Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Nicholas Sparks’ Category

Title : Message in a bottle (Novel)
Author : Nicholas Sparks
Pages : 411

ஒரு குழுமத்தில் இந்நாவலை பற்றி குறிப்பிட்ட போது குறித்து வைத்து கடைகளில் தேடி, உடனே கிடைத்தும் உடனே வாங்கியும் உடனே படிக்க முடியாத நிலையில் ஆறு மாதம் கழித்து இப்போது படித்து முடிக்க முடிந்தது. வெகு சாதாரணமாக ஆரம்பித்து இடையில் சற்று விறுவிறுவென்று நகர்ந்து அற்புத்தமாக முடிக்கப்பட்ட நாவல்.

ஆழமாக காதலித்து, காதலியின் மறைவுக்கு பின் அவதியுறும் கதாநாயகன் கார்ரெட் (Garret) பற்றி வாசிக்கும் போது நெகிழ்ச்சியூட்டுகிறது. அவளுடன் வாழ்ந்த நாட்களை நினைத்து தவித்து உணர்ச்சிகள் முட்டும்போது அதை வார்த்தைகளில் வடித்து பின் அதை ஒரு கோப்பையில் அடைத்து நடுக்கடலில் வீசி எறிகிறான்.

அப்படி எழுதிய ஒரு கடிதம் கதாநாயகி தெரேசாவின் கையில் சிக்க அந்தக் கடிதம் அவளை மிகவும் பாதிக்கிறது. ஆனால் கதையின் ஆரம்பத்தில் வரும் இந்த முதல் கடிதம் வாசிக்கும் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தவில்லை. தனிமையில் வாடும் ஒருவனின் செஞ்சக் குமுறல்கள் என்பதைத்தவிற அதில் அத்தனை ஆழம் இல்லை.

ஆனால் விவாகரத்தாகி மூன்று வருடங்களாக வெறுமையில் தன் பன்னிரெண்டு வயது மகனோடு தனியாக வாழ்ந்துக்கொண்டிருக்கும் தெரேசாவை அது வெகுவாக பாதிக்கிறது. அதிர்ச்சியூட்டும் வகையில் மற்றொரு கடிதம் வேறொருவர் மூலமாக அவளை வந்தடைகிறது. இதில் மிகவும் ஈர்க்கப்பட்டு அதை எழுதியவனை பற்றி வேறு விவரங்கள் கிடைக்கிறதா என்று தேடுகிறாள். மேலும்மொரு கடிதம் கிடைக்கிறது.

இந்த மூன்று கடிதங்களையும் படித்து பின் அவனை தேடிப்போய் சந்திக்கிறாள். மறைந்த காதலியின் நினைவில் வாடும் கார்ரெட் இவளை காதலிப்பானா, வெகு தொலைவில் வெவ்வேறு ஊரில் வசிக்கும் இவர்கள் ஒன்று சேருவார்களா என்பதுதான் கதை. இதில் கடலை பற்றி அத்தனை விவரங்கள் இல்லையெனினும் கார்ரெட்டுடன் தெரேசா முதல் முறையாக செல்லும் கடல் பயணத்தில் ‘தண்ணீர் தேசம்’ நினைவிற்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை.

வழக்கமான காதல் கதைதானே என்று வாசித்துக் கொண்டிருக்கும்போது எதிர்ப்பாராதவிதமாக கதை முடித்தவிதம் அருமை. கதையில் வரும் கடைசிக்கடிதத்தை வாசிக்கும் போது கண்களில் கனக்கிறது கண்ணீர்.

கதையின் மையக்கரு ‘தனக்கென்று ஒரு துணையை தேடிக்கொள்ளவேண்டும், இழந்ததை நினைத்து தனிமையில் வாடுவது நியாயமில்லை’ என்பதையே கதையின் ஆரம்பத்தில் இருந்து முடிவுவரை அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. இக்கதை 1999 ஆம் ஆண்டு திரைப்படமாகவும் வெளிவந்திருக்கிறது.

Nicholas Sparksன் மற்றுமொரு சிறந்த படைப்பு – The Note Book

– நதியலை

Read Full Post »