சந்திக்கவோ பேசவோ அவசியமிருக்காதென்பதால் இதுவும் அவருக்கு மிகவும் உகந்ததாகவே இருந்தது. பத்து நாட்களுக்கு முன்பு கல்கத்தாவிலுள்ள ஒரு சுற்றுலாத்துறை அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்திருந்தார். நான்கு நாட்களுக்கு முன்பு அவர்களிடமிருந்து வந்த ஓர் கடிதம் பதிவை உறுதி செய்தது. அங்கிருந்து வேறெங்கேனும் மாற்றலாக வேண்டுமெனில் குறைந்தது மூன்று நாட்களேனும் அங்கு தங்கியிருக்கவேண்டும். தாராளமாக ஒருமாதம் தங்குமளவிற்கு தேவையான பணம் அவரிடமிருந்தது. கல்கத்தாவிலிருந்து 550 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இவ்விடத்திற்கு தன் சொந்த காரில் தானே காரோட்டிக்கொண்டு வந்து சேர்ந்தார்.

சப்பாத்தி, தால் மற்றும் சில காய்கறிகளுடன் கோழிக்கறியும் கொண்ட இரவு உணவை சொன்னபடியே ஒன்பதரை மணிக்கு பணியாள் பரிமாறினார். உணவறை ராஜா காலத்து அம்சங்கள் நிறைந்ததாகவும் உணவு மேஜை, நாற்காலிகள், வேலைப்பாடுகள் மிகுந்த அலமாரிகள் அனைத்தும் ஆங்கிலேயர் காலத்தவையாகவும் தோன்றின.

இங்கு கொசுக்கள் உண்டா? என்று சஷ்மல் சாப்பிடும் போது வினவினார். கல்கத்தாவில் அவர் வசிக்குமிடத்தில் கொசுக்கள் அறவே கிடையாது. கடந்த பத்து ஆண்டுகளில் கொசுவலையை பயன்படுத்தும் அவசியமும் ஏற்படவில்லை. இங்கும் கொசுவலை பயன்படுத்தவேண்டிய அவசியம் இருக்காதெனில் அவருடைய ஆனந்தம் முழுமையடையும்.

குளிர் காலத்தில் கொசுக்கள் உண்டெனவும் இது ஏப்ரல் மாதமாதலால் கொசுத்தொல்லை இருக்காதென்றார் பணியாள். மேலும் தனக்கு கொசு வலை வைத்திருக்கும் இடம் தெரியுமென்றும் அவசியம் ஏற்பட்டால் எடுத்து இடுவதாகவும் கூறினார். காட்டுக்கு நடுவில் தாங்கள் இருப்பதால் கதவுகள் திறந்திருந்தால் நரியோ அல்லது வேறு விலங்குகளோ உள்நுழையக்கூடும் அபாயம் உள்ளதால் இரவில் கதைவுகளை சாத்திவிட்டு உறங்குவது நல்லதென்றார். உறங்கப்போவதற்கு முன்பு கதவுகளை மூடிவிடுவதென ஏற்கெனவே தீர்மானித்திருந்த சஷ்மல் சரியென்றார்.

சாப்பிட்டு முடித்த பின்னர் உணவறைக்கு வெளியிலிருந்த வராந்தாவிற்கு கையிலொரு டார்சுடன் வந்தார். காட்டை நோக்கி டார்ச் வெளிச்சத்தை அடித்தபோது அது ஷால் மரத்தின் அடிப்பாகத்தில் விழுந்தது. சுற்றிமுற்றி எதாவது விலங்கு தென்படுகின்றதாவென பார்த்தும் ஒன்றும் காணக்கிடைக்கவில்லை. ஓயாமல் ரீங்கரித்துக்கொண்டிருக்கும் சில்வண்டை தவிர முழு காடும் அமைதியில் மூழ்கி இருந்தது.

உணவறைக்கு திரும்பியவுடன் இப்பங்களாவில் பேய்கள் இல்லையென நம்புகிறேன் என்றார் சஷ்மல் சாதாரணமாக. பணியாள் மேஜையை சுத்தம் செய்துக்கொண்டிருந்தார். கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக அங்கு பணிபுரிவதாகவும் ஏராளமான நபர்கள் அக்காலக்கட்டங்களில் வந்து தங்கியிருந்ததாகவும் யாரும் இதுவரை பேயை பார்த்ததில்லையெனவும் சமயலறைக்கும் செல்லும் வழியில் நின்று புன்னகைத்தபடியே கூறினார். சஷ்மலின் மனதை இப்பதில் லேசாக்கியது.

உணவறையிலிருந்து இரண்டாவது அறை அவருடையது. சாப்பிட வரும்முன்னர் அறைகதவை மூடிவிட்டு வரவேண்டுமென அவருக்கு தோன்றவில்லை. திரும்பி வந்தப்பின்னர் திறந்து வைத்துவிட்டு வந்திருக்கக்கூடாதென தோன்றியது. மெலிதான வெள்ளை உடலில் ப்ரௌன் புள்ளிகளை கொண்ட ஒரு தெருநாய் எப்படியோ உள் நுழைந்துவிட்டிருந்தது.

ஏ வெளியே போ…ஷூ ஹூ வெளியே போ என கத்தினார். அறையின் ஓர் மூலையில் நகராமல் அவ்விரவை அங்கு கழிப்பதற்கான முடிவோடு அது பார்த்துக்கொண்டிருந்தது.

வெளியே போன்றேன்

இம்முறை நாய் தன் கோரப்பற்களை காட்டியது. சஷ்மல் பின்நகர்ந்தார். சிறுவனாக இருந்தபோது அவரின் பக்கத்து வீட்டுக்காரரின் மகன் வெறிநாயால் கடிக்கப்பட்டான். நாய்க்கடி நோயிலிருந்து அவனைக் காப்பாற்ற முடியவில்லை. சஷ்மலுக்கு அச்சிறுவன் துயறுற்றுத் தவித்த ஒவ்வொரு பயங்கர சம்பவமும் ஞாபகத்திலிருந்தது. உறுமும் நாயை எதிர்க்கொள்ள அவருக்குத் தைரியமில்லை. பக்கவாட்டில் அதை பார்த்தபடியே மீண்டும் வராண்டாவிற்கு வந்தார்.

பணியாளை அழைத்தார்.

‘சொல்லுங்க ஐயா’

‘ஒருநிமிடம் இங்கு வரியா?’

கையை துண்டால் துடைத்தபடியே வந்தார்.

‘என்னறையில் ஒரு நாய் உள்ளது, அதை வெளியில் துரத்துகிறாயா?’

‘நாயா? பணியாள் ஆச்சரியத்தில் வினவினார் .’

“ஆமாம். ஏன், இப்பகுதியில் ஒரு நாய் கூட இல்லையென்கிறாயா? இதில் இவ்வளவு ஆச்சரியப்பட என்ன இருக்கின்றது. என்னுடன் வா காண்பிக்கின்றேன்.”

பணியாள் சஷ்மலை சந்தேகமாக பார்த்துக்கொண்டே அறையில் நுழைந்தார். ‘எங்க ஐயா நாய்?’ சஷ்மல் அவரை தொடர்ந்து உள்நுழைந்தார். நாய் இருப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. பணியாளை அழைக்கச்சென்ற சில நிமிடங்களில் அது சென்றுவிட்டிருக்கின்றது. இருந்தும் உறுதிசெய்துக்கொள்ள பணியாள் கட்டிலிற்கடியில் பார்த்தார், குளியலறையையும் சோதித்தார்.

‘இல்லை ஐயா, நாய் எதுவும் இங்கில்லை’

‘இப்போது இல்லாமலிருக்கலாம், ஆனால் சில நிமிடங்களுக்கு முன்பு இருந்தது.’

சஷ்மலால் கொஞ்சம் அசட்டுத்தனமாக உணராமல் இருக்கமுடியவில்லை. பணியாளை அனுப்பிவிட்டு மீண்டும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். சிகரெட்டை புகைத்து முடித்த பின்னர் ஜன்னல் வழியாக மிச்சமிருந்த துண்டை எரிந்துவிட்டு கைகளை உயர்த்தி சோம்பல் முறிக்கும் போது நாய் சென்றிருக்கவில்லை என்பதை கவனித்தார். அல்லது சென்றிருந்தாலும் மீண்டும் வந்து அதே மூலையில் நின்றுக்கொண்டிருக்கின்றது.

அவருக்கு எரிச்சலூட்டியது. அதை அங்கு தங்க அனுமதித்தால் இரவில் அவர் பாட்டாவில் வாங்கிய புதிய செருப்பை மென்று தூள்தூளாக்கிவிடும். உபயோகிக்கப்படாத செருப்பிற்கு நாய் கொண்டிருக்கும் மோகத்தை பற்றி நன்கு அறிவார் சஷ்மல். தரையிலிருந்த செருப்பை எடுத்து மேஜையில் வைத்தார்.

இப்போது அறையில் அவருடன் இன்னொரு உயிரினமும் சேர்ந்தாயிற்று. பரவாயில்லை தற்சமயம் இருந்துவிட்டு போகட்டும். அவர் படுக்கச்செல்லுமுன் மீண்டும் அதை வெளியில் துரத்த முயற்சிக்கலாம்.

மேஜையில் வைத்திருந்த இந்தியவிமானப்பையிலிருந்து நாவலை எடுத்து மடக்கிய பக்கத்திலிருந்து மீண்டும் வாசிக்க புத்தகத்தை திறந்தபோது நாய் இருந்த எதிர் மூலையில் தற்செயலாக சஷ்மலின் பார்வை சென்றது. அவருக்கு தெரியாமல் மற்றொரு உயிரினமும் அறையில் நுழைந்துவிட்டிருக்கின்றது.

புலியை போன்றே உடல் முழுவதும் கோடுகள் கொண்ட பூனை அது. ஒரு பந்தைப்போன்று சுருண்டு மங்கிய மஞ்சள் கண்களுடன் அவரையே பார்த்துக்கொண்டிருந்தது. இதே போன்றதொரு பூனையை வேறு எங்கு பார்த்திருக்கின்றார்?

ஆம்!. பக்கத்து வீட்டிலிருந்த குதூஸ் வளர்த்த ஏழு பூனைகளில் ஒன்று இதைபோன்றே இருக்கும். அவ்விரவில் எல்லாம் வேகமாக நினைவிற்கு வந்தது சஷ்மலிற்கு.

ஆறு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த பூனையின் பெரும் ஓலத்தால் எழுப்பப்பட்ட அன்று ஏற்கெனவே அவரின் தொழில் துணைவர் அதீருடன் வாக்குவாதம் முற்றியதால் பயங்கர கடுப்பில் இருந்தார். இவரின் செயல்களை அம்பலப்படுத்த காவல்துறையிடன் செல்லப்போவதாக அதீர் பயமுறுத்தவே அது பெரும் சண்டையாகிவிட்டிருந்தது. அதனால் சஷ்மலுக்கு அன்றிரவு நிம்மதியாக உறங்கமுடியவில்லை. பூனையும் ஓலமிட்டுக்கொண்டடிருந்தது. அரைமணிநேர சகிப்பிற்கு பின்பு தன் பொறுமையை இழந்ததால் காகித கனத்தை மேஜையிலிருந்து எடுத்து சத்தம் வந்த திசை நோக்கி ஜன்னல் வழியாக வீசி எறிந்தார். சத்தம் அடங்கியது.

அடுத்தநாள் காலை குதூஸின் வீட்டிலிருந்த அனைவரும் கூச்சலிட்டனர். யாரோ அவர்களிடமிருந்த உடலில் வரிகள் கொண்ட ஆண் பூனை ஒன்றை கொடூரமான முறையில் கொலை செய்து விட்டார்கள் என்று சொல்லப்பட்டது. பூனையின் கொலையா? சஷ்மலுக்கு வேடிக்கையாக இருந்தது. இதை கொலை என்று சொன்னால் பிறகு தினம்தினம்தான் மக்கள் கொலை செய்து கொண்டுள்ளனர் அதை பற்றிய பிரக்ஞையே இல்லாமல். பலவருடங்களுக்கு முன் நடந்த வேறொரு சம்பவத்தின் நினைவும் வந்தது. அப்போது அவர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தார். ஒரு நாள் அவரின் அறைச்சுவரில் எறும்புகள் நீண்ட வரிசையில் ஊர்ந்துக்கொண்டிருந்தன. சஷ்மல் செய்திதாளை எடுத்து ஒரு முனையில் பற்றவைத்து அதை அப்படியே எறும்புகளின் வரிசையின் மேல் இழுத்தார். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அச்சிறு எறும்புகள் கருகி தரையில் விழுமுன்னரே மடிந்தன. அதை கொலை என்று சொல்லிவிடமுடியுமா?

சஷ்மல் கைகடிகாரத்தை பார்த்தார். பத்துமணியாவதற்கு பத்து நிமிடங்கள் இருந்தன. கடந்த ஒருமாதமாகவே தொடர்ந்து ஏற்பட்ட தலைவலி இப்போது இல்லாமல் போயிருந்தது. எப்போதுமே உடல் உஷ்ணமாக உணர்ந்ததால் ஒருநாளிற்கு மூன்று முறை குளித்துக்கொண்டிருந்தார். அவ்வுணர்வும் இப்போது காணமால் போயிருந்தது.

புத்தகத்தை பிரித்து வாசிக்க ஆரம்பித்தார். இரண்டு வரி வாசிப்பதற்குள்ளாகவே அவரின் பார்வை மீண்டும் பூனையின் மேல் விழுந்தது. எதனால் அவரை அது அத்தனை தீவிரமாக முறைத்துக்கொண்டிருக்கின்றது?

அவருடைய இஷ்டம்போல் அவ்விரவை கழிக்க இயலாதென புரிந்தது. ஒரே நல்ல விஷயம் அவருடன் தங்கியிருக்கும் மற்ற இரண்டு ஜீவன்களும் மனிதர்கள் அல்ல. அவை சத்தம் போடாமல் ஒழுங்காக நடந்துக்கொண்டால் அமைதியான உறக்கம் வாய்க்காமல் போவதற்கான சாத்தியங்களில்லை. உறக்கம் அவருக்கு மிக முக்கியமான ஒன்று. பல காரணங்களால் கடந்த சில நாட்களாக அவர் சரியாக உறங்கியிருக்கவில்லை. நவீன முறைகளான தூக்கமாத்திரைகளை விழுங்கும் பழக்கத்தில் சஷ்மலுக்கு நாட்டமில்லை.

விளக்கை எடுத்து கட்டிலிற்கு அருகிலிருந்த சிறிய மேஜையில் வைத்தார். சட்டையை கழட்டி மாட்டிவிட்டு கொஞ்சம் தண்ணீர் அருந்திவிட்டு புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டே படுக்கச்சென்றார். கட்டிலின் காலுக்கருகில் அமர்ந்திருந்த நாய் இப்போது எழுந்து நின்றது. அதன் கண்கள் சஷ்மலை பார்த்தபடியே இருந்தன.

நாயின் கொலையா?

சஷ்மலின் இதயம் ஒரு துடிப்பை தவரியது. ஆமாம் ஒருவகையில் கொலைதான். அச்சம்பவம் அவருக்கு நன்றாக நினைவிலிருந்தது. 1973ஆம் ஆண்டு காரை வாங்கி சில நாட்களே ஆகியிருந்தன. எப்போதுமே அவர் ஒரு முரட்டுத்தனமான வேகத்துடன் காரோட்டுபவர். கல்கத்தாவில் மக்கள் அதிகமாக இருக்கும் நெரிசலான சாலைகளில் வேகமாக கார் ஓட்ட முடியாததால் புறநகர் பகுதிக்கு சென்றுவிடுவார். வேக மானியின் முள் தானாக உயரும். மணிக்கு எழுபது மைல் வேகத்திலேனும் செல்லாவிட்டால் அவருக்கு திருப்தியாக இருக்காது. கோலகாட் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அன்றும் அதே வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது ஒரு நாய் அவர் காரின் இடையில் சிக்கியது. அது வெண்ணிற உடலில் பரௌன் புள்ளிகளை கொண்ட சாதாரண தெருநாய்.

என்ன நிகழ்ந்ததென்று அறிந்தும் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அச்சம்பவம் நினைவில் உறுத்திக்கொண்டிருந்தது. அதனால் என்ன பரவாயில்லையென்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டார். அது ஒரு தெரு நாய் தானே. எலும்புகளை எண்ணிவிடுமளவுக்கு ஒல்லியாக இருந்தது. அது உயிரோடு இருந்துதான் என்ன பயன்? யாருக்கு என்ன நன்மை செய்திருக்கபோகிறது? தன்னிலிருந்த சிறு குற்ற உணர்வையும் அழித்துவிட அப்போது நினைத்துக்கொண்டதையெல்லாம் இப்போது ஞாபகப்படுத்திக்கொண்டார். அப்போது அவரால் அதிலிருந்து தப்பிக்க முடிந்தது. ஆனால் இன்றிரவு எல்லாம் தீடீரென்று நினைவிற்கு வந்து அவரின் மன அமைதியை முழுவதுமாக குலைத்தது.

இதுவரை எத்தனை விலங்குகளை அவர் வாழ்நாளில் கொன்றிருக்கிறார்? அவை அனைத்தும் இங்கு வந்து விடப்போகின்றதா? அப்படியானால் ஒரு வினோத பெயர் தெரியாத கருப்புப் பறவையை சிறுவயதில் தன் முதல் விளையாட்டுத்துப்பாக்கியால் கொன்றது? அப்பறவையின் பெயர் கூட அவருக்கு தெரியாது. பிறகு அவரின் மாமா வீட்டிற்கு சென்றபோது ஒரு பெரிய கல்லை பயன்படுத்தவில்லையா? ஆமாம் அதுவும் அங்கு ஆஜராகியிருக்கின்றது.

ஜன்னல் பக்கமாக தன் பார்வையை செலுத்திய போது சஷ்மல் பாம்பை கண்டார். மென்மையான வளைந்து நெளியும் உடல் கொண்ட எட்டடி நீளமுள்ள நாகப் பாம்பு ஜன்னல் வழியாக உள் நுழைந்து சுவரை ஒட்டிப் போடப்பட்டிருந்த மேஜையின் மேல் ஏறிக்கொண்டிருந்தது. சாதாரணமாக பாம்புகள் ஏப்ரல் மாதத்தில் தென்படாதெனினும் இது வந்திருக்கின்றது. மூன்றில் இரண்டு பகுதி மேஜையில் சுருண்டும் ஒரு பகுதி தலை தூக்கி படமெடுத்தது. விளக்கின் வெளிச்சத்தில் அதன் நிலையான கொடுங்கண்கள் பிரகாசித்தன.

ஜார்கிரமிலிருந்த அவரின் மாமா வீட்டில் சஷ்மல் இதுபோன்றதொரு பாம்பின் தலையில் கல்லைப் போட்டு கொன்றிருக்கிறார். யாருக்கும் எவ்வித கெடுதலும் செய்யாத பாம்பு அக்குடும்பத்தினர் அனைவரும் நன்கு அறிந்த மூத்த உறுப்பினராக இருந்தது.

தன் நாக்கு உலர்ந்துவிட்டிருந்ததை உணர்ந்தார் சஷ்மல். பணியாளை அழைக்கக்கூட நா எழவில்லை.

வெளியில் சில்வண்டுகளின் ரீங்காரம் அடங்கிவிட்டிருந்தது. எங்கும் அச்சுறுத்தும் அமைதி சூழ்ந்திருந்தது. கைகடிகாரத்தின் முற்கள் அமைதியாக நகர்ந்துக்கொண்டிருந்தன அல்லது அதன் ஓசையையும் அவர் கேட்டிருக்கக் கூடும். ஒருநிமிடம் கனவு காண்கிறோமோவென நினைத்தார். அவருக்கு சமீபகாலமாக இப்படி தோன்றுகின்றது. படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த போதிலும் வேறு எங்கோ அறியாத மொழியில் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் அந்நிய மக்களுக்கு மத்தியில் இருப்பதை போல் உணரந்தார். இதுவரை அந்த வினோத எண்ணங்கள் சில நொடிகளுக்கு மேல் நீடித்ததில்லை. ஒருவர் உறங்கச்செல்வதற்கு முன் இதுபோன்ற நிகழ்வுகளையெல்லாம் கற்பனை செய்துக்கொண்டால் அதற்கான சாத்தியங்கள் உண்டு.

ஆனால் இன்று காண்பது கனவில்லை. நிச்சயமாக அவர் முழித்துக்கொண்டிருப்பதை முன்நிமிடத்தில்தான் தன்னை கிள்ளிப்பார்த்து உறுதிபடுத்திக்கொண்டார். என்னவெல்லாம் இப்போது நடக்கின்றதோ அவையெல்லாம் நிஜமாகவும் காரணத்தோடும் தான் நடக்கின்றன. இவையெல்லாம் அவருக்கு மட்டுமே உரித்தானது.

அசையாமல் ஒரு மணி நேரம் படுக்கையில் அப்படியே படுத்திருந்தார். சில கொசுக்கள் வீட்டினுள் பிரவேசித்தன. அவரை கடிக்காமல் கட்டிலைச் சுற்றி மொய்த்துக்கொண்டிருந்தன. எத்தனைக் கொசுகளைத் தன் வாழ்நாளில் கொன்றிருப்பார். எவ்வளவென்று யாரால் சொல்ல முடியும்?

ஒரு மணி நேரத்திற்கு பிறகு எந்த விலங்கும் எவ்வித அபாயத்தையும் விளைவிக்கும் அறிகுறி இல்லாததால் சஷ்மல் இளைப்பாற ஆரம்பித்தார். இப்போது அவர் தூங்க முயற்சிக்க கூடும்.

விளக்கின் திரியை சிறிதாக்க கையை நீட்டிய போது சத்தம் கேட்டது. நுழைவாயிலிலிருந்து வராந்தாவிற்கு வரும் படிகள்வரையுள்ள பாதையில் கூழாங்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. அந்த வழியாக யாரோ நடந்து வருகிறார்கள். இம்முறை நான்கு கால்கள் கொண்ட விலங்கில்லை. மாறாக இரண்டு கால்களைக் கொண்டது.

இப்போது சஷ்மல் தனக்கு பயங்கரமாக வேர்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தார். இதயம் வேகமாக துடிப்பதையும் கேட்க முடிந்தது.

நாயும் பூனையும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தன. கொசுவும் மொய்ப்பதை நிறுத்தவில்லை. விழிபுலனுக்கு புலப்படாத செவிபுலனுக்கும் எட்டாத பாம்பாட்டியின் மகுடிக்கு மயங்கி ஆடுவதைப்போன்று பாம்பும் படமெடுத்து ஆடிக்கொண்டிருந்தது.

காலடி ஓசை வராண்டாவை அடைந்தது. அருகில் வந்துவிட்டனர். சிறிய கருப்புப்பறவை ஜன்னலின் வழியாக உள்நுழைந்து மேஜையில் அமர்ந்தது. அன்று துப்பாக்கியால் சுட்ட போது, அமர்ந்திருந்த சுவரின் அருகிலிருந்த பூங்காவின் தரையில் விழுந்து இறந்த அதே பறவைதான் இது. 

அறைக்கு வெளியில் காலடி ஓசை வந்தடங்கியது. அது யாரென்று சஷ்மலுக்கு தெரியும். அதீர். அவரின் தொழில் துணைவர் அதீர் சக்கரவர்த்தி. ஒருகாலத்தில் நண்பர்களாக இருந்தவர்கள் சமீபகாலமாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதைக்கூட நிறுத்திக்கொண்டனர். நேர்மையற்ற வழிகளில் சஷ்மல் தொழில் நடத்தும் முறைகள் அதீருக்கு பிடிக்கவில்லை. காவல் துறைக்கு புகார் கொடுத்துவிடப்போவதாக மிரட்டினார். தொழிலில் நேர்மையாக நடந்துக்கொள்வது பைத்தியக்காரத்தனம் என்றார் சஷ்மல். அதீரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அதீரின் இத்தகைய அறங்களை பற்றி முன்பே அறிந்திருந்தால் சஷ்மல் அவரை துணையாகவே சேர்த்துக்கொண்டிருக்க மாட்டார். அதீர் அவருக்குப் பரம எதிரியாக மாறிவிட்டதை உணர்ந்துக்கொள்ள அதிக நாள் எடுக்கவில்லை. எதிரி என்றால் அழிக்கப்படவேண்டியவன் தானே. சுருக்கமாக அதைதான் சஷ்மலும் செய்தார்.

முந்தினநாள் இரவு அதீரின் வீட்டில் இருவரும் நேரெதிராக அமர்ந்திருந்தனர். தன் தொழில் துணைவரை கொலை செய்யும் நோக்கத்துடன் சஷ்மல் பாக்கெட்டில் துப்பாக்கியுடன் வந்திருந்தார். சில அடிகள் தள்ளி அதீர் அமர்ந்திருந்தார், மீண்டுமொருமுறை விவாதித்தனர். அதீரின் குரல் உயர்ந்தபோது சஷ்மல் தன் துப்பாக்கியால் அவரை சுட்டார். எப்போதோ தனக்கு நெருக்கமான நண்பனாக இருந்த அதீரின் முகம் நினைவிலாடியபோது அவரால் புன்னகைக்காமல் இருக்கமுடியவில்லை. அவர் கையில் துப்பாக்கியிருக்குமென அதீர் கொஞ்சம் கூட எதிர்ப்பாக்கவேயில்லை.

சம்பவம் நடந்த பத்து நிமிடத்திற்குள்ளாகவே சஷ்மல் காரை கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டார். அந்த இரவை பர்த்யான் ரயில் நிலைய காத்திருப்பு அறையில் கழித்துவிட்டு இன்று காலையில் ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருந்த இக்காட்டுபங்களாவை நோக்கி தன் பயணத்தை தொடர்ந்தார்.

யாரோ கதவை தட்டினார்கள். ஒருமுறை, இரண்டுமுறை, மூன்றாவது முறையாக.

சஷ்மலால் கதவை வெறித்துப்பார்க்க மட்டுமே முடிந்தது. அவரின் முழு உடலும் நடுங்கத் தொடங்கியது. மூச்சு முட்டியது. ‘கதவை திற, அதீர் வந்திருக்கிறேன், கதவை திற’.

முந்தின நாள் துப்பாக்கியால் சுடப்பட்ட அதே அதீர். அங்கிருந்து கிளம்பும் போது அதீர் இறந்துவிட்டிருப்பாரென்று சஷ்மலுக்கு அவ்வளவு உறுதியாக தெறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது சந்தேகமே இல்லை. அந்த நாய், பூனை, அந்த பாம்பு, பறவை இப்போது அதீர் கதவிற்கு வெளியில் நிற்கிறார். மற்ற எல்லா ஜீவன்களும் இறப்பிற்கு பின்னர் அங்கு ஆஜராகியிருக்கின்றன என்றால் அதீரும் இறந்துவிட்டதாக எண்ணுவது நியாயமானதே.

திரும்பவும் யாரோ கதைவை தட்டினார்கள். தட்டிக்கொண்டே இருந்தார்கள்.

சஷ்மலின் பார்வை மங்கியது. அப்படியிருந்தும் நாய் அவரை நோக்கி வருவதை கண்டார். பூனையின் கண்கள் அவரின் கண்களுக்கு வெகு அருகில் இருந்தன. பாம்பும் அவரை நோக்கி வரும் எண்ணத்தில் மேஜையிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தது. பறவையும் பறந்து வந்து அவரின் கட்டிலில் அமர்ந்தது. அவருடைய வெள்ளை பனியனை மறைத்தபடி நெஞ்சம் முழுவதும் எண்ணில் அடங்கா எறும்புகள் ஊர்ந்துக்கொண்டிருந்தன.

இறுதியில் இரண்டு ஏட்டுகள் கதவை உடைக்க வேண்டியதாயிற்று.

அதீர் கல்கத்தாவிலிருந்து காவல் அதிகாரியை அழைத்து வந்திருந்தார். சஷ்மலின் காகிதங்களுக்கு இடையில் சுற்றுலாத் துறையிலிருந்து வந்த கடிதம் காணக்கிடைத்தது. அதிலிருந்துதான் காட்டு பங்களாவில் அவர் பதிவு செய்துவைத்திருப்பதை அறிந்தார்.

சஷ்மல் படுக்கையில் இறந்திருப்பதை அறிந்தவுடன் இன்ஸ்பெக்டர் சமந்த் அதீரின் பக்கம் திரும்பி ‘உங்கள் தொழில் துணைவர் பலகீனமான இதயம் கொண்டவரா?’ என்று கேட்டார்.

‘அவரின் இதயம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால் சமீபகாலமாக அவரின் நடத்தை எனக்கு விசித்திரமாக தோன்றியது. எந்த ஒரு சாதாரண மனிதனும் கூட்டுப் பணத்தை கையாடியிருக்க மாட்டான், என்னை ஏமாற்றவும் முயற்சித்திருக்க மாட்டான் அவர் செய்ததை போல. அவரின் கையில் துப்பாக்கியைப் பார்த்தபோது நிஜமாகவே கிறுக்கனாகிவிட்டார் என்பது உறுதியானது. உண்மையைச் சொல்லவேண்டுமானால் அவர் துப்பாக்கியை கையில் எடுத்த போது என் கண்ணையே என்னால் நம்ப முடியவில்லை. அவர் சுட்டுவிட்டு ஓடிய பிறகு அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவர பத்து நிமிடத்திற்கு மேல் ஆனதெனக்கு. அதற்கு பிறகு தான் அந்தக் கிறுக்கனை காவல் துறையிடம் ஒப்படைக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன். இன்று நான் உயிரோடிருக்கிறேனென்றால் அது சந்தர்ப்பவசமாகத்தான்.’

ஆனால் எப்படி இத்தனை அருகிலிருந்தும் அவர் குறி தவறினார் என்று சமந்த் கறுவினார்.

அதீர் புன்னகைத்தார், ‘சாகவேண்டிய நேரம் வராமல் எவராலும் எப்படி சாக முடியும்? தோட்டா என்னை துளைக்காமல் இருக்கையின் ஓர் மூலையில் பாய்ந்தது. எத்தனை பேரால் இருட்டில் சரியாக குறிபார்க்க முடியும்? அவர் துப்பாக்கியை எடுத்த நிமிடத்தில் எங்கள் குடியிருப்புப் பகுதியில் மின்தடை ஏற்பட்டு எல்லா விளக்குகளும் அணைந்தன!

(1979)

பெங்காலியில் : சத்யஜித்ரே

ஆங்கிலம் வழி தமிழில் : நதியலை

From the book : The Best of Satyajit Ray, First Edition : 2001

நன்றி : அகநாழிகை சமூக கலை இலக்கிய இதழ் – மார்ச் 2010

Read Full Post »

எழுத்தாளர் சிறுகதை எழுதுவதற்காக மிகுந்த கவனத்தோடு தட்டச்ச தொடங்கினார். சமீபகாலமாக குறுங்கதைகளை எல்லோரும் சிலாகிக்கின்ற போதிலும் இவர் நேர்மையானவரெனின் தான் கதைகளை வெறுப்பதையும் பிரத்யேகமாக குறுங்கதைகளில் அறவே நாட்டமில்லாததையும் ஒப்புக்கொள்வார். இருந்தும் தந்திரங்களை பயன்படுத்திக்கொள்ளும் பொருட்டும் சுருங்கச்சொல்வதில் ஆர்வமுள்ள பலரில் தானும் ஒருவரென காட்டிக்கொள்ள வேண்டியதாயிற்று. எனவேதான் அசாதாரணமாக தட்டச்சு பலகையில் நகர்ந்துக்கொண்டிருக்கும் தன் விரல்கள் ஒவ்வொரு வார்த்தையாக உருவாக்கிக்கொண்டிருக்க அவை முழுமையான வாக்கியங்களாக தொடர பதற்றத்துடன் எதைப்பற்றி எழுதுவதென்று கூட தீர்மானித்திருக்காத நிலையில் பார்த்துக் கொண்டிருந்தார். தீர்மானிக்காமலே வெகுதூரம் தொடர்ந்து எழுத்தில் பயணிப்பதென்பது  அவருக்கு பழக்கமாகிவிட்டிருந்தது.  சிலநேரங்களில் நூறுபக்கங்களை தாண்டிய பிறகே எதை பற்றி எழுதுகிறார் என்ற உணர்வு வரும்.  பல நேரங்களில் இருநூறுபக்கங்களுக்கு மேலும் விஷயத்திற்கே வராமலும் எழுதியிருக்கின்றார்.  எழுத்தின் நீளம் என்றுமே அவருக்கு ஒரு தொந்தரவாக இருந்ததில்லை.  எத்தனை நீளமோ அத்தனை சிறப்பு, ஒவ்வொரு புதிய வரியும் ஒரு ஆசிர்வாதம். வரிகள் வரிகளாக சேர்த்துக்கொண்டே செல்வது நீளத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் படைப்பின் தகைமையையும் விவரிக்கின்றது.  எனவேதான் உண்மையாக கதைக்கு சம்பந்தமே இல்லையென்றாலும் ஒன்று…இரண்டு…..ஏன் ஐம்பது வரிகளுக்கு மேலும்கூட விரித்துச் சொல்லிக் கொண்டிருப்பாரே தவிர ஒருபோதும் சுருங்கச் சொன்னதேயில்லை.  அப்படியிருக்க இக்கதையை எழுதுவதற்காக கிட்டத்தட்ட ஒரு அளவுகோலை எடுத்து அளக்க வேண்டியிருந்தது. எத்தனை விபரீதபோக்கு!  இது பல மைல்களை சாதாரணமாய் ஓடிக் கடக்கும் தொடர் ஓட்டப்பந்தய வீரரை நூறு மீட்டர் தொலைவு கம்பீரமாக ஓடச்சொல்வது போலுள்ளது. சிறுகதையில் ஒவ்வொரு புதிய வரியும் கூடுதலான ஒரு வரி அல்ல.  மாறாக கதையின் வரிகளை குறைக்கும் ஒரு வரி.  அதிலும் ‘ஒரு வரியிலிருந்து முப்பது வரிக்குள்’ கதையை எழுதிதரும்படி ஞாயிறு துணை இதழ் பிரிவிலிருந்து தொலைபேசிய வெல்வட் குரல்காரி கூறியதால் குறிப்பாக இக்கதையில் முப்பது வரிகளை குறைக்கும் ஒரு வரி. விருப்பமில்லாமல் விரல்களை தட்டச்சு பலகையிலிருந்து எடுத்துவிட்டு இதுவரை எழுதிய வரிகளை கணக்கெடுத்தார்.  இருபத்தி மூன்று.  நியமித்த எல்லையை அடைய இன்னும் ஏழு வரிகளே உள்ளன. அவருடைய வருத்தத்தை பற்றி எழுதிய வரியும் இவ்வரியும் சேர்த்து இன்னும் எழுத வேண்டிய வரிகள் குறைந்து விட்டன.  ஆறு. கடவுளே!  எழுதாமலிருக்கும் போது அவருக்கு எந்த ஒரு கற்பனையும் உதிக்காததால் எல்லா யோசனைகளும் மற்றுமொரு வரியை முழுங்கிக்கொண்டிருக்க இருபத்தி ஆறாவது வரியில் இன்னும் நான்கு வரிகளே மீதமுள்ள நிலையில் கதைக்கான கருவை இன்னும் கண்டடையவில்லை என்பதை உணர்கின்றார்.   கொஞ்ச நேரமாகவே தனக்கு இக்கதையில் சொல்ல எதுவுமே இல்லையோ என்ற சந்தேகம் இருந்தது. பொதுவாக எவ்வாறோ பக்கம் பக்கமாக எழுதி சமாளித்துவிட்டாலும் இப்பாழாய் போன கதை அவரின் திரையை கிழித்துவிடும் அபாயமிருப்பதால் இருபத்தி ஒன்பதாம் வரியை அடையும்போது பெருமுச்செறிந்தார்.   முழுமையான தோல்வியென இதனை கொள்ளமுடியாத திருப்தியில் கால நேரத்தை பதிவு செய்தார் முப்பதாவது வரியில்.  
  
மூலம் :  Quim Monzó – Catalan Language
 
ஆங்கிலம் வழி தமிழில் : நதியலை

நன்றி :  Words Without Borders

நன்றி : காற்றுவெளி மார்ச் 2010 அச்சிதழ்

Read Full Post »

தென்கொரியாவில் 1953 பிறந்த Yi Yŏn-ju வின் படைப்புகள் அந்நாட்டு பெண்கவிஞர்களின் படைப்புகளில் முக்கியமானதாக கருதப்படுகின்றது. பெரும்பாலான கவிதைகள் புறநகர்ப்பெண்களின் நிலையை பேசும் படைப்பாகவும் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாகவும் அமைந்துள்ளது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு ‘A Night Market where there are Prostitutes’ 1991ல் வெளியானது. இரண்டாம் தொகுப்பான ‘Juda, a Lamb of Redemption’ 1993ல் இவரது தற்கொலைக்கு பிறகு வெளியானது. இவர் பல கலைகளில் தேர்ந்தவராக இருந்தார். இலக்கிய வட்டங்களில் மட்டுமல்லாது ஓவியர்கள், பாடகர்கள் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் நன்கு அறியப்பட்டார். இவரின் இரு கவிதைகள்……

 

மனநோய்

‘நிச்சயமாய் நான் எதுவுமே செய்யவில்லை’
என ஒரு பெண்மணி விம்மியழுதாள்

‘தொழிற்சாலையின் அருகிலும் செல்லவில்லை
ஒருமுறை கூட பேரணியில் பங்கேற்கவில்லை’
என கதறினாள்

‘யார்… ஏன் தீக்குளிந்து இறந்தார் என்றோ
கட்டிடத்தின் மேற்தளத்திலிருந்து குதித்தார் என்றோ
அறிந்துக்கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை’
என தலைமுடியை விரித்து புலம்பியழுதாள்

‘ஒரு விலங்கைப்போல்
வெறுமனே அமர்ந்திருப்பதைத் தவிர
வேறு எதுவுமே நான் செய்யவில்லை

என்னை யார் இங்கழைத்து வந்தது?
எதற்காக அடைப்பட்டிருக்கின்றேன்?

என் கருவறை ஒரு துருபிடித்த இரும்புத்துண்டு
தீக்குளிக்க ஒரு மகனையோ அல்லது
போராட்டம் நடத்த ஒரு மகளையோ
கூட என்னால் பிரசவிக்க இயலாது’
என நிலைகுலைந்து தரையை உரசினாள்

மருத்துவர் வந்து சென்றார்
ஒரு வார்த்தை கூட உரைக்காமல்

செவிலி வந்து அவளை அறைந்தாள்
பின் வெளியேறினாள்
படாரென கதவு மூடப்பட்டது

‘நிச்சயமாய் நான் எதுவுமே செய்யவில்லை’
என வாடிய அவள் முணுமுணுத்தாள்
மனநோய்ப்பிரிவின்
இரும்புக்கதவுகளை பற்றிக்கொண்டு

1970ல் ஏழைத்தொழிலாளிகள் சுரண்டப்படுவதை எதிர்த்து Chŏn T’ae-il, என்ற தொழிலாளி தீக்குளித்துக்கொண்டார். தென்கொரியாவில் இச்சம்பவம் நாடு முழுவதுமான தொழிலாளர் இயக்கத்தை முடுக்கிவிட்டது. காவலர்களையும் வாடகைக்கு குண்டர்களையும் கொண்டு அரசாங்கம் தொழிலாளிகளின் வேலைநிறுத்தப்போராட்டங்களை முறியடித்தது. சமயங்களில் நம்பிக்கையிழந்த தொழிலாளிகள் கட்டிடத்தின் மேற்தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இத்தனை வலுவான அடக்குமுறைகள் இருந்தும் 1970 – 1980 காலகட்டங்களில் பெண் தொழிலாளிகள் தனி இயக்கத்தை துவங்கினார்கள்.

***************************
 

குடும்ப புகைப்படம்

எல்லோரையும் துரோகித்துவிட்டு
ஓடிப்போகிறாள் தாய்
கைகளை தரையில் அடித்து
அழுகிறார் தந்தை
பின் எல்லா இரவுகளையும்
சீட்டாட்டத்தில் கழிக்கிறார்
தந்தையைத்தேடி குழந்தை
சூதாட்ட விடுதியின் கதவைத் தட்டுகிறது

தமக்கை பசையை விழுங்குகிறாள்
கிழிந்த உள்ளாடையை புரட்டி அணிந்துக்கொண்டு
அடித்தளத்தில் குப்பைக்குவியலுக்கு அருகில்
தன் மணிக்கட்டை கத்தியால் அறுத்துக்கொள்கிறாள்

அக்குடும்பத்தின் மூன்று வயது குழந்தை
தட்டுத்தடுமாறி வளர்ந்து
தாயின் தந்தையின் தமக்கையின் செய்கைகளை
விரைவில் பற்றிக்கொள்கிறது

ஒவ்வொரு இரவிலும் நகரங்கள்
ஒன்றன்பின் ஒன்றாக வீழ்ச்சியடைகின்றன
மேலும் இன்று
ஒரு எண்ணெய் விளக்கின் முன்
நான்
திரியை துண்டு துண்டாக்குகின்றேன்

நன்றி : அகநாழிகை சமூக கலை இலக்கிய இதழ் – டிசம்பர் 2009

Read Full Post »

முதல் பகுதி

காதல் ஒரு விளையாட்டு. ஒரு முடிவற்ற படைப்பு. எங்கும் கடலாக, மணலாக, ஒரு படுக்கைவிரிப்பாக எப்போதும் புதிதாக இருந்தன. அவளை நான் அனைத்தால் பெருமிதத்தில் பூரித்து மிகவும் உயரமான நீர்த்தண்டைப்போல உயர்ந்தாள். விரைவில் நீறூற்றாக வெள்ளைச் சிறகுகளுடன் பூத்து அடர்சிரிப்போடு என் தலையிலும் முதுகிலும் வீழ்ந்து வெண்போர்வையால் என்னை மூடினாள். அல்லது என்முன்னே முடிவிலா அடிவானமாக விரிந்தாள்…..என்னையும் அவ்வாறாக மாறச்செய்தாள். சங்கீதத்தை போல அல்லது ராட்சத உதடுகளைப்போல முழுமையாகவும் வளைவு நெளிவுகளோடும் என்னை மூடினாள். மென் தொடுகைகளாலும் கிசுகிசுப்புக்களாலும் முத்தங்களாலும் அவளுடைய இருப்பு வந்துபோய்க்கொண்டிருந்தன. அவளின் நீரில் நுழைந்து முழுமையாக நனைந்து கண் இமைக்கும் நொடியில் மேல் எழுந்து உச்சமடைந்து தலைகிறுகிறுத்து அதிசயமாக தொங்கி கல்லை போல் கீழ் விழுந்து ஒரு இறகு உலர்ந்து மெல்லென இளைபாருவதைப்போல் உணர்ந்தேன். ஆயிரம் சந்தோஷ மென்னடிகளால் நொருங்கி விழிப்புற்று ஆயிரம் தாக்குதல்களால் புன்னகை பிடுங்கப்பட்டு நீரில் உறங்குவதற்கு ஈடில்லை வேறெதுவும்.

ஆனால் அவள் இருப்பின் மையத்தை என்னால் எட்டமுடியவில்லை. வலியின், இறப்பின் தெண்மையை என்றுமே தொட்டதில்லை. பெண்களை உறுதியற்றவர்களாகவும் புதிராகவுமாக்கும் அந்த ரகசிய தோற்றமும் எல்லாம் பிணைத்து துடித்து சமனாகி பின் மூர்ச்சிக்கும் அம்மின்சார புள்ளியும் அலைகளில் இல்லை. ஒரு பெண்ணை போன்றே இவளின் உணர்வுகள் நீர்த்திரைகளாக பரவுகிறது. ஆனால் அவை ஒரே மைய வட்டங்களாக அல்லாமல் கோணற்மானலாக, ஒவ்வொரு முறையும் பிற மண்டலங்களை தொடும்வரை நீள்கின்றது. இவளை காதலிப்பதென்பது நினைத்துப்பார்த்திராத மிகவொதுக்கானவற்றோடு தொடர்புற்று தூரத்து நட்சத்திரங்களுடன் துடிப்பதாகும். ஆனால் அவளின் மையம்….இல்லை, அவளுக்கு மையம் இல்லை. சுழற்காற்றில் இருப்பதுபோல் வெறுமனே வெட்ட வெளி மட்டுமே கொண்டவள் என்னை உள்ளிழுத்து திக்குமுக்காடவைக்கிறாள்.

அருகருகே படுத்து பரிமாறிக்கொண்டோம் நம்பிக்கைகளை, கிசுகிசுப்புக்களை, புன்னகைகளை. அனனத்துக்கொண்டோம். என் நெஞ்சில் பரந்து விரிந்தாள். என் காதுகளில் சிறிய நத்தைப்போல் பாடினாள். மிகவும் பணிவாகவும் வெளிப்படையாகவும் மாறினாள். சிறிய விலங்கைப்போல என் பாதங்களை பற்றிக்கொண்டாள் அமைதியான தண்ணீராக. அவளின் எல்லா எண்ணங்களையும் நான் வாசிக்கும்படியாக மிகவும் தெளிந்திருந்தாள். சில இரவுகளில் அவளின் தோள் பாஸ்பரஸால் போர்த்தப்பட்டிருப்பதை போலானாள், அவளை அனைப்பது இரவின் ஒரு துண்டில் பச்சைக்குத்திய நெருப்பை அனைப்பது போலிருந்தது. ஆனால் அவள் சமயங்களில் கருப்பாவும் கசப்பாகவும் கூட ஆனாள். எதிர்பாரா நேரத்தில் கத்தினால், துக்கித்தாள், சுருண்டுக்கொண்டாள். அவளின் உறுமல் சப்தங்கள் அண்டைவீட்டாரையெல்லாம் எழுப்பியது. இவளின் சப்தங்களை கேட்டு கடற்காற்று என் வீட்டின் கதவை பிராண்டியது. அல்லது மேல்கூரையில் உரக்க கத்தியது. மேகமூட்டமான நாட்கள் அவளை எரிச்சலூட்டியது. மேசை நாற்காலிகளை உடைத்தாள், மோசமான வார்த்தைகளை கூறினாள். என்னை பச்சை சாம்பல் நிற நுரைகளாலும் அவமானங்களாலும் மூடினாள். காறி உமிழ்ந்தாள், அழுதாள், தூற்றினாள், மிரட்டினாள். நிலவும், நட்சத்திரங்களும், உலகத்தின் பிற ஒளிகளுக்கேற்பவும் அவளின் தோற்றமும் குணமும் மாறிக்கொண்டே இருந்தன. நான் அற்புதமானவைகள் என்று நினைத்ததெல்லாம் மாறி ஒரு அபாயகரமான அலையை போலானாள்.

அவள் தனிமையை தவிர்த்தாள். வீடு முழுவதும் நத்தைகளும், சிப்பிகளும், அவளின் அதீத கோபத்தால் உடைக்கப்பட்ட சிறிய விசைப்படகும் இருந்தன. (இப்பிம்பங்களின் சுமைகள் ஒவ்வொரு இரவிலும் என்னை விட்டகன்று அவளின் கொடுமையான அல்லது மென்மையான சுழற்காற்றால் எல்லாவற்றுடன் சேர்ந்து நானும் மூழ்கினேன்.) எத்தனை சின்னஞ்சிறிய பொக்கிஷங்கள் அந்நேரத்தில் தொலைந்து போயின. ஆனால் என்னுடைய படகும், நத்தைகளின் மௌனமான பாடலும் போதுமானதாக இல்லை. மீன் கூட்டத்தை என் வீட்டிற்கு கொண்டுவர வேண்டியதாயிற்று. அவளின் மார்புகளை தடவிக்கொடுப்பதும், கால்களுக்கிடையில் உறங்குவதும், வண்ண நிறங்களை கொண்டு அவளின் முடிகளை பாராட்டுவதுமாக மீன்கள் அவளுடன் நீந்துவதை பொறாமையற்ற முறையில் நான் பார்த்துக்கொண்டிருக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

அம்மீன்களில் குறிப்பாக சில அருவருக்கத்தக்கதும் முரட்டுத்தனமிக்கதும் இருந்தன. மிகப்பெரிய நிலையான விழிகளுடனும் கூர்மையான இரத்தம்தாகித்த வாய்களுடனும் சிறியநீர்நிலைகளிலிருந்து (aquarium) வந்த சிறுபுலிகள் அவை. என் தோழி எதன் அடிப்படையில் அவர்களுடன் விளையாடுவதில் மகிழ்கிறாளென்றும், யாரை நான் நிராகரிக்க நினைக்கிறேனோ அவர்களுக்கு வெட்கமற்று ஏன் முக்கியத்துவம் கொடுக்க நினைக்கிறாள் என்றும் புரியவில்லை. மணிக்கணக்காக அக்கொடும் ஜீவன்களோடு ஒட்டிக்கொண்டிருக்கிறாள். ஒரு நாள் என்னால் தாளமுடியாமல் கதவை திறந்து அவற்றை பிடிக்கப் போனேன். வேகமாக என் கைகளை விட்டு வழுக்கிக்கொண்டு நழுவியபோது அவள் சிரித்து என்மேல் வேகமாக அலை அடித்து வீழ்த்தினாள். மூழ்கிக்கொண்டிருப்பதாக தோன்றியது. நீலநிறமாகி நான் மரணத்தை தொடும் நேரத்தில் என்னை கரையில் ஒதுக்கி முத்தமிடத்துவங்கினாள் எதுவும் தெரியவில்லை எனச்சொல்லி. நான் மிகவும் சோர்வானேன், களைப்புற்றேன், பைத்தியமாக்கப்பட்டேன். அதே சமயத்தில் அவள் என்னை கிளர்ச்சியூட்ட துவங்கியது என் கண்களை மூடச்செய்தது, அவளின் குரல் மிகவும் இனிமையாயிருந்தது, மூழ்கி சந்தோசமாக மரணிப்பதை பற்றி அவள் பேசினாள். நான் மீண்ட பிறகு பயம்கொள்ள துவங்கினேன், அவளை வெறுத்தேன்.

இத்தொடர்பை தவிர்த்தேன். என் நண்பர்களை சந்திக்க துவங்கினேன். என் பழைய நெருங்கிய உறவுகளை புதுபித்துக்கொண்டேன். என் பழைய தோழியை சந்தித்தேன். இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாமல் இருப்பதான வாங்குறுதியை அவளிடம் வாங்கிக்கொண்டு அலையுடனான எனது வாழ்க்கையை பற்றிச் சொன்னேன். ஒரு ஆணை காப்பாற்றுவதற்கான சாத்தியங்களை போன்று வேறெதுவும் ஒரு பெண்ணை நெகிழ்விப்பதில்லை. அவளின் எல்லா திறன்களையும் பயன்படுத்தினாள். ஆனால் ஒரு பெண்மணியால் அதுவும் ஒரு எல்லைக்குள்ளான உடலும் உயிரும் கொண்ட பெண்மணியால் என்ன செய்ய முடியும் நாளும் மாறிக்கொண்டிருக்கும் என் தோழியின் எதிரில் – அதுவும் எப்போதும் என்றும் தொடரும் உருமாற்றங்களில் அவளுக்கு நிகர் அவளாகவே இருக்கிறாள்.

பனிக்காலம் துவங்கியது. வான் சாம்பல்நிறம் பூண்டது. நகரங்களில் பனி பொழிந்து ஆலங்கட்டிமழை பெய்தது. என் தோழி இரவுகளில் அழுதாள். ஒரு வயதான மூதாட்டி மூலையில் ஒடுங்கிக்கிடப்பதை போல பகல் நேரங்களில் மௌனமாக மூலையில் முடங்கி தன்னை தனிமை படுத்திக்கொண்டு முணங்கினாள். மிகவும் சில்லென்றானாள், அவளுடன் உறங்குவதென்பது நடுக்கமுற்று, சிறிது சிறிதாக இரவுமுழுவதும் ரத்தம், எலும்பு, எண்ணம் எல்லாம் குளிரால் விரைப்புற செய்தது. கடந்து செல்ல முடியாமல் அமைதியற்று மிகவும் ஆழமானாள். அடிக்கடி அவளை விட்டு அகன்றேன். ஒவ்வொரு முறையும் பிரிவை நீடித்தேன். அவள் ஒரு மூலையில் படுத்து கத்தினாள், இரும்பான பற்களாலும் கொடும் நாவாலும் சுவற்றை பிராண்டி பொடியாக்கினாள். இரவுகளை துக்கங்களோடு என்மேல் பழிசுமத்தி கழித்தாள். பயங்கர கனவுகள் கண்டு சூரியனை பற்றியும் வெதுவெதுப்பான கடல்களை பற்றியும் பிணாத்தினால். மாதங்களாய் நீண்ட இரவுகளில் துருவங்கள் ஒரு மாபெரும் ஐஸ் கட்டியாக மாறி, கருநிற வானத்தின் கீழ் மிதப்பதாக கனவுகண்டாள். என்னை அவமானப்படுத்தினாள். எள்ளி நகைத்தாள். வீட்டை பரிகாசங்களிலும் மிரட்சியிலும் நிரப்பினாள். பாதாள குருட்டு பூதங்களை கூவி அழைத்தாள். மின்சாரம் பாயத்துவங்கியது, தொட்டதையெல்லாம் பொசுக்கினால். அமிலத்தால் நிரம்பினாள். தொட்டு செல்லும் அனைத்தையும் கரைத்தால். அவளின் இனிமையான அனைப்புகள் என்னை நெருக்கும் முடிச்சுகளாக மாறின. அவளின் உடல் பச்சையாக ஒடுங்கிவிரியுஞ்சக்தியோடு கருணையற்ற அடிகளாக கடுமையாக தாக்கியது. நான் தப்பி ஓடினேன். அக்கொடிய மீன் தனது குரூரமான புன்னகையால் என்னை பரிகசித்து சிரித்தது.

செங்குத்தான பாறைகளையும் பைன் மரங்களையும் கொண்ட மலையில் மெல்லிய குளிர்காற்றை சுவாசித்தேன் சுதந்திர எண்ணத்தைப்போல். மாதக் கடைசியில் வீடுதிரும்பினேன். தீர்மானித்திருந்தேன். பளிங்குகளாலான வெப்பமூட்டிக்கு அருகில் மிகவும் குளுமையாக இருந்தது. அனைந்திருந்த நெருப்பிற்கு அருகில் ஒரு ஐஸ் சிலையைக்கண்டேன். அவளின் சோர்வூட்டும் அழகில் நகரமுடியாமலானேன். பெரிய கோணிப்பையில் அவளை இட்டு என் தோளில் சுமந்தபடி தெருவிற்கு எடுத்து வந்தேன். புறநகர்பகுதியில் இருந்த ஒரு உணவு விடுதியில் பணிபுரியும் நண்பனுக்கு அவளை விற்றேன். அவன் உடனே அவளை சிறு துண்டுகளாக நறுக்கி குப்பிகளை குளுமையாக்க வைத்திருந்த வாளியில் பத்திரமாக நிரப்பினான்.

நன்றி :  உயிர்மை – நவம்பர் 2009

ஆங்கிலத்தில் வாசிக்க : My Life with the Wave by Octavio Paz

Read Full Post »

நான் கடலை விட்டு அகன்ற போது ஒரு அலை மட்டும் மற்ற அலைகளை விட முந்நோக்கி வந்தாள். உயரமாகவும் தக்கையாகவும் இருந்தாள். மிதக்கும் ஆடைகளை பற்றி இழுத்து மற்றவர்கள் அவளை கூக்குரலிட்டு அழைத்தும் என் கரங்களை பற்றிக்கொண்டு என்னோடு துள்ளிக்கொண்டு வந்துவிட்டாள். அவளது நண்பர்கள் முன்னிலையில் அவளை அவமானப்படுத்துவது என்னை சங்கடத்திலாழ்த்தும் என்பதால் ஒன்றும் சொல்ல வேண்டாமென்று இருந்துவிட்டேன். இருப்பினும் மூத்தவர்களின் கோபப்பார்வைகள் என்னை உறையச்செய்தது. நாங்கள் நகரை அடைந்த போது இங்கே இருப்பது சாத்தியமில்லை, நகர வாழ்க்கை கடலை வீட்டு அகலாத அலையின் கற்பனைக்கு எட்டாத அளவு மாறுபட்டது என்பதை விளக்கினேன். என்னை கூர்ந்து கவனித்தாள். நான் இனிமையாய், உறுதியாய் பரிகாசமாய் முயற்சித்தேன். அவள் அழுதாள், கத்தினாள், அனைத்தாள், பயமுறுத்தினாள். நான் மன்னிப்புகோற வேண்டியதாயிற்று.

அடுத்த நாள்முதல் தொல்லைகள் ஆரம்பமாகின. நடத்துனர், பயணிகள், காவலர்கள் பார்த்துவிடாமல் ரயிலுக்குள் எப்படி ஏறுவது. ஒரு அலையை தண்டவாளத்தில் ஏற்றி செல்வதற்கு எவ்வித விதிமுறைகளும் நிச்சயமாக கூறப்படவில்லையெனினும் சொல்லப்படாததே இச்செயல் எத்தனை தீவிரமாகக் கருத்தப்படுமென்பதற்கான ஒரு அறிகுறி. தீவிர யோசனைக்கு பிறகு வண்டி கிளம்ப ஒரு மணி நேரத்திற்கு முன்பாக ரயில்நிலையம் அடைந்தேன். இருக்கையை பிடித்தேன். யாரும் பார்க்காத தருணத்தில், பயணிகளுக்கான தண்ணீர் குவலையை காலி செய்து என் தோழியை பத்திரமாக அதில் ஊற்றினேன்.

அடுத்திருந்த தம்பதியரின் குழந்தை அவர்களின் அபார தாகத்தை கூறிய போது முதல் சம்பவம் ஆரம்பமானது. அவர்களை தடுத்து சிற்றூண்டிகளும் எலுமிச்சை சாறும் வாங்கித்தருவதாக உறுதியளித்தேன். அவர்கள் ஒப்புக்கொள்ளவரும் நேரத்தில் மற்றுமொரு பயணி தாகத்துடன் வந்தாள். அவளுக்கும் வாங்கித்தருவதாக சொல்லலாம் என்று நினைத்து பின் அவளுடன் வந்த நபரின் முறைப்பை பார்த்து சொல்லாமல் விட்டுவிட்டேன். அப்பெண்மணி ஒரு காகித கோப்பையை எடுத்துக்கொண்டு நீர்குவலையின் அருகில் சென்று குழாயை திறந்தாள். கோப்பை பாதி நிறைவதற்குள் என் தோழிக்கும் அவளுக்குமிடையில் தாவிச்சென்றேன். என்னை ஆச்சரியமாக பார்த்ததாள். அவளிடம் மன்னிப்பு கேட்கும் நேரத்தில் குழந்தைகளில் ஒன்று மறுபடியும் குழாயை திறந்து விட்டது. பெருங்கோபத்தோடு குழாயை மூடினேன். அப்பெண்மணி கோப்பையை தன் உதடுகளுக்கு கொண்டுசென்றாள்.

“ஆ…..இத்தண்ணீர் உப்புக்கரிக்கிறது”

அச்சிறுவனும் இதையே எதிரொலித்தான். பல பயணிகள் எழுந்தனர். அப்பெண்ணின் கணவர் நடத்துனரை அழைத்தார் :

“இந்த ஆள் தண்ணீரில் உப்பை கலந்துவிட்டார்”

நடத்துனர் கண்காணிப்பாளரை அழைத்தார்

“நீ தண்ணீரில் ஏதோ பொருளை கலந்துவிட்டாயா?’

கண்காணிப்பாளர் காவலரை அழைத்தார்

நீதான் தண்ணீரை விஷமாக்கினாயா?

காவலர் தலைவரை அழைத்தார்

நீ தானே விஷம் வைத்தவன்?

தலைவர் மூன்று காரியஸ்தர்களை அழைத்தார். பயணிகளின் பார்வைகளுக்கும் முணுமுணுப்புகளுக்கும் மத்தியில் அவர்கள் என்னை ஒரு காலியான பெட்டிக்கு அழைத்துச்சென்றனர். அடுத்த நிறுத்தத்தில் என்னை இழுத்துச்சென்று சிறையில் அடைத்தனர். சில நாட்களுக்கு நீண்ட விசாரனைகளை தவிர்த்து வேறெதுவும் யாரும் என்னிடம் பேசவில்லை. ‘இந்த வழக்கு மிகவும் கடுமையானது. உண்மையில் நீ குழந்தைகளுக்கு விஷம் கொடுக்க எண்ணவில்லையா? என்று தலையாட்டிக்கொண்டே சொன்ன சிறை அதிகாரி உட்பட என்கதையை நான் விளக்கினாலும் யாரும் நம்புவதாக இல்லை.

ஒரு நாள் என்னை நீதிபதி முன் ஆஜர் படுத்தினர்.

உன் வழக்கு மிகவும் கடுமையான ஒன்று என்று அவரும் சொன்னார். இவ்வழக்கை நான் குற்றவியல் நீதிபதிக்கு ஒப்புவிக்கிறேன் என்றார்.

ஒரு வருடம் கடந்தது. கடைசியாக என்னைப்பற்றின தீர்மானத்திற்கு வந்தனர். யாரும் என் செயலால் பாதிக்கப்படவில்லை என்பதால் எனக்கான தண்டனை மிதமானதாக இருந்தது. குறுகிய காலத்திற்கு பின் நான் விடுதலையாகும் நாளும் வந்தது.

சிறையின் உயர் அதிகாரி என்னை அழைத்தார். ‘இப்போது நீ விடுதலையாகிறாய், நீ பாக்கியசாலி. அதிர்ஷ்டவசமாக யாரும் உன் செயலால் பாதிக்கப்படவில்லை. ஆனால் இச்செயலை நீ மீண்டும் செய்ய முற்படாதே. அடுத்தமுறை இவ்விஷயம் இத்தனை எளிதில் முடிவடைந்துவிடாது என்றார். எல்லோரும் பார்த்த அதே சந்தேகப்பார்வையால் தான் அவரும் என்னை பார்த்தார்.

அன்று மதியமே நான் ரயிலை பிடித்தேன். ஒருமணி நேர அசௌகரியப்பயணத்திற்கு பிறகு நகரத்தை அடைந்து அங்கிருந்து ஒரு வண்டி பிடித்து வீட்டை அடைந்தேன். என் வீட்டு வாசலில் சிரிப்பொலியும் பாட்டு சத்தமும் கேட்டது. ஆச்சர்ய அலை இதயத்தை கடந்து செல்லும்போது ஏற்படுத்தும் ஆச்சர்ய அதிர்வைப்போல எனது இதயத்தில் ஓர் வலியை உணர்ந்தேன். அங்கு என் தோழி எப்போதும் போல் சிரித்துப்பாடிக்கொண்டிருந்தாள்.

நீ எப்படி திரும்பி வந்தாய்?

வெகு சாதாரணம். ரயில் வண்டியில் என்னை வெறும் உப்பு தண்ணீர் தான் என்று யாரோ உறுதி செய்த பின்னர் ரயில் இஞ்சினில் ஊற்றினர். மிகவும் கடினமான பயணமாக இருந்தது அது. வெகு விரைவில் நான் வெள்ளை ஆவியாகி மாறி பின் நல்மழையாகி விழுந்தேன். மிகவும் இளைத்தேன். என்னிலிருந்து பல துளிகளை இழந்தேன்.

அவளின் இருப்பு என் வாழ்கையை மாற்றியது. வீட்டின் இருண்ட தாழ்வாரங்களும், அழுக்கு இருக்கைகளும் சூரியனாலும் காற்றாலும் சப்தங்களாலும் பச்சை மற்றும் நீள நிற பிரதிபலிப்புக்களாலும் ஏராளமான சந்தோச செழிப்பு மிக்க முழக்கங்களாலும் எதிரொலிகளாலும் நிறைந்தன. ஒரு அலை என்பது எத்தனை அலைகள்? அவள் எப்படி ஒரு கடலை, பாறையை, அணைச்சுவரை, இதயத்தை, நெற்றியை தன் நுரைகளால் மகுடம் சூட்டுகிறாள்.

நிராகரிக்கப்பட்ட மூலைமுடுக்குகளும், தூசு தும்புகள் நிறைந்த இடங்களெல்லாமும் அவளின் மென்மையான கரங்களால் தீண்டப்பட்டன. எல்லாம் புன்னகைக்க துவங்கின. எல்லாம் பற்கள் மின்ன சிரித்தன. சூரியன் மகிழ்ச்சியோடு என் பழைய அறையில் நுழைந்து பிற வீடுகளை, நகரை, மாநிலத்தை, நாட்டை நிராகரித்து பல மணி நேரங்கள் என் வீட்டில் தங்கினான். இப்படி பதுங்கி நடப்பதை நேரம் கடந்த சில இரவுகளில் அதிர்ச்சியுடன் நட்சத்திரங்கள் பார்த்திருந்தன.

…….தொடரும்

நன்றி :  உயிர்மை – நவம்பர் 2009

ஆங்கிலத்தில் வாசிக்க : My Life with the Wave by Octavio Paz

Read Full Post »

உலகெங்கிலும் உள்ள பெண் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் ஒரு புதிய தளமாக Belletrista வெளியாகியுள்ளது. நானும் பெண் என்பதாலேயே பெண்களால் துவங்கப்படும் புதிய முயற்சிகள் தெரியவரும் போது மகிழ்ச்சியுடன் கலந்த உற்சாகம் பிறந்துவிடுகிறது. Words Without Borders மூலம் இத்தளம் பற்றிய செய்தி அறிமுகமானதும் உடனே சென்று பார்வையிட்டேன். எத்தனை புத்தகங்கள் எத்தனை எழுத்தாளர்கள், முதல் இதழிலேயே இத்தனை அறிமுகங்களா என்று பிரமிப்பாக இருந்தது.

பெண் எழுத்தாளர்களின் புத்தக விமர்சனங்கள், உலகெங்கிலும் உள்ள பெண் எழுத்தாளர்களின் சமீபமாக வெளிவந்த அல்லது வெளிவர இருக்கும் புத்தகங்கள் பற்றிய தகவல்கள், சிறப்பு கட்டுரை & கதை பக்கங்கள், மேலும் நேர்காணல்கள், கலந்துரையாடல்கள், இலக்கிய செய்திகளின் தொகுப்புகள் என எல்லாம் ஓரிடத்தில் வாசிக்க கிடைப்பது பெரும்மகிழ்ச்சியளிப்பதாய் இருக்கின்றது.

முதல் இதழில் வெளியாகியுள்ள 16 புத்தக விமர்சனங்களில் இந்தியப்பெண்மணி லாவண்யா சங்கரனின் முதல் சிறுகதை தொகுப்பான The Red Carpet : Bangalore stories பற்றிய விமர்சனம் வந்துள்ளது. விமர்சனம் என்ற முறையில் இல்லாமல் நூலை பற்றிய சிறு குறிப்பாகவே பெரும்பாலான பதிவுகள் அமைந்திருக்கின்றன. புதிய புத்தக அறிமுகங்களில் சகித்திய அகெதமி விருது பெற்ற Sashi Deshpande வின் In the country of Deceit என்ற நூல் இடம்பெற்றுள்ளது.

afghan1

இவ்விதழின் மூலம் Afghan Women’s Writing Project என்ற வலைதளம் பற்றி தெரியவந்தது. இது அப்கான் பெண்களுக்கான எழுத்துப்பயிற்சி களமாக அமைந்திருக்கின்றது. இத்தளத்தின் குறிக்கோளும் இயக்கமும் பற்றி இங்கு வாசிக்கலாம். ‘தற்கொலை செய்து கொள்ள எங்கள் கிராமத்தில் அடுக்குமாடி கட்டிடங்கள் இல்லாததாலும், விஷம் இல்லாததாலும் இவள் ஆணிகளை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்தாள்’ என்ற வரிகளை வாசிக்கும் போது அதிர்ச்சியாகவே இருந்தது. பெரும்பாலான கட்டுரைகள் அவ்வாராகவே இடம்பெற்றிருக்கின்றன. இப்பதிவில் வெளியாகிய ரோயாவின் ஒரு கவிதை தமிழில்….

ஆப்பிள் தோட்டம்

என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாய்
நம் அண்டைவீட்டுத் தோட்டத்தில்
நான் பயத்தோடு இருந்ததை நீ அறியவில்லை
ஒரு அப்பிளை திருடினேன்
தோட்டக்காரன் கோபத்தோடு
என்னை துரத்திக்கொண்டு ஓடிவந்தான்
உன் கைகளில் அப்பிள் இருப்பதை கண்டு
என்னை திரும்பிப்பார்த்தான்
நீ கடித்த ஆப்பிள் உன் கைகளிலிருந்து நழுவியது
சென்றுவிட்டாய்…
வருடங்கள் கடந்தும்
உன் காலடித்தடங்கள்
என்னுள் பதிந்திருக்கின்றன
காயப்படுத்துகின்றன
ஏனென்று வியக்கிறேன்

பெண் எழுத்தாளர்களின் இப்புதிய முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இவர்கள் தொடர்ந்து இதே வேகத்துடன் செயல்படவும், பல படைப்புகளை வெளிகொண்டுவரவும், உலகெங்கிலும் உள்ள ஏராளமான பெண் எழுத்தாளர்களை உலகிற்கு அறியத்தரவும் வாழ்த்துவோம்.

Read Full Post »

நன்றி :  எஸ்.ராமகிருஷ்ணன், http://www.dunyamikhail.com/, http://iraq.poetryinternationalweb.org/, http://www.wordswithoutborders.org/

தன்யா மிகேல் (Dunya Mikhail) பாக்தாத், இராக்கில் 1965ஆம் ஆண்டு பிறந்தவர்.  தற்போது மிச்சிகனில் வசித்து வருகிறார்.  இதுவரை அரபி மொழியில் நான்கு கவிதை தொகுப்புகளும், ஆங்கிலத்தில் இரண்டு தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார்.  2001ஆம் ஆண்டு  அவருக்கு ‘UN Human Rights Award for Freedom of writing’ வழங்கப்பட்டது.  நியூயார்க் பொது நூலகம் ‘போர் கடுமையாக உழைக்கிறது’  (“The War Works Hard”) என்ற நூலை 2005ஆம் ஆண்டின் சிறந்த 25 நூல்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்தது.  இவர் மேலும் பல விருதுகளை பெற்றுள்ளார்.    இரான் – இராக் போர்களின் அனுபவங்களை பேசுகிறது இவருடைய கவிதை தொகுப்புகள். போர்களின் கோர விளைவுகளை விவரிக்கும் கவிதைகள் அவை.  அவரின் சில கவிதைகள் இங்கு….

போர் கடுமையாக உழைக்கிறது


போர் எவ்வளவு மகத்தானது!
எத்தனை ஆவலும் திறமையும் மிக்கது!
விடியற்காலையில் ஒலியெழுப்பி
அவசர ஊர்தியை பல இடங்களுக்கு அனுப்பி வைக்கிறது
செத்த உடல்களை காற்றில் வீசுகிறது
காயமடைந்தோருக்கு ஸ்ட்ரெச்சர்களை உருட்டிச்செல்கிறது
தாய்மார்களின் கண்களில் மழையை வரவழைக்கிறது
பூமியை ஆழத் தோண்டுகிறது 
சிதைபாடுகளில் இருக்கும் பல பொருட்களை இடம் பெயர்க்கிறது
சிலர் வாழ்க்கையற்றும் புண்களோடும்
பலர் வாட்டமும் வலியுடனும் ……
இது குழந்தைகளின் மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது
வானத்தில் எரியாயுதங்களையும் வெடிகளையும் வெடிக்கச்செய்து
கடவுளுக்கு பொழுதுபோக்களிக்கிறது
கன்னிவெடிகளை நிலங்களில் விதைத்து
பொத்தல்களையும் கொப்பளங்களையும் அறுவடை செய்கிறது
குடும்பங்களை புலம்பெயரச்செய்கிறது
மதபோதகர்கள் சாத்தானை பழிக்கும்போது
அவர்கள் உடன் நிற்கிறது
(பாவம் சாத்தானோ, ஒற்றைக்கையோடு கொழுந்துவிட்டு எரியும் தீயில்)
இரவுபகலாக போர் தொடர்ந்து உழைக்கிறது
நீண்ட உரை நிகழ்த்த கொடுங்கோலனை ஊக்குவிக்கிறது
படைத்தலைவர்களுக்கு மெடல்களை அணிவித்து கௌரவிக்கிறது
கவிஞர்களுக்கு பலகருக்களை வித்திடுகிறது
செயற்கை கால்கள் செய்யும் தொழிர்ச்சாலைகளுக்கு உதவுகிறது
ஈக்களுக்கு உணவளிக்கிறது
வரலாற்றுப்புத்தகங்களின் பக்கங்களை கூட்டுகிறது
கொல்லப்பட்டவனுக்கும் கொல்பவனுக்குமிடையில் சமத்துவம் நிலைநாட்டுகிறது
காதலர்களுக்கு கடிதம் எழுத கற்றுத்தருகிறது
இளம் பெண்களை காத்திருக்க பழக்குகிறது
கட்டுரைகளாலும் படங்களாலும் செய்திதாள்களை நிறப்புகிறது
அனாதைகளுக்கு புதிய வீடுகளை உருவாக்கித்தருகிறது 
சவப்பெட்டி செய்பவர்களுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது
சவக்குழி தோண்டுபவர்களுக்கு முதுகில் தட்டிக்கொடுக்கிறது
தலைவரின் முகத்தில் புன்னகையை வரைகிறது
போர் நிகரற்ற சிரத்தையோடு உழைக்கிறது
இருந்தும் எவருமே அதனை ஒரு வார்த்தை கூட புகழுவதில்லை.
** 

 

பை நிறைய எலும்புகள்

என்ன ஒரு பாக்கியம்
அவனுடைய எலும்புகளை கண்டுபிடித்துவிட்டாள்
மண்டையோடும் பையில் இருக்கிறது
எல்லா நடுங்கும் கைகளில் இருக்கும்
எல்லாப்பைகளைப்போலவே
அவள் கையிலும் பை இருக்கிறது
அவன் எலும்புகள், ஆயிரக்கணக்கான பிற எலும்புகள்
திரண்ட சுடுகாட்டில் இருப்பதுபோலவே
வேறு எந்த மண்டையோடும் போலல்லாத அவன் மண்டையோடு
இரண்டு கண்கள், அல்லது
அவனுக்கான கதையை சொல்லும் சங்கீதத்தை கேட்டு மகிழ்ந்த துளைகள்
எப்போதுமே சுத்த காற்றை அறிந்திராத மூக்கு
அவன் அமைதியாய் முத்தம் கொடுத்த போது இருந்ததைபோல் அல்லாது
பிளந்த நிலத்தை போன்ற வாய்
சத்தங்களுடனும் மண்டயோட்டுடனும்  எலும்புகளுடனும் புழுதிகளுடனும்
பல கேள்விகளை தோண்டிக்கொண்டிருக்கும் இவ்விடமல்ல. 
இருள் விளையாடும் இம்மௌனங்களில்
இவ்விடத்தில் இப்படி ஒரு மரணத்தில் மரணிப்பதற்கு என்ன அர்த்தம்?
இந்நெடுங்குழிகளில் பாசத்துக்குரியவர்களை சந்திப்பதற்கு என்ன அர்த்தம்?
பிறப்பின் தருவாயில் தாய் கொடுத்து எலும்புகளை
மரணச்சந்தர்ப்பத்தில் அவளுக்கு கைநிறைய திருப்பி கொடுக்கவா?
உங்கள் உயிரை எடுக்கும்போது சர்வாதிகாரி ரசீது தரவில்லை என்பற்காக
இறப்பு பிறப்பு சான்றிதழ்கள் இல்லாமல் பிரிந்துபோகவா?
சர்வாதிகாரிக்கும் இதயமுண்டு
எப்போதும் வெடிக்காத பலூன் போல
மண்டையோடும் உண்டு
பிறவற்றை போலல்லாது மிகப்பெரிய மண்டையோடு
அது தாய்நாட்டிற்கு ஈடாக்க
ஒரு மரணத்தை பல மரணங்களால் பெருக்கி
அக்கணக்கை அதுவே தீர்த்து வைத்தது
சர்வாதிகாரி ஒரு மிக உயர்ந்த துயரத்தின் இயக்குனர்
அவருக்கு பார்வையாளரும் உண்டு
ஒரு பார்வையாளர் கைதட்டுவார்
எலும்புகள் உரசி ஒலியெழுப்பும் படி
பையிலிருக்கும் எலும்புகள்….
தங்களுடையது கிடைக்காமல் வாடும்
பக்கத்து வீட்டுக்காரர்களை போலல்லாமல்
இறுதியாக
அவள் கைகளில்
நிரம்பிய பை
 **
நான் அவசரத்தில் இருந்தேன்

 

நான் நேற்று என் நாட்டை தொலைத்துவிட்டேன்.
அவசரத்தில் இருந்ததால்
நினைவற்ற மரத்திலிருந்து முறிந்த கிளையைப்போல
எப்போது என்னிடமிருந்து நழுவி விழுந்தது என்பதனை கவனிக்கவில்லை
தயவுகூர்ந்து யாராவது இப்பக்கம் நகர்ந்து செல்லும்போது காலில் இடறினால்
ஒருவேலை வான் பார்த்த திறந்து கிடக்கும் பெட்டியிலோ
அல்லது திறந்த காயத்தை போல் ஒரு பாறையில் செதுக்கப்பட்டோ
அல்லது அகதிகளின் போர்வைக்குள் சுருட்டப்பட்டோ
அல்லது அழிக்கப்படும் பரிசுபெறாத லாட்டரி சீட்டை போலவோ
அல்லது உதவியற்று மறக்கப்பட்ட உத்தரிகத்திலோ
அல்லது சிறுவர்களின் கேள்விகளைப்போல வேகமாக இலக்கற்று முன்னகர்ந்துக்கொண்டோ
அல்லது போர் புகையில் மேலெழுந்துக்கொண்டோ
அல்லது தலைப்பாதுகையில் மண்ணில் உருண்டுகொண்டோ
அல்லது அலிபாபா ஜாடியில் திருடப்பட்டோ
அல்லது சிறைக்கைதிகளை ஊக்கப்படுத்தி தப்பிக்கவைத்த
காவலதிகாரியின் சீருடையில் மாறுவேடம் அணிந்து மறைந்துக்கொண்டோ
அல்லது சிரிக்க முயற்சிக்கும் பெண்ணின் மனதில் ஒடுங்கிக்கொண்டோ
அல்லது அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களின் கனவுகளைப்போல சிதறிக்கிடக்கிறதா.
யாருக்காவது காலில் இடறுமெனில்
தயவுசெய்து என்னிடம் திரும்ப கொடுத்துவிடுங்கள்
தயவுசெய்து திரும்ப கொடுத்து விடுங்கள் சார்
தயவுசெய்து திரும்ப கொடுத்து விடுங்கள் மேடம்
அது என்னுடைய நாடு
நேற்று அதை தொலைத்த போது
நான் அவசரத்தில் இருந்தேன்

 
**************************
 
ஒரு மந்திரக்கோல் பற்றி
கனவு காண்கிறேன்
அது என் முத்தங்களை
நட்சத்திரங்களாக மாற்றுகிறது
இரவில் நீ அதை பார்த்து
தெரிந்து கொள்ளலாம்
அவை ஏராளமானவையென்று

 
***********************

ஒரு கதவை வரைந்து
அதன்பின்
அமர்ந்துக்கொண்டேன்
நீ வந்த உடனே
திறப்பதற்கு தயாராய்

இக்கவிதைகள் உயிர்மை ஆகஸ்ட் 2009 இதழில் வெளியாகியுள்ளது.

Read Full Post »

நான் இதுபோன்ற கருத்துப்பொருளைப்பற்றி (abstract) யோசிப்பதே இல்லை.  எனக்கு திடமான, குறிப்பான, வாழ்கையின் யதார்த்தமான பிரச்சனைகளை மட்டும் கையால வேண்டும். எனக்கு எதற்கு தத்தவம் என்று பலரும் சொல்வதை போல் நீங்கள் இப்போது சொல்லக்கூடும்.  உங்களுக்கு என்னுடைய பதில் : திடமான, குறிப்பான, வாழ்க்கையின் யதார்த்தமான பிரச்சனைகளை கையாள….அதாவது இப்புவியில் வாழ முடிவதற்கு தத்துவம் அவசியமானது.  

நான் எப்போதுமே தத்துவத்தால் வசப்படவில்லை என்று பலரும் இப்போது சொல்லலாம்.  நீங்கள் சொல்வதை சற்றே சரிபார்க்க சொல்கிறேன். எப்போதாவது இவற்றை நினைத்து அல்லது கூறி இருக்கிறீர்களா? 

“இவ்வளவு நிச்சயமாக இருக்காதே…யாரும் எதைபற்றியும் நிச்சயமாக இருக்கமுடியாது”
இவ்வெண்ணம் David Hume மிடமிருந்து வந்தது (இன்னும் பலரிடத்திலிருந்தும்) அவரைப்பற்றி நீங்கள் கேள்விபட்டிராவிட்டாலும்.

அல்லது :
“இவை புத்தகங்களுக்கு ஒத்துவரும் ஆனால் நடைமுறையில் செயல்படுத்த முடியாது”
இதை Plato விடமிருந்து பெற்றிருக்கிறீர்கள். 

அல்லது :
“இது மிகவும் கீழ்த்தரமான செயல், ஆனால் நாம் மனிதர்கள் தானே. இவ்வுலகத்தில் எந்த ஒரு மனிதனும் உத்தமமானவன் இல்லை” 
இதை Augustine னிடமிருந்து பெற்றிருக்கிறீர்கள். 

அல்லது :
“உனக்கு இது உண்மையானதாக இருக்கலாம் ஆனால் எனக்கிது உண்மையானதல்ல”
இதை William James இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள். 

அல்லது :
“என்னால் உதவ முடியவில்லை, அவன் என்ன செய்தாலும் எவராலும் எதுவவும் உதவ முடியாது”
இதை Hegel இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள். 

அல்லது :
“இது உண்மையென உணருகிறேன்…ஆனால் என்னால் நிரூபிக்க முடியவில்லை”
இதை Kant இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

அல்லது :
“இது நியாயமானது, ஆனால் நியாயங்கள் யதார்த்ததோடு எதுவும் செய்வதற்கில்லை”
இதை Kant இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

அல்லது :
“இது தன்னலம் என்பதால் இது தீயது”
இதை Kant இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

“முதலில் செயல்படுங்கள் பிறகு யோசியுங்கள்” என்று செயல்பாட்டாளர்கள் (activists) சொல்வதை கேட்டிருக்கிறீர்களா. 
இதை John Dewey இடமிருந்து பொற்றார்கள்.

இப்போது சிலர் சொல்லக்கூடும் “ஆமாம் நான் இவற்றை பலசமையங்களில் சொல்லி இருக்கிறேன், ஆனால் இவற்றை நான் என்றும்  நம்பவேண்டுமென்பதில்லை. நேற்று அவை சரியானதாக எனக்கு பட்டிருக்கலாம் ஆனால் இன்று அவை சரியானதல்ல”  இதை Hegel இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்.

பலவிதமான யோசனைகளை பலவிதமான தத்துவங்களிலிருந்து அந்நேரத்திற்கு தகுந்தாற்போல் கடன் வாங்கிக்கொள்ளவோ சமாதானப்படுத்திக்கொள்ளவோ கூடாதா? என்று கேட்கலாம்.  இதை Richard Nixon இடமிருந்து பெற்றிருக்கிறீர்கள்…அவர் Willam James இடமிருந்து.

இப்போது உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள் – இதுபோன்ற கருத்துப்பொருளாகிய எண்ணங்களில் விருப்பமில்லையெனில், ஏன் அனைவரும் அவற்றை கட்டாயமாக பயன்படுத்த எண்ணுகிறீர்? 

…தொடரும்  

Read Full Post »

Older Posts »