Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘J.M.Coetzee’ Category

நமது தேவைக்கேற்ப உடல் இயங்க இயலாமல் போகும் போது அது எத்தனை சுமையானதாக மாறிவிடுகின்றது. அத்தகைய நேரங்களில் பசி தூக்கமின்மை போன்றவற்றை காட்டிலும் மிகுந்த சிரமத்திற்குள்ளாக்குவது இயற்கை உபாதைகளை சமாளிப்பது தான். கட்டுப்படுத்த இயலாமல் கழிவறைக்கு செல்லும் வழியிலோ அல்லது இருக்குமிடத்திலோ சிறுநீர்/மலம் கழித்துவிடுவது செயலிழந்த வாழ்வின் பெரும்பழி. இத்தகைய அடிப்படை செயல்களுக்கும் கூட பிறரை சார்ந்து வாழும் மனிதனின் முக்கிய தேவை பிறரிடமிருந்து பெறப்படும் சிறிய அக்கறையும் சேவையுமாகவே இருக்கக்கூடும். ஆனால் அந்நிலையிலும் தனது காதல் மட்டுமே பிரதானமாக இருக்கின்றது J.M.Coetzeeயின் The Slow Man நாவலின் கதாநாயகனுக்கு.

அறுபதுவயதான பால் ரேமண்ட் தனது சைக்கிளில் வழக்கமாகச் செல்லும் சாலையில் பயணிக்கும் போது விபத்துக்குள்ளாகி தனது கால்களை இழக்கின்றார். விபத்திற்கு பிறகு செயற்கைக் கால்களை விரும்பாத அவரது வாழ்வு சவால்களுடனும் சிக்கல்களுடனும் தவறவிட்ட பலவற்றை நினைவுபடுத்தியபடி நகர்கின்றது. யாருமற்ற தனது வீடும் கூட விபத்திற்கு பிறகு அந்நியப்படுகின்றது.

ஒன்றிரண்டு பணியாட்களுக்கு பிறகு இவரை பார்த்துக்கொள்ளவென நியமிக்கப்படும் மரிஜானாவின் நேர்த்தியான சேவைகள் அவருக்குப் பிடித்தவிதமாகவும் திருப்தியாகவும் அமைகின்றது. முகம் கோணாமல் தனது தேவைகளை அறிந்து தன்னை கூச்சப்படவைக்காத அளவிற்கு பக்குவமாக செயல்படும் அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிடுகின்றார். அவள் குடும்பம் பற்றி அறிந்துக்கொள்கின்றார். அவளது குழந்தைகளை தனது குழந்தைகளாக பாவிக்கவும் எண்ணுகின்றார். அவளின் மகனுக்கு நல்ல கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொள்ள பண உதவி முழுவதும் தானே ஏற்றுக்கொள்வதாக கூறுகின்றார். அதற்கான காரணத்தை அவள் கேட்க, தன் காதலை வெளிப்படுத்துகின்றார். அவள் வேலைக்கு வருவதை தற்காலிகமாக நிறுத்துகிறாள்.

ரேமண்ட்டை விட கிட்டதட்ட பத்து வயது மூத்த எழுத்தாளர் எலிசபத் காஸ்டெல்லோ தீடீரென்று எந்த முன்னறிமுகமும் இல்லாமல் அவர் வீட்டிற்கு வருகின்றார். ரேமண்டின் விருப்பத்திற்கு மாறாக அவர் வீட்டிலேயே தங்கி விடுகின்றார். இவரை பற்றி அனைத்து தகவல்களையும் அறிந்து வைத்திருக்கின்றார் அந்த எழுத்தாளர். தான் அவரைத் தேடி வரவில்லையென்றும் ரேமண்ட் தான் அவரை நாடி வந்ததாகவும் கூறுகிறார். 2003ல் வெளியான இவருடைய முந்தைய நாவல் எலிசபத் காஸ்டெலொவை வாசித்திருந்தால் இக்கதாபாத்திரத்தை இன்னும் சரியாக உள்வாங்கியிருந்திருக்க முடியும்.

இயல்பு வாழ்வின் சீர்குலைவு, புது உறவு, புதிர் மனிதர்களென விபத்திற்கு பிறகு வாழ்கையே மாறிவிட்ட பால் ரேமண்ட், அவருடைய திருமண வாழ்கை, புகைப்பட கலையில் ஆர்வம், அது நிமித்தமான பணி குறிப்புகள், புதிரான எலிசபத் காஸ்டெலோ, காதலை சொன்ன பிறகு இடையிடையே சில நாட்கள் மட்டும் பணிக்கு வந்து போகும் மரிஜானா, குடும்ப நலனுக்காக இத்தகைய வேலைகளை மேற்கொள்ளும்போது அவள் சந்திக்க நேரிடும் சிக்கல்கள், எளிமையான மரிஜானாவின் கணவர், அவர்களது காதல் திருமண வாழ்வு, அவர்களின் மூன்று குழந்தைகளென விரியும் இக்கதை முதல் வாசிப்பில் சாதாரணமாகத் தோன்றினாலும் நிதானமாக ஒவ்வொரு கதாபாத்திரத்தை பற்றி சிந்திக்கும் போதும் சில வரிகளை நினைவுகூறும் போதும் உள்மனவோட்டங்களை நுணுக்கமாக எழுத்துகளில் வடிக்கும் Coetzeeயின் நேர்த்தியை வியக்காமல் இருக்கமுடியவில்லை.

சில உணர்வுகளை சொற்களை கொண்டு சொல்வதைவிட காட்சி படுத்தும் போது அதன் பாதிப்பு அதிகமானதாக இருக்கக்கூடும் என்றே தோன்றும். அத்தகைய உணர்வுகளைக் கூட Coetzeeயால் சொற்களை கொண்டு அழுத்தமாக நிறப்பிவிட முடிகின்றது. சிலகாரணங்களுக்காக மரிஜானாவின் பதின்மவயது மகன் ரேமண்ட் வீட்டில் சிலகாலம் தங்கிச்செல்கின்றான். வீட்டில் விட்டுச்சென்ற பொருட்களைத் திரும்ப எடுக்க வரும்போது ரேமண்ட் கழிவறைக்கு செல்லும் முன்பே தன் உடையிலேயே சிறுநீர் கழித்துவிடுகின்றார். அவன்முன்னிலையில் இப்படி நடந்துவிட்டதே என்று அவர் கழிவிறக்கம் கொள்வதையும், மரிஜானாவின் மகன் எவ்வித பதட்டமோ முகச்சுளிப்போ இல்லாமல் வெகு சாதாரணமாக பார்வையை தவிர்க்க வேண்டிய உறுப்புகளிலிருந்து தவிர்த்து அவர் உடைகளை மாற்றி படுக்கையை சரிசெய்து படுக்கவைத்துச்செல்வதாக சொல்லும் ஒவ்வொரு வரியும் அற்புதமாக சித்தரித்திருக்கின்றார் Coetzee. அதே போல் குளியளறையில் குளிக்கும் போது தவறி விழுந்து, வெகுநேரம் அங்கேயே தண்ணீரில் கிடந்து பின் தன் உடலை தரையோடு நகர்த்தி வந்து முதலில் மரிஜானாவை தொலைபேசி அவளை வரச்சொல்லி அவள் வருகைக்காக காத்திருக்கும் தருணங்கள் மறக்கமுடியாதவை.

நோபல் பரிசுக்கு பிறகு எழுதப்பட்ட இந்நாவலில் Master of Petersburg மற்றும் Disgrace நாவல்கள் ஏற்படுத்திய பிரமிப்பு இல்லை என்றாலும் இப்புத்தகமும் நல்ல வாசிப்பனுபவத்தையே தந்தது. தேவைகளில் தெளிவுள்ள போது தீர்மானிப்பது எளிதாகவும் தீர்மானங்கள் திடமானதாகவும் ஆகிவிடுகின்றன என்றே தோன்றியது நாவலை முடித்தபோது.

இந்நாவலல இணையத்தில் வாசிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கு வாசிக்கலாம்.

Coetzeeயின் மற்ற புத்தகங்களான Waiting for Barbarians 1980 , Age of Iron 1990, Life & Times of Michael K 1983, The Master of Petersburg 1994 போன்ற நாவல்களும் இத்தளத்தில் வாசிக்க கிடைக்கின்றன.

Read Full Post »

Title : Disgrace
Author : J.M.Coetzee
Pages : 220
Year : 1999

First UK edition cover

புக்கர் பரிசை வென்ற இந்நாவலின் கதை தென்னாப்ரிக்காவில் நிகழ்கிறது.  பேராசிரியராக பணிப்புரியும் 52 வயதான டேவிட் லூரி, இரண்டு முறை விவாகரத்தாகிபின் தனித்து வாழ்கிறார்.  கல்லூரியில் தன்வகுப்பில் பயிலும் மாணவியிடத்து காதல்வயப்பட்டு அவளுடன் உறவுகொள்கிறார்.  இதனை அறிந்த அவள் பெற்றோர்கள் கல்லூரி நிர்வாகிகளிடம் புகார் கொடுக்க, டேவிட் லூரி வேலையிலிருந்து விலகும் சூழல் உருவாகிறது.  தன்செயலுக்காக வருந்தவில்லையெனினும் தற்காத்துக்கொள்ளவும் எந்த முயற்சியும் எடுக்காமல் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டு வெளியேறுகிறார். 

நாட்டுப்புறத்தில் சிறிய பண்ணை வைத்திருக்கும் தன் மகளிடம் சிறிது காலம் தங்கிவரச் செல்கிறார்.  நகர்புறங்களின் வாசங்களுக்குச் சற்றும் சம்பந்தமேயல்லாது விலங்குகளுடனும், விவசாயத்துடனும் கழியும் தன் மகளின் வாழ்வைக் கண்டு கவலையுறுகிறார்.  அவ்விடத்தில் தங்கும் டேவிட் லூரியின் வாழ்க்கை எவ்வாறு தொடர்கிறது, அதனால் அவர் மனதில் ஏற்படும் மாற்றங்களென விரிகிறது இக்கதை. 

ஆசிரியர் தன் அற்புத நடையில் எளிமையாகவும் அதே சமயம் அழுத்தமிகுந்த வாக்கிய அமைப்பிலும், டேவிட் லூரியை கதையின் ஆரம்பத்தில் ஒரு சராசரி மனிதனாக விவரித்து, தன் மகளுடன் செலவழிக்கும் நாட்களில் பாசமிகு தந்தையாகவும், நாட்டுப்புற வாழ்வோட தன்னை சகஜப்படுத்திக்கொள்வதையும், அப்பகுதியிலுள்ள மிருகமருத்துவமனையில் தன்னார்வலச்சேவகராக பணிபுரியும் நேசமிகுந்தவராகவும், கல்லூரி மாணவியின் பெற்றோர்களை சில மாதங்களுக்கு பிறகு சென்று சந்தித்து மன்னிப்புக்கோறும் மனிதாபிமானமிக்கவராகவும், இறுதியில் தன் வாழ்க்கை முறையையே மகளுக்காக மாற்றிக்கொள்ளும் பரிதாபத்திற்குரியவருமாக விவரித்திருக்கிறார்.
 
தன் மகளுக்கு வேறொரு பாதுகாப்பான ஊரில் அவளின் வாழ்கையை அமைத்துத்தருவதாக டேவிட் லூரி பலமுறை கூறியும், இதுதான் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையெனில் இங்கேயே இருந்து அவதியுற்று அதை ஏற்று வாழ்வதுதான் வாழ்க்கையென பிடிவாதமாக இருக்கும் மகள், சில துயரங்களுக்கு பிறகும் அப்படி இருப்பதற்காக சொல்லும் காரணங்கள் அத்தனை வலுவானதாக இல்லையெனினும் அவளின் நிலை மனதை நெருடுகிறது.  நல்லவேலையாக தனித்து வாழாது எத்தனை வயதானபின்பும் நம் சமுதாயத்தில் பெரும்பாலானோர் உறவுகளைச் சார்ந்தே வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்ற ஆசுவாசம் புத்தகத்தை வாசித்து முடிக்கையில் பெருமிதத்தோடு தலைதூக்குகிறது.  இறுதியில் செத்த விலங்கினிடத்தும் நேசத்தோடு அன்புசெலுத்தும் டேவிட் லூரி, வாழ்க்கையை நிபந்தனைகளற்று ரசிக்கப்படுவதாகவும் ஏற்றுக்கொள்ளப்படுவதாவும் முடிக்கப்பட்டிருப்பது அபாரம். 

இந்நாவலில் சில வாக்கியங்கள் நேரே சென்று உள்மனதை தாக்குகிறது, அவற்றில் சில இங்கு…

“The irony does not escape him – that the one who comes to teach learns the keenest of lessons, while those who come to learn learn nothing.”

“No emotion, or none but the deepest, the most unguessed-at : a ground bass of contentedness like the hum of traffic that lulls the city – dwells to sleep, or like the silence of the night to country folk.” 

“In my experience, poetry speaks to you either at first sight or not at all.  A flash of revelation and a flash of response like lightning, like falling in love.”

“Yet we cannot live our daily lives in realm of pure ideas, cocooned from sense experience.  The question is not, How can we keep the imagination pure, protected from the onslaughts of reality?  The question has to be, Can we find a way for the two to co-exist?” 

“Yes, When all else fails, philosophize.”

“The perfective, signifying an action carried through to its conclusion.  How far away it all seems! I live, I have lived, I lived.”

“Watchfulness became the watch word : the watchfulness of all over all.  Purgation was replaced by the purge.” 

“Evening falls.  They are not hungry, but they eat.  Eating is a ritual, and rituals make things easier.” 

“Should he mourn?  It is proper to mourn the death of beings who do not practice mourning among themselves?  Looking into his heart, he can find only a vague sadness.” 

“No matter, he thinks : let the dead bury their dead.” 

“One gets used to things getting harder; One ceases to be surprised that what used to be as hard as hard can be grows harder yet.”

இரண்டுமுறை புக்கர் பரிசை வென்ற முதல் நபர் J.M.Coetzee, 2003ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசும் பெற்றார். J.M.Coetzeeயின் பிற நாவல்கள் (நன்றி-விக்கிபீடியா) :  
Dusklands (1974)
In the Heart of the Country (1977)
Waiting for the Barbarians (1980)
Life & Times of Michael K (1983)
Foe (1986)
Age of Iron (1990)
The Master of Petersburg (1994)
Elizabeth Costello (2003)
Slow Man (2005)
Diary of a Bad Year (2007)

–  நதியலை

Read Full Post »