Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘யுகபாரதி’ Category

உன்னையொருவன் தாக்குகையில்
உணர முடியும் பகையென்று
தன்னைத் தானே தாக்குமிவன்
தன்மைக்கிங்கே யாது பொருள்?

அடிமேலடிகள் விழுந்துவிட
அம்மிக்கல்லு நகருமெனில்
முடிவேயின்றி இவன் தன்னை
முட்டிக்கொள்வது சோகரசம்

இன்னொரு கன்னம் காட்டிடுக
இயேசு சொன்னது அமைதிக்கு
தன்னுயிர் சொட்ட தாக்குமிவன்
தருகிற தகவல் வறுமைக்கு

கண்ணடி பட்டால் காதலெனும்
கவிதைகளுண்டு ரசிப்பதற்கு
தண்டனைபோல கசையடித்து
தட்டுகளேந்தும் நிலையெதற்கு?

கதிரடி பட்டால் நெல் குவியும்
கணக்கு உள்ளது வயற்காட்டில்
முதலடி பட்டால் நஷ்டம்வரும்
மூத்தோர் சொல் மனக்கூட்டில்

தன்னைப்போல பிறவுயிரை
தரிசிக்கத்தானே வேண்டுமென
தன்னைத் தாக்கி உலகியலைத்
தண்டிக்கிறானோ?  புரியவில்லை

இன்னொரு ஜென்மம் வந்தாலும்
இப்படியே நாம் அடிபடுவோம்
என்பதைச் சொல்லித் தரத்தானோ
எதிரே வருகிறான்?  தெரியவில்லை

அன்னைதந்த பால்முழுதும்
அய்யோ வழியுது உடலெல்லாம்
முன்னம் யாரோ செய்தபிழை
முற்றிவிட்டது தெருவெல்லாம்

சலங்கை கட்டிய பாதங்கள்
சாட்டையடியில் குலுங்கிவிடும்
அலங்கோலத்தை வெளிக்காட்டும்
ஆவணமென்பது விளங்கிவிடும்

அடிபோல் உதவ மாட்டார்கள்
அண்ணன் தம்பி ஆனாலும்
தடந் தோள் துடிக்கும் இவனென்றும்
தரைமேல் நடக்கும் வேதாளம்

– யுகபாரதி (தொகுப்பு : தெருவாசகம்)

Read Full Post »

நெடி
———–
பால் வீச்சம்
அடிக்கிற
பருவத்திலேயே
சாராய நெடியை
சரியாகக்
கண்டுகொண்டவன்
நான்

அன்பு போதையில்
அழுத்திக் கொடுத்த
அப்பாவின் முத்தம்
சுர்ரென்று
மூக்கிலேற

எப்போது
நினைத்திடினும்
சுணங்கிடுவேன்

அம்மாயெப்படி
ஆயுள் முழுசும்?

*************************

களவு
———–
இடைவெளிகள் தான்
நெருக்கத்தைத்
தீர்மானிக்கின்றன
எனினும்
நெருக்கமற்ற
இடைவெளிகள்
பிரயோசனமற்றவை

Read Full Post »

பஞ்சாரம் தொகுப்பில் ரசித்த கவிவரிகள் சில….

எறும்புகள் எதற்கும்
தயாரானவை
எங்கிருப்பினும்
இனிப்பெனில்
மொய்த்துவிடுகின்றன
தயக்கமற்று

*************

யேந்துமென்
அலுமினியத் தட்டில்
வீசுவதற்கென்றே
சேமிக்கிறாய்
செல்லாத நாணயம்

*************

கிழிந்து விடுமெனத்
தெரிந்தும்
அடித்தே துவைக்கிறாய்
என் நைந்த மனசை

*************

நட்டும்
வளராமல் போகிறது
பூச்செடி
நடாமலேயே
நிழல் கொடுக்கின்றன
மரங்கள்

Read Full Post »