Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சுந்தர ராமசாமி’ Category

உறவு அது அப்படித்தான்

 கவர்ந்திழுக்கும் அத்தர் நெடியடிக்கும்

 அணைத்துப் பிசையும் பூப்பூவாய்ப் பூக்கும்

 மனங்கள் இணைத்து ஆக்கங்கள் மலரும்

 காலடியில் அடிவானங்கள் குவியும்

 அதன்பின் எகிறிக் குதித்து இரத்தம் கசியும்

துருவின் துகள்கள் புற்றுப்போல் குவிந்து

பார்வைகள் திரியும்

கசப்பு மண்டி அடித்தொண்டை அடைத்து

மலக்கிடங்கில் விழுந்து சாகும்

மீண்டும் உயிர்த்தெழுந்து வாசம் பரப்பி

வளைய வரத் தொடங்கும்.

 

**************************************************

 

இந்த வாழ்க்கை

———————-

இந்த நிமிஷம் வரையிலும் இருந்ததுபோல்

இனி என் வாழ்க்கை இராது என

ஒரு கோடி முறை எனக்குள் சொல்லிக்கொள்கிறேன்

என்ன பயன்? 

என்னை நான் இகழ்ந்துக்கொண்டதைத் தவிர 

நான் என் காலை வைக்க வேண்டிய படி எது?

நான் குலுக்க வேண்டிய கை

நான் அணைக்க வேண்டிய தோள்

நான் படிக்க வேண்டிய நூல்

நான் பணியாற்ற வேண்டிய இடம்

ஒன்னும் எனக்கு தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை

 

– சுந்தர ராமசாமி

Read Full Post »

அவன் விடைபெற்றுக்கொள்ளும் நிமிடங்கள்
என் மனத்தில் துடிக்கத் தொடங்கவே
பரபரத்து ஓடினேன் பார்க்க
அப்போது அவன் சூன்யத்தில்
ஆனந்த ஓய்வுகொண்டிருந்தான்
புழு அவனைத் தின்றுக்கொண்டிருக்கும் நிலையிலும்
கண்களில் உயிரின் பிரகாசம் மின்னிற்று
ஆனந்த ஓய்வில் அவன் எழுதியிருந்த கவிதையை
– கடைசி வரிகளா அவை – பார்த்தேன்
மரக்கிளைக் குருவி ஒன்று அருவியைப் பார்ப்பது போல்.
மரணம் இறங்கும் விதத்தைப் பார்க்கிறான்
அதற்கு மேல் ஒரு மயிரிழை இல்லை
ஈரக்கசிவு இல்லை இன்னும் கொஞ்சம் எனும் இரங்கல் இல்லை
கடைசிப் புள்ளியில் தளம் கட்டும் துக்கம் இல்லை.

ஆற்றாமை என் தொண்டையை அடைக்க
இழை அறாது என் மனதில் ஓடும் மரணத்தை
மிக மோசமாக மீண்டும் வெறுத்தேன்
அப்போது அவனுடைய ஆனந்த ஓய்வு
அதன் பரிபூரணத்தை அடைந்து முடிந்திருந்தது
இறந்துகொண்டே திரும்பினேன்.

– சுந்தர ராமசாமி

Read Full Post »

மொழியை வலையாக மாற்றி
வீசிப் பிடிக்க முயன்றபோது
கிழித்துக்கொண்டு வெளியே ஓடிற்று உண்மை
பிடிக்கப் பின்னால் பாய்ந்தேன்
பலன் இல்லை
மூச்சுத் திணறி சோர்ந்த சரிந்தேன்
பின் ஏதேதோ யோசனைகள்
தூக்கம்
கண் விழித்ததும் குழந்தைப்போல்
மார்பில் அமர்ந்திருந்தது உண்மை
மௌனம் பிடிக்கும் என்றது
யோசனை பிடிக்கும் என்றது
அதிகம் பிடிப்பது
அன்புதான் என்று சொல்லிச் சிரித்தது

– சுந்தர ராமசாமி (தொகுப்பு – சுந்தர ராமசாமி கவிதைகள்)

Read Full Post »