Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

அன்றாட அலுவல்கள் நெறிக்கும் அவசரச் சூழல்களில் உழன்றுக் கொண்டிருக்கும் பலருக்கும் எதிர்கொள்ள வேண்டிய பணிகளில் மட்டுமே கவனமிருக்க கடந்தவைகள் கடந்தவையாகவே நிலைத்துவிடலாம். ஓடிக்கடக்கும் காலங்களில் தற்செயலாக சில தினங்கள் சிறு அவகாசம் கிடைத்தால் தன் வாழ்நாளில் காலம் ஆசிர்வதித்த அல்லது நிராகரித்த பல கணங்கள் நினைவிலிருந்து துளிர்க்கும். அத்தகைய நினைவுகளில் மூழ்கி புதிய பரிமாணங்களோடு தொடரும் நினைவோட்டத்தில் எல்லாவித உணர்வுகளும் கலந்திருக்கக்கூடும். ஓய்விற்கு பிறகு தொடரவேண்டிய ஓட்டத்தில் இவ்வுணர்வுகள் தடங்கள்களாக மாறும் அபாயங்களும் உண்டு.

கஸோ இஷிகுரோ எழுதிய The Remains of the day முதிர்ந்த வயதில் அபூர்வமாக தனக்கு கிடைத்த ஆறு நாட்கள் ஓய்வில் அவர் மேற்கொள்ளும் பயணமும், பயணத்தினூடாக அவர் சந்திக்கும் இடங்களும், மனிதர்களும், அனுபவங்களும் கொண்டும் நகரும் நிகழினூடே கடந்தவைகளும் கதையாக பகிரப்பட்டிருக்கின்றன. வேலை வேலை என்று தன் காலம் அனைத்தையும் யாரோ ஒருவருக்காக உழைத்து கழித்துவிட்ட பிறகும் எஜமானருக்கு விஸ்வாசமாக இருந்ததிற்காக பெருமிதம் கொள்ளும் அந்த முதியவரின் மனநிலையை வாசிக்க சற்று ஆயாசமாகவே இருந்தது. இன்றைய சூழலுக்கு இவையெல்லாம் அந்நியபட்டே நிற்கின்றன.

1989 ஆண்டு புக்கர் பரிசை வென்ற இந்நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. புத்தகத்தை விட திரைக்கதை இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்றே தோன்றுகின்றது. சொல்லப்படாதவைகளை எழுத்தின் வாயிலாக உணர்ந்துக்கொள்வதைவிட திரையின் வாயிலாக உணர்ந்துகொள்வது இன்னும் அதிக அழுத்தத்தை தரக்கூடும். இப்புத்தகம் அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றபோதிலும் வாசிப்பை பாதியில் நிறுத்திவிடத் தோன்றவில்லை. ‘கைட் ரன்னர்’ புத்தகத்தின் பக்கக்குறி ஆரம்ப சில பக்கங்களில் இருந்ததை பார்த்த தோழி இதை இன்னும் வாசிக்கவில்லையா என்றதற்கு படம் பார்த்துவிட்டதால் வாசிக்கப்போவதில்லையென்றேன். இது தவறான அனுகுமுறை என்றும் முதலில் புத்தகத்தை வாசித்துவிட்டு பிறகு அதை திரைப்படமாகவும் பார்ப்பது நல்ல அனுபவமாக இருக்குமென்றாள். இம்முறை இதை நடைமுறைபடுத்திப் பார்க்கவேண்டும்.

இங்கிலாந்தில் போர் சூழலுக்கு முந்தைய காலகட்டங்களில் நிகழும் இக்கதை பல வித அரசியல் கூறுகளோடும், தனிமனித நேர்மை, விஸ்வாசம், கடமையுணர்ச்சி என பலவற்றை தொட்டுச்செல்வதோடு, எது தன்மானம் என்பதையும் அதன் வரையரைகளையும் கால மாற்றத்திற்கும் மனித குணங்களுக்குமேற்ப அது வித்தியாசப்படுவதையும் கதைசொல்லியின் வாயிலாக விரிவாக பேசுகின்றது. பல ஆண்டுகள் கழித்து தன்னுடன் வேலை செய்த பெண்மணியை பார்க்க பயணிக்கும் ஆறு நாட்களை ஒவ்வொரு நாளையும் ஒரு பகுதியாக காலை, மதியம், மாலை என விவரித்து கொண்டே வந்து அவளை சந்தித்த ஐந்தாம் நாளை மட்டும் விழுங்கிவிட்ட போக்கு அருமையாக இருந்தது. நான்காம் நாளுக்கு பிறகு ஆறாவது நாளில் அவளுடனான சந்திப்பும் உரையாடலும் ஒரு நினைவாகவே தொடரும்போது உணரப்படாதவைகளும் உணர்த்தப்படாதவைகளும் என்றென்றைக்கும் அவ்வாறே நீடித்துவிடுவதே சில சந்தர்ப்பங்களில் நல்லதென்றே தோன்றியது. காலம் கடந்து அறியப்படும்போது ‘after all, there’s no turning back the clock now’ என்ற சப்பைக்கட்டை மட்டுமே ஆறுதலுக்காக சொல்லிக்கொள்ள முடியும்.

2005ல் வெளியான இவரது ஆறவது நாவலான ‘Never Let me Go’ ‘The Remains of the day’ விட அதிகமாகவே பிடித்திருந்தது. கிளோனிங்கால் உருவான மனித உயிர்களை பற்றிய அறிவியல் புனைவு இது. எந்த ஒரு அறிவியல் விவரங்களுக்குள் நுழையாமலும் அதே சமயம் அவர்கள் சந்திக்க நேரிடும் அபாயங்களை நுட்பமாக விளக்கியும் அதனூடே முக்கோணக்காதல் கதையை அறிவியலோடு கலந்து அளித்திருக்கின்றார் கஸோ இஷிகுரோ. இதிலும் கதை சொல்லியான ஒரு க்ளோனின் வாயிலாக அவர்களின் சிறுவயது முதல் சராசரி குழந்தைகள் போல் அவர்கள் வளர்க்கப்படும் விதத்திலிருந்து துவங்கி படிப்படியாக வளர்ந்து இறுதியில் தங்கள் உறுப்புகளை தானம் செய்து மடிகின்றவரை அமைதியான நதியைப்போல நகர்கின்றது இக்கதை.

இவர்களின் உருவாக்கம் பற்றியோ அல்லது எப்படி மரணிக்கின்றார்கள் என்பது பற்றியோ பேசாமல் இவர்களின் இடைப்பட்ட காலத்தை மட்டுமே பேசியிருக்கின்றது. இவர்களின் மரணத்திற்கு கூட death என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ‘complete’ என்றே சொல்லியிருக்கின்றார். அதே போல் ‘deferral’, ‘carer’, ‘possible’ போன்ற வார்த்தைகளும் கூட வேறு பரிமாணங்கள் கொண்டவை. அவர்களின் உறுப்புகளை தானம் கொடுப்பதற்காகவே அவர்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றார்கள், சிலருக்கு ஒன்றிரண்டு தானங்கள் வரையே தாக்குப்பிடிக்க முடியும், சிலருக்கு நான்கு வரை கூட கொடுக்க இயலும், அவர்களால் உடல் உறவு கொள்ளமுடியும் ஆனால் பிள்ளைகளை பெற முடியாது போன்ற தகவல்கள் அவர்களின் பருவத்திற்கேற்ப படிப்படியாக அவர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் சில செய்திகள் வதந்திகளாகவும், சில கற்பனைகளாகவும் அவர்களிடம் உலாவுகின்றன. கதையின் முற்பகுதி விளையாட்டாக நகர பிற்பகுதி கதையின் ஆரம்பத்தில் நிலவிய பல புதிர்களுக்கு விடைகளாகமாறி அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இவ்விறு கதைகளிலுமே பல ஆண்டுகள் கடந்த பிறகு நடந்த சம்பவங்களை கதை சொல்லி திரும்பிப்பார்ப்பதாகவே அமைத்திருக்கின்றார் இஷிகுரோ. கதைசொல்லியின் நினைவிலிருந்து சொல்லப்படும் சம்பவங்கள் எவ்வித வரையரைகளுக்கு உட்படாமலும் அதே சமயம் எல்லாவித உணர்வுகளுக்கு உட்பட்டும் எழுதுவது விருப்பமானதாக இருக்கின்றதென்கின்றார். Remains of the day கதாபாத்திரத்தின் நினைவுகள் சில முக்கிய நிகழ்வுகளை, தவறுகளை, தவறவிட்ட தருணங்களை, குற்ற உணர்வுகளை நினைவு கூறுகின்றது. ஆனால் Never let me go கதாபாத்திரத்தின் நினைவுக்கூறல் மிகுந்த கருணைமிக்கவை. அந்நினைவுகள் அவளுக்கு ஒரு ஆறுதளாக நிம்மதியாக தேற்றுதலாக அமைகின்றது. தனக்கு நெருக்கமாக தன்னுடனிருந்தவர்கள் ஒவ்வொருவராக மடிந்துபோக தன்முன் இருக்கும் வெறுமை உலகில் அவளுக்கு துணையாக இருப்பது அந்நினைவுகளே என்கிறார்.

Never let me go வின் கதை களம் மிக நுட்பமானதும் முக்கியமானதும் கூட. ஆனால் அவை மிக மேலோட்டமாகவே கையாளப்பட்டிருக்கின்றது. கதைசொல்லியின் வாயிலாக விரியும் இக்கதை அவள் அறிந்த தெரிந்துக்கொண்ட சிறு பகுதியை மட்டுமே கதையாக உருவாக்கியிருக்கின்றது. இவர்களை உருவாக்கும் அமைப்பை பற்றியோ அவற்றின் செய்லபாட்டு முறைகளோ பேசப்படவில்லை. உறுப்புகளின் தானத்தை பற்றி மீண்டும் மீண்டும் பேசப்பட்டாலும் அவைகளின் outline மட்டுமே கூறப்படுகின்றது. சிகிச்சைகளும் அதில் ஏற்படும் சிக்கல்களும் ஓரிரு வரிகளில் அடங்கிவிடுகின்றன.

‘Times’ தேர்வு செய்த நூறு சிறந்த நாவல்களில் ‘Never let me go’ இடம்பெற்றுள்ளது. 2005 புக்கர் தேர்வு பட்டியலில் இந்நாவலும் இருந்தது. ஆனால் தற்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் John Banville ‘The Sea’ நாவல் புக்கர் பரிசை வென்றது. கடந்த ஆண்டு ‘Never Let me go’ திரைப்படமாகவும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இஷிகுரோவின் பிற படைப்புகள் A Pale view of hills, An artist of the floating world, The Unconsoled & When we were orphans. 2000 ஆம் ஆண்டு புக்கர் பரிசு தேர்வு பட்டியலில் When we were orphans இருந்தது. இஷிகுரோ இரு படங்களுக்கு திரைகதையும் எழுதியிருக்கின்றார் – The Saddest Music in the World & The White Countess. ஆறு நாவல்களுக்கு பிறகு 2009ல் Nocturnes சிறுகதை தொகுப்பு வெளியானது. இதிலுள்ள ஐந்து சிறுகதைகளுமே இசையுடனும் இரவுடனும் தொடர்புடையது.

நன்றி : 361˚ சிற்றிதழ்

Gao Xingjian Short Stories – 1

சீன எழுத்தாளரான கௌ ஷிங்ஜென் (Gao Xingjian) இலக்கியத்திற்கான நோபல் பரிசை 2000ஆம் ஆண்டு வென்றவர். இவர் நாவல் ஆசிரியர் மட்டுமல்லாது கட்டுரையாளர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், இயக்குனர், விமர்சகர் மற்றும் ஓவியரும் கூட. இவருடைய நாடகங்கள் இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஓவியங்கள் சர்வதேச கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ளன.  தனது புத்தக அட்டைப்படங்களுக்கு தனது ஓவியங்களையே பயன்படுத்தியுள்ளார்.  இவரது நாவல்களான Soul Mountain மற்றும் One Man’s Bible தனித்துவமானதாக கருதப்படுகின்றன.  இவருடைய சிறுகதை தொகுப்பான  “Buying a Fishing Rod for My Grandfather”யிலிருந்து Temple & In the park சிறுகதைகளை மொழிபெயர்க்க முயற்சித்திருக்கின்றேன்.

*******************************************************************************

கோயில்

நாங்கள் வெகு மகிழ்ச்சியாக இருந்தோம். மிகுந்த நம்பிக்கையுடனும், காதலுடனும், பரிவுடனும் நெகிழ்வோடும் கூடிய தேன்நிலவிற்கேற்ற உற்சாக உணர்வுகளோடு இருந்தோம். திருமணத்திற்கென பத்து நாட்களும் ஒரு வாரம் கூடுதல் விடுமுறையுமென பதினைந்து நாட்களே விடுமுறை இருந்தபோதிலும் ஜியாவும் நானும் இப்பயணத்திற்கென மீண்டும் மீண்டும் திட்டமிட்டோம். வாழ்வில் திருமணம் என்பது மிக முக்கியமான நிகழ்வு, எங்களுக்கு அதைவிட வேறு எதுவுமே முக்கியமாகப் படாததால் கூடுதல் விடுமுறைக்கு விண்ணப்பித்தால் என்னவென்று தோன்றியது. ஆனால் என் மேலாளர் ஒரு கருமி. யாராவது அவரிடம் விடுமுறைக்கு விண்ணப்பிக்கச் சென்றால் போராடவேண்டும். எப்போதுமே உடன் ஒப்புதல் அளிக்கமாட்டார். நான் விண்ணப்பித்த இரு வாரங்களை திருத்தி ஞாயிற்றுக் கிழமையையும் சேர்த்து ஒரு வாரமென மாற்றிவிட்டு, “சொன்ன தேதியில் மீண்டும் வேலையில் சேருவாயென எதிர்ப்பார்க்கின்றேன்” என்றார் விருப்பமற்று.

“நிச்சயமாக, அதிக நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டால் சம்பளக்கழிப்பை எங்களால் சமாளிக்க முடியாது” என்றேன். அதற்கு பிறகே விடுமுறைக்கான தனது ஒப்புதல் கையெழுத்தை இட்டார்.

இனி நான் தனிமனிதனல்ல. எனக்கென்று குடும்பமுண்டு. இனி சம்பளம் வாங்கிய முதல் வாரத்தில் நண்பர்களுடன் உணவு விடுதிகளுக்குச் சென்று நினைத்தபடி செலவழிக்க முடியாது. எப்போதும் போல யோசிக்காமல் செலவழித்து பின் மாத இறுதியில் சிகரெட் வாங்கக்கூட பணமில்லாமல் பாக்கெட்டிலும் அலமாரிகளிலும் சில்லரைகளை தேடிக்கொண்டிருக்க முடியாது. அந்த விவரத்திற்குள் எல்லாம் இப்போது நுழையவில்லை. இப்போது என்ன சொல்கிறேன் என்றால் நான் – நாங்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தோம். திருமணத்திற்கு முன் அத்தனை மகிழ்ச்சியாக இல்லை. இருவருமே சில சிரமமான நாட்களை கடந்திருக்கின்றோம், வாழ்க்கை பாடங்களை அனுபவித்து அறிந்திருக்கின்றோம். இந்நாட்டில் நிலவிய அழிவுக்குரிய காலகட்டங்களில் எங்கள் குடும்பங்கள் பல இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்திருக்கின்றன. இப்போதும் கூட எங்கள் முன்னோர்களின் விதிகளை நினைத்து மனக்கசப்பு உண்டாகும். ஆனால் அதைப்பற்றியும் இப்போது பேசப்போவதில்லை. நாங்கள் மிக மகிழ்ச்சியானவர்கள் என்பதே இப்போது முக்கியம்.

எங்களுக்கிருந்தது அரை மாத விடுமுறையே. அது அரைத்தேனிலவு தான் என்றாலும் அதைவிடவும் இனிமையானதாக இருந்திருக்க முடியாது. எவ்வளவு இனிமையாக இருந்தது என்பதைப் பற்றிப் பேசப்போவதில்லை. உங்களுக்கே தெரிந்திருக்கும் நீங்கள் எல்லோருமே அதை அனுபவித்திருப்பீர்கள், ஆனால் இந்த குறிப்பிட்ட இனிமை எங்களுக்கே உரியது. உங்களிடம் மிக கச்சிதமான ஒரு அறத்தின் கோயிலைப் பற்றிச் சொல்ல வேண்டும். கோயிலின் பெயர் அத்தனை முக்கியமில்லை. மேலும் அது ஒரு பாழடைந்த கோயில், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் புகழ்வாய்ந்த ஸ்தலமுமில்லை. அப்பகுதிகளில் வாழும் மக்களைத் தவிர்த்து வெளியுலகம் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. அங்கு இருப்பவர்களிலும் கூட வெகு சிலருக்கே அக்கோயிலைப் பற்றி தெரிந்திருக்கக் கூடுமெனத் தோன்றியது. நாங்கள் செல்ல நேர்ந்த கோயில், விளக்குகளும் ஊதுவத்திகளும் ஏற்றி பிரார்த்திக்கும் பிற கோயில்களைப் போலில்லை. கல்லில் பதித்திருந்த மறைந்துக் கொண்டிருக்கும் எழுத்துக்களை வெகு துல்லியமாக கவனித்தாலன்றி கோயிலின் பெயரையும் கூட அறிந்து கொண்டிருக்க முடியாது. அங்கு இருப்பவர்கள் அதனை பெரிய கோயிலென்றழைத்தனர். ஆனால் பிற பெரிய கோயில்களுடன் ஒப்பிடுகையில் அது பெரிய கோயிலே அல்ல. நகரத்திற்கப்பாலுள்ள மலையிலிருக்கும் அக்கோயில் ஒரு இரண்டுமாடி வீட்டை விட சற்றுப் பெரியதாக இருக்கக்கூடும். சிதிலமடைந்து அதன் மேற்கூரைகள் காற்றில் ஆடிக்கொண்டும், சிதைவுகளில் எஞ்சிய வாயிற் கல்கதவுகளுடனும், சரிந்த சுற்றுக்கட்டுச்சுவர்களுடனும் காட்சியளித்தது. அச்சுவர்களின் செங்கற்கள் விவசாயிகளின் வீட்டுச்சுவர்களாகவோ அல்லது அவர்களின் பண்ணையின் வேலியாகவோ மாறியிருக்கக்கூடும். வெகு சில செங்கற்களே தென்பட்டன. எங்கும் புதர்கள் மண்டிக்கிடந்தன.

எனினும் தூரத்தில் அவ்வூரின் சிறு தெருவிலிருந்து காணும் போது சூரிய ஒளியில் மினுங்கும் மஞ்சள் ஓடுகள் எங்கள் கண்களை ஈர்த்தன. நாங்கள் அவ்வூருக்கு தற்செயலாக வந்து சேர்ந்தோம். எங்கள் ரயில்வண்டி புறப்பட வேண்டிய நேரம் கடந்தும் பளாட்பார்மிலேயே இருந்தது. ஏதேனும் தாமதமாகிய விரைவு வண்டி கடப்பதற்காக காத்திருக்க நேர்ந்திருக்கலாம். ரயிலில் ஏறியிறங்கிக் கொண்டு சிதறிக்கிடந்த பயணிகள் அனைவரும் இருக்கைகளில் வந்து அமர்ந்திருந்தனர். வாயிலின் அருகில் பேசிக் கொண்டிருந்த பரிசோதகர்களைத் தவிர்த்து நடைமேடையில் யாரும் நின்றிருக்கவில்லை. ஸ்டேஷனிற்கு அப்பால் சாம்பல் நிறம் போர்த்தி விரிந்த பள்ளத்தாக்கு தெரிந்தது. அதற்கப்பால் அடர்ந்த மரங்களை கொண்ட மலைகள் சூழ்ந்த அசாத்திய அமைதியுடன் ஒர் பழைய ஊர் தென்பட்டது.

திடீரென எனக்கொரு எண்ணம் உதித்தது. “இவ்வூரை சுற்றிப்பார்த்தாலென்ன?” என்றேன். எதிரில் அமர்ந்து அன்பாய் பார்த்துக்கொண்டிருந்த ஜியா மெலிதாக தலையசைத்தாள். அவள் கண்கள் பேசுவதாகத் தோன்றியதெனக்கு, ஒருவருக்கொருவர் உணர்வுகளை ஒத்திசைவுகளோடு பரிமாறிக்கொண்டோம். ஒரு வார்த்தை கூட பேசாமல் எங்கள் பைகளை எடுத்துக்கொண்டு ரயில்பெட்டியின் கதவருகே விரைந்தோம். நடைமேடையில் குதித்து இருவரும் சிரித்தோம்.

அடுத்த ரயிலில் கிளம்பிவிடலாம் என்றேன். கிளம்பாமல் இங்கேயே தங்கிவிட்டாலும் பரவாயில்லை என்றாள் ஜியா. நம் தேனிலவில் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். ஓரிடம் நமக்குப் பிடித்திருந்தால் அங்கு செல்வோம், தொடர்ந்து பிடித்திருந்தால் அங்கேயே சில நாட்கள் தங்குவோம் என்றாள். எங்கு சென்றாலும், புதுமணத் தம்பதியரின் குதூகலமும் மகிழ்ச்சியும் எங்களோடிருந்தது. உலகத்திலேயே மிக சந்தோஷமானவர்களாக இருந்தோம். ஜியா என் கைகளைப் பற்றியிருந்தாள், நான் பைகளைப் பிடித்துக்கொண்டிருந்தேன். நடைமேடையிலிருக்கும் பரிசோதகர்களும், ரயில் வண்டியின் சாளரம் வழி எங்களை பார்க்கும் எண்ணற்ற ஜோடிக் கண்களும் பொறாமைப்பட வேண்டுமென்று நினைத்தோம்.

நகரத்திற்குத் திரும்புவதைப் பற்றி இனி எங்களை நாங்களே குழப்பிக்கொள்ள வேண்டாம். பெற்றோர்களிடத்தும் உதவிகேட்டு நிற்க வேண்டாம். வேலையைப் பற்றியோ இன்ன பிறவற்றைப் பற்றியோ கவலைகொள்ளவும் தேவையில்லை. எங்களுக்கென்று சொந்த வீடு உண்டு. எங்களுக்கேயான சொந்த வீடு, ரொம்பப் பெரிய வீடில்லை என்றாலும் அது மிக வசதியான வீடு. நான் உனக்கானவன் நீ எனக்கானவள், ஜியா நீ என்ன சொல்ல நினைக்கின்றாயென எனக்குத்தெரியும் : இனி நம் உறவு நிலையானது. அப்படியென்றால் என்ன? எங்கள் சந்தோஷத்தில் எல்லோருக்கும் பங்குண்டு என்று தானே அர்த்தம். எங்களுக்கிருந்த ஏராளமான பிரச்சனைகளால் உங்கள் எல்லோரையும் தொந்தரவு செய்திருக்கின்றோம், எங்களால் நீங்கள் எல்லோரும் வருத்தப் பட்டிருக்கிறீர்கள். இதற்கு என்ன கைமாறு செய்வது? எங்கள் திருமணத்திற்கு பின் அருமையான விருந்து வைத்து உபச்சாரம் செய்தா? இல்லை, எங்கள் சந்தோஷத்தை கொண்டு உங்களுக்கு கைமாறு செய்கிறோம். நான் சொல்வதில் எந்தத் தவறும் இல்லைதானே?

இப்படித்தான் மலைப்புரத்திலிருக்கும் அவ்வூருக்கு சென்றடைந்தோம். ஆனால் தொலைதூர ரயில்பெட்டியின் ஜன்னலிலிருந்து பார்த்ததைப்போன்று அமைதியான சூழலிற்கு, துளியும் சம்பந்தமில்லாமலிருந்தது அவ்வூர். சாம்பல் நிற மேற்கூறைகளுக்கு அடியில் வீதிகளும் சாலைகளும் சலசலத்திருந்தன. காலை ஒன்பது மணி, மக்கள் காய்கறிகளையும், கிர்ணிப்பழங்களையும், மரத்திலிருந்து அப்போது தான் பறிக்கப்பட்ட ஆப்பிள்களையும் பேரிக்காய்களையும் விற்றுக்கொண்டிருந்தனர். அது போன்ற ஊரிலிருக்கும் தெருக்கள் அகலமாக இருப்பதில்லை, மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் டிரக்குகளும் அடைத்துக் கொண்டிருந்தன. ஓட்டுனர்கள் பலவகையான ஒலிகளை எழுப்பிக் கொண்டிருந்தனர். காற்றில் தூசு பறந்துக் கொண்டிருந்தது, அழுக்கு நீர் காய்கறிக் கடைகளிலிருந்து ஒரு புறம் வழிந்து கொண்டிருந்தது, பழத்தோல்கள் வீதிகளெங்கும் சிதறிக்கிடந்தன, கோழிகள் வாங்கியவர்கள் கைகளில் படபடத்துக் கொண்டிருந்தன. இக்காட்சிகள் தான் அந்த ஊரை மிக நெருக்கமாக உணரச்செய்தது.

பட்டப்படிப்பை முடித்து விட்டு அப்படியான புறநகர் ஊர்களுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தபோது உணர்ந்ததை போலல்லாமல் வித்தியாசமாக உணர்ந்தோம். இப்போது நாங்கள் வெறும் ஊர் சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள். அவ்வூர் மக்களிடையே நிலவும் சிக்கலான உறவுகளுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவ்வெண்ணமே நகர்வாழ் மக்களான நாங்கள் சற்று மேலோங்கியவர்களாக உணரச்செய்தது. ஜியா என் கைகளை இறுக பற்றினாள், அவளருகில் சாய்ந்தேன், மக்களின் விழிகள் எங்கள் மேல்விழுந்ததை உணர்ந்தோம். ஆனால் நாங்கள் அவ்வூரை சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் எங்களைப்பற்றிப் பேசவில்லை அவர்களுக்கு தெரிந்தவர்களைப் பற்றியே கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.

இப்போது அதிக காய்கறிக்கடைகள் இல்லை, மக்கள் நடமாட்டமும் வெகு குறைவாகவே இருந்தது. சந்தை இரைச்சலையும் அமளிகளையும் தாண்டி வந்திருக்கின்றோம். கடிகாரத்தை பார்த்தபோது ரயில்வே ஸ்டேஷனிலிருந்து அந்த நீளமான தெருவை கடக்க அரைமணி நேரம் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கின்றோமெனத் தெரிந்தது. இத்தனை சிறிய கால அவகாசத்தில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷனிற்குள் நுழைந்து அடுத்த ரயிலிற்காக காத்திருப்பது நன்றாக இருக்காது. மேலும் ஜியா இரவை அவ்வூரில் தங்கி கழிப்பதை பற்றி நினைத்துக் கொண்டிருக்கின்றாள். அவள் அப்படி கூறவில்லை என்றாலும் அவள் முகத்தில் படர்ந்திருந்த ஏமாற்றம் அதை விளக்கிற்று. கைகளை பகட்டாக வீசிக்கொண்டு எங்களை நோக்கி ஒரு மனிதர் நடந்து வந்தார். ராணுவ அதிகாரியாக இருக்கக்கூடும்.

தங்கும் விடுதிக்கு செல்லும் வழி காட்ட முடியுமா ? என்று கேட்டேன்.
ஜியாவையும் என்னையும் ஒரு நொடி பார்த்தார், பிறகு அந்தப்பக்கமாக சென்று இடதுபக்கம் திரும்புங்கள் என்று உற்சாகமாக வழி காட்டினார். அங்கு தெரியும் சிகப்பு மூன்று மாடி கட்டிடம் தான் தங்கும் விடுதி என்றார். யாரையாவது அங்கு சந்திக்க வேண்டுமா என்று அக்கறையாக கேட்டார். அவரே எங்களை அங்கு கூட்டி சென்று காண்பிக்க வேண்டுமென்ற அக்கரையோடு இருந்தது அவருடைய தொனி. நாங்கள் சுற்றுலா பயணிகள் என்றும் அங்கு சுற்றிப்பார்ப்பதற்கான பிரதான இடங்கள் இருக்கின்றதாவெனவும் கேட்டேன். அவர் தலையை தடவுவதைப் பார்த்தால் அப்படி ஒன்றும் பெரிதாக இருப்பதாக தோன்றவில்லை எனக்கு.

சற்று யோசித்தப்பிறகு குறிப்பாக அவ்வூரில் அப்படி ஒரு இடமும் இல்லை, ஆனால் ஊருக்கு மேற்கில் இருக்கும் மலையில் ஒரு பெரிய கோயில் உள்ளது, அங்கு செல்ல வேண்டுமென்றால் செங்குத்தான மலையை ஏறவேண்டுமென்றார்.

அது ஒரு பிரச்சனையே இல்லை, நாங்கள் மலையேறுவதற்காகவே வந்திருக்கின்றோம் என்றேன்.

ஆமாம், மலையேறுவதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்றாள் ஜியா.

தெருக்கோடிக்கு கூட்டிச்சென்றார். மலையும் அதன் உச்சியில் உள்ள பழைய கோயிலும் சூரிய ஒளியால் பிரகாசிக்கும் அதன் ஓடுகளும் என் கண்ணுக்கு நேரெதிராக தெரிந்தது. ஜியா அணிந்திருக்கும் உயரமான காலணிகளை கவனித்த அவர், நீங்கள் நதியை கடந்து செல்ல வேண்டுமே என்றார்.
“ஆழமானதா?” என்று கேட்டேன்.
“முட்டிக்கு மேலிருக்கும்”
ஜியாவை பார்த்தேன்
என்னை சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்து “அது பரவாயில்லை, நான் சாமாளித்துக்கொள்வேன்” என்றாள்.
அவருக்கு நன்றி கூறிவிட்டு அவர் காட்டிய திசையில் நடக்கத்துவங்கினோம். புழுதி நிறைந்த தெருவிற்குத் திரும்பிய பிறகு உயரமான காலணிகளை அணிந்திருக்கும் ஜியாவைப் பார்த்து சங்கடப்படாமலிருக்க முடியவில்லை. ஆனால் அவள் என் முன் திடமாக நடந்துச் சொன்றாள்.

அவள் வேகத்திற்கு ஈடுகொடுத்துக்கொண்டே “நீ நிஜமாகவே ஒரு லூசு” என்றேன்.

“உன்னுடன் இருக்கும்வரை” நினைவிருக்கின்றதா ஜியா, என்னை உரசி நடந்துக் கொண்டே இதைச்சொன்னாய் நீ.

நதிக்கரைக்கு செல்லும் பாதையில் தொடர்ந்தோம். மனித உயரத்திற்கும் மேல் இருபுறமும் சோளம் நீண்டு வளர்ந்திருந்தன. பசுமையான நிழல்வெளியில் நடந்துச் சென்றோம். எங்களுக்கு முன்னும் பின்னும் ஆள் நடமாட்டமே இல்லை. ஜியாவை கைகளில் ஏந்தி மென்மையாக முத்தமிட்டேன். அதனால் என்ன? இதை பற்றி அவள் பேச வேண்டாமென்கின்றாள். அதனால் நாம் மீண்டும் அறக்கோயிலைப் பற்றிய பேச்சிற்கு போவோம். நதியின் அக்கரையில் மலையின் உச்சியிலிருந்தது அந்தக் கோயில். இங்கிருந்து பார்க்கும் போது மினுங்கும் மஞ்சள் ஓடுகளுக்கிடையில் கொத்துக் கொத்தாக வளர்ந்திருக்கும் களைச்செடிகளை பார்க்க முடிந்தது.

நதி மிகவும் குளுமையாகவும் தெளிந்தும் இருந்தது. எங்கள் காலணிகளை ஒரு கையிலும் ஜியாவின் கையை மற்றொரு கையிலும் படித்துக்கொண்டேன், ஜியா தன் உடையை மற்றொரு கையால் தூக்கிக்கொண்டாள். வெற்றுக் கால்களுடன் தொடர்ந்தோம். வெறுங்கால்களுடன் நடந்து வெகு காலம் ஆகிவிட்டது, ஆற்றுப் படுகையிலிருக்கும் மென்மையான கற்களும் கூட கால்களை உறுத்தின.
“பாதத்தில் ரொம்ப குத்துதா” என்று ஜியாவிடம் கேட்டேன்.
“பிடித்திருக்கின்றது” என்றாய் நீ மென்மையாக. நம் தேனிலவில் கால் நோக நடப்பதும் இனிமையாகவே இருந்தது. உலகின் எல்லா இன்னல்களும் ஆற்று நீரில் கரைந்து விடுவதாய் தோன்றியது. ஒரு நொடி சிறுவர்களாய் மாறினோம். சுட்டிப் பிள்ளைகளாய் நீரில் துள்ளிக்குதித்து விளையாடினோம்.

ஜியாவின் கையை இறுக பற்றிக்கொள்ள அவள் ஒவ்வொரு பாறையாக தாவிக் கொண்டிருந்தாள் இடையிடையே பாடல்களையும் முணுமுணுத்தபடி. ஆற்றைக் கடந்த பிறகு சிரித்துக் கொண்டும் கத்திக் கொண்டும் ஓடியபடியே மலை ஏறினோம். ஜியாவின் காலில் அடிப்பட்டுவிட்டது, எனக்கு மிகவும் சங்கடமானது. என்னைத் தேற்றினாள். இதனாலென்ன பரவாயில்லை, காலணிகளை மாட்டியவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்றாள். என்னுடைய தவறு என்றேன். என்னை மகிழ்விக்க என்ன வேண்டுமானாலும் செய்வேனென்றாள், தன் பாதங்களில் வெட்டுப்பட்டாலும் பரவாயில்லையென்றாள். சரி சரி இதைப்பற்றி மேற்கொண்டு பேசவில்லை. ஆனால் நாங்கள் பெரிதும் மதிக்கும் நண்பர்கள் நீங்கள், எங்கள் கவலைகளையும் ஏக்கங்களையும் பகிர்ந்துக் கொண்டதைப்போல் போல் சந்தோஷங்களையும் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.

இப்படித்தான் ஒருவழியாக மலையுச்சிக்கு ஏறி கோயிலின் முன்னிருந்த புறவாயிலிற்கு வந்தடைந்தோம். சரிந்திருந்த முற்றத்தின் வேலிச்சுவற்றிற்கு இடையிலிருந்த சிறுகால்வாயில் நீர்வாங்கு குழாயிலிருந்து தூய்மையான நீர் ஓடிக்கொண்டிருந்தது. முற்றமாக இருந்த இடத்தில் யாரோ காய்கறிச் செடிகளைப் பயிறிட்டிருந்தனர். அதற்கடுத்து எருக்குழி இருந்தது. முன்பெப்போதோ உற்பத்தி குழுவினருடன் சேர்ந்து கிராமங்களில் உரமிட்டதை நினைவு கூர்ந்தோம். அந்த கடுமையான கால கட்டங்கள் ஓடும் நீர் போல கடந்து சில துக்கங்களையும் மகிழ்ச்சியான நினைவுகளையும் எங்களிடையே விட்டுச் சென்றிருக்கின்றன. நம் அன்பும் கூட அதில் அடங்கும். கீர்த்திவாய்ந்த சூரிய ஒளியின் அரவனைப்பில் எங்கள் பாதுகாப்பான அன்பினில் யாருமே இடையிட முடியாது. இனி யாருமே எங்களை துன்புறுத்தவும் முடியாது.

பெரிய கோயிலிற்கு பக்கத்தில் சாம்பிராணி ஏற்றுவதற்கான இரும்பாலான விளக்கு இருந்தது. அது நகர்த்துவதற்கோ அல்லது உடைப்பதற்கோ முடியாத அளவிற்கு மிகப்பெரியதாக இருந்ததால் பழைய கோயிலிற்கு துணையாகவும் வாயிலிற்கு முன் நிற்கும் காப்பாளனாகவும் அங்கேயே தங்கிவிட்டிருக்கின்றது. கதவு தாழிடப்பட்டிருந்தது. விரிசல் விழுந்த ஜன்னல்களில் பலகைகள் ஆணிகளால் அடிக்கப்பட்டிருந்தன. ஆனால் அதுவும் இப்போது தகர்ந்துப்போயிருந்தது. அங்கு பயிர்செய்வோர்கள் பெரும்பாலும் அவ்விடத்தை தற்போது கிடங்காகப் பயன்படுத்தக்கூடும்.

மிக அமைதியாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை யாருமேத் தென்படவில்லை. கோயிலிற்கு முன்னிருந்த பழைய மரங்களுக்கிடையில் புகுந்து மலைக்காற்று உறுமிக்கொண்டிருந்தது. எங்களுக்கு இடையூறு செய்ய எவருமில்லை. மரநிழலிலிருந்த புல்வெளியில் படுத்து ஓய்வெடுத்தோம். என் கைகளில் தலைவைத்து ஜியா படுத்திருந்தாள். மெல்லிய இழையோடே சட்டென நீல வானில் மறையப்போகும் மேகத்தை பார்த்தபடி படுத்துக்கிடந்தோம். விவரிக்க முடியா மகிழ்ச்சியிலும் நிறைவோடும் நிறைந்திருந்தோம்.

சூழ்ந்திருந்த அமைதியில் ஆழ்ந்து அங்கேயே படுத்துக்கிடந்திருந்திருப்போம், ஆனால் காலடியோசையை கேட்டு ஜியா சட்டென எழுந்து உட்கார்ந்தாள். நானும் எழுந்து நின்று யாரென பார்க்க வேண்டியதாயிற்று. கற்கள் பதித்த பாதையில் ஒருவர் கோயிலை நோக்கி நடந்து வந்துக்கொண்டிருந்தார். தலையில் சடைமுடியுடனும் நீண்டு வளர்ந்த தாடியுடனுமான தடிமனான மனிதராக இருந்தார். கடுகடுப்புடன் இருந்தார். அடர்ந்து வளர்ந்த புருவங்களுக்கடியிலிருக்கும் முறைப்பான கண்களால் எங்களை அளந்தார். காற்று மிக குளுமையாய் வீசியது. நாங்கள் ஆர்வமாய் பார்ப்பதை கவனித்தவர் தன் பார்வையை கோயில் பக்கம் சற்றுத் திருப்பினார். காற்றில் மினுங்கும் ஓடுகளுக்கு இடையில் அசையும் செடிகளை ஓரக்கண்ணால் பார்த்தார்.

சாம்பிராணியேற்றும் இரும்பு விளக்கின் முன் நின்று அதை ஒரு கையால் தட்டி ஒலியெழுப்பினார். அவருடைய முறுக்கேறிய கடினமான விரல்களும் பார்ப்பதற்கு இரும்பால் ஆனதைப்போன்றே இருந்தன. அவருடைய மற்ற கையில் நைய்ந்துப்போன கதர் பையை வைத்திருந்தார். அங்கு காய்கறிகளை பயிரிட தொடர்ந்து வருபவர்களைப்போல் அவர் தோன்றவில்லை. புல்தரையின் மேல் கிடக்கும் ஜியாவின் உயரமான காலணிகளையும் எங்கள் பயணப்பைகளையும் கவனித்தவர் மீண்டும் எங்களைப் பார்த்தார். ஜியா உடனே தன் காலணிகளை மாட்டிக்கொண்டாள். எதிர்ப்பாரா வண்ணம் எங்களிடம் பேசத் துவங்கினார்.

வெளியூரிலிருந்து வந்திருக்கிறீர்களா? இந்த இடம் பிடித்தமானதாக இருக்கின்றதா? நான் தலையசைத்தேன். நல்ல கால நிலை என்றார். அவர் மேலும் பேசத்துடிப்பதை போன்று தோன்றியது. அடர்ந்து வளர்ந்த புருவங்களுக்கடியிலிருக்கும் கண்களில் தீவிரத்தன்மை சற்று குறைந்தார்ப்போன்று தோன்றியது. பார்ப்பதற்கு நியாயமானவராகவும் இருந்தார். தோலாலான காலணிகளை அணிந்திருந்தார். அதன் அடிப்பகுதி ரப்பர் டயர்களால் ஒட்டப்பட்டிருந்தது. அது இடையிடையே கிழிந்தும் போயிருந்தது. அவருடைய காலுரைகள் ஈரமாக இருந்ததால் ஊரிலிருந்து ஆற்றை கடந்துதான் அங்கு வந்திருக்கின்றார் என்பது புரிந்தது.

பார்ப்பதற்கு எழில் நிறைந்ததாகவும் மிகக்குளுமையாக இருக்கின்றது இங்கு என்றேன்
உட்காருங்கள், நான் சற்று நேரத்தில் கிளம்பிவிடுவேன் என்றார். எங்களுக்கு இடையூறாக வந்துவிட்டதாக நினைத்து மன்னிப்புக்கோறும் வகையிலிருந்தது அவருடைய தொனி. அருகிலிருந்த புல்தரையில் அவரும் அமர்ந்துக்கொண்டார். அவர் பைகளை திறந்தபடி முலாம்பழம் சாப்பிடுகிறீர்களா? என்றார். இல்லை வேண்டாம் என்றேன் உடனே. ஆனால் என்னிடம் ஒன்றை எறிந்துவிட்டார். நான் அதை பிடித்து உடனே திருப்பி எறியப்பார்த்தேன்.

ஒன்றுதானே, என் பாதி பையை இப்பழம் தான் நிறைத்திருக்கின்றது என்று கணமான தன் பையை தூக்கி காண்பித்தார். பேசிக்கொண்டே அடுத்த முலாம்பழத்தை கையில் எடுத்தார். என்னால் வேண்டாமென்று சொல்ல முடியவில்லை. அதனால் என்னிடமிருந்த நொருக்குத்தீனி பொட்டலத்தை பயணப்பையிலிருந்து எடுத்து திறந்து அவரிடம் நீட்டினேன். எங்கள் திண்பண்டங்களை சாப்பிட்டுப்பாருங்கள் என்றேன். ஒரு சிறிய கேக் துண்டை மட்டும் எடுத்து தன் பையில் வைத்துக்கொண்டார். இதுபோதுமெனக்கு என்று சொல்லிவிட்டு எங்களைச் சாப்பிடச்சொன்னார். முலாம்பழத்தோல்களை உறிக்கத்துவங்கினார். “சுத்தமானமவை, ஆற்றில் இவற்றை கழுவிக் கொண்டு வந்தேன்” பழத்தோலை ஒரு பக்கம் தூற எறிந்துவிட்டு கதவுப் பக்கம் நோக்கி குரல் எழுப்பினார். “போதும், சிறிது ஓய்வெடுத்துக்கொள், இங்கு வந்து கொஞ்சம் பழம் சாப்பிடு.”

“இங்கு நீளமான கொம்புடைய வெட்டுக்கிளிகள் இருக்கின்றன” கதவிற்கப்பாலிருந்து சிறுவனின் குரல் கேட்டது. பிறகு கையில் கூண்டுடன் சரிவில் சிறுவன் தென்பட்டான்.

ஏராளமானவைகள் இருக்கின்றன. நான் உனக்குப் பிறகு பிடித்துத்தருகின்றேன் என்று பதிலளித்தார்.

சிறுவன் எங்களை நோக்கித் துள்ளி குதித்து ஓடிவந்தான்.

இப்போது பள்ளி விடுமுறையா? என்றேன். அவர் உறித்ததைப்போன்றே நானும் முலாம்பழத்தை உறித்தேன். இன்று ஞாயிற்றுக்கிழமை, அதனால் இவனை வெளியில் கூட்டிவந்தேன் என்றார். என்ன கிழமை என்று கூட மறந்துப்போய் எங்கள் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தோம். முலாம்பழத்தை ஒரு கடி கடித்துவிட்டு என்னை பார்த்து புன்முறுவலித்தாள் ஜியா, அவர் நல்ல மனிதர் என்ற அர்த்தத்தில். சொல்லப் போனால் இவ்வுலகில் பல நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.

சாப்பிடு, அந்த அங்கிளும் ஆண்டியும் இதை தந்தார்கள், என்றார் கேக்கையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம். இந்த ஊரிலேயே வளர்ந்த சிறுவன் இதைப்போன்றதொரு கேக்கை இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பில்லை. உடனே எடுத்து சாப்பிட்டான்.

உங்கள் மகனா? என்றேன்.

அவர் பதிலளிக்கவில்லை. முலாம்பழங்களை எடுத்துக்கொண்டு விளையாடச்செல், பிறகு வெட்டுக்கிளிகளைப் பிடித்துத்தருகின்றேன் என்றார் சிறுவனிடம்.

“எனக்கு ஐந்து வெட்டுக்கிளிகள் பிடிக்க வேண்டும்” என்றான் சிறுவன்.

“சரி பிடிச்சிடலாம்”

கையில் கூண்டுடன் சிறுவன் ஓடிச்சென்றதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருடைய கண்களின் ஓரத்தில் ஆழ்ந்த சுருக்கங்கள் இருந்தன.

ஒரு சிகரெட்டை எடுத்தபடி அவன் என்னுடைய மகன் இல்லை என்றார். சிகரெட்டை பற்றவைத்து ஆழ்ந்து புகைத்தார். எங்களுடைய அதிர்ச்சியை உணர்ந்து, அவன் எனக்கு மிகவும் நெருக்கமான என்னுடைய ஒன்றுவிட்ட தம்பியின் மகன். அவனை தத்தெடுத்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன், ஆனால் என்னுடன் வந்து தங்க இவன் விரும்புவானாவெனத் தெரியவில்லை என்றார்.

அவர் உணர்ச்சிவசப்பட்டிருக்கின்றார் என்பது புரிந்தது.

“உங்கள் மனைவி?” என்றாள் ஜியா இதை கேட்பதை தவிர்க்க இயலாதவாறு. ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. சிகரெட்டை ஆழ்ந்து புகைத்தவாறு எழுந்து சென்றுவிட்டார்.

குளுமையான மலைக்காற்று வீசிக்கொண்டிருந்தது. மஞ்சள் நிற ஓடுகளுக்கிடையில் செடிகளின் உயரத்திற்கு வளர்ந்திருந்த பசுமையான புற்களும் சேர்ந்து காற்றில் அசைந்துக் கொண்டிருந்தன. நீல வானில் மிதந்து வந்த மேகங்கள் காற்றில் ஆடிக்கொண்டிருந்த மேற்கூரைக்கு அருகில் இருந்தைப் பார்ப்பதற்கு கோயிலே சாய்வாக இருப்பதைப்போன்றுத் தோன்றியது. மேற் கூரையின் ஓரத்திலிருந்த ஓர் உடைந்த ஓடு விழுந்து விடுவதைப்போன்று தொங்கி ஆடிக்கொண்டிருந்தது. அது பல ஆண்டு காலம் விழாமல் அங்கேயே அவ்விதம் தங்கிவிட்டிருக்கவும் கூடும்.

முன்பெப்போதோ சுவராய் இருந்த சிதிலங்களின் மீது அவர் நின்று வெகுநேரம் மலைத்தொடர்களையும் பள்ளத்தாக்குகளையும் பார்த்துக்கொண்டிருந்தார். நாங்கள் இருக்கும் மலையை விட தூரத்தில் தெரிந்த மலைத்தொடர்கள் உயரமாகவும் செஞ்குத்தாகவும் இருந்தன. ஆனால் அந்த மலைச்சரிவுகளில் எந்த படிமுறை வேளாண்மையோ வீடுகளோ தென்படவில்லை.

நீ அவரிடம் அப்படி கேட்டிருக்கக்கூடாது என்றேன்

“சரி நிறுத்து” ஜியா வருத்தத்துடன் இருந்தாள்.

“இங்க ஒரு வெட்டுக்கிளி இருக்கு” என்ற பையனின் குரல் மலையின் மறுபக்கத்திலிருந்து ஒலித்தது. ரொம்ப தூரத்திலிருந்து கேட்பதைப்போன்று இருந்தாலும் மிகத்தெளிவாகக் கேட்டது.

முலாம்பழம் நிறைந்திருந்த பை அசைந்தபடியே அத்திசை நோக்கி நடக்க ஆரம்பித்தவர் எங்கள் கண்பார்வையிலிருந்து மறைந்தார். ஜியாவின் தோளில் கை வைத்து என்பக்கம் இழுத்தேன்.

வேண்டாம் என்று திரும்பிக்கொண்டாள்.

உன் தலைமுடியில் புல் ஒட்டிக்கொண்டுள்ளது என்று விளக்கி காய்ந்த சருகை அவள் தலையிலிருந்து எடுத்தேன்.

அந்த ஓடு இப்போது விழப்போகிறது என்றாள். சற்று தொங்கலாக ஆடிக் கொண்டிருக்கும் உடைந்த ஓட்டை அவளும் கவனித்திருக்கின்றாள். அது இப்பவே விழுந்து விட்டால் நல்லது இல்லையென்றால் யாரையாவது காயப்படுத்திவிடும் என்று முணுமுணுத்தாள்.

அது விழ இன்னும் சற்று காலமாகும் என்றேன்.

அவர் நின்றிருந்த இடத்திற்கு சென்றோம். பள்ளத்தாக்கின் ஒரு பகுதியில் பயிர்நிலம் பரந்து விரிந்திருந்தது. அடர்ந்த பயிர்கள் அறுவடைக்காகக் காத்திருந்தன. எங்களுக்கு கீழிருந்த சரிவின் சமமான பகுதிகளில் சில மண்குடிசைகள் இருந்தன. அதன் அடிப்பாதி சுவர்களில் புதிதாக பளிச்சென சுண்ணாம்பு பூசப்பட்டிருந்தது. அவர் சிறுவனின் கையை பிடித்தபடி கீழிறங்கிக் கொண்டிருந்தார். சட்டென கடிவாளத்தில் இருந்து விடுபட்ட குதிரையைப் போன்று சிறுவன் தாவிக்குதித்து முன் ஓடிச்சென்று மீண்டும் திரும்பி ஓடிவந்தான். அவனுடைய கூண்டை அவரிடம் ஆட்டிக்காட்டுவதைப்போன்று இருந்தது.

“அவர் சிறுவனுக்கு வெட்டுக்கிளிகளை பிடித்துத் கொடுத்திருப்பார் என்று தோன்றுகிறதா? ஜியா நீ என்னிடம் இதை கேட்டது நினைவிருக்கின்றதா?

“நிச்சயமா” என்றேன். “நிச்சயமா”

ஐந்து வெட்டுக்கிளிகளை பிடித்துக்கொடுத்தார் என்றாய் நீ துடுக்காக.

இதுதான் நாங்கள் எங்கள் தேன்நிலவில் போய்வந்த அறக்கோயில், இதை பற்றித்தான் உங்கள் எல்லோருக்கும் விவரிக்கவேண்டுமென்றேன்.

****************************************************

பிகு : தமிழில் எழுத லகுவாக இருக்குமென்பதால் Fanafang என்ற பெயரை ஜியா என்று மாற்றியிருக்கின்றேன்.

The Wind Up Bird Chronicle – Haruki Murakami

எந்த ஒரு நாளின் நடந்த அனைத்துச் சம்பவங்களையும் நிமிடத்திற்கு நிமிடம் திரும்பிப் பார்ப்போமேயானால் அன்றாட வேலைகளுக்கு நடுவில் தற்செயலாக நிகழ்ந்தவைகளும், எதார்த்தமானவைகளும், சிறிதேனும் வியப்புக்குள்ளாக்கியவைகளும், மாற்று கருத்துக்களும், புன்னகைக்கான தடங்களும், அயர்ச்சிக்கான சில துளிகளும் சிதறிக்கிடக்கும். அப்படி பார்ப்பதற்கான கால அவகாசமோ இயலாமையோ அவசியமின்மையோ விரவும் நிலையில் நடந்தவை, நடப்பவையென எல்லாவற்றையும் சுமந்து திரிவது இயலாததாகின்றது. அதனால் சில முக்கிய அல்லது பாதித்த தருணங்களை தவிர பிறவற்றை அந்தந்த இடத்திலேயே விட்டு அடுத்து வருவனவற்றுள் நம்மை புகுத்திக் கொள்கின்றோம். அப்படியல்லாது கனவுகளையும், குழப்பங்களையும், எண்ணவோட்டங்களையும் பதிவித்துக் கொண்டேயிருப்பின் அவை தொடரற்ற தொடராக நீண்டுக்கொண்டே செல்லும். அத்தகைய நீள்தொடராக அமைந்திருந்தது ஹருகி முராகமி எழுதிய The wind up bird chronicle. இக்கதை எதார்த்தத்தினூடே சர்ரியலிசத்தையும் பின்நவீனத்துவத்தையும் புகுத்திப்பார்த்திருக்கின்றது. இப்படி கூட நிகழுமா இது சாத்தியமா இது என்ன மாயாஜால வித்தையா என்றெல்லாம் ஆராயாமல் இந்த எழுத்தை அப்படியே தொடர்வோமாயின் எழுத்தப்பட்ட சொற்களினூடே விரியும் உணர்ச்சிகள் அப்படியே நம்மையும் நிச்சயம் தொற்றிக்கொள்ளும்.
இதிலுள்ள எல்லா கதா பாத்திரங்களுக்குமே நீண்ட விசித்திர கதையை வெவ்வேறு காலகட்டங்களில் புனைந்துள்ளார் ஹருகி. மையகதாபாத்திரத்தின் வீட்டில் வசிக்கும் பூனை காணாமல் போனதிலிருந்து துவங்கும் கதை அதை தேடும் முயற்சியில் வெவ்வேறு சிக்கல்களை குழப்பங்களை கதாபாத்திரங்களை கனவுகளை வினோதங்களை முடிச்சிகளாக்கிக்கொண்டே வந்து எல்லாம் சேர்ந்து சிக்கலான பிறகு ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கின்றார். கனவுகள் வழி நிகழிற்கும் நிகழ் வழி கனவிற்கும் மாய எதார்த்தத்திற்கும் மாறி மாறி பயணிக்கின்றது இக்கதை.

சப்தமற்ற தனித்த வீட்டில் கடிகாரத்தின் முள் தனது இயக்கத்தை உறக்க அறிவிப்பதை போன்று அமைதியான சூழலில் ஒற்றை ஒலி எழுப்பியவண்ணம் மையகதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அசைவுகளையும் நுணுக்கமாக மிக நிதானமாக பதிவித்து நகர்கின்றது கதையின் முதல் பாதி. அவருடைய பெரும்பாலான கதைகளில் பூனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்ரியலிச கதையான The Wind Up Bird Chronicle கதை எழுத துவங்கும் போது ‘ஒரு முப்பது வயதான மனிதன் வேலையில்லாமல் வீட்டில் உணவு சமைத்து கொண்டிருக்கின்றான், தொலைபேசி மணி ஒலிக்கின்றது’ என்ற இந்த ஒன்றை வரி எண்ணம் மட்டுமே இருந்ததெனவும் அங்கு ஏதோ வினோதம் நிகழப்போவதாக உணர்ந்ததாகவும் ஹருகி கூறுகின்றார். இந்த ஒற்றைவரியிலிருந்து விரியும் இந்நாவல் இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த சம்பவங்கள், சைபீரிய சிறையில் நிகழும் அநீதிகள், மங்கோலியா மன்சூரிய ராணுவம் என பல அடுக்குகளில் பயணிக்கின்றது.

ஹருகி தன் எழுத்துகளில் வினோதங்களையும் விசித்திரங்களையும் இயல்பு நிலையிலிருந்து பிறழந்த கதாபாத்திரங்களையும் மீண்டும் மீண்டும் கட்டமைக்கின்றார். மறுபிறப்புகளிலும், கனவுகளிலும், ஜோசியங்களிலும், மாய வேற்று உலகங்களிலும் நம்பிக்கையில்லையென்ற போதிலும் எதார்த்தங்களை எழுதத்துவங்கும் போதும் இவையெல்லாமும் சேர்ந்துக்கொள்கின்றன என்கின்றார். உதாரணத்திற்கு இக்கதையில் வரும் கதாபாத்திரங்களின் சில விசித்திர தன்மைகள் :
டோரு ஒக்கடா : வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் இவர் யாருமற்ற அடுத்த வீட்டு நீரற்ற பாழ் கிணற்றுக்குள் நினைத்த போதெல்லாம் இறங்கி அங்கேயே தனக்கு சலிக்கும் வரை தங்குவார். கனவுகளில் கிணற்றுச்சுவர்களில் நுழைந்து மறுபுறமுள்ள மாய உலகிற்குள் பிரவேசிப்பார். அங்கு பற்பல வினோத சம்பவங்கள் நிகழும். அல்லது ஓர் இடத்தில் அமர்ந்து வரும் போகும் மனிதர்களின் முகங்களை வெறுமனே கவனித்துக் கொண்டிருப்பார்.

மே கஷாரா : ஒரு விபத்தில் தனது நண்பன் மரணித்தப்பின்னர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு விபத்தில் உண்டான காயங்களை காரணம் காட்டி வெறுமனே வீட்டில் இருக்கின்றார். பகுதி நேர வேலையாக ஒவ்வொரு ஆணின் தலைமுடியும் வழுக்கையாவதற்கு முன்பு அதன் தரத்தின் வாயிலாக A B C என்று பகுத்து கடந்து செல்லும் ஒவ்வொரு தலையும் எப்பிரிவில் அடங்குமென்ற கணக்கெடுப்பில் பணியாற்றுகின்றார். பிறகு விக் தயாரிக்கும் கம்பெனியிலேயே நிரந்தர பணிக்கு சேர்ந்துவிடுகின்றார்.
 

மால்டா கானோ : தன்னுடைய பல வருடப்பயிற்சிகளால் சில அதீத சக்திகளை உடையவர். இவருடைய பெரும்பாலான பேச்சுகள் எல்லாமே பூடகமாவே இருக்கும்.

 

கிரீடா கானோ : மால்கடா கானோவின் தங்கையான இவர் சிறுவயதிலிருந்து சகித்துக்கொள்ள முடியாத ஏராளமான உடல் உபாதைகளை அனுபவித்து பதின்ம வயதில் தற்கொலை செய்ய முயற்சித்து தோற்கும் போது எல்லா உணர்ச்சிகளும் வலிகளும் மரத்துப்போய் சூழ்நிலையால் பாலியல் தொழிலுக்கு உட்படுகின்றார். பிறகு நடந்து ஒரு வன்புணர்வால் கிட்டத்தட்ட தன் எல்லா உணர்வுகளையும் மீட்கப்பெற்று சகஜ நிலைக்கு திரும்புகின்றார். இவர் கனவுகளில் நுழைந்து நிஜ உடல்ளோடு கலவிகொள்ளவல்லவர்.

Corporal ஹோண்டா : எதிர்காலத்தில் நிகழப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே அறியவல்லவர். அவர் அறியாமலேயே எதிர்காலத்தில் நிகழப்போகும் சம்பவங்களை ஓரிரு வாக்கியங்களில் குறிப்பால் உணர்த்துபவர்

Lieutenant Mamiya : இரண்டாம் உலகப்போரில் எதிரி படையினரிடம் சிக்கி துன்புறுத்தப்பட்டு பாழ் கிணற்றுக்குள் வீசியெறியப்படுபவர். அக்கிணற்றுக்குள் ஓரிரு நொடிகள் தோன்றும் சூரிய ஒளியால் தன்னுள் சில மாற்றங்களை அடைபவர். போர் சூழலில் தன் ஒரு கையை இழந்த இவர் தன் வாழ்நாள் முழுவதுமே வெறுமையின் துணையோடு மட்டுமே வாழ்பவர்.

 

நட்மெக் & சினமன் : தனது சக்தி என்னவென்றே அறியாதவர் என்றபோதிலும் நட்மெக் தன்னை நாடி வரும் உயர்தட்டு பெண்களை வாட்டும் ஏதோ ஒன்றிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிப்பவர். அவருடைய மகன் சினமன் ஆறுவயதிலிருந்து பேச்சை துறந்தவன். தன் தாயின் வேலைகளுக்கு உதவியாக இருப்பவன். எல்லா வேலைகளையும் மிக கச்சிதமான அதீத ஒழுங்குத்தன்மையுடன் செய்து முடிப்பவன். அவன் குரலிலிருந்து ஒலி எழும்பவில்லையென்ற போதிலும் அவன் சொல்ல வருவதை கேட்பவர் எந்த சிரமமும் இல்லாமல் புரிந்து கொள்வர்.

நோபோரு வடாயா : இவர் தனது உடன்பிறப்பும் டோருவின் மனைவியுமான குமினோவை நேரடியாக அல்லாமல் சில புரியாத மாயங்களைக்கொண்டு வினோதமுறையில் தன் கட்டுக்குள் வைத்து சீரழிப்பவர், தனது மற்றொரு உடன்பிறப்பையும் தனது கட்டுக்குள் வைக்க முயன்றதினால் சிறுவயதிலேயே அச்சித்திரவதைகள் தாளாமல் அவர் தற்கொலை செய்து கொள்கின்றார். அன்றாடம் எல்லா சேனல்களிலும் பேட்டி கொடுத்து எதைபற்றி கேட்டாலும் அதற்கு தகுந்த பதில்களை உடனடியாக ஆணித்தரமாக கூறவல்லவர். எதிலுமே ஆழமான புரிதல் இல்லையென்றபோதிலும் தனது பேச்சுத்திறமையாலும் வாதிடும் திறமையாலும் தனது கருத்துக்களுக்கு எதிர்கருத்துக்களை முளைக்கவிடாதவர்.
இத்தகைய காதாபாத்திரங்களுடே மேலும் சில வினோத கதாபாத்திரங்களும் விசித்திர சம்பவங்களும் கொண்டு பின்னப்பட்ட இக்கதை சில வேலைகளில் வாசிக்க அயர்ச்சியாக இருந்தாலும் வாசிக்க வேண்டாமென்று ஒதுக்கிவைக்க விடாமல் வாசகனை அலைகழிக்கின்றது. அதீத வன்முறைகளை எழுத்தில் என்றுமே வாசித்ததில்லை. திரையில் வரும் வன்முறை காட்சிகளை கடப்பது எளிது, வெகு சுலபமாக கண்களை மூடிக்கொண்டு ஒலியை மட்டும் கேட்டு நடந்தது என்னவென்று யூகித்துக்கொள்ளலாம். ஆனால் எழுத்தில் வரும் வன்முறைகளை எப்படி கடப்பது. வாசிக்காமல் சில பக்கங்களை கடப்பதற்கு மனது இடம் கொடுப்பதேயில்லை. வாசிக்காமல் பத்து பக்கங்கள் தாண்டிச்சென்ற பிறகும் மீண்டும் அதே பக்கத்திற்கு இழுத்து வந்துவிடுகின்றது மனது. வெகு சிரமமப்பட்டே சில பக்கங்களை வாசிக்க வேண்டியுள்ளது. இத்தகைய வன்முறைகளை இதற்கு முன்பு வாசித்திருக்கவில்லை.
போர் சூழலில் அகப்படும் எதிரி படையினரை கொள்ளும் வெவ்வேறு முறைகளை விரிவாகவே எழுதியிருக்கின்றார் ஹருகி. உயிரோடு தோல் உரிக்கப்படுவதையும், உடலுக்குள் ஈட்டியை இறக்கி எல்லாம் உறுப்புகளையும் சிதைத்து அணுஅணுவாக கொல்வதையும் வாசிக்கும் போது அதிர்ச்சியும் பயமும் மேலோங்கியது. தோலுரிக்கப்பட்ட ரத்தம் ஒழுகும் வெற்றுடல் கண்முன்னே சிறிது நாட்கள் தங்கிவிட்டது. நிச்சயம் அப்பகுதிகளை மட்டுமாவது மொழிபெயர்க்கும் எண்ணம் இருக்கின்றது. சைபீரிய சிறைகளை பற்றியும் அங்கு கைதிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளும், அதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் சந்திக்க நேரிடும் கொடூர முடிவுகளும் வேறு பல கதைகளில் வாசித்திருந்ததால் அப்பகுதிகளை கடப்பது அத்தனை சிரமமானதாக இருக்கவில்லை. வேறொரு சந்தர்ப்பத்தில் விலங்கியல் பூங்காவில் இருக்கும் அபாய விலங்குகளை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் புலிகளையும் சிறுத்தைகளையும் அதிக துப்பாக்கி குண்டுகளை செலவழித்துவிடாமல் கொல்வதையும் சொல்கின்றார்.
போர்காலத்தின் அனுபவங்களை தன் தந்தை சொல்லி கேட்டதாகவும் அக்காலகட்டங்களின் அனுபவங்களை பதிவிப்பது எழுத்தாளனின் கடமையென்கிறார் ஹருகி. எனினும் புனைவாகவே இக்கதையை எழுதியிருப்பதாகவும் தன் கற்பனை சிதைந்து விடாமல் இருப்பதற்காக புத்தகத்தை எழுதி முடித்த பின்னரே அக்கதையில் இடம்பெறும் மங்கோலிய மஞ்சூரிய எல்லைக்கு சென்று வந்ததாகவும் கூறுகின்றார்.
ஆங்கிலத்தில் இக்கதையை ‘ஜே ரூபின்’ மொழிபெயர்த்துள்ளார். ஜப்பானிய மொழியில் மூன்று பகுதிகளாக வெளியான இந்நாவலை இவர் முழுவதுமாக மொழிபெயர்த்திருப்பினும் பதிபகத்தார் இதன் நீளம் கருதி இரு அத்தியாயங்களை நீக்கிவிட்டதாக கூறுகின்றனர். நாவல், சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்லாது ஹருகி சிறந்த மொழிபெயர்ப்பாளரும் கூட. இவர் பல ஆங்கில இலக்கியங்களை ஜப்பானிய மொழிக்கு மொழிபெயர்த்திருக்கின்றார்.

2002ல் ஜப்பானிய மொழியிலும் 2005 ஆங்கிலத்திலும் வெளியான ‘Kafka on the Shore’ இவரது படைப்புகளில் மிக முக்கியமானதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகின்றது. அப்புத்தகத்தை தேடி அலைந்தபோது அது கிடைக்காமல் ‘After Dark’ கிடைத்தது. அதை வாசித்துக்கொண்டிருந்த வேளையில் தற்செயலாக ‘The wind up bird chronicle’ மின் புத்தகமாக வந்தடைந்தது. இதை வாசித்துக்கொண்டிருக்கையில் இணையத்தில் அதிசயிக்கும் வண்ணம் Kafka on the shore முழு வடிவமும் கிடைத்தது. இப்புத்தகத்தில் துவங்கி இப்புத்தகத்தில் வந்து நிற்கும் இவ்வட்டத்திற்கும் ஹருகி முன்வைக்கும் வினோதங்களுக்கும் கூட சம்பந்தம் இருக்குமோ?

எழுத்தாளர்கள் பெரிதும் மதிக்கும் Franz Kafka விருதை பெற்ற இவரது நாவல் Kafka on the shore மேஜிகல் ரியலிசமும் மெட பிசிக்ஸ் தொட்டிருப்பதாக அறிந்த பின்னர் சிறிது கால அவகாசத்திற்கு பிறகு இதை வாசிப்பதே உகந்ததாக இருக்குமெனத் தோன்றியது. After dark அவ்வளவாக ஈர்க்கவில்லை. இரவு வாழ்வின் ஒரு பகுதியை பதிவிக்கும் வண்ணம் ஓர் இரவு முழுவதும் வெளியில் விழித்திருக்கும் கதாபாத்திரத்தின் வழி ஒவ்வொரு நிமிடமாக கதை நகர்ந்து விடிந்ததும் நிறைவு பெறுகின்றது. வா குவாட்டர் கட்டிங் படத்தின் உத்தி இங்கிருந்து தான் உருபெற்றிருக்குமோ?

Wind Up Bird Chronicle ‘theatre of dreams’ ஐரோப்பிய விழாக்களின் போது வெளியாகவுள்ளது. இதன் உருவாக்கம் பற்றிய குறிப்புகள் இப்பக்கத்தில் வாசிக்கலாம்.

தமிழில் ஹருகியின் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வம்சி பதிபகத்தால் 2006 / 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கின்றது. சிறுகதை தொகுப்பின் பெயர் ‘100% பொருத்தமான யுவதியை ஓர் அழகான ஏப்ரல் காலையில் பார்த்த போது…’ ஆறு சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பின் மொழிபெயர்ப்பாளர்கள் ஜி.குப்புசாமி, செழியன் மற்றும் ராஜகோபால். இப்புத்தகத்திற்கான கவிஞர் சுகுமாரன் முன்னுரை திண்ணையில் வாசிக்கலாம். இவரது சில சிறுகதைகள் ஆங்கிலத்திலும் இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றன.

‘The Wind Up Bird Chronicle’ e-book அனுப்பிவைத்த நேசமித்ரனுக்கு நன்றி.

நன்றி : http://www.complete-review.com/authors/murakamh.htm

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் நகிப் மஹ்ஃபூஸ் (Naguib Mahfouz) 1965ல் வெளியான ‘The Beggar’ சமீபத்தில் வாசித்தேன். அரசியல் தன்மைகள் கொண்ட எழுத்துகளுக்கு எகிப்தில் நிலவிய பலத்த தடைகளும் நிராகரிப்புகளும் நிறைந்த காலகட்டங்களில் வெளிவந்த இந்நாவல் அரசியல், காமம், தேடல், எகிப்திய புரட்சி முதலியவற்றை மேலோட்டமாகவே தொட்டிருக்கின்றது. மாறாக இவரது பல நாவல்கள் எகிப்திய வரலாற்றையும், புரட்சிகளையும், அந்நாட்டு கலாச்சாரங்களையும் விரிவாக பேசுபவை.

வழக்கறிஞரான ஒமர் அத்துறையில் பேரும் பணமும் சம்பாதித்து யாவரும் மதிக்கும் நிலையை அடைந்த பின்னர் ஒரு பிடிப்பற்ற தன்மையை உணருகின்றார். இத்தனை காலம் தன்னுடனிருந்த குடும்பம், தொழில், நண்பர்கள் என எதன்மீதும் நாட்டமில்லாமல் வேறெதையோ தேடுகின்றது அவரது மனது. வாழ்கையின் அர்த்தமின்மை அவருக்கு சலிப்பூட்டுகின்றது. நாற்பத்தைந்து வயதடைந்த அவருக்கு மத்திய வயது நெருக்கடி ‘Mid life crisis’ பெரும் பாரமாகிவிடுகின்றது.

தனது நண்பரும் மருத்துவருமானவரிடன் ஆலோசனை கேட்க அவர் உடலுக்கு ஒரு குறையுமில்லயென்றும் தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொள்ளவும் சரியான உணவு முறையும் பின்பற்றுமாறும் பொதுவான ஆலோசனைகளையே வழங்குகின்றார். சில நாட்கள் பணியிலிருந்து ஓய்வெடுத்து குடும்பத்துடன் வெளியூர் எங்காவது பயணம் மேற்கொள்ளச்சொல்கின்றார். இவை ஒன்றும் பயனளிக்காமல் தொடர்ந்து அமைதியின்மையையும் போதாமையையும் ஒமர் உணருகின்றார். வேலையும் வீடும் சலிக்கத்துவங்குகின்றன. அர்த்தமற்ற வாழ்வை வாழ்வதாகவும் தனக்கு வேறெதோ ஒன்று தேவையெனவும் அத்தேவை எதுவென தெரியாமல் குழம்புகின்றார்.

பிறகு காதலும் காமமும் மட்டுமே தன் வாழ்வை அர்த்தப்படுத்த முடியுமென நினைக்கின்றார். இரவு விடுதிகளில் நடனமாடும் பெண்களுடன் உறவு கொள்த்துவங்குகிறார். காதலித்து கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தன் மனைவியையும் பதின்ம வயது மகளையும், இளைய மகனையும் பிரிந்து தன் வீட்டைவிட்டு வெளியேறி வேறு பெண்ணுடன் சிலகாலம் தங்குகின்றார். இதுவே தன் தேவையாக இருந்திருக்கின்றது என்றும் அவ்வுறவே தன்னை திருப்திப்படுத்தும் என்றும் அப்பெண்ணின் காதலில் திளைக்கின்றார். ஆனால் அவர் மனதிற்கு அவை தற்காலிக நிவாரணத்தையே அளிக்கின்றது. நாளடைவில் அவளும் சலிக்கத்துவங்கிவிடுகின்றாள்.

இக்கதையை வாசிக்கும்போது குஷ்வந்த் சிங்கின் The Company of Women (1999) நினைவிற்கு வந்தது. அக்கதையில் கதாநாயகனின் தேவை பெண்ணின் உடல் மட்டுமேயாக இருந்தது. அவன் அணுகும் ஒவ்வொரு பெண்ணை பற்றியும், உடல் உறவுகளை பற்றியும் விரிவாக வெளிப்படையாகவே எழுதியிருப்பார் ஆசிரியர். தனது எண்பத்தி மூன்று வயதில் இந்நாவலை எழுதத்துவங்கி எண்பத்தி ஐந்து வயதில் இதனை வெளியிட்டார். முதிர்ந்த வயதில் இத்தகைய நாவலை வெளியிட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல் வெவ்வேறு பெண்களுடன் கலவுவதையும் அதீத காமவிச்சையையும் பேசும் ஒரு போர்னோ நாவலென்றே பலராலும் இப்புதினம் விமர்சிக்கப்பட்டது.

ஆனால் ‘The Beggar’ நாவலில் ஒமர் தன் தேவை இன்னதென்றே அறியாமல் பெண்ணின் வாயிலாக அதை கண்டடையவும் திருப்திக்கொள்ளவும் விழைகின்றார். வெவ்வேறு பெண்களாக தேடி எல்லாம் சலிப்படைந்து மீண்டும் தன் வீட்டிற்கே திரும்புகின்றார். தன் இளவயது விருப்பமான கவிதை எழுதுதல் தன்னை குணப்படுத்தலாமமென முயற்சித்து அதிலும் தோல்வியே காண்கின்றார். மனது ஒரு நிலைக்கொள்ளாமல் தவித்தபடியே இருக்க தனது அலுவலகத்தை சிறையிலிருந்து விடுதலையாகி வரும் தன் இளவயது நண்பனிடன் ஒப்படைத்துவிட்டு மீண்டும் எல்லோரையும் விட்டு தனித்து வாழ துவங்குகின்றார்.

சோஷியலிஸத்தை தொடாத நகிப் மஹ்ஃபூஸின் கதைகள் இல்லையென்றே சொல்கிறார்கள். தற்போது வாசிக்கும் அவரின் Karnak Cafeயிலும் எகிப்த்திய புரட்சி, சோஷியலிஸத்தை பேசுகின்றார். சில பக்கங்களே கடந்திருப்பதால் இப்புத்தகத்தை பற்றி பிறகு. இப்புதினத்திலும் ஒமர் தனது கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் இணைந்து தீவிர சோஷியலிஸவாதிகளாக இருந்து தனது நண்பனின் கைதிற்கு பிறகு கட்டாய மாற்றங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொள்கின்றார். மத்திய வயது நெருக்கடிகளில் சிக்கிய ஒமருக்கு அதிலிருந்து வெளிவர சரியான வழிகள் புலப்படாத நிலையில் அவரது மனம் பிறழ்துவிடுவதாக முடிகின்றது கதை. விரிவான தகவல்களோ குறிப்புகளோ அன்றி ஒற்றைத்தன்மையுடன் மேலோட்டமாகவே பேசப்பட்டிருக்கும் இப்புதினம் வாசிக்க வெகுசாதாரணமாகவே இருந்தது.

Sea of Poppies – Amitav Ghosh

மூன்று பகுதிகளாக வெளியாகவிருக்கும் அமிதவ் கோஷ் – ஐபிஸ் ட்ரைலாஜியின் முதல் தொகுப்பு Sea of poppies 2008ல் வெளியானது. அந்த ஆண்டு புக்கர் பரிசு தேர்வு பட்டியலில் இப்புத்தகமும் இடம்பெற்றது.  ஆனால் தேர்வு பெறவில்லை, மாறாக White Tiger வென்றது.  இப்புத்தகத்தை 1838 காலகட்டத்தின் வரலாற்றுப்புனைவு எனலாம். அக்காலகட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளோடும் வாழ்கை மற்றும் தொழில் முறைகளோடும் விரியும் பிரம்மாண்டமான தகவல் களஞ்சியம் இப்புதினம்.  இப்புத்தகத்தின் நன்றியுரையில் அமிதவ் கோஷ் பட்டியலிட்டிருக்கும் reference list நீண்டுக்கொண்டே போகின்றது. அதை வாசித்தப்பின்னர் இந்நாவலுக்கென தகவல்கள் சேகரிக்கும் முயற்சியில் எண்ணற்ற பக்கங்களை புரட்டியிருக்கும் அவரது உழைப்பை வியக்காமல் இருக்க முடியவில்லை. 

இப்புதினத்தில் பாப்பிவிதைகளை பயிரிடும் முறைகளும், உழவில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் நெருக்கடிகளும், தொழிற்சாலைகளில் ஓபியம் தயாரிக்கப்படும் வழிமுறைகளும், அங்கு பணிபுரிவோர் எதிர்க்கொள்ளும் உடல் நல கேடுகளும், ஓபியத்திற்கு நிரந்தர அடிமையாகும் மனிதர்களின் சீர்குலைவுகளும் நுணுக்கமான தகவல்களோடு விவரிக்கப்பட்டிருக்கின்றன.

பெரும்பாலும் இதிலுள்ள எல்லா விவரனைகளுமே தகவல் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. கடல் வழிப் பயணம், பயணத்திற்கு முன் கப்பலில் நியமிக்கப்படவேண்டிய பணி ஆட்கள், அவர்களுக்கான அதிகாரங்கள், ஓபியம் ஏற்றுமதியில் East India Companyயின் நிலைபாடுகள், முதல் ஓபியப்போருக்கு முன்னாலான ஓபிய ஏற்றுமதியில் நிலவிய குழப்பங்கள், சிக்கல்கள் என பலவற்றை தொட்டிருக்கின்றது இந்நாவல்.  அவை மட்டுமல்லாமல் கூலியாட்களை மொரிஷியசிற்கு அனுப்பும் வழமை, அதுகுறித்து எழும் வதந்திகளை கேட்டு பணிக்கு செல்வோரிடத்து ஏற்படும் பீதி, அவர்களை வேலைக்கு நியமிக்கும் குமாஸ்தாக்கள், கப்பலில் அவர்களின் மேற்பார்வையாளர்களின் அடக்கு முறைகள் என பலவற்றையும் குறிப்பிடலாம். 

முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரான பிகாரில் வசிக்கும் தீத்தியை தனது மூத்த மகனிற்குத் திருமணம் செய்துவைக்கும் தாய் அவளது குடும்பவிருத்திக்கென முதல் இரவில் தீத்தி அறியாமல் அவளுக்கு ஓபியம் புகட்டி தனது இளைய மகனை உறவுக்கொள்ளச்செய்வதாக எழுதப்பட்டிருக்கும் முதல் பகுதியே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

தனது அறியாமையாலும் வேறு பலரின் சூழ்ச்சிகளாலும் ராஜாங்கத்தையும் சொத்து முழுவதையும் இழந்து சிறைவைக்கப்படும் மற்றொரு முக்கிய கதாபாத்திரமான ராஜா நீல் ரத்தனின் சிறை அனுபவங்களை விவரிக்கும் பக்கங்களையும் கடப்பது கடினமாகவே இருந்தன. ராஜ போகத்துடன் வாழ்ந்தவனிடத்திலிருந்து சட்டென யாவும் பிடுங்கப்படும்போது அவன் மனம் கொள்ளும் அதிர்ச்சி, மாற்றம், சகிப்புத்தன்மை, பக்குவம் என எல்லாமே கச்சிதமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 

வெகு நாட்கள் ஓபியம் உட்கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையான உடலில் ஏற்படும் சீர் குலைவுகளை தீதியின் கணவர் வாயிலாகவும், ஓபியம் உட்கொள்ளும் பழக்கத்தை சட்டென நிறுத்துவதனால் ஏற்படும் உடல் உபாதைகளை ராஜா நீலுடன் ஒரே அறையில் சிறைவைக்கப்படும் கைதியின் மூலமும் விரிவாக அறிந்துக்கொள்ளமுடிகின்றது. 

மற்ற கதாபாத்திரங்களான அமெரிக்க மாலுமி (second mate) சாச்சாரி, பிரென்ச் பெண்மணி பௌலட், அவளின் தம்பி ஜோடு, குமாஸ்த்தா பாபு, பிரிட்டிஷ் தொழிலதிபர் பெஞ்சமின் மேலும் பலரை கொண்டு கட்டமைக்கப்பட்ட இக்கதையில் அக்காலகட்டத்தில் நிலவிய சட்டத்திட்டங்கள், வணிக வியாபார முறைகள், தாவரவியல், ஐதிகம், கப்பல் போக்குவரத்து, கடல் வழி பயணத்தில் சந்திக்க நேரும் அபாயங்களும், அதற்கான அணுகுமுறைகள், கப்பலின் கட்டமைப்பு என ஓவ்வொரு கதாப்பாத்திரத்தின் வாயிலாகவும் பல தகவல்களை வாசகர்களுக்கு தரும் உத்தியை பயன்படுத்தியிருக்கின்றார்.  

நிலம், நதி, கடல் என்று பகுதிகளைக்கொண்ட இப்புதினம் கூலிகளையும், இரு கைதிகளையும், இவர்களின் மேற்பார்வையாளர்களையும், கப்பல் ஊழியர்களையும் கொண்டு மொரிஷியசிற்கு பயணிக்கும் ஐபிஸ் நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருக்க கதை நிறைவு பெறுகின்றது.  புதினங்களில் நிரந்தர முடிவுகளை வாசித்து பழகிய மனதிற்கு நடுக்கடலில் இறுதி பக்கத்தின் இறுதி வரியை அடைந்து விட்டது சமாதானமாக இல்லையென்ற போதிலும் அடுத்த தொகுப்பிற்கென காத்திருத்தலன்றி வேறொன்றும் செய்வதற்கில்லை. 

அமிதவ் கோஷின்  மற்ற நாவலான The Shadow Lines (1988) சாகித்ய அகெதமி விருதை வென்றிருக்கின்றது. இவரது The Circle of Reasons (1986),  The Calcutta Chromosome (1995), The Glass Palace (2000), The Hungry Tide (2005) போன்ற நாவல்களும் பல விருதுகளை வென்றிருக்கின்றன.  இவரது அடுத்த படைப்பான River of smoke இவ்வாண்டு வெளியாக உள்ளது. மேலும் The Imam and the Indian, Dancing in Cambodia and at large in Burma, Incendiary Circumstances கட்டுரை தொகுப்புகளும் In an Antique Land என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமும் வெளியாகியுள்ளன.

The Slow Man – J.M.Coetzee

நமது தேவைக்கேற்ப உடல் இயங்க இயலாமல் போகும் போது அது எத்தனை சுமையானதாக மாறிவிடுகின்றது. அத்தகைய நேரங்களில் பசி தூக்கமின்மை போன்றவற்றை காட்டிலும் மிகுந்த சிரமத்திற்குள்ளாக்குவது இயற்கை உபாதைகளை சமாளிப்பது தான். கட்டுப்படுத்த இயலாமல் கழிவறைக்கு செல்லும் வழியிலோ அல்லது இருக்குமிடத்திலோ சிறுநீர்/மலம் கழித்துவிடுவது செயலிழந்த வாழ்வின் பெரும்பழி. இத்தகைய அடிப்படை செயல்களுக்கும் கூட பிறரை சார்ந்து வாழும் மனிதனின் முக்கிய தேவை பிறரிடமிருந்து பெறப்படும் சிறிய அக்கறையும் சேவையுமாகவே இருக்கக்கூடும். ஆனால் அந்நிலையிலும் தனது காதல் மட்டுமே பிரதானமாக இருக்கின்றது J.M.Coetzeeயின் The Slow Man நாவலின் கதாநாயகனுக்கு.

அறுபதுவயதான பால் ரேமண்ட் தனது சைக்கிளில் வழக்கமாகச் செல்லும் சாலையில் பயணிக்கும் போது விபத்துக்குள்ளாகி தனது கால்களை இழக்கின்றார். விபத்திற்கு பிறகு செயற்கைக் கால்களை விரும்பாத அவரது வாழ்வு சவால்களுடனும் சிக்கல்களுடனும் தவறவிட்ட பலவற்றை நினைவுபடுத்தியபடி நகர்கின்றது. யாருமற்ற தனது வீடும் கூட விபத்திற்கு பிறகு அந்நியப்படுகின்றது.

ஒன்றிரண்டு பணியாட்களுக்கு பிறகு இவரை பார்த்துக்கொள்ளவென நியமிக்கப்படும் மரிஜானாவின் நேர்த்தியான சேவைகள் அவருக்குப் பிடித்தவிதமாகவும் திருப்தியாகவும் அமைகின்றது. முகம் கோணாமல் தனது தேவைகளை அறிந்து தன்னை கூச்சப்படவைக்காத அளவிற்கு பக்குவமாக செயல்படும் அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிடுகின்றார். அவள் குடும்பம் பற்றி அறிந்துக்கொள்கின்றார். அவளது குழந்தைகளை தனது குழந்தைகளாக பாவிக்கவும் எண்ணுகின்றார். அவளின் மகனுக்கு நல்ல கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொள்ள பண உதவி முழுவதும் தானே ஏற்றுக்கொள்வதாக கூறுகின்றார். அதற்கான காரணத்தை அவள் கேட்க, தன் காதலை வெளிப்படுத்துகின்றார். அவள் வேலைக்கு வருவதை தற்காலிகமாக நிறுத்துகிறாள்.

ரேமண்ட்டை விட கிட்டதட்ட பத்து வயது மூத்த எழுத்தாளர் எலிசபத் காஸ்டெல்லோ தீடீரென்று எந்த முன்னறிமுகமும் இல்லாமல் அவர் வீட்டிற்கு வருகின்றார். ரேமண்டின் விருப்பத்திற்கு மாறாக அவர் வீட்டிலேயே தங்கி விடுகின்றார். இவரை பற்றி அனைத்து தகவல்களையும் அறிந்து வைத்திருக்கின்றார் அந்த எழுத்தாளர். தான் அவரைத் தேடி வரவில்லையென்றும் ரேமண்ட் தான் அவரை நாடி வந்ததாகவும் கூறுகிறார். 2003ல் வெளியான இவருடைய முந்தைய நாவல் எலிசபத் காஸ்டெலொவை வாசித்திருந்தால் இக்கதாபாத்திரத்தை இன்னும் சரியாக உள்வாங்கியிருந்திருக்க முடியும்.

இயல்பு வாழ்வின் சீர்குலைவு, புது உறவு, புதிர் மனிதர்களென விபத்திற்கு பிறகு வாழ்கையே மாறிவிட்ட பால் ரேமண்ட், அவருடைய திருமண வாழ்கை, புகைப்பட கலையில் ஆர்வம், அது நிமித்தமான பணி குறிப்புகள், புதிரான எலிசபத் காஸ்டெலோ, காதலை சொன்ன பிறகு இடையிடையே சில நாட்கள் மட்டும் பணிக்கு வந்து போகும் மரிஜானா, குடும்ப நலனுக்காக இத்தகைய வேலைகளை மேற்கொள்ளும்போது அவள் சந்திக்க நேரிடும் சிக்கல்கள், எளிமையான மரிஜானாவின் கணவர், அவர்களது காதல் திருமண வாழ்வு, அவர்களின் மூன்று குழந்தைகளென விரியும் இக்கதை முதல் வாசிப்பில் சாதாரணமாகத் தோன்றினாலும் நிதானமாக ஒவ்வொரு கதாபாத்திரத்தை பற்றி சிந்திக்கும் போதும் சில வரிகளை நினைவுகூறும் போதும் உள்மனவோட்டங்களை நுணுக்கமாக எழுத்துகளில் வடிக்கும் Coetzeeயின் நேர்த்தியை வியக்காமல் இருக்கமுடியவில்லை.

சில உணர்வுகளை சொற்களை கொண்டு சொல்வதைவிட காட்சி படுத்தும் போது அதன் பாதிப்பு அதிகமானதாக இருக்கக்கூடும் என்றே தோன்றும். அத்தகைய உணர்வுகளைக் கூட Coetzeeயால் சொற்களை கொண்டு அழுத்தமாக நிறப்பிவிட முடிகின்றது. சிலகாரணங்களுக்காக மரிஜானாவின் பதின்மவயது மகன் ரேமண்ட் வீட்டில் சிலகாலம் தங்கிச்செல்கின்றான். வீட்டில் விட்டுச்சென்ற பொருட்களைத் திரும்ப எடுக்க வரும்போது ரேமண்ட் கழிவறைக்கு செல்லும் முன்பே தன் உடையிலேயே சிறுநீர் கழித்துவிடுகின்றார். அவன்முன்னிலையில் இப்படி நடந்துவிட்டதே என்று அவர் கழிவிறக்கம் கொள்வதையும், மரிஜானாவின் மகன் எவ்வித பதட்டமோ முகச்சுளிப்போ இல்லாமல் வெகு சாதாரணமாக பார்வையை தவிர்க்க வேண்டிய உறுப்புகளிலிருந்து தவிர்த்து அவர் உடைகளை மாற்றி படுக்கையை சரிசெய்து படுக்கவைத்துச்செல்வதாக சொல்லும் ஒவ்வொரு வரியும் அற்புதமாக சித்தரித்திருக்கின்றார் Coetzee. அதே போல் குளியளறையில் குளிக்கும் போது தவறி விழுந்து, வெகுநேரம் அங்கேயே தண்ணீரில் கிடந்து பின் தன் உடலை தரையோடு நகர்த்தி வந்து முதலில் மரிஜானாவை தொலைபேசி அவளை வரச்சொல்லி அவள் வருகைக்காக காத்திருக்கும் தருணங்கள் மறக்கமுடியாதவை.

நோபல் பரிசுக்கு பிறகு எழுதப்பட்ட இந்நாவலில் Master of Petersburg மற்றும் Disgrace நாவல்கள் ஏற்படுத்திய பிரமிப்பு இல்லை என்றாலும் இப்புத்தகமும் நல்ல வாசிப்பனுபவத்தையே தந்தது. தேவைகளில் தெளிவுள்ள போது தீர்மானிப்பது எளிதாகவும் தீர்மானங்கள் திடமானதாகவும் ஆகிவிடுகின்றன என்றே தோன்றியது நாவலை முடித்தபோது.

இந்நாவலல இணையத்தில் வாசிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கு வாசிக்கலாம்.

Coetzeeயின் மற்ற புத்தகங்களான Waiting for Barbarians 1980 , Age of Iron 1990, Life & Times of Michael K 1983, The Master of Petersburg 1994 போன்ற நாவல்களும் இத்தளத்தில் வாசிக்க கிடைக்கின்றன.

Too Much Happiness – Alice Munro

Too Much Happiness  என்ற தலைப்பிற்காகவே வாங்கிய சிறுகதை தொகுப்பு இது.  இத்தொகுப்பை வாசித்த பிறகுதான் ஆலிஸ் மண்ரோ பற்றிய தகவல்களை இணையத்தில் தேடி படிக்கக்தூண்டியது.  கனடிய சிறுகதை எழுத்தாளரான இவர் 2009ஆம் ஆண்டு தனது இலக்கிய பணிக்காக புக்கர் பரிசையும் மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.  1968ஆம் ஆண்டு இவரது முதல் சிறுகதை தொகுப்பான Dance of the happy shades வெளியானது. 

Too Much Happiness தொகுப்பில் உள்ள பத்து சிறுகதைகளுமே வித்தியாசமானவை.  எங்கோ ஓரிடத்தில் தொடங்கி முன்னும் பின்னும் நகர்ந்து எதிர்பாராவிதத்தில் சட்டென முடிவடைந்துவிடுகின்றன.  ஆனால் பெரும்பாலும் எல்லா கதைகளிலுமே மரணம் தவராமல் நிகழ்ந்துவிடுகின்றது.  மேலும் நாம் கதையின் முக்கிய நிகழ்வாக கருதும் விஷயங்கள் ஓரிரு வரிகளில் அல்லது ஒரு பத்தியில் நின்றுவிடுகின்றன.  உதாரணத்திற்கு மூன்று பிள்ளைகளின் கொலை இப்படி விவரிக்கப்படுகின்றது.

Dimitri still in his crib, lying sideways. Barbara Ann on the floor beside her bed, as if she’d got out or been pulled out. Sasha by the kitchen door—he had tried to get away. He was the only one with bruises on his throat. The pillow had done for the others.

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவத்தை மூன்றே எளிமையான வரிகளில் எழுதி நம்மை உரையச்செய்கின்றார்.  இவ்வரிகளுக்கு முன்னரும் பின்னரும் இச்சம்பவத்தை பற்றிய எந்த விவரனைகளும் இல்லை.  சில கதைகளின் கடைசி வரியும் கூட அவ்வாறே எழுதியிருக்கின்றார்.  காதல், நட்பு, துரோகம், பயம், அன்பு போன்ற உணர்வுகளைக்கொண்ட பொதுவான கதைகலம் தான் என்றாலும் சொல்லப்படும் விதம் வித்தியாசமானவை. 

இத்தொகுப்பில் உள்ள கதைகளில் வெகுவாக கவர்ந்தவை Dimension, Too Much Happiness, Wenlock Edge & Face.  இவரின் சில சிறுகதைகள் The New Yorker இதழில் வாசிக்க கிடைக்கின்றன. 

இத்தொகுப்பின் கடைசி கதையான Too Much Happiness ரஷ்ய கணித மேதையும் நாவலாசிரியருமான சோபியாவை பற்றியது (Sofia Vasilyevna Kovalevskaya) சற்றே நீளமான கதை என்றாலும் மிக முக்கியமான சிறுகதை.  சோபியாவை பற்றிய புத்தமும் (‘Beyond the Limit : The Dream of Sofya Kovalevskaya – 2002”) படமும் (Sofya Kovalevskaya – 1985) கூட வெளியாகியுள்ளன.  மேலும் சோபியாவை பற்றி அறிந்துக்கொள்ள Little Sparrow : A Potrait of Sophia Kovalesvky – 1983 புத்தகத்தை இத்தொகுப்பின் நன்றியுரையில் ஆலிஸ் மண்ரோ பரிந்துரைத்திருக்கின்றார். 

2006ஆம் ஆண்டில் வெளியான “The View from the castle rock” தொகுப்பை தனது இறுதி படைப்பாக அறிவித்திருந்தார்.  மூன்றாண்டுகள் கழித்து 2009ஆம் ஆண்டில் Too much happiness வெளியானது.  இவரது “The Bear Came Over the Mountain” சிறுகதை “Away from her” என்ற திரைப்படமாக  வெளியாகி பல விருதுகளை வென்றது.  இக்கதையும் New Yorkerல் வாசிக்க கிடைக்கின்றது.

பிகு : Too much happiness முழு தொகுப்பை இங்கும் வாசிக்கலாம்.

களஞ்செதுக்குதல்

நம்பிக்கைகள் பொய்த்துப்போன
ஓர் உச்சி வேளையில்
நினைவுகளில் நீந்தவும்
திராணியில்லாமல்
களஞ்செதுக்கப்படுகிறது
 
திரளும்
அன்பையும் வெறுப்பையும்
உணர்ந்து கொள்ள
சிறு கால அவகாசமோ
இடைவெளியோ
தேவையாய் தான் இருக்கின்றது
 
மண்வெட்டிகளின் அவசியம்
உணரும் போது
இறுக்கங்களை தளர்த்தும்
மண்புழுக்கள்
பிரதானப்படுவதேயில்லை 

********************************

தூண்டாவிளக்கு 
 
பதில்களுக்கான கேள்விகளற்றும்
தீர்மானங்களுக்கான சிந்தனைகளற்றும்
விரிந்து கொண்டுள்ள
எழுத்தின் இயல்புகளை 
ரகசியங்களென்று
திரிக்கத் தெரிந்திருக்கிறது
யாவருக்கும். 
 
காலங்காலமாய்
தூண்டாவிளக்குகள்
எரிந்து கொண்டேதானிருக்கின்றன
 
எல்லா விழித்தலிலும்
பார்த்தல் சாத்தியம் என்கிறீர்கள்
 
நகர்ந்து கொண்டிருக்கிறது
விழித்த பகல் சிரித்தபடி

 

கான்ஸ், ப்ரான்ஸ்
21 மே 2010

தொன்னூறுகளில் கலைப்படங்களின் நட்சத்திரமான கியரோஸ்டமி கடந்த பத்து ஆண்டுகளாக நிழற்படத்துறையிலும் (still photography) திரைப்பட பரிசோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகிறார். இவர் Taste of Cherry படத்திற்கு கான்ஸ் திரைப்படவிழாவின் முக்கிய விருதான Palme d’Or விருதை 1997ஆம் ஆண்டு வென்றவர். ஜூலியட் பினோச்சும் வில்லியம் ஷிமல்லும் நடித்துள்ள இவரது சமீபத்திய படமான ‘Certified Copy’ கான்ஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட உள்ளது. சில தந்திரமான பிரதிபளிப்புக்களும் நம்பிக்கைகளை பற்றிய தத்துவ எண்ணங்களும் தொன்னூறுகளில் வெளியான ‘close-up’ படத்தைப்போன்றே இருந்தாலும் முதன் முதலில் இரானிற்கு வெளியே படமாக்கப்பட்ட ‘ceritified copy’ சிறந்த படமாக இருக்கின்றது.

இவ்வருட கான்ஸ் திரைப்பட விழாவின் போஸ்டர்களில் முக்கிய முகமான பினோச்சிற்கு இப்படம் மிகச்சிறந்த பெயரை பெற்றுத்தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவர் ப்ரான்ஸ், ஹாலிவுட்டைக்கடந்து தாய்வான் இயக்குனரான Hou Hsiao-hsien மற்றும் இஸ்ரேல் இயக்குனரான Amos Gitaiயின் படங்களிலும் நடித்துள்ளார். அடுத்து நடிக்கப்போவது சீன இயக்குனரான Jia Zhangkeயின் படம் என்கிறார்.

ஊடகங்களுக்கான திரையிடலில் சில எதிர் விமர்சனங்களை கண்டிருந்தாலும் ‘Certified Copy’ மிகுந்த உற்சாகமான வரவேற்பையும் கான்ஸ் திரைப்படவிழாவில் முன்னனி இடத்தை வகிக்கக்கூடிய எதிர்ப்பார்ப்பையும் பெற்றுள்ளது.

இவ்வருட கான்ஸ் திரைப்பட தேர்வுகளின் நடுவர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டிய இரானிய இயக்குனரான ஜாபர் பனஹி டெஹரான் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையை பற்றி கியரோஸ்டமி மிகுந்த வருத்தத்துடன் பேசினார். பனஹியை கௌரவிக்கும் வகையில் எல்லா திரைப்பட போட்டி திரையிடல்களிலும் அவருக்கான இருக்கை காலியாகவே இருக்குமென அறியப்படுகின்றது.

திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட அப்பாஸ் கியரோஸ்டமியுடன் டென்னிஸ் லிம் கண்ட நேர்காணலிலிருந்து ஒரு பகுதி :

கேள்வி : இங்கு இருக்கும்போது ஜாபர் பனஹியை ஆதரித்தும் இரானிய அரசை கண்டனம் செய்தும் குரல்லெழுப்புகின்றீர். டெஹரானில் வசிக்கும் நீங்கள் உங்களின் அடுத்தப் படத்தையும் இரானிலேயே படம்பிடிக்க தீர்மானித்துள்ளீர். இதனால் எழப்போகும் விளைவுகளை பற்றி நீங்கள் சிந்திக்கவில்லையா?

பதில் : எனது படப்பிடிப்பு அனுமதியை ரத்து செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. மேலும் எனது படங்கள் இரானில் வெளியிடப்படுவதில்லை. அதற்கு மேல் அவர்கள் வேறு என்ன செய்யமுடியும். ஆரம்பத்தில் ஜாபர் பனஹியின் பாஸ்போர்டை எடுத்துக்கொண்டது போல் என்னிடத்தும் நடத்துக்கொள்ளலாம் என்ற நினைக்கின்றேன்….தெரியவில்லை என்ன நடக்குமென்று.

கேள்வி : ‘Certified copy’ என்ற படம் தங்களின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் வேறானது என்று பலரும் கூறுகின்றனர். நீங்களும் அப்படி கருதுகிறீர்களா?

பதில் : நான் என்னுடைய உழைப்பை பற்றிய முழுமையான கருத்தைக்கொண்டவனல்ல. ஒவ்வொரு படமாக செய்கின்றேன். இந்த நேரத்தில் இப்படம் மிகவும் நெருக்கமானதாக இருக்கின்றது. அதனால் இது என் கண்ணை மறைக்கின்றது, என்ன செய்தேன் என்பதை என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. உதாரணத்திற்கு ‘The wind will carry us’ (1999) படத்தை உருவாக்கியபோது பார்த்தேன். பிறகு சமீபத்தில் மீண்டும் அதை கண்டெடுத்தேன். பத்து வருடங்கள் கழித்து வேறு பார்வைகள் கொண்டு வேறு விதமாக அதை என்னால் பாக்கக்கூடுமெனத் தோன்றியது. தற்பெருமையாக கருதவேண்டாம். எனக்கு அப்படம் பிடித்திருந்தது. வேறொருவரின் படமாக என்னால் அதை பார்க்க முடிந்தது.

கேள்வி : இரானிற்கு வெளியில் நீங்கள் படமாக்கிய முதல் திரைப்படம் இது. எப்போதும் தொழில் முறை நடிகர்கள் அல்லாதவர்களை வைத்து வேலை செய்யும் நீங்கள், இத்திரைப்டத்தில் தேர்ந்த நடிகர்களை கொண்டு அவர்களை ஒரு மொழியல்ல மூன்று மொழிகள் பேசவைத்து இயக்கியிருக்கின்றீர்கள். எழுதி இயக்கும் முறைகளில் இத்தடவை எதாவது வித்தியாமான வழிகளை கையாண்டீர்களா?

பதில் : எப்போதும் போல் பார்ஸியில் எழுதினேன். நடிகர்கள் வெவ்வேறு மொழிகளில் பேசவேண்டும் என்பதைபற்றியோ, மொழிபெயர்க்கப்படவேண்டும் என்பதை பற்றியோ முதலில் கவனம் செலுத்தவில்லை. படப்பிடிப்பின் போதும் சூழல்கள் தான் வேறாக இருந்ததே தவிர செயல்முறைகள் அடிப்படையில் ஒன்றாகவே இருந்தன. ஜூலியட் போன்ற நட்சத்திரங்களுடன் வேலை செய்வது சற்று பதற்றமாக இருந்தது. புதியதாவகவும் வித்தியாசமாகவும் இருக்குமென்று நினைத்தேன். ஆனால் எங்களுக்கிடையில் நல்ல புரிதல் இருந்தது. அவர் தேர்ந்த தொழில் முறை நடிகை என்றாலும் அப்படி நடந்துக்கொள்ளவில்லை.

கேள்வி : அவர் தேர்ந்த தொழில் முறை நடிகை என்றாலும் அப்படி நடந்துக்கொள்ளவில்லை என்று எந்த விதத்தில் கூறுகிறீர்கள்?

பதில் : தொழில் முறை நடிகர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவார்கள் செல்வார்கள். இதயரீதியாக அல்லாமல் தொழில் ரீதியாகவே அனுகுவார்கள். இரான் உட்பட எல்லா இடங்களிலும் பெரும்பாலான நடிகர்கள் அப்படிதான் நடந்துக்கொள்வர்கள். ஆனால் ஜூலியட் அப்படி இல்லை. அவர் அவராகவே இருந்தார். அவரின் அருமையான திறமைகளையும் அனுபவங்களையும் வெளிக்கொணர்ந்தார். என்னுடன் முன்பு பணிபுரிந்தவர்கள் நடந்துக்கொண்டது போலவே இவரும் இருந்தார். இதயபூர்வமாக நடித்தார்.

கேள்வி : தற்போது முடிக்கப்பட்ட இப்படம் அதன் மூல திரைகதைக்கு சமீபமானதாக இருக்கின்றதா அல்லது படப்பிடிப்பின் போது மாற்றங்கள் செய்யப்பட்டனவா?

பதில் : வரிசை படியே படப்பிடிப்பு நடத்தினோம். முதல் பகுதி முழுவதுமாக எழுதப்பட்டிருந்ததால் அதன்வழியிலேயே பயணித்தோம். இரண்டாவது பகுதியை ஒவ்வொரு நாளும் மீண்டும் எழுதினோம். சில காட்சிகளை நீக்கினோம் சிலவற்றை முழுவதுமாக மாற்றி அமைத்தோம்.

கேள்வி : உங்களுடைய பல படங்களில் காரில் நீண்ட வசனங்கள் பேசுவதாக அமைந்துள்ளன. அதுபோல் ‘Certified Copy’யிலும் ஆரம்பக்கட்ட காட்சிகளுண்டு. The Taste of cherryயிலும் நீங்களே கண்ணில் படாத ஓட்டுனராகவோ பயணியாகவோ காரோட்டும் காட்சிகளில் நடித்திருந்தீர்கள். இப்படத்திலும் அப்படிப்பட்ட காட்சிகளை அமைத்துள்ளீர்களா?

பதில் : இம்முறை மிகவும் நேர்த்தியான தேர்ந்த நடிகர்கள் என்பதால் நான் புகைப்பட இயக்குனருடனும், ஒலி நிபுனருடனும், மொழிபெயர்ப்பாளருடனும் பின் இறுக்கையில் ஒளிந்திருந்தேன். நான் அங்கு இருக்கவேண்டிய அவசியமிருக்கவில்லை. Taste of cherryயில் கேமராவிற்கு முன் தனியாக நிற்கும் நடிகர்களுக்கு நான் உடன் இருக்கவேண்டிய தேவை இருந்தது.

என்னுடைய அடுத்த படமும் ஒரு சாலைப்படம் தான். என்னுடைய ‘Ten on 10’ படத்தில் ஏன் இது போன்ற கார் ஓட்டும் காட்சிகளை வைக்கின்றேன் என்று விளக்குவேன். காரில் இருப்பது எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கின்றது. கேமராவின் இருப்பை மிகக்குறைவாகவே உணரவைக்கும் இடங்களில் காரும் ஒன்று. மறக்கமுடியாத படங்களில் ஒன்றான ஸ்பீல்பெர்கின் ‘Duel’ படம் ஹிட்ச்காகின் படங்களை நினைவுபடுத்தினாலும் ஹிட்ச்காகின் படங்களை விட இது எனக்கு மிகவும் பிடித்தமானது.

என்னை காரில் ஒரு கேமராவுடனும் பூட்டிவிடுவதானால் கூடவே ஒரு நடிகையும் இருந்தால் நான் ஆட்சேபிக்கவேமாட்டேன். காரை விட்டு வெளியேற மாட்டேன் என்று உறுதியளிப்பேன். இரானிற்கு திரும்பும் போது பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டால் என்னை சிறையில் அடைக்காமல் காரில் பூட்டிவிடும்படி சொல்லலாம் அவர்களிடம்.

பிகு : இவ்வருடம் ‘Uncle Boonmee Who Can Recall His Past Lives’ என்ற தாய் படம் கான்ஸ் திரைப்பட விழாவின் முக்கிய விருதான the Palme d’Or ஐ பெற்றுள்ளது. Certified Copyயில் நடித்த ஜூலியட் பினோச்சிற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது

மூலம் :
http://artsbeat.blogs.nytimes.com/2010/05/21/a-double-bill-with-binoche-and-kiarostami/

மொழிபெயர்ப்பு : நதியலை

நன்றி : உன்னதம் ஜூன் 2010 இதழ்

 மூலம் :  An interview with Adhaf Soueif by Ahmede Hussain

எகிப்தில் பிறந்தவரான நாவலாசிரியர் அதாஃப் சோய்ப் எகிப்து மற்றும் இங்கிலாந்தில் கல்வி பயின்றவர். UK லான்கஸ்டர் பல்கலைகழகத்தில் மொழியியலில் ஆய்வறிஞர் பட்டம் பெற்ற இவர் அரசியல் மற்றும் கலாச்சார விமர்சகரும் கூட. தற்போது தமது பிள்ளைகளுடன் லண்டன் மற்றும் கெய்ரோவில் வசித்து வருகிறார்.

அவரது படைப்புகள் The Map of Love, In the Eye of the Sun என்ற நாவல்களும், Ayisha, Sandpiper என்ற சிறுகதை தொகுதிகளும் Mezzaterra : Fragments from the Common Ground என்ற கட்டுரைத் தொகுப்பும் வெளியாகியுள்ளன. மேலும் அரபு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்த Mourid Barghoutiயின் ‘I Saw Ramallah’ 2004ல் வெளியானது. அவரது The Map of Love (London, 1999) இதுவரை 16 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. புக்கர் பரிசு பரிந்துரைக்கு தேர்வான ஆறு நூல்களில் இதுவும் ஒன்று. 2007ஆம் ஆண்டு எழுத்தாளரும் பத்திரிக்கை ஆசிரியருமான அமீத் ஹுசைன் அவரிடம் கண்ட நேர்காணல் இது.

Ahmede : பெரும்பாலான மக்கள் அரபி மொழி பேசும் வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதியிலிருந்து வெளியாகும் ஆங்கில புனைவிலக்கியங்கள் எவ்விடம் வகிக்கின்றன?

Adhaf Soueif : பொதுவாக புனைவுகளுக்கான இடம் அல்லது இலக்கியத்திற்கான இடமென்று பார்த்தால் அது சிறுபான்மையாகவே இருக்கின்றது. எண்ணிக்கையை பற்றி சரியாக தெரியவில்லை என்றாலும் மக்கள் தொகையில் ஒரு சதவீதத்திற்கு மேல் நாவல் வாசிப்போரின் எண்ணிக்கையிருந்தால் ஆச்சரியம் தான். திரைப்படங்களும் தொலைக்காட்சி தொடர்களும் தான் அதிக பிரசித்திபெற்ற ஊடகங்களாக இருக்கின்றன. தற்போது அரபு தேசங்களில் அரபிய எழுத்தாளரின் ஐரோப்பிய மொழி நாவலை வாசிப்போர் இந்த ஒரு சதவீதத்தில் மூன்றில் ஒரு பங்காக இருக்கக்கூடும்.

அதனால் பொதுவாக ஆங்கில இலக்கியம் இப்பகுதிகளில் எவ்விடம் வகிக்கின்றதென கேட்டால் பெரிதாக இல்லை என்பதே பதிலாக இருக்கும். உங்கள் கேள்வி இப்பகுதியில் இலக்கியம் வாசிப்போரின் மத்தியில் எவ்விடம் வகிக்கின்றதென்றால் நிச்சயம் அதற்கென ஒர் இடம் உண்டென கூற முடியும். விற்பனையாகும் எனது புத்தகங்களின் பெரும் பகுதி அரபிய மொழியை முதல்மொழியாக கொண்டவர்களையே சென்றடைகின்றதென்றே நம்புகிறேன். அரபு ஊடகங்களும் ஒவ்வொரு புதிய புத்தகம் வெளிவரும் போதும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. மேலும் எகிப்திய பல்கலைக்கழக முதுகலை இலக்கிய மாணவர்கள் ‘ஆங்கிலத்தில் அரபு இலக்கியம்’ சார்ந்த தலைப்புகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர் என்று அறிகிறேன்.

Ahmede : Mourid Barghoutiயின் “I Saw Ramallah” என்ற புத்தகத்தை அரபிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்துள்ளீர். அத்தகைய சிரமமான மொழி நடையை மொழியாக்கம் செய்த அனுபவங்களை பற்றி கூற முடியுமா? அரபிய மொழியில் வாக்கிய அமைப்புகள் ஆங்கிலத்திற்கு முற்றிலும் வேறாக இருப்பதால் கடுமையான பணியாக இருந்திருக்க கூடுமல்லவா?

Adhaf Soueif : ஆமாம். Ra’aytu Ramallah மிகவும் சுவாரஸ்யமான புத்தகம். உரைநடையில் ஒரு கவிஞரின் புதிய முயற்சி. இது மிகவும் நேரடியாகவும் நெருக்கமானதாவும் தோன்றும். ஆசிரியருக்கும் தோன்றியது போலவே ஒவ்வொரு உணர்வும் வாசகனையும் தாக்கும், அதே நேரத்தில் Mourid Barghouti போன்ற கவிஞர்களிடமிருந்து எதிர்ப்பார்க்கும் மேன்மை, பக்குவமான கட்டமைப்பு உயர்ந்த செழுமையான மொழி தனது செயல்களை அறிந்திருக்கும்.

சில தவறான தொடக்கங்களுக்குப் பிறகு அதிக சாவதானம்தான் மோசமான மொழியாக்கதை தருமென்று அறியமுடிந்தது. அரபிய மொழியில் வாசிக்கும் போது ஆங்கிலத்தில் சொல்லிப்பார்த்துக்கொண்டேன். அதை அப்படியே டேப்ரிக்கார்டரில் பதிவு செய்யும் எண்ணம் உதித்தது. அரபிய மொழியின் உடனடித்தன்மையும் பொலிவும் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டுமென்ற அக்கறையோடு செயல்பட்டேன். இவ்வழி எனக்கு முழு திருப்தியும் அளித்தது. அதனால் பக்கங்களில் இருக்கும் வார்த்தைகளில் பார்வை நகர்ந்துக்கொண்டிருக்க ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை அப்படியே டேப்ரிக்கார்டரில் பதிவு செய்தேன். பிறகு இருமுறை அதை திருத்தினேன். முடிந்த அளவு அதே வாக்கிய அமைப்பில் கொண்டுவர முயற்சித்தேன். சிலவற்றை மாற்றவும் நேரிட்டது.

Mourid Barghouti எனது நெருங்கிய நண்பர் என்பதால் மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களை எடுத்துரைத்தேன். மாற்றங்களுக்கு ஒப்புக்கொண்டு மிகவும் உதவியாக இருந்தார். எடுத்துக்காட்டாக அவர் எப்போதும் தான் சந்திக்கும் மக்களை அடைமொழி இட்டே அழைப்பார். நான் டாக்டர் x ஐ சந்தித்தேன், திருமதி y சுற்றிக்காட்டினார். அரபிய மொழியில் இப்படி எழுதுவது வாக்கியத்தோடு கச்சிதமாக பொருந்திப்போகும். ஆனால் ஆங்கிலத்தில் துருத்திக்கொண்டு நிற்கும். அதனால் எல்லா அடைமொழிகளையும் நீக்கிவிட முடிவு செய்தோம். மேலும் சில எழுத்துக்கள் அலங்காரச்சொற்களால் தொடர் வாங்கியங்களாக நீளும். இப்படி எழுதுவது அரபியில் பழகிய ஒன்றென்றாலும் ஆங்கிலத்தில் அப்படி எழுதினால் சரியாக இருக்காது. அதனால் இவை எல்லாவற்றையும் மாற்றினோம். என் மொழியாக்கத்தில் வந்த ‘I saw Ramallah’ வைவிட மூலப்பிரதியான ‘Raayatu Ramallah’ மிகச்சிறந்த புத்தகம் என்றாலும் என்னளவில் நான் முயற்சி செய்தேன்.

Ahmede : உலகமுழுவதும் பரவியுள்ள மத தீவிரவாத அச்சுறுத்தலை எவ்வாறு காண்கிறீர்கள்?

Adhaf Soueif : எல்லா மத தீவிரவாத செயல்களையும் ஒரே பகுப்பாக வைத்து நாம் பேச முடியாதென்றே நம்புகிறேன். எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் கிறிஸ்தவ ஜியொனிசத்தின் செயல்பாடுகள் எகிப்தில் இயங்கும் சலாபி செயல்பாடுகளுக்கு முற்றிலும் வேறானது. அமெரிக்காவை ஆட்கொண்டிருக்கும் கிறிஸ்தவ ஜியொனிசம் அரசியல்வாதிகளால் தேவைக்கேற்றவாரு ஆதிக்கம் செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. மேலும் அதன் நோக்கம் உலகப்போரை உருவாக்குவதும் உலக அழிவை நோக்கியதும்தான். யூத மத தீவிரவாதம் மிகவும் சுவாரஸ்யமானது. ஒரு விதத்தில் அதன் விளைவு பாலஸ்தீனியர்களிடமிருந்து நிலங்களை ஆக்கரமித்த இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களிடத்தில் கொடுமையாக, தீவிரமாக மதவெறியோடு இயங்கச்செய்தது. மற்றொரு விதத்தில் ஜியொன் இப்புவியில் உருவாக முடியாது என்றும் இஸ்ரேலிய நிலை மதங்களுக்கெதிரானதென்ற நம்பிக்கையையும் கொண்ட “நாட்சுரா கார்டி” (Natura Kartei) போன்ற யூத இயக்கங்கள் உருவாக காரணமாக இருக்கின்றது. அதீத அரசியல் பாரபட்சங்களை உணர்ந்ததாலும் இஸ்லாமிய உலகில் மேற்கத்திய கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்துவதினாலான பயத்தாலும் விருப்பமின்மையாலும் இஸ்லாமிய மததீவிரவாதம் தோன்றியது என்று நினைக்கின்றேன். உலகின் பல்வேறு பகுதிகளில் அரசியல் மற்றும் பொருளாதார செயல்கள் மதம் என்ற போர்வைக்குள் செயல்படுவது நிச்சயமாக வருத்தத்திற்குரியதே.

Ahmede : கிழக்கு ஆசிய நாடுகளில் கலையை விட சமூக வாழ்வியல் யதார்த்தமே முக்கிய பங்கு வகிக்கின்றது என்று பலரும் சொல்கின்றனர். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? நாவலாசிரியரின் பங்கு பெண்ணுரிமை பேச்சுரிமை போன்ற அடிப்படை பிரச்சனைகளில் மட்டுமே ஈடுபடவேண்டியதாக உள்ளதா?

Adhaf Soueif : ஒரு கலைஞன் தனக்கு மிகவும் விருப்பமான அல்லது மிகவும் பாதித்த கருவையே தேர்வு செய்ய வேண்டும். அப்படி தேர்வு செய்யப்படுபவை நமது வாழ்நிலம் சார்ந்ததாகவே இருக்கும். ஆனால் எல்லோருக்கும் பொதுவான மனிதம் தான் இறுதியில் எல்லோரையும் இணைக்கின்றது. அதனால் தான் ஒரு எகிப்தியன் ருஷ்யா அல்லது இந்திய அல்லது அமெரிக்க நாவல்களை வாசிக்கவும் புரிந்துக்கொள்ளவும் ரசிக்கவும் முடிகின்றது.

Ahmede : உயர்ந்த கலாச்சார பின்னணியிலிருந்து வந்த நீங்கள் எகிப்திய நாவலாசிரியர் என்று இப்போதும் அழைக்கப்படுகிறீர்கள். ஒரு அரபிய பெண்மணி என்ற வகையில் எத்தனை சுதந்திரமாக உணர்கிறீர்கள்?

Adhaf Soueif : ஆமாம். நான் ஆங்கிலத்தில் எழுதும் ஒரு எகிப்திய நாவலாசிரியர் தான். வேறு யாராக இருக்க முடியும்? மற்ற எல்லோரும் சுதந்திரமாக இருப்பது போலவே நானும் இருக்கின்றேன். என்னை ஈர்க்கும் விஷயங்களை பற்றியும், விரிவாக ஆராய வேண்டிய விஷயங்களை பற்றியும் எழுதுகின்றேன். அரபிய பெண்மணி என்பதாலோ ஒரு நாவல் ஆசிரியர் என்பதாலோ குறிப்பாக எந்த தடையும் இருப்பதாக உணரவில்லை.

Ahmede : 1900ஆம் ஆண்டை கதை காலமாக கொண்ட The Map of Love நாவலில் ஆங்கிலேய பெண்மணி எகிப்தியரிடம் காதல் கொள்வதாக அமைத்துள்ளீர்கள். வரலாற்றில் தனிமனிதனின் பங்களிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

Adhaf Soueif : பொதுவாக எனக்கு தெரிந்த மக்கள், பேசும் சுவாரஸ்யமான மனிதர்கள் எல்லோருமே அரசியல் மற்றும் பொதுநல அக்கறைகளும் தங்கள் வாழ்விலும் மற்ற எல்லோரின் வாழ்விலும் பங்குவகிக்கின்றன என்று அறிந்து உள்ளனர் என்றே நினைக்கின்றேன். மேலும் எல்லோரின் நலனுக்காகவும் அவர்கள் பொது வாழ்வில் செயல்படக்கூடியவர்கள். பொது வாழ்வைப் பற்றிய அக்கறை இல்லாத மனிதர்கள் வெகு குறைவே. என்னால் பொது வாழ்கையிலிருந்து விலகி செயல்படும் ஒரு வாழ்வை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதுவே என் எல்லா படைப்புகளிலும் பிரதிபலிக்கின்றது என்று நினைக்கின்றேன். நான் உருவாக்கும் கதாபாத்திரங்கள் நிஜக்கதைகளிலும் உண்டு. அதனால் என் கதாபாத்திரங்கள் நிஜ உலகில் குறிப்பிட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்திருப்பர். அக்காலகட்டங்களில் நிகழும் அரசியல் அல்லது பொதுச் சம்பவங்கள் அவர்களை பாதிக்கும், அதன் பிரதிபலிப்பாக அவர்கள் அதனை மாற்ற பாடுபடுவர்.
ஜனவரி 2007.

தமிழில் : நதியலை

நன்றி :  அகநாழிகை – ஜூன் 2010