Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மனுஷ்ய புத்திரன்’ Category

பிறப்பதும் இறப்பதும் பிறந்திடா திருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
இறப்பதும் பிறப்பதும் பிறந்தவீ டடங்குமே
– சித்தர் சிவவாக்கியர்

சித்தர் பாடல்கள் பரம்பொருளை மனதில் வைத்து எழுதிய பாடல்கள் எனினும் நிறைய பாடல்கள் காதல் உணர்வுகளுக்கும் மிகப்பொருத்தமாக இருக்கிறது.  உதாரணத்திற்கு இப்பாடல் எத்தனை அழகாய் காதல் நிறைந்த உள்ளத்தை பாடுவதாக அமைந்திருக்கிறது. காதல் பிறப்பதும் இறப்பதும், பிறக்காமலே இருப்பதும், அதை மறப்பதும் நினைப்பதும்…மறந்ததை மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்ளுதளும், அவற்றை மீண்டும் துறப்பதும் தொடுப்பதும், சுகித்து உட்கொள்ளுதலும்…இறப்பதும் பிறப்பதும்…..இவை அனைத்தும் அவனுள் அடக்கமே. 

நெஞ்சு படபடக்கிறது
நீர்வீழ்ச்சியென்று
அருவியை
யாராவது
சொல்லிவிட்டால்…
– விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன் மணிவிழா பற்றி குங்குமம் வார இதழில் வந்த பதிவு இணையத்தில் வாசிக்க கிடைத்தபோதுதான் இந்தக்கவிதை அறிமுகமானது.  ஏராளமான கவிதைகள் இருந்தும் இக்கவிதையை அவரை பற்றிய குறிப்புடன் இட்டிருக்கிறார்களே ஏனென முதல் வாசிப்பில் எண்ணத்தோன்றியது.  .
ஏன் இந்தப்படபடப்புன்னு யோசிக்கும்போது புரிந்தது…அருவியை நீர்வீழ்ச்சி என்பது எத்தனை அபத்தமானது.  வீழ்வதெல்லாம் வீழ்ச்சி அல்லவே.  விழுதலும் எழுதலும் நகர்தலும் தொடர்தலும் வாழ்வின் இயல்பாகிப்போனப்பிறகு பிரம்மாண்டமாக கொட்டும் அருவியை எங்ஙனம் நீர்வீழ்ச்சியென்று அழைப்பது.

பத்திரத்துக்கு
முந்தின இரவில் போட்டதை
அணைக்க விட்டுப் போயிருக்கலாம்.
திங்கட்கிழமை முதல்பஸ் பிடித்து
வேலைபார்க்க வெளீயூர் போகிற
அப்பாவை வழி அனுப்பிய மகள்
அடுப்பில் பால் பொங்க
ஓடிப்போயிருக்கலாம்
அயத்துப் போய்.
அதிகாலையில்
வாசல் தெளிக்க ஏற்றி
‘கோலம் நல்லா வந்த’
நிறைவில்
குதுகலமாக மறந்து
போயிருக்கலாம்.
புதிதாக புழங்கும்
விருந்தினர் யாரோ
விசிறிக்கு அழுத்திய பொத்தானில்
வெளியே இந்த
விளக்கு எரிவது தெரியாமல்
அறைக்குள் இருக்கலாம்.
உச்சி வெய்யிலில்
தெருவில் போகிற எனக்கு
உறுத்திக் கொண்டிருக்கிறது
ஒரு வெளிச்சத்தில்
இன்னொரு வெளிச்சம் தோற்பது.
-கல்யாண்ஜி (தொகுப்பு : அந்நியமற்ற நதி)

ஒரு வெளிச்சத்தில் இன்னொரு வெளிச்சம் தோற்பது எத்தனை சோகமான விஷயம்.  மறதியால் நிகழ்ந்ததெனினும், ஒரு வெளிச்சம் இன்னொரு வெளிச்சத்தால் தோற்கடிக்கபடுவது அவலம் இல்லையா.  ஒன்றைவிட மற்றொன்று பெரியதாக வருமெனில் அங்கே ஒன்று தோற்றுத்தான் ஆகவேண்டும்.  ஆச்சரியம் என்னவெனில் தோற்கடிக்கப்பட்ட வெளிச்சம் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டே இருப்பினும், என்றுமே வெளிச்சமாகவே, வேண்டிய பொழுதுகளில்  வெளிச்சம் கொடுத்துக்கொண்டே நிலைக்கும். 

உடைந்த
இரு ஐஸ் துண்டுகள்
மெல்லத் திரும்பிவிட்டன
தம் பூர்வீக வெளிகளுக்கு

அறியக்கூடும்
இந்த ஆகாயமோ
இந்தக் காற்றோ
இந்தக் கடலோ
உடைந்த இரு ஐஸ் துண்டுகளின்
ஏகாந்தமான தொடுதல்களை

நாமிருந்தோம்
அவல சாட்சிகளாய்

ஒரு ஐஸ்கட்டியின்
நுண்ணிய முறிவுகளுக்கு

ஒரே கோப்பையில்
அருகருகே மிதக்க வேண்டியிருக்கும்
அதன் நிர்பந்தங்களுக்கு

பாதி மூழ்கி
பாதி எழும்
மீள முடியாத
அதன் விதிகளுக்கு

எப்படி நெருங்கி வந்தாலும்
ஒட்ட இயலாத
அதன் உடல்களுக்கு

நம் சில்லிட்ட கைகளோடு
– மனுஷ்ய புத்திரன் (தொகுப்பு – இடமும் இருப்பும்)

இயலாமைகளும், கட்டாயங்களும், முறைமைகளும், கசந்த கடமைகளும் சூழ்ந்த நிர்ணயிக்கப்பட்ட வாழ்வை அவலத்துடன் வாழ்ந்து உருகி வடிவிழக்கும் அவதியை ஐஸ்கட்டியின் முறிதல்கள் அழுத்தமாக உணர்த்திச்செல்கிறது.  ‘ஒரே கோப்பையில் அருகருகே மிதக்க வேண்டியிருக்கும் அதன் நிர்பந்தங்களுக்கு’, ‘பாதி மூழ்கி பாதி எழும் மீள முடியாத அதன் விதிகளுக்கு’, ‘எப்படி நெருங்கி வந்தாலும் ஒட்ட இயலாத அதன் உடல்களுக்கு’   அடடா…மனிதவாழ்க்கையையல்லவா சுட்டுகின்றது இவ்வரிகள். 

Entering the forest he moves not the grass
Entering the water he makes not a ripple. 
அவன்
வனத்தில் நுழையும்போது
புற்கள் நசுங்குவதில்லை
நீரில் இறங்குகையில்
சிற்றலையும் எழுவதில்லை
– ஜென் கவிதைகள்  (தமிழில் யுவன் சந்திரசேகர், தொகுப்பு : பெயரற்ற யாத்ரீகன்)

அவன் எந்த மனதில் பிரவேசித்தாலும் அங்கு அவன் சின்ன காயத்தையோ சலனத்தையோ கூட ஏற்படுத்தாதவன் என்ற மென்மையை சொல்கிறது.

அவன் பேச்சில…..சொல்ல விழையும் கருத்துக்களில் எம்மனமும் புண்படுவதே இல்லை என்ற அவனின் திறமையை….சஞ்சலமுறச்செய்யாத அவனின் நேர்த்தியை சொல்கிறது

அவன் வரவின் சுவடோ எங்குமே பதியப்படாமல், எந்த மனதிலும் அவனுக்கான அலைகள் எழாமல்…அவன் நிராகரிக்கப்படுவதை சொல்கிறது.

ஒரு கவிஞன் அங்கீகரிக்கப்படாமல் போனதை….புறக்கணிக்கப்பட்டதை சொல்லும்விதமாகவும் இருக்கிறது. 

நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இன்னும் எத்தனை வண்ணத்துப்பூச்சியை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறதோ இக்கவிதை.  இதை போல் பலபொருளை தன்னுள் தாங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு கவிதை.

நிசப்தம்
விரவிக்கிடக்கும்
இந்த
இரவின் விளிம்பில்
சொற்கள்
உன் விரல்களின் நுனியிலிருந்து
உதிரத் தொடங்குகின்றன
– வா. மணிகண்டன் (தொகுப்பு – கண்ணாடியில் நகரும் வெயில்)

இக்கவிதையை வாசித்துமுடித்த நொடியில் தோன்றியது இதுதான்…..இரவில் கிழிந்த மனதிற்கு எவ்வளவோ சமாதானம் சொல்லிமுடித்தப்பின்னரும் எழும் மனக்கூச்சலை வலிந்து அடக்கி அமைதியாக்க முற்பட்டு நிசப்தம் நிரம்பி வழிய, அக்கையறு நிலையில் நிதானமாக கண்களிலிருந்து கண்ணீர் உதிர்க்க துவங்குகின்றது. 

எந்த சமரசத்துக்கும் இடம்தராத
கலகக்காரனின் வேடத்தை அணிந்துகொண்டேன்
நினைவின் கிடங்கிலிருந்து
என் குழந்தையின் புன்னகைக் கீற்றினை
எடுத்துக்கொண்டேன்
இதுவரை எழுதப்படாத பாடல் ஒன்றை
எழுதி வைத்துக் கொண்டேன்
ஆறுதல் செய்யவியலாமல்
கிளைக்கும் அச்சத்தை
அடக்கிக்கொண்டேன்
இன்றிரவு நிகழவிருக்கும்
வெறுமையை எதிர்க்கவென
– முபாரக்

ஒரு மரணம் அல்லது பிரிவு நிகழ்ந்த பின் தொடரப்போகும் முதல் இரவில் வெறுமையின் கோரக் கைகள் எத்தனை கொடூரமாய் தாக்கிச் சிரிக்கும்.  அறிந்தே நிகழும் வெறுமையை போராடி தோற்கடிக்கவும் முடியுமா?  வெறுமையை வேறு எதை கொண்டு நிரப்பினாலும், எதிர்த்தாலும், வெறுத்தாலும் நம்மை குதறாமல் அது விடப்போவதென்னவோயில்லை.  எனினும் தோற்கடிக்கப்படவேண்டிய ஆயத்தங்களை செய்துக்கொண்டே இருக்கிறோம்.  அது நம்மை முட்டாளாக்கி இன்னும் கொடூரமாகத்தாக்கி திக்குமுக்காடவைக்கும்.

இங்கிருந்து நான் போன
பின்னும்
சம்பங்கிப்பூ பூக்கும்
வேருக்குள்
எவ்வளவு வைத்திருக்கிறதோ

வானம் நீருற்றும்வரை
வாடி
அதற்குப்பின்னும் துளிர்த்து
சம்பங்கிப்பூ பூக்கும்
– தேன்மொழி (தொகுப்பு : இசையில்லாத இலையில்லை)

ஒரு நிரந்தர நீங்குதல் உண்டாக்கும் வேதனை படாரென்று தாக்கி மெல்ல மனதினுள் பரவும். ஆரம்பத்தில் தாங்கிக்கொள்ளக்கூடியதாகவே தோன்றும்.  வேருக்குள் தங்கியிருக்கும் நீர் கொடுக்கும் தைரியத்தில் வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் நாட்கள் நகரும்.  தேக்கிவைத்த நீர் வரண்ட நேரத்தில் மீண்டும் நீரூற்றிய கரத்திற்கு ஏங்கிவாடும். இயற்கை கருணையோடு நீர்வார்க்கலாம்…அதிகம் பொழிந்து வேரோடு சாய்த்து அழிக்கலாம்.  தேவைக்கேற்ப ஊற்றிய கரங்கள் போலாகாதெனினும் பிறகரங்கள் ஊற்றும் நீருண்டு மீண்டும் துளிர்க்கலாம்.  நீங்கிய கரத்தின் ‘பூக்கும்’ என்ற நம்பிக்கையிற்காகவும், நீங்கிய கரம் குற்றவுணர்விலிருந்து மீளவும் மீண்டும் பூப்பதாய் பூத்துக்காட்டலாம். 

நின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று
பந்தமின்றி வீடுமின்றி பாவகங்கள் அற்றது
கந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே
அந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே
– சித்தர் சிவவாக்கியர்

எப்போதுமே நிலையாக நின்றதன்று, இருந்தன்று, எதிர்பட்டதன்று, கூறமுடியுமானதன்று, பந்தமற்று, வீடற்று, உருவமற்று, மணமற்று, கேள்வியற்று கேடில்லாத மனவானிலே முடிவற்று நிற்குமொன்றை எப்படி விளக்குவேன்.

Read Full Post »

திரும்பாத முத்தம்

 ————————————–

 இடப் படாத முத்தமொன்று

 இரவின் முடிவற்ற கரிய தோள்களில்

 வந்தமர்ந்தபோது

 பனிக் காலத்தின் ஆயிரம்

 உறைந்த கண்கள்

 அதை உற்றுப் பார்த்தன  

 

 இடப்படாத அந்த முத்தம்

 தன் கூச்சத்தின்

 இறகுகளைப் படபடவென

 அடித்துக்கொண்டது  

 

 திசை தப்பி வந்த

வேறொரு உலகத்தின் பறவையென

அன்பின் துயர வெளியின் மேல் அது

பறந்து பறந்து களைத்துப்போயிருந்தது  

 

 

அதற்கு

தான்

அந்த கணம் வந்தமர்ந்த

இடம் குறித்து

எந்த யோசனையுமில்லை

ஒரு தந்திரமில்லை

ஒரு கனவு இல்லை  

 

நடுங்கும் கைகளால்

நான் அதைப் பற்றிக்கொள்ள

விரும்பினேன்  

 

இடப்படாத அந்த முத்தம்

சட்டென திடுக்கிட்டு

எந்தக் கணமும் பறந்துபோய்விடலாம்  

 

யாராலும் பெற்றுக்கொள்ள முடியாத

காதலின் ஒரு தானியத்தை

தற்கு எப்படியாவது ஊட்டிவிட முயன்றேன் 

 

இடப்படாத முத்தங்கள்

எதையுமே பெற்றுக்கொள்வதில்லை

எவ்வளவு தூரம் பறந்தாலும்

அவற்றிற்குப் பசி எடுப்பதில்லை  

 

அவை

பிசாசுகளைப் போல காற்றில் வாழ்கின்றன

பனியைப்போல தனிமையில் நிகழ்கின்றன  

 

ஒரு வேளை

நீ அந்த முத்தத்தை

இட்டிருந்தால்

து முத்தமாகவே இல்லாமல்

போயிருக்கலாம் 

**************************************************************

உன்னை இழந்துவிட்டிருக்கும் இக்கணத்தில்  

—————————————————————————

உன்னை இழந்துவிட்டிருக்கும் இக்கணத்தில்

திரும்பத் திரும்ப தோன்றுகிறது

உன்னை இன்னும் சற்றே அடைந்திருக்கலாமென  

 

 

அடைந்திருந்த கணங்களிலோ

அதற்கு மேல் அடைய எதுவுமே இருந்திருக்கவில்லை  

 

 

இழப்பின் கணங்கள்

இந்தக் குளிர் இரவில்

தின்று வாழ்கின்றன

அடைதலின் கணங்களை  

– மனுஷ்ய புத்திரன் (தொகுப்பு : கடவுளுடன் பிரார்த்தித்தல்)

Read Full Post »

ஒரு நாற்றுக்கும்
இன்னொரு நாற்றுக்கும்
ஒரு தென்னங்கன்னுக்கும்
இன்னொரு தென்னங்கன்னுக்கும்
விடவேண்டிய இடைவெளிக்குத்
துல்லியமாய் கணக்குண்டு

என்ன யோசித்தும்
புலப்படவில்லை
நீயும் நானும்
செழித்து வளர வேண்டிய
இடைவெளி எதுவென்று

– மனுஷ்ய புத்திரன் (என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்)

Read Full Post »

ஒரு கூழாங்கல்
—————–
ஒரு கூழாங்கல்லை
வாயில் போட்டுக் கொண்டேன்
அது இதுவரை தான் சார்ந்திருந்த
மண்ணின் சுவையை
நாக்கில் தடவுகிறது

மண்
கல்லின் சுவையை
தக்கவைத்துக்கொண்டிருக்குமா என
ஒரு கூழாங்கல் யோசிப்பதேயில்லை

– மனுஷ்ய புத்திரன் (நீராலானது)

*******************
மனித நிலையில் எதிர்ப்பார்பே இல்லாமல் இருப்பது எளிதல்லன்னு தோனுது. எதோ ஒரு எதிர்ப்பார்ப்பு நிச்சயம் சராசரி மனுஷனுக்கு இருக்கும். அதுதானே மனித இயல்பு. ஆனா இந்த எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் நாம் நம்முடைய நிலையில் மாறாம இருக்கோமான்றதுதான் கேள்வி. என்னுடைய எந்த எதிர்ப்பார்ப்பையும் நீ நிறைவேற்றாவிட்டாலும் அந்த வலியை அனுபவித்துக்கொண்டே ஒரு துளியும் உன்மேல் வைத்த அன்பு குறையாதுன்னு இருந்தா அது அந்த உறவுக்கு வெற்றி, ஆனால் அப்படி இருக்கபோறவங்களின் மனசுக்கு ரணம். அப்படி இருக்கறது பைத்தியக்காரத்தனம்னு அறிவு அறிவுத்திக்கிட்டே இருக்கும், மனசு கேட்காமல் அப்படியே இருந்து மேலும் மேலும் வலிகளை சுமக்கும்.

ஒரு இலக்கைவெச்சிக்கிட்டு உறவை வளர்ப்பது சரியா? உறவுகள் தானே வளரவேண்டாமா? நாமா இப்படி இருக்கவேண்டும்னு நினைச்சு வளர்த்தால் அது செயற்கையா இருக்காதா? பொதுவா யாரிடமும் எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாதுன்னு வேணும்னா இருக்கலாம். ஆனா ஒரு உறவு இப்படி இருக்கவேணும்ன்னு முன்கூட்டியே தீர்மானிச்சிட்டு செயல்பட்டால் அதில் வெறும் செயற்கைதனம்தானே மிஞ்சும். இதெல்லாம் தன்னால நிகழனும். அப்படி நிகழ்ந்து அந்த உறவின் வளர்ச்சியில் திளைக்கும்போது எந்தவித எதிர்ப்பார்ப்புகளும் இருக்காது. ஏன்னா அங்க எல்லா எதிர்ப்பார்ப்புகளும் எதிர்ப்பார்க்கிறேன் என்ற யோசனை வருவதுக்கு முன்னாடியே நிறைவேற்றப்பட்டிருக்கலாம்.

அப்படி ஒரு உறவு அவ்வளவு எளிதானதல்லன்னே சொல்லலாம் ஆனால் சாத்தியமில்லைனு சொல்லமுடியாதே. அன்பில் எதுதான் சாத்தியமில்லை, நிச்சயம் சாத்தியமாகலாம். எதிர்ப்பார்க்கறேனா இல்லையான்ற நெனப்பே அங்க எழாது. எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாதுன்னு நினைப்பதே ஒருவித எதிர்ப்பார்ப்புதானே. அப்படி ஒரு சிந்தனையே வராமல் ஆழமா அன்புசெலுத்தக்கூடும், நமக்கு மிகவும் பிடித்துபோனவர்களிடம் அப்படிபட்ட அன்பு அமையக்கூடும். பெரும்பாலும் ரத்த பந்தங்களில் மிக இயல்பாகவே வந்துவிடலாம் இது போன்ற உணர்வுகள். பிறரிடத்தும் சாத்தியமாகும், நம் மனசை எப்படி பழக்கறோமோ அதை பழக்கும் விதத்தில்தான் இருக்கு அதெல்லாம். அனால் அப்படி பழக்கிவிடாமல் இருப்பதே நலம். ஏன்னா அடுத்தவர் அதை புரிந்துகொண்டால் நல்லது இல்லைனா வீணான நிராகரிப்பில் சிக்கிக்கொண்டு அதைவிடுத்து வெளியிலும் வராமல் மனசு உள்ளுக்குள்ளேயே அழும்.

– நதியலை

Read Full Post »

காற்றிற்கு
——————–

காற்றிற்கு
வாடைக் காற்று
புயல் காற்று
மழைக் காற்று
அனல் காற்று
கடல் காற்று
என்றெல்லாம் பெயர்கள்

எந்தப் பெயரும் இல்லாமல்
எதையும் கடந்து செல்ல முடியாமல்
கொஞ்சம் காற்றுகள் இருக்கின்றன
நமது உலகில்

அவை உயிரூட்டப் போராடுகின்றன
கண்ணாடி பாட்டில்களில்
அடைக்கப்பட்டிருக்கும்
வண்டுகளுக்கு

– மனுஷ்ய புத்திரன் (மணலின் கதை)

அடடா அந்தக் காற்றும் வண்டும் அதிஷ்டசாலிகள் ஒன்றுக்கொன்று ஆதரவா வாய்ச்சிருக்கே. ஆனா காற்றே இல்லாமல் அடைப்பட்டு மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் வண்டுகள் எத்தனை, உயிரூட்ட சக்தியிருந்தும் ஒன்றுமே செய்யமுடியாமல் வெறுமையோடு தன்னதனியா அடைப்பட்டிருக்கும் காற்றுகள் எத்தனை, ஓருயிரே காற்றாகவும் வண்டாகவும் தனக்குத்தானே உயிரூட்டி வாழ்ந்துக்கொண்டிருக்கும் உன்னதங்கள் எத்தனை….

– நதியலை

Read Full Post »

மனுஷ்யபுத்திரனின் ‘மணலின் கதை’ தொகுப்பிலிருந்து…

இன்றென்னைக்கொல்வதெல்லாம்
——————————
உதறி விடுவித்துக்கொண்ட
கைகளை நான் முத்தமிடக் குனிகையில்
தொண்டையை அடைத்ததில்லை
அவமானத்தின் எந்தக்கசப்பும்

நிராகரிப்பின்
நெருப்பை எடுத்து
ஏற்றி வைப்பேன்
வீட்டின் நடுவே ஒரு விளக்கை

திரும்பிப் பாராமல்
போனவர்களின் கால் தடம் பற்றி
தொடர்ந்து போவேன்
ஒரு சந்தேகமுமின்றி

வெளியேறச் சொன்னவர்களிடம்
நாளை மீண்டும் சந்திப்போம்
என்பதன்றி வேறொன்றும்
சொல்லத் தோன்றியதில்லை

இன்று வாழ்ந்து கொண்டிருப்பதில்
எவ்வளவு பனி
எவ்வளவு நட்சத்திரங்கள்
எவ்வளவு தனிமை
எவ்வளவு இயலாமைகள்
ஒரு வருத்தமில்லை
ஒரு துளிக்கண்ணீரில்லை

இன்றென்னைக்
கொல்வதெல்லாம்
உன்
கருணையிலிருந்து பிறக்கும்
ஒரு கனிவு

ஒரு
கடமையிலிருந்து
உதிக்கும்
உன் பரிவு

– மனுஷ்ய புத்திரன்

Read Full Post »

மனுஷ்ய புத்திரனின் ‘நீராலானது’ தொகுப்பில் உன்னோடிருத்தல், தன்னோடிருத்தல், பிறறோடிருத்தல்னு மூன்று பகுதிகளா கவிதைகள் பிரிக்கப்பட்டிருக்கு. அருமையான தொகுப்பு. அதிலிருந்து கவிதைகள் சில…

ஓர் அற்புதத்திற்காக
———————
ஓர் அற்புதத்திற்காக காத்திருக்கிறேன்
அது நிகழவேயில்லை
அற்புதங்கள் இனி நிகழாதென்றே
சகுனங்களும் சொல்கின்றன

ஆனால்
நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது
அற்புதத்திற்கு முந்தைய ஒரு கணம்

இன்னும் ஒரே ஒரு கணம்தான்
என்று சொல்லிக்கொண்டேயிருக்கும்
ஒரு கணம்

இழந்த காதல்
————–
நின்று சலித்த
என் தோட்டத்து மரமொன்று
பின்னிரவில்
என் பிரியத்தின் இதம் வேண்டி
மெல்லப் படியேறி வந்தது

மரங்கள் நடப்பது
சாத்தியமில்லையென அறிந்திருந்ததால்
ஒரு விபரீதக் கனவென்று திகைத்து
வரவேற்கத் தாமதித்துவிட்டேன்

ஆயிரம்
இலை நுனிகளால்
வேர் நுனிகளால்
புறக்கணிப்பின் துக்கம் ததும்பி
படியிறங்கிப் போகிறது
என் தோட்டத்து மரம்

கசங்குதல்
———–
இன்று
உன்னுடையதுபோலவே இல்லை
உன் பிரியம்

என்றாலும்
நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
நீண்ட நாட்களின்
நீண்ட வெயிலில்
ஓர் உணர்வு
எப்படி கசங்குகிறதென்று

ஒரு மலர் கசங்குவதுபோலவோ
ஒரு துணி கசங்குவதுபோலவோ
ஒரு காகிதம் கசங்குவதுபோலவோ
இல்லை அது

விடுவிப்பிற்குப் பின்
——————–
இத்தோடு
என்னைப்பற்றிய
குற்ற உணர்வுகள் அனைத்திலிருந்தும்
உன்னை விடுவித்துவிட்டேன்

ஆனால்
அது ஏன்
ஒரு வெறுப்பைப்போல
ஒரு பிரிவைப்போல
ஒரு புறக்கணிப்பைப்போல
காட்சியளிக்கிறது?

என்னைப் பற்றிய வருத்தங்கள்
——————————-
நான் உனக்காக
விட்டுச் செல்லும்
சிறந்த பரிசு
என்னைப் பற்றிய
இந்த வருத்தங்கள்

என்னைப் பற்றிய
வருத்தங்கள்
விநோதக் கதைகள் போல
என்னிடம் வருகின்றன
கபடமற்ற ஒரு குழந்தையாக
அவற்றைக் கேட்கிறேன்

என்னைப் பற்றிய வருத்தங்களை
நான் உருவாக்கவில்லை
எனக்கு முன்பாகவே
வெகுகாலமாக
அவை நிலவி வருகின்றன

என்னைப் பற்றிய
உன் வருத்தங்களை
மறுத்து
ஒரு சொல்லும் கூற மாட்டேன்
ஒரு இரகசிய நகக்குறி போல
நம் அந்தரங்கங்களில் அவை வலிக்கட்டும்

என்னைப் பற்றிய
வருத்தங்கள் மட்டும்
இல்லாமல் போனால்
இவ்வளவு காதலை
இவ்வளவு கண்ணீரை
எங்கு போய் மறைப்பாய்

Read Full Post »