Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Ian Mc Ewan’ Category

amsterdam
 
இங்கு சந்தித்து தழுவிக்கொண்ட இரு நண்பர்கள் சென்று விட்டனர் அவரவரின்  சொந்த தவறுக்காகவே –  W.H.Auden.  
 
இவ்வாசகத்தை முதல் பக்கத்தில் கொண்டு தொடங்கும் கதை இவ்வரிகளையே கதையாகவும் கொண்டுள்ளது.  தங்கள் காதலியும் தோழியுமான மோலியின் இறுதிச்சடங்கில் பங்குபெறும் இருநண்பர்கள் அவளின் இறப்பிற்காகவும், சிறிது சிறிதாக அவளின் மூளை செயலிழந்து தான் யார் என்பதையே அறியாமல் இறந்த விதத்திற்காகவும் வருந்துகின்றனர். 
 
அதற்கு பிறகு தங்களின் உடல் நிலை குறித்து அவர்களுக்கு பயம் எழுகின்றது.  தன் காதலி இறந்த நிலையை என்றுமே தானும் சந்திக்கக்கூடாது என்று யோசித்த நண்பர் மற்றொருவரை அழைத்து அப்படி ஒரு நிலமை தனக்கு ஏற்படுமாயின் இயற்கையான மரணம் ஏற்படும் வரை காத்திருக்காமல் தன்னைத்தானே அழித்துக்கொள்ள அவர் உதவ வேண்டுமென்று கேட்கிறார்.  தனக்கும் அப்படி ஒரு நிலை உருவாகின் இவர் உதவுவார் என்றால் தானும் உதவுவதாக ஒப்புக்கொள்கிறார். 
 
பிறகு இருவரும் சற்றே நிம்மதி அடைகின்றனர்.  தங்கள் வேலையில் மும்முரமாக உழைக்கின்றனர்.  ஒருவர் இசையமைப்பாளர், மற்றவர் செய்தித்தாளின் ஆசிரியர்.  முன்னவர் எத்தனைக்கு எத்தனை தனிமையான வாழ்வு வாழ்கிறாரோ அதற்கு நேரெதிராக தனக்கென ஒரு ஐந்து நிமிட இடைவெளிகூட இல்லாமல் தொடர்ந்து உழைப்பவர் மற்றொருவர்.  இடையிடையே சர்ச்சைகளும் சமரசங்களும் அவர்களிடம் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றது.  இப்படி கதை நகர்ந்துக்கொண்டிருக்க….யாருடைய சாவிற்கு யார் உதவ போகிறார்கள், இவர்கள் மரணம் எப்படி நிகழும் என்பதுதான் கதை. 
 
‘Atonement’ கதையை ஏற்கெனவே படமாக பார்த்து பிடித்திருந்ததாலும் , ‘Enduring Love’ கிடைக்காததாலும், ‘Saturday’ புத்தகத்தை பற்றி ஒன்றும் அறிந்திருக்கவில்லையென்பதாலும் வெறும் புக்கர் பரிசை நம்பி இப்புத்தகத்தை வாங்கி வாசித்தப்பிறகு ஒரு சாதாரண பொழுதுபோக்கு நாவலை வாசித்த அனுபவமே மிஞ்சியது.  இன்னும் சில பக்கங்களில் சுவாரிஸ்யமாக மாறும் என்ற நம்பிக்கையில் பக்கங்களை திருப்பிக்கொண்டிருக்க…… அதே நம்பிக்கையில் கடைசி பக்கம் வரை வந்து கதையும் முடிந்துவிட்டது.  
 
இவர் எழுதிய பத்து நாவல்களிலும் இரண்டு சிறுகதை தொகுப்புகளிலிருந்தும் எட்டு கதைகள்  படமாக்கப்பட்டிருக்கின்றன என்பது தனிச்சிறப்பு.    இந்நாவல் 1998ஆம் ஆண்டு புக்கர் பரிசை வென்றது. 

 

Book :  Amsterdam
Author : Ian Mc Ewan
Pages : 193
First Edition : 1998

Read Full Post »