Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘இந்திரா பார்த்தசாரதி’ Category

 

எது சரி?எது தவறு? யார் நல்லவர்? யார் கெட்டவர்? எது நிஜம்?  எது பொய்? இவற்றை வரையறுப்பது எது?  இதற்கான அளவுகோல் என்ன?  நீ என்பது இருக்கும் போதுமட்டுமே நான் என்ற ஒன்று இருக்கமுடியும் என்ற சிந்தனையில் இவற்றையும் கொண்டு சென்றால், நிஜம் இருந்தால் மட்டுமே பொய்யும் இருக்க முடியும் என்ற நிலையில் எதுவுமே நிஜமும் இல்லை பொய்யும் இல்லை என்ற சமரசத்தோடு பயணிப்பதே உகந்ததாயும் வசதியாகவும் இருக்கிறது.  விலங்குகளையெல்லாம் உடைத்துவிட்டு, உயிர்ப்போடு பறக்கத்துடிக்கும் உயிர்களுக்கெல்லாம் எத்தனை பறந்தாலும் உன் கால்களை மட்டும் எப்போதும் உனக்கான நிலத்தில் மட்டுமே வைத்துக்கொள்வதே விவேகம் என்ற பாடம் சொல்கிறது இ.பா.வின்  நாவல். 
 helicopter
அன்றிரவுக்கும் இன்றிரவுக்கும் எவ்வளவு வித்தியாசம்!  காலத்தையும் கனவுகளையும் இப்படிக் கரைப்பதற்குத்தான் வாழ்கை என்று பேரா?  ஒரு வேளை அன்றிரவு தான் கண்ட கனவு நனவாகியிருந்தால், இன்றிரவு இங்கே வராந்தாவில் நின்றுகொண்டு கனவு காண வேண்டிய அவசியம் இல்லாமற் போயிருக்கும்.  நிகழ்ச்சி என்பது நினைவுக்குச்  செய்யும் கொடுமை.  கனவு கனவாயிருப்பதில் எவ்வளவு சுகம்!  நேரே பார்ப்பதைவிட, பொருட்கள் வர்ணக் கண்ணாடியில் பார்க்கும் போது எவ்வளவு அழகாக இருக்கின்றன!
பன்னிரண்டு வருஷங்களாக தான் வாழ்ந்த வாழ்வு போலித்தனமானது….தன் சிந்தனையைத் தர்மமாகக் கொண்டு வாழாத கபட நாடகம்.  ஊராரை எதிர்த்துக் கொள்ளக்கூடாது, ஒட்டி வாழவேண்டும் என்ற ஆட்டு மந்தை மனப்பான்மை….அமைதி என்ற வேஷத்தில் பொய்யுடன் சமரஸம் செய்து கொண்ட கையாலாகத்தனம். – இ.பா
 
எதை வேண்டுமானாலும் செய்யலாம், சரிதவறென்று எதுவும் இல்லை.  எதைச்செய்தாலும் அதை நாணயமாகச்செய்  என்கிறார் ஆசிரியர்.  ஆனால் எது நாணயம்?  யாருக்கு நாணயம்?  எதற்காக நாணயம்?  எதைவேண்டுமானாலும் என்று சொல்லிவிட்டு ஏன் மீண்டும் அங்கு ஒரு கோடு?  அதுதான் இப்படித்தான் நம் சமூகம்…அதுதான் நம் வாழ்க்கை முறை என்று  சமரசம் செய்துக்கொள்ள பழகிக்கொள்வதே நாட்களை சிரமமின்றி நகர்த்த ஏதுவானதாய் இருக்குமென கொள்ளலாமோ. 
 
நாவல் : ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன
ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
பக்கங்கள் : 152
முதற் பதிப்பு : 1971

Read Full Post »

“…………மலையின் உச்சியை அடைந்தாலும் மலையின் உச்சியை அடைந்து விட்ட பிரக்ஞை இல்லாமல், வெற்றி அடைய வேண்டுமென்ற வெறியே வாழ்க்கையின் குறிக்கோளாகி விடும்.  அது தப்பாகிப்போய்விட்டது…..மலையின் உச்சியை அடைந்துவிட்டால் தனிமைதான் மிஞ்சும். – இ.பா”

நகர்ந்துக்கொண்டிருக்கும் அல்லது நகர்த்திக்கொண்டிருக்கும் வாழ்வில் எங்கோ ஓர் இடத்தில் சலிப்பு தட்டுகிறது.  ஏதோ ஒன்றின் உந்துதலில் மாற்று தேடி அலைகிறது.  சிலர் மாற்று என்னவென்று தெளிவாக அறிந்து வைத்துக்கொண்டு அதை நோக்கி தங்கள் பாதையை மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள்.  சிலருக்கு அந்த மாற்று என்னவென்றே புரியாத நிலையில் தானாக மாற்றம் நிகழும் என்று குமைந்துக்கொண்டு காத்திருக்கிறார்கள்.  மாறுதல்கள் தானாகவோ வலிந்தோ நிகழும்போது தேடியது கிடைத்துவிட்டதாய் சுகிக்கும் மனது.  எனினும் இதே சட்டத்திற்குள் நின்று விடாமல் ஒரு இடைவெளிக்கு பின் மீண்டும் சலிப்பு….தேடல் எனத் தொடரும் வாழ்வில் சிக்கித் தவிக்கும் மனங்களை பேசுகிறது இந்நாவல்.   

“கலை ஆற்றல் வெளிப்படுவதற்கு ஒருவருக்கு வாழ்கையில் பொறுக்கமுடியாத சலிப்பு ஏற்படவேண்டும் .”
 “உங்களுக்கு நிஜமாகவே ஆற்றல் இருந்து அது இன்னும் ‘எக்ஸ்பிரஸ்’ ஆகலேன்னா அதுக்கு காரணம் உங்களோட இப்பொழுதைய வாழ்க்கை போதுமான அளவுக்கும் இன்னும் உங்களுக்கு ‘போர்’ அடிக்கலேன்னு தான் அர்த்தம் – இ.பா”
 
இன்று நிறைவைக்காணும் மனது நாளையும் இதே கோட்டிலேயே இருந்துவிடும் என்று எந்த நிச்சயமுமில்லை எனினும் மனதின் போக்கிலேயே பின் தொடர்ந்துக்கொண்டிருக்க முடியாது இல்லையா.   தனக்கான தேவை, தனக்கான சிந்தனை, தனக்கான வாழ்வு, தன் சந்தோஷங்களே பிரதானம் என்று தீர்மானிக்கும் போது அவற்றின் விளைவுகளை சுட்டுகிறது இக்கதை.  சலிப்பை உணர்ந்த மனம் என்றுமே எந்த ஒன்றிலுமே நிறைந்துவிடாது.  மீண்டும் மீண்டும் சலிப்பே மிஞ்சும்.  மலர்தல் உதிர்தல் காய்தல் மலர்தல் என்ற சுழற்சியில் எதுவுமே சாஸ்வதமில்லை இல்லையா.  
 venthu thanintha kaadukal
“வாழ்க்கையில் சில அடிப்படையான நியதிகள் இருக்கின்றன.  அவை எந்தக்காலத்துக்கும் பொருந்திய உண்மைகள்.  தொன்று தொட்டு இருந்து வருகின்றன என்ற காரணத்தால் அவற்றைக் பின்பற்றுவது பத்தாம் பசலிப் போக்காக ஆகிவிடாது.  எப்பொழுது நாம் குடும்பம், சமூகம் என்ற கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறோமோ அப்பொழுதே நம் சுதந்திர உணர்வுக்கும் வரையறை ஏற்பட்டு விடுகிறது.  சிந்தனை செல்லும் வழியெல்லாம் வாழ முயல்வது, நம் உடம்பின் இரத்தம் உஷ்ணமாயிருக்கும் வரையில்தான்.  ஒவ்வொரு காலகட்டத்திலும், நம் வாழ்க்கையின் நோக்கங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது என்பதுதான் காலம் நமக்குச் செய்யும் கொடுமை.  குடும்ப வாழ்க்கையின் அடிப்படை நியதிகளை ஏற்றுக்கொண்டு, சமூக வேலிக்குள் வாழ்கின்றவர்களுடைய கற்பனையற்ற சராசரித்தனம் – ஒரு கால கட்டத்தில் ஒரு மன நிலையில் நமக்கு எரிச்சலைத் தருவதில் ஆச்சரியமில்லை….ஆனால் இதுதான் சௌகர்யமான வாழ்க்கை என்று புரிந்து கொள்வதுதான் விவேகம். – இ.பா
நாவல் : வெந்து தணிந்த காடுகள்
ஆசிரியர் : இந்திரா பார்த்தசாரதி
பக்கங்கள் : 160
முதற்பதிப்பு : 1983

Read Full Post »