Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘வாசித்த நூல்கள்’ Category

அன்றாட அலுவல்கள் நெறிக்கும் அவசரச் சூழல்களில் உழன்றுக் கொண்டிருக்கும் பலருக்கும் எதிர்கொள்ள வேண்டிய பணிகளில் மட்டுமே கவனமிருக்க கடந்தவைகள் கடந்தவையாகவே நிலைத்துவிடலாம். ஓடிக்கடக்கும் காலங்களில் தற்செயலாக சில தினங்கள் சிறு அவகாசம் கிடைத்தால் தன் வாழ்நாளில் காலம் ஆசிர்வதித்த அல்லது நிராகரித்த பல கணங்கள் நினைவிலிருந்து துளிர்க்கும். அத்தகைய நினைவுகளில் மூழ்கி புதிய பரிமாணங்களோடு தொடரும் நினைவோட்டத்தில் எல்லாவித உணர்வுகளும் கலந்திருக்கக்கூடும். ஓய்விற்கு பிறகு தொடரவேண்டிய ஓட்டத்தில் இவ்வுணர்வுகள் தடங்கள்களாக மாறும் அபாயங்களும் உண்டு.

கஸோ இஷிகுரோ எழுதிய The Remains of the day முதிர்ந்த வயதில் அபூர்வமாக தனக்கு கிடைத்த ஆறு நாட்கள் ஓய்வில் அவர் மேற்கொள்ளும் பயணமும், பயணத்தினூடாக அவர் சந்திக்கும் இடங்களும், மனிதர்களும், அனுபவங்களும் கொண்டும் நகரும் நிகழினூடே கடந்தவைகளும் கதையாக பகிரப்பட்டிருக்கின்றன. வேலை வேலை என்று தன் காலம் அனைத்தையும் யாரோ ஒருவருக்காக உழைத்து கழித்துவிட்ட பிறகும் எஜமானருக்கு விஸ்வாசமாக இருந்ததிற்காக பெருமிதம் கொள்ளும் அந்த முதியவரின் மனநிலையை வாசிக்க சற்று ஆயாசமாகவே இருந்தது. இன்றைய சூழலுக்கு இவையெல்லாம் அந்நியபட்டே நிற்கின்றன.

1989 ஆண்டு புக்கர் பரிசை வென்ற இந்நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. புத்தகத்தை விட திரைக்கதை இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்றே தோன்றுகின்றது. சொல்லப்படாதவைகளை எழுத்தின் வாயிலாக உணர்ந்துக்கொள்வதைவிட திரையின் வாயிலாக உணர்ந்துகொள்வது இன்னும் அதிக அழுத்தத்தை தரக்கூடும். இப்புத்தகம் அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றபோதிலும் வாசிப்பை பாதியில் நிறுத்திவிடத் தோன்றவில்லை. ‘கைட் ரன்னர்’ புத்தகத்தின் பக்கக்குறி ஆரம்ப சில பக்கங்களில் இருந்ததை பார்த்த தோழி இதை இன்னும் வாசிக்கவில்லையா என்றதற்கு படம் பார்த்துவிட்டதால் வாசிக்கப்போவதில்லையென்றேன். இது தவறான அனுகுமுறை என்றும் முதலில் புத்தகத்தை வாசித்துவிட்டு பிறகு அதை திரைப்படமாகவும் பார்ப்பது நல்ல அனுபவமாக இருக்குமென்றாள். இம்முறை இதை நடைமுறைபடுத்திப் பார்க்கவேண்டும்.

இங்கிலாந்தில் போர் சூழலுக்கு முந்தைய காலகட்டங்களில் நிகழும் இக்கதை பல வித அரசியல் கூறுகளோடும், தனிமனித நேர்மை, விஸ்வாசம், கடமையுணர்ச்சி என பலவற்றை தொட்டுச்செல்வதோடு, எது தன்மானம் என்பதையும் அதன் வரையரைகளையும் கால மாற்றத்திற்கும் மனித குணங்களுக்குமேற்ப அது வித்தியாசப்படுவதையும் கதைசொல்லியின் வாயிலாக விரிவாக பேசுகின்றது. பல ஆண்டுகள் கழித்து தன்னுடன் வேலை செய்த பெண்மணியை பார்க்க பயணிக்கும் ஆறு நாட்களை ஒவ்வொரு நாளையும் ஒரு பகுதியாக காலை, மதியம், மாலை என விவரித்து கொண்டே வந்து அவளை சந்தித்த ஐந்தாம் நாளை மட்டும் விழுங்கிவிட்ட போக்கு அருமையாக இருந்தது. நான்காம் நாளுக்கு பிறகு ஆறாவது நாளில் அவளுடனான சந்திப்பும் உரையாடலும் ஒரு நினைவாகவே தொடரும்போது உணரப்படாதவைகளும் உணர்த்தப்படாதவைகளும் என்றென்றைக்கும் அவ்வாறே நீடித்துவிடுவதே சில சந்தர்ப்பங்களில் நல்லதென்றே தோன்றியது. காலம் கடந்து அறியப்படும்போது ‘after all, there’s no turning back the clock now’ என்ற சப்பைக்கட்டை மட்டுமே ஆறுதலுக்காக சொல்லிக்கொள்ள முடியும்.

2005ல் வெளியான இவரது ஆறவது நாவலான ‘Never Let me Go’ ‘The Remains of the day’ விட அதிகமாகவே பிடித்திருந்தது. கிளோனிங்கால் உருவான மனித உயிர்களை பற்றிய அறிவியல் புனைவு இது. எந்த ஒரு அறிவியல் விவரங்களுக்குள் நுழையாமலும் அதே சமயம் அவர்கள் சந்திக்க நேரிடும் அபாயங்களை நுட்பமாக விளக்கியும் அதனூடே முக்கோணக்காதல் கதையை அறிவியலோடு கலந்து அளித்திருக்கின்றார் கஸோ இஷிகுரோ. இதிலும் கதை சொல்லியான ஒரு க்ளோனின் வாயிலாக அவர்களின் சிறுவயது முதல் சராசரி குழந்தைகள் போல் அவர்கள் வளர்க்கப்படும் விதத்திலிருந்து துவங்கி படிப்படியாக வளர்ந்து இறுதியில் தங்கள் உறுப்புகளை தானம் செய்து மடிகின்றவரை அமைதியான நதியைப்போல நகர்கின்றது இக்கதை.

இவர்களின் உருவாக்கம் பற்றியோ அல்லது எப்படி மரணிக்கின்றார்கள் என்பது பற்றியோ பேசாமல் இவர்களின் இடைப்பட்ட காலத்தை மட்டுமே பேசியிருக்கின்றது. இவர்களின் மரணத்திற்கு கூட death என்ற வார்த்தை பயன்படுத்தப்படவில்லை. ‘complete’ என்றே சொல்லியிருக்கின்றார். அதே போல் ‘deferral’, ‘carer’, ‘possible’ போன்ற வார்த்தைகளும் கூட வேறு பரிமாணங்கள் கொண்டவை. அவர்களின் உறுப்புகளை தானம் கொடுப்பதற்காகவே அவர்கள் உருவாக்கப் பட்டிருக்கின்றார்கள், சிலருக்கு ஒன்றிரண்டு தானங்கள் வரையே தாக்குப்பிடிக்க முடியும், சிலருக்கு நான்கு வரை கூட கொடுக்க இயலும், அவர்களால் உடல் உறவு கொள்ளமுடியும் ஆனால் பிள்ளைகளை பெற முடியாது போன்ற தகவல்கள் அவர்களின் பருவத்திற்கேற்ப படிப்படியாக அவர்களுக்கு அறிவிக்கப்படுகின்றது. மேலும் சில செய்திகள் வதந்திகளாகவும், சில கற்பனைகளாகவும் அவர்களிடம் உலாவுகின்றன. கதையின் முற்பகுதி விளையாட்டாக நகர பிற்பகுதி கதையின் ஆரம்பத்தில் நிலவிய பல புதிர்களுக்கு விடைகளாகமாறி அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இவ்விறு கதைகளிலுமே பல ஆண்டுகள் கடந்த பிறகு நடந்த சம்பவங்களை கதை சொல்லி திரும்பிப்பார்ப்பதாகவே அமைத்திருக்கின்றார் இஷிகுரோ. கதைசொல்லியின் நினைவிலிருந்து சொல்லப்படும் சம்பவங்கள் எவ்வித வரையரைகளுக்கு உட்படாமலும் அதே சமயம் எல்லாவித உணர்வுகளுக்கு உட்பட்டும் எழுதுவது விருப்பமானதாக இருக்கின்றதென்கின்றார். Remains of the day கதாபாத்திரத்தின் நினைவுகள் சில முக்கிய நிகழ்வுகளை, தவறுகளை, தவறவிட்ட தருணங்களை, குற்ற உணர்வுகளை நினைவு கூறுகின்றது. ஆனால் Never let me go கதாபாத்திரத்தின் நினைவுக்கூறல் மிகுந்த கருணைமிக்கவை. அந்நினைவுகள் அவளுக்கு ஒரு ஆறுதளாக நிம்மதியாக தேற்றுதலாக அமைகின்றது. தனக்கு நெருக்கமாக தன்னுடனிருந்தவர்கள் ஒவ்வொருவராக மடிந்துபோக தன்முன் இருக்கும் வெறுமை உலகில் அவளுக்கு துணையாக இருப்பது அந்நினைவுகளே என்கிறார்.

Never let me go வின் கதை களம் மிக நுட்பமானதும் முக்கியமானதும் கூட. ஆனால் அவை மிக மேலோட்டமாகவே கையாளப்பட்டிருக்கின்றது. கதைசொல்லியின் வாயிலாக விரியும் இக்கதை அவள் அறிந்த தெரிந்துக்கொண்ட சிறு பகுதியை மட்டுமே கதையாக உருவாக்கியிருக்கின்றது. இவர்களை உருவாக்கும் அமைப்பை பற்றியோ அவற்றின் செய்லபாட்டு முறைகளோ பேசப்படவில்லை. உறுப்புகளின் தானத்தை பற்றி மீண்டும் மீண்டும் பேசப்பட்டாலும் அவைகளின் outline மட்டுமே கூறப்படுகின்றது. சிகிச்சைகளும் அதில் ஏற்படும் சிக்கல்களும் ஓரிரு வரிகளில் அடங்கிவிடுகின்றன.

‘Times’ தேர்வு செய்த நூறு சிறந்த நாவல்களில் ‘Never let me go’ இடம்பெற்றுள்ளது. 2005 புக்கர் தேர்வு பட்டியலில் இந்நாவலும் இருந்தது. ஆனால் தற்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் John Banville ‘The Sea’ நாவல் புக்கர் பரிசை வென்றது. கடந்த ஆண்டு ‘Never Let me go’ திரைப்படமாகவும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இஷிகுரோவின் பிற படைப்புகள் A Pale view of hills, An artist of the floating world, The Unconsoled & When we were orphans. 2000 ஆம் ஆண்டு புக்கர் பரிசு தேர்வு பட்டியலில் When we were orphans இருந்தது. இஷிகுரோ இரு படங்களுக்கு திரைகதையும் எழுதியிருக்கின்றார் – The Saddest Music in the World & The White Countess. ஆறு நாவல்களுக்கு பிறகு 2009ல் Nocturnes சிறுகதை தொகுப்பு வெளியானது. இதிலுள்ள ஐந்து சிறுகதைகளுமே இசையுடனும் இரவுடனும் தொடர்புடையது.

நன்றி : 361˚ சிற்றிதழ்

Read Full Post »

எந்த ஒரு நாளின் நடந்த அனைத்துச் சம்பவங்களையும் நிமிடத்திற்கு நிமிடம் திரும்பிப் பார்ப்போமேயானால் அன்றாட வேலைகளுக்கு நடுவில் தற்செயலாக நிகழ்ந்தவைகளும், எதார்த்தமானவைகளும், சிறிதேனும் வியப்புக்குள்ளாக்கியவைகளும், மாற்று கருத்துக்களும், புன்னகைக்கான தடங்களும், அயர்ச்சிக்கான சில துளிகளும் சிதறிக்கிடக்கும். அப்படி பார்ப்பதற்கான கால அவகாசமோ இயலாமையோ அவசியமின்மையோ விரவும் நிலையில் நடந்தவை, நடப்பவையென எல்லாவற்றையும் சுமந்து திரிவது இயலாததாகின்றது. அதனால் சில முக்கிய அல்லது பாதித்த தருணங்களை தவிர பிறவற்றை அந்தந்த இடத்திலேயே விட்டு அடுத்து வருவனவற்றுள் நம்மை புகுத்திக் கொள்கின்றோம். அப்படியல்லாது கனவுகளையும், குழப்பங்களையும், எண்ணவோட்டங்களையும் பதிவித்துக் கொண்டேயிருப்பின் அவை தொடரற்ற தொடராக நீண்டுக்கொண்டே செல்லும். அத்தகைய நீள்தொடராக அமைந்திருந்தது ஹருகி முராகமி எழுதிய The wind up bird chronicle. இக்கதை எதார்த்தத்தினூடே சர்ரியலிசத்தையும் பின்நவீனத்துவத்தையும் புகுத்திப்பார்த்திருக்கின்றது. இப்படி கூட நிகழுமா இது சாத்தியமா இது என்ன மாயாஜால வித்தையா என்றெல்லாம் ஆராயாமல் இந்த எழுத்தை அப்படியே தொடர்வோமாயின் எழுத்தப்பட்ட சொற்களினூடே விரியும் உணர்ச்சிகள் அப்படியே நம்மையும் நிச்சயம் தொற்றிக்கொள்ளும்.
இதிலுள்ள எல்லா கதா பாத்திரங்களுக்குமே நீண்ட விசித்திர கதையை வெவ்வேறு காலகட்டங்களில் புனைந்துள்ளார் ஹருகி. மையகதாபாத்திரத்தின் வீட்டில் வசிக்கும் பூனை காணாமல் போனதிலிருந்து துவங்கும் கதை அதை தேடும் முயற்சியில் வெவ்வேறு சிக்கல்களை குழப்பங்களை கதாபாத்திரங்களை கனவுகளை வினோதங்களை முடிச்சிகளாக்கிக்கொண்டே வந்து எல்லாம் சேர்ந்து சிக்கலான பிறகு ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கின்றார். கனவுகள் வழி நிகழிற்கும் நிகழ் வழி கனவிற்கும் மாய எதார்த்தத்திற்கும் மாறி மாறி பயணிக்கின்றது இக்கதை.

சப்தமற்ற தனித்த வீட்டில் கடிகாரத்தின் முள் தனது இயக்கத்தை உறக்க அறிவிப்பதை போன்று அமைதியான சூழலில் ஒற்றை ஒலி எழுப்பியவண்ணம் மையகதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அசைவுகளையும் நுணுக்கமாக மிக நிதானமாக பதிவித்து நகர்கின்றது கதையின் முதல் பாதி. அவருடைய பெரும்பாலான கதைகளில் பூனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்ரியலிச கதையான The Wind Up Bird Chronicle கதை எழுத துவங்கும் போது ‘ஒரு முப்பது வயதான மனிதன் வேலையில்லாமல் வீட்டில் உணவு சமைத்து கொண்டிருக்கின்றான், தொலைபேசி மணி ஒலிக்கின்றது’ என்ற இந்த ஒன்றை வரி எண்ணம் மட்டுமே இருந்ததெனவும் அங்கு ஏதோ வினோதம் நிகழப்போவதாக உணர்ந்ததாகவும் ஹருகி கூறுகின்றார். இந்த ஒற்றைவரியிலிருந்து விரியும் இந்நாவல் இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த சம்பவங்கள், சைபீரிய சிறையில் நிகழும் அநீதிகள், மங்கோலியா மன்சூரிய ராணுவம் என பல அடுக்குகளில் பயணிக்கின்றது.

ஹருகி தன் எழுத்துகளில் வினோதங்களையும் விசித்திரங்களையும் இயல்பு நிலையிலிருந்து பிறழந்த கதாபாத்திரங்களையும் மீண்டும் மீண்டும் கட்டமைக்கின்றார். மறுபிறப்புகளிலும், கனவுகளிலும், ஜோசியங்களிலும், மாய வேற்று உலகங்களிலும் நம்பிக்கையில்லையென்ற போதிலும் எதார்த்தங்களை எழுதத்துவங்கும் போதும் இவையெல்லாமும் சேர்ந்துக்கொள்கின்றன என்கின்றார். உதாரணத்திற்கு இக்கதையில் வரும் கதாபாத்திரங்களின் சில விசித்திர தன்மைகள் :
டோரு ஒக்கடா : வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் இவர் யாருமற்ற அடுத்த வீட்டு நீரற்ற பாழ் கிணற்றுக்குள் நினைத்த போதெல்லாம் இறங்கி அங்கேயே தனக்கு சலிக்கும் வரை தங்குவார். கனவுகளில் கிணற்றுச்சுவர்களில் நுழைந்து மறுபுறமுள்ள மாய உலகிற்குள் பிரவேசிப்பார். அங்கு பற்பல வினோத சம்பவங்கள் நிகழும். அல்லது ஓர் இடத்தில் அமர்ந்து வரும் போகும் மனிதர்களின் முகங்களை வெறுமனே கவனித்துக் கொண்டிருப்பார்.

மே கஷாரா : ஒரு விபத்தில் தனது நண்பன் மரணித்தப்பின்னர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு விபத்தில் உண்டான காயங்களை காரணம் காட்டி வெறுமனே வீட்டில் இருக்கின்றார். பகுதி நேர வேலையாக ஒவ்வொரு ஆணின் தலைமுடியும் வழுக்கையாவதற்கு முன்பு அதன் தரத்தின் வாயிலாக A B C என்று பகுத்து கடந்து செல்லும் ஒவ்வொரு தலையும் எப்பிரிவில் அடங்குமென்ற கணக்கெடுப்பில் பணியாற்றுகின்றார். பிறகு விக் தயாரிக்கும் கம்பெனியிலேயே நிரந்தர பணிக்கு சேர்ந்துவிடுகின்றார்.
 

மால்டா கானோ : தன்னுடைய பல வருடப்பயிற்சிகளால் சில அதீத சக்திகளை உடையவர். இவருடைய பெரும்பாலான பேச்சுகள் எல்லாமே பூடகமாவே இருக்கும்.

 

கிரீடா கானோ : மால்கடா கானோவின் தங்கையான இவர் சிறுவயதிலிருந்து சகித்துக்கொள்ள முடியாத ஏராளமான உடல் உபாதைகளை அனுபவித்து பதின்ம வயதில் தற்கொலை செய்ய முயற்சித்து தோற்கும் போது எல்லா உணர்ச்சிகளும் வலிகளும் மரத்துப்போய் சூழ்நிலையால் பாலியல் தொழிலுக்கு உட்படுகின்றார். பிறகு நடந்து ஒரு வன்புணர்வால் கிட்டத்தட்ட தன் எல்லா உணர்வுகளையும் மீட்கப்பெற்று சகஜ நிலைக்கு திரும்புகின்றார். இவர் கனவுகளில் நுழைந்து நிஜ உடல்ளோடு கலவிகொள்ளவல்லவர்.

Corporal ஹோண்டா : எதிர்காலத்தில் நிகழப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே அறியவல்லவர். அவர் அறியாமலேயே எதிர்காலத்தில் நிகழப்போகும் சம்பவங்களை ஓரிரு வாக்கியங்களில் குறிப்பால் உணர்த்துபவர்

Lieutenant Mamiya : இரண்டாம் உலகப்போரில் எதிரி படையினரிடம் சிக்கி துன்புறுத்தப்பட்டு பாழ் கிணற்றுக்குள் வீசியெறியப்படுபவர். அக்கிணற்றுக்குள் ஓரிரு நொடிகள் தோன்றும் சூரிய ஒளியால் தன்னுள் சில மாற்றங்களை அடைபவர். போர் சூழலில் தன் ஒரு கையை இழந்த இவர் தன் வாழ்நாள் முழுவதுமே வெறுமையின் துணையோடு மட்டுமே வாழ்பவர்.

 

நட்மெக் & சினமன் : தனது சக்தி என்னவென்றே அறியாதவர் என்றபோதிலும் நட்மெக் தன்னை நாடி வரும் உயர்தட்டு பெண்களை வாட்டும் ஏதோ ஒன்றிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிப்பவர். அவருடைய மகன் சினமன் ஆறுவயதிலிருந்து பேச்சை துறந்தவன். தன் தாயின் வேலைகளுக்கு உதவியாக இருப்பவன். எல்லா வேலைகளையும் மிக கச்சிதமான அதீத ஒழுங்குத்தன்மையுடன் செய்து முடிப்பவன். அவன் குரலிலிருந்து ஒலி எழும்பவில்லையென்ற போதிலும் அவன் சொல்ல வருவதை கேட்பவர் எந்த சிரமமும் இல்லாமல் புரிந்து கொள்வர்.

நோபோரு வடாயா : இவர் தனது உடன்பிறப்பும் டோருவின் மனைவியுமான குமினோவை நேரடியாக அல்லாமல் சில புரியாத மாயங்களைக்கொண்டு வினோதமுறையில் தன் கட்டுக்குள் வைத்து சீரழிப்பவர், தனது மற்றொரு உடன்பிறப்பையும் தனது கட்டுக்குள் வைக்க முயன்றதினால் சிறுவயதிலேயே அச்சித்திரவதைகள் தாளாமல் அவர் தற்கொலை செய்து கொள்கின்றார். அன்றாடம் எல்லா சேனல்களிலும் பேட்டி கொடுத்து எதைபற்றி கேட்டாலும் அதற்கு தகுந்த பதில்களை உடனடியாக ஆணித்தரமாக கூறவல்லவர். எதிலுமே ஆழமான புரிதல் இல்லையென்றபோதிலும் தனது பேச்சுத்திறமையாலும் வாதிடும் திறமையாலும் தனது கருத்துக்களுக்கு எதிர்கருத்துக்களை முளைக்கவிடாதவர்.
இத்தகைய காதாபாத்திரங்களுடே மேலும் சில வினோத கதாபாத்திரங்களும் விசித்திர சம்பவங்களும் கொண்டு பின்னப்பட்ட இக்கதை சில வேலைகளில் வாசிக்க அயர்ச்சியாக இருந்தாலும் வாசிக்க வேண்டாமென்று ஒதுக்கிவைக்க விடாமல் வாசகனை அலைகழிக்கின்றது. அதீத வன்முறைகளை எழுத்தில் என்றுமே வாசித்ததில்லை. திரையில் வரும் வன்முறை காட்சிகளை கடப்பது எளிது, வெகு சுலபமாக கண்களை மூடிக்கொண்டு ஒலியை மட்டும் கேட்டு நடந்தது என்னவென்று யூகித்துக்கொள்ளலாம். ஆனால் எழுத்தில் வரும் வன்முறைகளை எப்படி கடப்பது. வாசிக்காமல் சில பக்கங்களை கடப்பதற்கு மனது இடம் கொடுப்பதேயில்லை. வாசிக்காமல் பத்து பக்கங்கள் தாண்டிச்சென்ற பிறகும் மீண்டும் அதே பக்கத்திற்கு இழுத்து வந்துவிடுகின்றது மனது. வெகு சிரமமப்பட்டே சில பக்கங்களை வாசிக்க வேண்டியுள்ளது. இத்தகைய வன்முறைகளை இதற்கு முன்பு வாசித்திருக்கவில்லை.
போர் சூழலில் அகப்படும் எதிரி படையினரை கொள்ளும் வெவ்வேறு முறைகளை விரிவாகவே எழுதியிருக்கின்றார் ஹருகி. உயிரோடு தோல் உரிக்கப்படுவதையும், உடலுக்குள் ஈட்டியை இறக்கி எல்லாம் உறுப்புகளையும் சிதைத்து அணுஅணுவாக கொல்வதையும் வாசிக்கும் போது அதிர்ச்சியும் பயமும் மேலோங்கியது. தோலுரிக்கப்பட்ட ரத்தம் ஒழுகும் வெற்றுடல் கண்முன்னே சிறிது நாட்கள் தங்கிவிட்டது. நிச்சயம் அப்பகுதிகளை மட்டுமாவது மொழிபெயர்க்கும் எண்ணம் இருக்கின்றது. சைபீரிய சிறைகளை பற்றியும் அங்கு கைதிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளும், அதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் சந்திக்க நேரிடும் கொடூர முடிவுகளும் வேறு பல கதைகளில் வாசித்திருந்ததால் அப்பகுதிகளை கடப்பது அத்தனை சிரமமானதாக இருக்கவில்லை. வேறொரு சந்தர்ப்பத்தில் விலங்கியல் பூங்காவில் இருக்கும் அபாய விலங்குகளை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் புலிகளையும் சிறுத்தைகளையும் அதிக துப்பாக்கி குண்டுகளை செலவழித்துவிடாமல் கொல்வதையும் சொல்கின்றார்.
போர்காலத்தின் அனுபவங்களை தன் தந்தை சொல்லி கேட்டதாகவும் அக்காலகட்டங்களின் அனுபவங்களை பதிவிப்பது எழுத்தாளனின் கடமையென்கிறார் ஹருகி. எனினும் புனைவாகவே இக்கதையை எழுதியிருப்பதாகவும் தன் கற்பனை சிதைந்து விடாமல் இருப்பதற்காக புத்தகத்தை எழுதி முடித்த பின்னரே அக்கதையில் இடம்பெறும் மங்கோலிய மஞ்சூரிய எல்லைக்கு சென்று வந்ததாகவும் கூறுகின்றார்.
ஆங்கிலத்தில் இக்கதையை ‘ஜே ரூபின்’ மொழிபெயர்த்துள்ளார். ஜப்பானிய மொழியில் மூன்று பகுதிகளாக வெளியான இந்நாவலை இவர் முழுவதுமாக மொழிபெயர்த்திருப்பினும் பதிபகத்தார் இதன் நீளம் கருதி இரு அத்தியாயங்களை நீக்கிவிட்டதாக கூறுகின்றனர். நாவல், சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்லாது ஹருகி சிறந்த மொழிபெயர்ப்பாளரும் கூட. இவர் பல ஆங்கில இலக்கியங்களை ஜப்பானிய மொழிக்கு மொழிபெயர்த்திருக்கின்றார்.

2002ல் ஜப்பானிய மொழியிலும் 2005 ஆங்கிலத்திலும் வெளியான ‘Kafka on the Shore’ இவரது படைப்புகளில் மிக முக்கியமானதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகின்றது. அப்புத்தகத்தை தேடி அலைந்தபோது அது கிடைக்காமல் ‘After Dark’ கிடைத்தது. அதை வாசித்துக்கொண்டிருந்த வேளையில் தற்செயலாக ‘The wind up bird chronicle’ மின் புத்தகமாக வந்தடைந்தது. இதை வாசித்துக்கொண்டிருக்கையில் இணையத்தில் அதிசயிக்கும் வண்ணம் Kafka on the shore முழு வடிவமும் கிடைத்தது. இப்புத்தகத்தில் துவங்கி இப்புத்தகத்தில் வந்து நிற்கும் இவ்வட்டத்திற்கும் ஹருகி முன்வைக்கும் வினோதங்களுக்கும் கூட சம்பந்தம் இருக்குமோ?

எழுத்தாளர்கள் பெரிதும் மதிக்கும் Franz Kafka விருதை பெற்ற இவரது நாவல் Kafka on the shore மேஜிகல் ரியலிசமும் மெட பிசிக்ஸ் தொட்டிருப்பதாக அறிந்த பின்னர் சிறிது கால அவகாசத்திற்கு பிறகு இதை வாசிப்பதே உகந்ததாக இருக்குமெனத் தோன்றியது. After dark அவ்வளவாக ஈர்க்கவில்லை. இரவு வாழ்வின் ஒரு பகுதியை பதிவிக்கும் வண்ணம் ஓர் இரவு முழுவதும் வெளியில் விழித்திருக்கும் கதாபாத்திரத்தின் வழி ஒவ்வொரு நிமிடமாக கதை நகர்ந்து விடிந்ததும் நிறைவு பெறுகின்றது. வா குவாட்டர் கட்டிங் படத்தின் உத்தி இங்கிருந்து தான் உருபெற்றிருக்குமோ?

Wind Up Bird Chronicle ‘theatre of dreams’ ஐரோப்பிய விழாக்களின் போது வெளியாகவுள்ளது. இதன் உருவாக்கம் பற்றிய குறிப்புகள் இப்பக்கத்தில் வாசிக்கலாம்.

தமிழில் ஹருகியின் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வம்சி பதிபகத்தால் 2006 / 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கின்றது. சிறுகதை தொகுப்பின் பெயர் ‘100% பொருத்தமான யுவதியை ஓர் அழகான ஏப்ரல் காலையில் பார்த்த போது…’ ஆறு சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பின் மொழிபெயர்ப்பாளர்கள் ஜி.குப்புசாமி, செழியன் மற்றும் ராஜகோபால். இப்புத்தகத்திற்கான கவிஞர் சுகுமாரன் முன்னுரை திண்ணையில் வாசிக்கலாம். இவரது சில சிறுகதைகள் ஆங்கிலத்திலும் இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றன.

‘The Wind Up Bird Chronicle’ e-book அனுப்பிவைத்த நேசமித்ரனுக்கு நன்றி.

நன்றி : http://www.complete-review.com/authors/murakamh.htm

Read Full Post »

இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் நகிப் மஹ்ஃபூஸ் (Naguib Mahfouz) 1965ல் வெளியான ‘The Beggar’ சமீபத்தில் வாசித்தேன். அரசியல் தன்மைகள் கொண்ட எழுத்துகளுக்கு எகிப்தில் நிலவிய பலத்த தடைகளும் நிராகரிப்புகளும் நிறைந்த காலகட்டங்களில் வெளிவந்த இந்நாவல் அரசியல், காமம், தேடல், எகிப்திய புரட்சி முதலியவற்றை மேலோட்டமாகவே தொட்டிருக்கின்றது. மாறாக இவரது பல நாவல்கள் எகிப்திய வரலாற்றையும், புரட்சிகளையும், அந்நாட்டு கலாச்சாரங்களையும் விரிவாக பேசுபவை.

வழக்கறிஞரான ஒமர் அத்துறையில் பேரும் பணமும் சம்பாதித்து யாவரும் மதிக்கும் நிலையை அடைந்த பின்னர் ஒரு பிடிப்பற்ற தன்மையை உணருகின்றார். இத்தனை காலம் தன்னுடனிருந்த குடும்பம், தொழில், நண்பர்கள் என எதன்மீதும் நாட்டமில்லாமல் வேறெதையோ தேடுகின்றது அவரது மனது. வாழ்கையின் அர்த்தமின்மை அவருக்கு சலிப்பூட்டுகின்றது. நாற்பத்தைந்து வயதடைந்த அவருக்கு மத்திய வயது நெருக்கடி ‘Mid life crisis’ பெரும் பாரமாகிவிடுகின்றது.

தனது நண்பரும் மருத்துவருமானவரிடன் ஆலோசனை கேட்க அவர் உடலுக்கு ஒரு குறையுமில்லயென்றும் தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொள்ளவும் சரியான உணவு முறையும் பின்பற்றுமாறும் பொதுவான ஆலோசனைகளையே வழங்குகின்றார். சில நாட்கள் பணியிலிருந்து ஓய்வெடுத்து குடும்பத்துடன் வெளியூர் எங்காவது பயணம் மேற்கொள்ளச்சொல்கின்றார். இவை ஒன்றும் பயனளிக்காமல் தொடர்ந்து அமைதியின்மையையும் போதாமையையும் ஒமர் உணருகின்றார். வேலையும் வீடும் சலிக்கத்துவங்குகின்றன. அர்த்தமற்ற வாழ்வை வாழ்வதாகவும் தனக்கு வேறெதோ ஒன்று தேவையெனவும் அத்தேவை எதுவென தெரியாமல் குழம்புகின்றார்.

பிறகு காதலும் காமமும் மட்டுமே தன் வாழ்வை அர்த்தப்படுத்த முடியுமென நினைக்கின்றார். இரவு விடுதிகளில் நடனமாடும் பெண்களுடன் உறவு கொள்த்துவங்குகிறார். காதலித்து கலப்பு திருமணம் செய்துக்கொண்ட தன் மனைவியையும் பதின்ம வயது மகளையும், இளைய மகனையும் பிரிந்து தன் வீட்டைவிட்டு வெளியேறி வேறு பெண்ணுடன் சிலகாலம் தங்குகின்றார். இதுவே தன் தேவையாக இருந்திருக்கின்றது என்றும் அவ்வுறவே தன்னை திருப்திப்படுத்தும் என்றும் அப்பெண்ணின் காதலில் திளைக்கின்றார். ஆனால் அவர் மனதிற்கு அவை தற்காலிக நிவாரணத்தையே அளிக்கின்றது. நாளடைவில் அவளும் சலிக்கத்துவங்கிவிடுகின்றாள்.

இக்கதையை வாசிக்கும்போது குஷ்வந்த் சிங்கின் The Company of Women (1999) நினைவிற்கு வந்தது. அக்கதையில் கதாநாயகனின் தேவை பெண்ணின் உடல் மட்டுமேயாக இருந்தது. அவன் அணுகும் ஒவ்வொரு பெண்ணை பற்றியும், உடல் உறவுகளை பற்றியும் விரிவாக வெளிப்படையாகவே எழுதியிருப்பார் ஆசிரியர். தனது எண்பத்தி மூன்று வயதில் இந்நாவலை எழுதத்துவங்கி எண்பத்தி ஐந்து வயதில் இதனை வெளியிட்டார். முதிர்ந்த வயதில் இத்தகைய நாவலை வெளியிட்டது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு மட்டுமல்லாமல் வெவ்வேறு பெண்களுடன் கலவுவதையும் அதீத காமவிச்சையையும் பேசும் ஒரு போர்னோ நாவலென்றே பலராலும் இப்புதினம் விமர்சிக்கப்பட்டது.

ஆனால் ‘The Beggar’ நாவலில் ஒமர் தன் தேவை இன்னதென்றே அறியாமல் பெண்ணின் வாயிலாக அதை கண்டடையவும் திருப்திக்கொள்ளவும் விழைகின்றார். வெவ்வேறு பெண்களாக தேடி எல்லாம் சலிப்படைந்து மீண்டும் தன் வீட்டிற்கே திரும்புகின்றார். தன் இளவயது விருப்பமான கவிதை எழுதுதல் தன்னை குணப்படுத்தலாமமென முயற்சித்து அதிலும் தோல்வியே காண்கின்றார். மனது ஒரு நிலைக்கொள்ளாமல் தவித்தபடியே இருக்க தனது அலுவலகத்தை சிறையிலிருந்து விடுதலையாகி வரும் தன் இளவயது நண்பனிடன் ஒப்படைத்துவிட்டு மீண்டும் எல்லோரையும் விட்டு தனித்து வாழ துவங்குகின்றார்.

சோஷியலிஸத்தை தொடாத நகிப் மஹ்ஃபூஸின் கதைகள் இல்லையென்றே சொல்கிறார்கள். தற்போது வாசிக்கும் அவரின் Karnak Cafeயிலும் எகிப்த்திய புரட்சி, சோஷியலிஸத்தை பேசுகின்றார். சில பக்கங்களே கடந்திருப்பதால் இப்புத்தகத்தை பற்றி பிறகு. இப்புதினத்திலும் ஒமர் தனது கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் இணைந்து தீவிர சோஷியலிஸவாதிகளாக இருந்து தனது நண்பனின் கைதிற்கு பிறகு கட்டாய மாற்றங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொள்கின்றார். மத்திய வயது நெருக்கடிகளில் சிக்கிய ஒமருக்கு அதிலிருந்து வெளிவர சரியான வழிகள் புலப்படாத நிலையில் அவரது மனம் பிறழ்துவிடுவதாக முடிகின்றது கதை. விரிவான தகவல்களோ குறிப்புகளோ அன்றி ஒற்றைத்தன்மையுடன் மேலோட்டமாகவே பேசப்பட்டிருக்கும் இப்புதினம் வாசிக்க வெகுசாதாரணமாகவே இருந்தது.

Read Full Post »

மூன்று பகுதிகளாக வெளியாகவிருக்கும் அமிதவ் கோஷ் – ஐபிஸ் ட்ரைலாஜியின் முதல் தொகுப்பு Sea of poppies 2008ல் வெளியானது. அந்த ஆண்டு புக்கர் பரிசு தேர்வு பட்டியலில் இப்புத்தகமும் இடம்பெற்றது.  ஆனால் தேர்வு பெறவில்லை, மாறாக White Tiger வென்றது.  இப்புத்தகத்தை 1838 காலகட்டத்தின் வரலாற்றுப்புனைவு எனலாம். அக்காலகட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளோடும் வாழ்கை மற்றும் தொழில் முறைகளோடும் விரியும் பிரம்மாண்டமான தகவல் களஞ்சியம் இப்புதினம்.  இப்புத்தகத்தின் நன்றியுரையில் அமிதவ் கோஷ் பட்டியலிட்டிருக்கும் reference list நீண்டுக்கொண்டே போகின்றது. அதை வாசித்தப்பின்னர் இந்நாவலுக்கென தகவல்கள் சேகரிக்கும் முயற்சியில் எண்ணற்ற பக்கங்களை புரட்டியிருக்கும் அவரது உழைப்பை வியக்காமல் இருக்க முடியவில்லை. 

இப்புதினத்தில் பாப்பிவிதைகளை பயிரிடும் முறைகளும், உழவில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் நெருக்கடிகளும், தொழிற்சாலைகளில் ஓபியம் தயாரிக்கப்படும் வழிமுறைகளும், அங்கு பணிபுரிவோர் எதிர்க்கொள்ளும் உடல் நல கேடுகளும், ஓபியத்திற்கு நிரந்தர அடிமையாகும் மனிதர்களின் சீர்குலைவுகளும் நுணுக்கமான தகவல்களோடு விவரிக்கப்பட்டிருக்கின்றன.

பெரும்பாலும் இதிலுள்ள எல்லா விவரனைகளுமே தகவல் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன. கடல் வழிப் பயணம், பயணத்திற்கு முன் கப்பலில் நியமிக்கப்படவேண்டிய பணி ஆட்கள், அவர்களுக்கான அதிகாரங்கள், ஓபியம் ஏற்றுமதியில் East India Companyயின் நிலைபாடுகள், முதல் ஓபியப்போருக்கு முன்னாலான ஓபிய ஏற்றுமதியில் நிலவிய குழப்பங்கள், சிக்கல்கள் என பலவற்றை தொட்டிருக்கின்றது இந்நாவல்.  அவை மட்டுமல்லாமல் கூலியாட்களை மொரிஷியசிற்கு அனுப்பும் வழமை, அதுகுறித்து எழும் வதந்திகளை கேட்டு பணிக்கு செல்வோரிடத்து ஏற்படும் பீதி, அவர்களை வேலைக்கு நியமிக்கும் குமாஸ்தாக்கள், கப்பலில் அவர்களின் மேற்பார்வையாளர்களின் அடக்கு முறைகள் என பலவற்றையும் குறிப்பிடலாம். 

முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவரான பிகாரில் வசிக்கும் தீத்தியை தனது மூத்த மகனிற்குத் திருமணம் செய்துவைக்கும் தாய் அவளது குடும்பவிருத்திக்கென முதல் இரவில் தீத்தி அறியாமல் அவளுக்கு ஓபியம் புகட்டி தனது இளைய மகனை உறவுக்கொள்ளச்செய்வதாக எழுதப்பட்டிருக்கும் முதல் பகுதியே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

தனது அறியாமையாலும் வேறு பலரின் சூழ்ச்சிகளாலும் ராஜாங்கத்தையும் சொத்து முழுவதையும் இழந்து சிறைவைக்கப்படும் மற்றொரு முக்கிய கதாபாத்திரமான ராஜா நீல் ரத்தனின் சிறை அனுபவங்களை விவரிக்கும் பக்கங்களையும் கடப்பது கடினமாகவே இருந்தன. ராஜ போகத்துடன் வாழ்ந்தவனிடத்திலிருந்து சட்டென யாவும் பிடுங்கப்படும்போது அவன் மனம் கொள்ளும் அதிர்ச்சி, மாற்றம், சகிப்புத்தன்மை, பக்குவம் என எல்லாமே கச்சிதமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 

வெகு நாட்கள் ஓபியம் உட்கொள்ளும் பழக்கத்திற்கு அடிமையான உடலில் ஏற்படும் சீர் குலைவுகளை தீதியின் கணவர் வாயிலாகவும், ஓபியம் உட்கொள்ளும் பழக்கத்தை சட்டென நிறுத்துவதனால் ஏற்படும் உடல் உபாதைகளை ராஜா நீலுடன் ஒரே அறையில் சிறைவைக்கப்படும் கைதியின் மூலமும் விரிவாக அறிந்துக்கொள்ளமுடிகின்றது. 

மற்ற கதாபாத்திரங்களான அமெரிக்க மாலுமி (second mate) சாச்சாரி, பிரென்ச் பெண்மணி பௌலட், அவளின் தம்பி ஜோடு, குமாஸ்த்தா பாபு, பிரிட்டிஷ் தொழிலதிபர் பெஞ்சமின் மேலும் பலரை கொண்டு கட்டமைக்கப்பட்ட இக்கதையில் அக்காலகட்டத்தில் நிலவிய சட்டத்திட்டங்கள், வணிக வியாபார முறைகள், தாவரவியல், ஐதிகம், கப்பல் போக்குவரத்து, கடல் வழி பயணத்தில் சந்திக்க நேரும் அபாயங்களும், அதற்கான அணுகுமுறைகள், கப்பலின் கட்டமைப்பு என ஓவ்வொரு கதாப்பாத்திரத்தின் வாயிலாகவும் பல தகவல்களை வாசகர்களுக்கு தரும் உத்தியை பயன்படுத்தியிருக்கின்றார்.  

நிலம், நதி, கடல் என்று பகுதிகளைக்கொண்ட இப்புதினம் கூலிகளையும், இரு கைதிகளையும், இவர்களின் மேற்பார்வையாளர்களையும், கப்பல் ஊழியர்களையும் கொண்டு மொரிஷியசிற்கு பயணிக்கும் ஐபிஸ் நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருக்க கதை நிறைவு பெறுகின்றது.  புதினங்களில் நிரந்தர முடிவுகளை வாசித்து பழகிய மனதிற்கு நடுக்கடலில் இறுதி பக்கத்தின் இறுதி வரியை அடைந்து விட்டது சமாதானமாக இல்லையென்ற போதிலும் அடுத்த தொகுப்பிற்கென காத்திருத்தலன்றி வேறொன்றும் செய்வதற்கில்லை. 

அமிதவ் கோஷின்  மற்ற நாவலான The Shadow Lines (1988) சாகித்ய அகெதமி விருதை வென்றிருக்கின்றது. இவரது The Circle of Reasons (1986),  The Calcutta Chromosome (1995), The Glass Palace (2000), The Hungry Tide (2005) போன்ற நாவல்களும் பல விருதுகளை வென்றிருக்கின்றன.  இவரது அடுத்த படைப்பான River of smoke இவ்வாண்டு வெளியாக உள்ளது. மேலும் The Imam and the Indian, Dancing in Cambodia and at large in Burma, Incendiary Circumstances கட்டுரை தொகுப்புகளும் In an Antique Land என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமும் வெளியாகியுள்ளன.

Read Full Post »

நமது தேவைக்கேற்ப உடல் இயங்க இயலாமல் போகும் போது அது எத்தனை சுமையானதாக மாறிவிடுகின்றது. அத்தகைய நேரங்களில் பசி தூக்கமின்மை போன்றவற்றை காட்டிலும் மிகுந்த சிரமத்திற்குள்ளாக்குவது இயற்கை உபாதைகளை சமாளிப்பது தான். கட்டுப்படுத்த இயலாமல் கழிவறைக்கு செல்லும் வழியிலோ அல்லது இருக்குமிடத்திலோ சிறுநீர்/மலம் கழித்துவிடுவது செயலிழந்த வாழ்வின் பெரும்பழி. இத்தகைய அடிப்படை செயல்களுக்கும் கூட பிறரை சார்ந்து வாழும் மனிதனின் முக்கிய தேவை பிறரிடமிருந்து பெறப்படும் சிறிய அக்கறையும் சேவையுமாகவே இருக்கக்கூடும். ஆனால் அந்நிலையிலும் தனது காதல் மட்டுமே பிரதானமாக இருக்கின்றது J.M.Coetzeeயின் The Slow Man நாவலின் கதாநாயகனுக்கு.

அறுபதுவயதான பால் ரேமண்ட் தனது சைக்கிளில் வழக்கமாகச் செல்லும் சாலையில் பயணிக்கும் போது விபத்துக்குள்ளாகி தனது கால்களை இழக்கின்றார். விபத்திற்கு பிறகு செயற்கைக் கால்களை விரும்பாத அவரது வாழ்வு சவால்களுடனும் சிக்கல்களுடனும் தவறவிட்ட பலவற்றை நினைவுபடுத்தியபடி நகர்கின்றது. யாருமற்ற தனது வீடும் கூட விபத்திற்கு பிறகு அந்நியப்படுகின்றது.

ஒன்றிரண்டு பணியாட்களுக்கு பிறகு இவரை பார்த்துக்கொள்ளவென நியமிக்கப்படும் மரிஜானாவின் நேர்த்தியான சேவைகள் அவருக்குப் பிடித்தவிதமாகவும் திருப்தியாகவும் அமைகின்றது. முகம் கோணாமல் தனது தேவைகளை அறிந்து தன்னை கூச்சப்படவைக்காத அளவிற்கு பக்குவமாக செயல்படும் அவளைக் காதலிக்க ஆரம்பித்துவிடுகின்றார். அவள் குடும்பம் பற்றி அறிந்துக்கொள்கின்றார். அவளது குழந்தைகளை தனது குழந்தைகளாக பாவிக்கவும் எண்ணுகின்றார். அவளின் மகனுக்கு நல்ல கல்லூரியில் பட்டப்படிப்பு மேற்கொள்ள பண உதவி முழுவதும் தானே ஏற்றுக்கொள்வதாக கூறுகின்றார். அதற்கான காரணத்தை அவள் கேட்க, தன் காதலை வெளிப்படுத்துகின்றார். அவள் வேலைக்கு வருவதை தற்காலிகமாக நிறுத்துகிறாள்.

ரேமண்ட்டை விட கிட்டதட்ட பத்து வயது மூத்த எழுத்தாளர் எலிசபத் காஸ்டெல்லோ தீடீரென்று எந்த முன்னறிமுகமும் இல்லாமல் அவர் வீட்டிற்கு வருகின்றார். ரேமண்டின் விருப்பத்திற்கு மாறாக அவர் வீட்டிலேயே தங்கி விடுகின்றார். இவரை பற்றி அனைத்து தகவல்களையும் அறிந்து வைத்திருக்கின்றார் அந்த எழுத்தாளர். தான் அவரைத் தேடி வரவில்லையென்றும் ரேமண்ட் தான் அவரை நாடி வந்ததாகவும் கூறுகிறார். 2003ல் வெளியான இவருடைய முந்தைய நாவல் எலிசபத் காஸ்டெலொவை வாசித்திருந்தால் இக்கதாபாத்திரத்தை இன்னும் சரியாக உள்வாங்கியிருந்திருக்க முடியும்.

இயல்பு வாழ்வின் சீர்குலைவு, புது உறவு, புதிர் மனிதர்களென விபத்திற்கு பிறகு வாழ்கையே மாறிவிட்ட பால் ரேமண்ட், அவருடைய திருமண வாழ்கை, புகைப்பட கலையில் ஆர்வம், அது நிமித்தமான பணி குறிப்புகள், புதிரான எலிசபத் காஸ்டெலோ, காதலை சொன்ன பிறகு இடையிடையே சில நாட்கள் மட்டும் பணிக்கு வந்து போகும் மரிஜானா, குடும்ப நலனுக்காக இத்தகைய வேலைகளை மேற்கொள்ளும்போது அவள் சந்திக்க நேரிடும் சிக்கல்கள், எளிமையான மரிஜானாவின் கணவர், அவர்களது காதல் திருமண வாழ்வு, அவர்களின் மூன்று குழந்தைகளென விரியும் இக்கதை முதல் வாசிப்பில் சாதாரணமாகத் தோன்றினாலும் நிதானமாக ஒவ்வொரு கதாபாத்திரத்தை பற்றி சிந்திக்கும் போதும் சில வரிகளை நினைவுகூறும் போதும் உள்மனவோட்டங்களை நுணுக்கமாக எழுத்துகளில் வடிக்கும் Coetzeeயின் நேர்த்தியை வியக்காமல் இருக்கமுடியவில்லை.

சில உணர்வுகளை சொற்களை கொண்டு சொல்வதைவிட காட்சி படுத்தும் போது அதன் பாதிப்பு அதிகமானதாக இருக்கக்கூடும் என்றே தோன்றும். அத்தகைய உணர்வுகளைக் கூட Coetzeeயால் சொற்களை கொண்டு அழுத்தமாக நிறப்பிவிட முடிகின்றது. சிலகாரணங்களுக்காக மரிஜானாவின் பதின்மவயது மகன் ரேமண்ட் வீட்டில் சிலகாலம் தங்கிச்செல்கின்றான். வீட்டில் விட்டுச்சென்ற பொருட்களைத் திரும்ப எடுக்க வரும்போது ரேமண்ட் கழிவறைக்கு செல்லும் முன்பே தன் உடையிலேயே சிறுநீர் கழித்துவிடுகின்றார். அவன்முன்னிலையில் இப்படி நடந்துவிட்டதே என்று அவர் கழிவிறக்கம் கொள்வதையும், மரிஜானாவின் மகன் எவ்வித பதட்டமோ முகச்சுளிப்போ இல்லாமல் வெகு சாதாரணமாக பார்வையை தவிர்க்க வேண்டிய உறுப்புகளிலிருந்து தவிர்த்து அவர் உடைகளை மாற்றி படுக்கையை சரிசெய்து படுக்கவைத்துச்செல்வதாக சொல்லும் ஒவ்வொரு வரியும் அற்புதமாக சித்தரித்திருக்கின்றார் Coetzee. அதே போல் குளியளறையில் குளிக்கும் போது தவறி விழுந்து, வெகுநேரம் அங்கேயே தண்ணீரில் கிடந்து பின் தன் உடலை தரையோடு நகர்த்தி வந்து முதலில் மரிஜானாவை தொலைபேசி அவளை வரச்சொல்லி அவள் வருகைக்காக காத்திருக்கும் தருணங்கள் மறக்கமுடியாதவை.

நோபல் பரிசுக்கு பிறகு எழுதப்பட்ட இந்நாவலில் Master of Petersburg மற்றும் Disgrace நாவல்கள் ஏற்படுத்திய பிரமிப்பு இல்லை என்றாலும் இப்புத்தகமும் நல்ல வாசிப்பனுபவத்தையே தந்தது. தேவைகளில் தெளிவுள்ள போது தீர்மானிப்பது எளிதாகவும் தீர்மானங்கள் திடமானதாகவும் ஆகிவிடுகின்றன என்றே தோன்றியது நாவலை முடித்தபோது.

இந்நாவலல இணையத்தில் வாசிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கு வாசிக்கலாம்.

Coetzeeயின் மற்ற புத்தகங்களான Waiting for Barbarians 1980 , Age of Iron 1990, Life & Times of Michael K 1983, The Master of Petersburg 1994 போன்ற நாவல்களும் இத்தளத்தில் வாசிக்க கிடைக்கின்றன.

Read Full Post »

Too Much Happiness  என்ற தலைப்பிற்காகவே வாங்கிய சிறுகதை தொகுப்பு இது.  இத்தொகுப்பை வாசித்த பிறகுதான் ஆலிஸ் மண்ரோ பற்றிய தகவல்களை இணையத்தில் தேடி படிக்கக்தூண்டியது.  கனடிய சிறுகதை எழுத்தாளரான இவர் 2009ஆம் ஆண்டு தனது இலக்கிய பணிக்காக புக்கர் பரிசையும் மேலும் பல விருதுகளையும் வென்றுள்ளார்.  1968ஆம் ஆண்டு இவரது முதல் சிறுகதை தொகுப்பான Dance of the happy shades வெளியானது. 

Too Much Happiness தொகுப்பில் உள்ள பத்து சிறுகதைகளுமே வித்தியாசமானவை.  எங்கோ ஓரிடத்தில் தொடங்கி முன்னும் பின்னும் நகர்ந்து எதிர்பாராவிதத்தில் சட்டென முடிவடைந்துவிடுகின்றன.  ஆனால் பெரும்பாலும் எல்லா கதைகளிலுமே மரணம் தவராமல் நிகழ்ந்துவிடுகின்றது.  மேலும் நாம் கதையின் முக்கிய நிகழ்வாக கருதும் விஷயங்கள் ஓரிரு வரிகளில் அல்லது ஒரு பத்தியில் நின்றுவிடுகின்றன.  உதாரணத்திற்கு மூன்று பிள்ளைகளின் கொலை இப்படி விவரிக்கப்படுகின்றது.

Dimitri still in his crib, lying sideways. Barbara Ann on the floor beside her bed, as if she’d got out or been pulled out. Sasha by the kitchen door—he had tried to get away. He was the only one with bruises on his throat. The pillow had done for the others.

அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவத்தை மூன்றே எளிமையான வரிகளில் எழுதி நம்மை உரையச்செய்கின்றார்.  இவ்வரிகளுக்கு முன்னரும் பின்னரும் இச்சம்பவத்தை பற்றிய எந்த விவரனைகளும் இல்லை.  சில கதைகளின் கடைசி வரியும் கூட அவ்வாறே எழுதியிருக்கின்றார்.  காதல், நட்பு, துரோகம், பயம், அன்பு போன்ற உணர்வுகளைக்கொண்ட பொதுவான கதைகலம் தான் என்றாலும் சொல்லப்படும் விதம் வித்தியாசமானவை. 

இத்தொகுப்பில் உள்ள கதைகளில் வெகுவாக கவர்ந்தவை Dimension, Too Much Happiness, Wenlock Edge & Face.  இவரின் சில சிறுகதைகள் The New Yorker இதழில் வாசிக்க கிடைக்கின்றன. 

இத்தொகுப்பின் கடைசி கதையான Too Much Happiness ரஷ்ய கணித மேதையும் நாவலாசிரியருமான சோபியாவை பற்றியது (Sofia Vasilyevna Kovalevskaya) சற்றே நீளமான கதை என்றாலும் மிக முக்கியமான சிறுகதை.  சோபியாவை பற்றிய புத்தமும் (‘Beyond the Limit : The Dream of Sofya Kovalevskaya – 2002”) படமும் (Sofya Kovalevskaya – 1985) கூட வெளியாகியுள்ளன.  மேலும் சோபியாவை பற்றி அறிந்துக்கொள்ள Little Sparrow : A Potrait of Sophia Kovalesvky – 1983 புத்தகத்தை இத்தொகுப்பின் நன்றியுரையில் ஆலிஸ் மண்ரோ பரிந்துரைத்திருக்கின்றார். 

2006ஆம் ஆண்டில் வெளியான “The View from the castle rock” தொகுப்பை தனது இறுதி படைப்பாக அறிவித்திருந்தார்.  மூன்றாண்டுகள் கழித்து 2009ஆம் ஆண்டில் Too much happiness வெளியானது.  இவரது “The Bear Came Over the Mountain” சிறுகதை “Away from her” என்ற திரைப்படமாக  வெளியாகி பல விருதுகளை வென்றது.  இக்கதையும் New Yorkerல் வாசிக்க கிடைக்கின்றது.

பிகு : Too much happiness முழு தொகுப்பை இங்கும் வாசிக்கலாம்.

Read Full Post »

மூன்றாண்டுகளாக புத்தக அலமாரியில் உறங்கிக்கொண்டிருந்த புத்தகத்தை எதேச்சயாய் எடுத்து தூசிதட்டி வாசிக்க துவங்க, சில பக்கங்கள் வாசித்ததுமே ஏன் இத்தனை நாளாக இப்புத்தகத்தை படிக்காமல் விட்டுவிட்டோமென தோன்றும் அளவிற்கு அத்தனை அருமையாக சொல்லப்பட்டிருக்கின்றது இக்கதை. பசிபிக் கடலில் மூழ்கிய கப்பலிலிருந்து தப்பித்த ஒரு பதினாறு வயது சிறுவனின் கதையிது.

The Map of Love நாவலில் ஒரு வரி ‘We always know how the story ends. What we don’t know is what happens along the way’ என்று வரும். அப்படிதான் இக்கதையும் பதினாறு வயதில் நடந்த சம்பவத்தை அவர் நாற்பது வயது கடந்த பிறகு விவரிப்பதாக அமைந்திருப்பதால் நிச்சயம் கடலிலிருந்து தப்பித்து கரையேறிவிடுவார் எனத்தெரிந்தும் எவ்வித சாத்தியக்கூறும் இல்லாமல் போகும்போது இது எப்படி நிகழ்ந்தேறியதென அறிந்துக்கொள்ளும் ஆவல் இக்கதையை தொடர்ந்து வாசிக்க தூண்டுதலாய் அமைந்திருக்கின்றது.

முதல் பாகத்தில் இழையோடும் நகைச்சுவை சமயங்களில் வாய்விட்டுச் சிரிக்கச்செய்தது. தனது பெயரான Piscineனை Pissing என்று உச்சரிக்கப்படுவதாலான சங்கடங்களையும், சரியாக உச்சரிக்கப்படாததால் தன் பெயரை சுருக்கி Pi என்று வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தையும், அதற்கு பிறகு மூன்று புள்ளி ஒன்று நான்கு என்று அழைக்கப்படுவதால் கிடைக்கும் நிம்மதியையும் யதார்த்த நகைச்சுவையோடு கலந்து சொல்லப்பட்டிருக்கின்றது.

உதாரணத்திற்கு ‘வார்த்தையின் ஒலி மறைந்துப்போகும் ஆனால் அது உண்டாக்கிய வலி ஆவியாகிப்போனப்பின்னும் மூத்திரத்தின் வாடை தங்கிவிடுவது போல் தங்கிவிடும்’ என்ற வரியை வாசிக்கும்போது சிரிப்பும் பரிதாபமும் ஒருமித்து தோன்றியது. பையின் தந்தை விலங்கியல் பூங்காவின் நிர்வாகியதலால் விலங்குகளை பற்றி பலவும் தெரிந்துக்கொள்கிறார். பூங்காவை நிர்வகிக்கும் முறைகளும் விலங்குகளின் பழக்கவழக்கங்களும், அவைகளை திருப்தியோடு வைத்துக் கொள்ளவேண்டிய அவசியங்களும் மிகுந்த அக்கறையோடு விரிவாக பகிரப்பட்டுள்ளது.

விலங்குகளை சுதந்திரமாக காடுகளில் சுற்றித்திரியவிடாது கூண்டுகளில் அடைத்து வைப்பது அவைகளை துன்புறுத்துதலாகும் என்ற பொதுவான கருத்திற்கு மாற்று கருத்தை வளியுறுத்துகின்றார். விலங்குகள் தங்கள் பழக்கங்களின் அடிப்படையிலேயே வாழ்கின்றன எனவும் அதன் தேவைகள் எல்லாம் எவ்விடத்தில் பூர்த்தியாகின்றனவோ, அதுவே எவ்விடத்தில் நீடித்து தினந்தோறும் கிடைக்கின்றனவோ அவ்விடத்தில் அவை திருப்தியோடு இருக்கும் என்றும் விளக்கியுள்ளார்.

இரண்டாம் பாகம் முழுவதும் பசிபிக் கடலும் கடல்வாழ் உயிரினங்களையும் கொண்டு சிறிதும் தேக்கமின்றி வெகு சிறப்பாக நகர்த்தியிருக்கின்றார். கடலின் பிரம்மாண்டத்தை இரவு பகல் மாற்றங்களுக்கேற்ப விவரித்திருக்கும் விதம் பயத்தையும் வியப்பையும் ஒருமித்து ஏற்படுத்துகின்றது. தங்கள் மேற்கொண்ட கடல் பயணத்தில் கப்பல் மூழ்கிவிட தான் மட்டும் படகில் நான்கு விலங்குகளுடன் விடப்பட்ட நிலையில் தன்னை காப்பாற்றிக்கொள்ள 227 நாட்கள் கடலில் அச்சிறுவன் மேற்கொள்ளும் வெவ்வேறு விதமான முயற்சிகள் தாம் இரண்டாம் பாகம் முழுவதும். படகு பயணத்தின் முதல் வாரத்திலேயே மூன்று விலங்குகள் வலியது வெல்லுமென்ற முறையில் ஒவ்வொன்றாக கொல்லப்படுகின்றன. பின் மீதமிருக்கும் சிங்கமும் சிறுவனும் அச்சிறிய படகில் அத்தனை நாட்கள் ஒன்றாக துயரம், பசி, வேதனை, பயம், வலி என எல்லா கஷ்டங்களுக்கிடையேயும் எப்படி தப்புகிறார்கள் என்பதை சிறப்பாக சொல்லியிருக்கின்றார். இவன் தப்புவதற்கு முக்கிய காரணம் அக்கடலில் தான் உயிரிழக்கப்போவதில்லையென்றும் முயன்ற வரை முயற்சிக்க வேண்டும்மென்ற அச்சிறுவனின் அபார நம்பிக்கை தான். நம்பிக்கையை பற்றி பேசும்போது இப்படிச் சொல்கிறார்.

 “They go as far as the legs of reason will carry them and then they leap”

“To choose doubt as a philosophy of life is akin to choosing immobility as a means of transportation”

இப்புத்தகத்தில் நாம் அறிந்துக்கொள்வதற்கான தகவல்கள் ஏராளமாக இருக்கின்றன. இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றானபின் மனித மனம் அடையும் மாற்றங்கள் வியப்பானவை. அவை விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றது. கடலில் கடற்றாழைகள் அடர்த்தியாக வளர்ந்து ஒரு தீவு போல் பரந்திருக்கும் இடத்தில் அவன் கழிக்கும் நாட்கள் Cast Away திரைப்படத்தை நினைவுபடுத்தியது.

பாண்டிச்சேரியில் துவங்கும் இக்கதை பையின் வாழ்க்கை முறைகளையும், விலங்கியல் பூங்காவில் விலங்குகளுடனான உறவையும், எல்லா மதங்களிலும் அவன் கொண்ட அதீத ஈடுபாடுகளும் அதனால் பல மனிதர்களுடன் கொண்ட நெருங்கிய தொடர்பும், வெயிலிலும் மழையிலும் கடலில் வாடும் பொழுதுகளில் நம்பிக்கையிழக்காமல் தொடர்ந்து மேற்கொள்ளும் முயற்சிகளும் நேர்த்தியாக சொல்லப்பட்டிருக்கின்றதென்றாலும் இப்புத்தகத்தின் வெகுசிறப்பம்சமே நாம் எதிர்பாரா வகையில் கதையை முடித்த விதம்தான். இதைபற்றி எழுதுவதை விட வாசித்து அறிந்துக்கொள்வதே மேலானது. 

இந்நாவல் 2002ஆம் ஆண்டில் புக்கர் பரிசை வென்றது. இக்கதையை திரைப்படமாக்கும் முயற்சிகளும் தொடர்கின்றன.

Book : Life of Pi
Author : Yann Martel
Pages : 336
First Edition : 2001

Read Full Post »

mapஎகிப்த் நாடு ஆங்கிலேயரின் ஆட்சிப்பிடியில் இருந்த 1900 காலகட்டங்களையும், 1997 – 1998 காலகட்டங்களையும் பின்னனியாகக்கொண்டும் இரண்டு காலத்திலும் பயணிக்கின்றது இக்கதை. இப்புத்தகத்தின் பெயரை கொண்டு இது ஒரு காதல் கதையாக இருக்மென நினைத்து வாசித்தேன். ஆனால் காதலை மட்டும் சொல்லும் படைப்பாக இல்லாமல் இரு வேறு கால கட்டங்களிலுமான வரலாற்று நிகழ்வுகளை, அரசியலை, சுதந்திர போராட்டங்களை, எகிப்த் நிலத்தின் நாகரீகத்தினை, நூறாண்டுகளில் அது அடைந்த மாற்றங்களையும் பதிவுசெய்துள்ளது.

“என்னால் முடிந்தவரை அவளுக்கு புரியவைக்க முயற்சித்துவிட்டேன். ஆனால் அவளால் புரிந்துக்கொள்ள முடியவில்லை, புரிந்துக்கொள்ளவும் மாட்டாள். நம்பிக்கை இழக்காமல் எப்போதும் அவருக்காக காத்திருக்கின்றாள்” என்ற வரிகளில் மிகவும் சாதாரணமாகவே கதை தொடங்கியதெனினும் அதே வரிகளில் கதை நிறைவடையும் போது அவ்வரிகளின் தாக்கம் நம்மை முழுமையாக ஆக்கரமிக்கின்றது. எந்த ஒரு உணர்வையும் தனித்து பார்க்கும் போது அதன் வீரியத்தை முழு அளவில் உள்வாங்கிக்கொள்ள ஏதுவாய் இருப்பதில்லை. அதுவே சூழலோடும் தன்மையோடும் அறியப்படும்போது நம்மையும் அதனோடு ஒன்றி விடச்செய்கின்றது.

தாயின் உடல் நலம் சீறற்றுப்போனதால் மருத்துவமனையில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுவிட, அந்நேரத்தில் ஒரு பழைய டரங்கு பெட்டியை தன் தாயின் வீட்டில் காண்டடைகிறாள் லண்டனில் வசிக்கும் இசபெல். அதில் பல காகிதங்களும், உரைகளும், கடிதங்கலும், செய்திதாள்களிலிருந்து வெட்டப்பட்ட பக்கங்களும் மேலும் சில பொருட்களையும் காண்கிறாள். அதிலுள்ள குறிப்புகள் எல்லாம் அரபி மொழியிலும், பெரன்ச்சிலும், சில ஆங்கிலத்திலும் இருக்கின்றன. தன் குடும்பத்தை பற்றிய வரலாறு அதிலிருக்கக்கூடும் என்றும் அதை அறிந்துக்கொள்ளும் ஆவலில் தன் நண்பரான உமரை அணுகுகிறாள். அவர் தன் தங்கையான எகிப்தில் வசிக்கும் அமல் இதற்கு உதவி புரிவாரென அவளிடம் அனுப்பி வைக்கிறார். அமலின் வாயிலாக நூறாண்டிற்கு முன் அவர்கள் குடும்பத்தின் நிகழ்வுகளை கதையாக நமக்கு அளித்திருக்கிறார் ஆசிரியர்.

அக்குடும்ப தலைமுறைகளின் வரைபடம் முதல் பக்கத்திலேயே கொடுத்திருப்பதால் யார் யாருக்கு எப்படி சொந்தம் என்று கதையின் ஆரம்பத்தில் ஒவ்வொரு பெயராக அறிமுகமாகும்போது அதனை குழப்பிக்கொள்ளாமல் சரியாக புரிந்துக்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கின்றது. 1900 ஆண்டில் தன் கணவனை இழந்த சோகத்தில் ஒரு மாறுதலுக்காக சிறிது காலம் எகிப்தில் தங்கி வர இங்கிலாந்திலிருந்து Anna வருகிறாள். தன் கணவரின் தந்தையின் மூலம் அங்கு ஆட்சிப்புரியும் ஆங்கிலேய அரசு அதிகாரிகள் பலருடனும் நட்புக்கொண்டு அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கும் விருந்துகளுக்கும் சென்று தன் பொழுதை கழிக்கிறாள். தொடர்ந்து தன் மாமனாருக்கு எழுதும் கடிதங்கள் மூலம் அந்நிகழ்வுகள் பதிவாகியிருக்கின்றன. முதல் நூறு பக்கங்கள் அவள் செல்லும் இடங்களை பற்றிய விவரனைகளாகவும் சந்தித்த மனிதர்களை பற்றியதாகவும் இருப்பதால் மிகவும் நிதானமாகவே கதை நகர்கின்றது.

சினாய் பிரதேசத்திற்கு Anna ஆண்வேடம் அணிந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது எகிப்தியர்களால் கடத்தப்பட்டு ஒரு வீட்டில் அடைக்கப்படுகின்றாள். பிறகு அவ்வீட்டில் உள்ள பெண்மணி லைலாவுடன் நட்பாகி, அவளின் அண்ணனும் Annaவும் காதலித்து ஆங்கிலேய அதிகாரிகளின் எதிர்ப்புகளுக்கிடையில் அவர்கள் திருமணம் செய்துக்கொள்கின்றனர். தன்னுடைய மொழியை, நிலத்தை, சொந்தங்களை, நண்பர்களையெல்லாம் துரந்து கணவன்மேலுள்ள காதலால், அவ்வீட்டிலுள்ள மனிதர்கள் தன் மீது காட்டும் அன்பால் அவர்களையே தன் உலகமாக்கிக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறாள். “அவனின் கடலாக இருந்தாள் நீந்துவதற்கு, அவனின் பாலைவனமாக இருந்தாள் துள்ளிகுதிப்பதற்கு, அவனின் நிலமாக இருந்தாள் உழுவதற்கு” என்று அவர்களின் காதல் விவரிக்கப்படுகின்றது.

அவள் அந்நாட்டில் வாழ்ந்த வாழ்க்கையை அக்காலகட்டத்தில் நடந்த சுதந்திர போராட்ட சம்பவங்களோடும், ஆங்கிலேயர் ஆட்சியின் பிடியில் எகிப்த் நிலமக்கள் சந்திக்க நேர்ந்த சங்கடங்களையும் பிணைத்து கச்சிதமாக பதிவாக்கியுள்ளார் ஆசிரியர். முழுமையான வரலாற்றுக்காவியமாக அல்லாமல் ஆங்காங்கே கதையோடு இணைந்த தகவல் குறிப்புகளாக Ottoman Empire, Khedive Tewfiq, Lord Cromer மேலும் Denshawai incident பற்றிய தகவல்களை கொடுத்திருப்பது எகிப்த் நாட்டு வரலாற்றை தெரிந்துக்கொள்ள நல்ல அறிமுகமாக அமைந்துள்ளது.

தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் தங்கள் முன்னேற்றத்திற்காகவும் அல்லாமல் அவர்களின் ஆற்றலை எல்லாம் ஆங்கிலேயரின் சூழ்ச்சிகளை முறியடிக்கவே பயன்பட்டு வீணாக்கிக்கொண்டிருப்பதின் வருத்தத்தை கதை நெடுகிலும் காணமுடிகின்றது. சுதந்திரப்போராட்ட சம்பவங்களை பதிவித்தது மட்டுமல்லாமல் 1997 – 1998 காலகட்டங்களில் எகிப்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களையும், அதனால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களை பற்றியும் பதிவுசெய்துள்ளார். காதல் கதையினூடாக பதிவிக்கப்படும் இச்சம்பவங்கள் மிதமான தாக்கத்தையே தருகின்றதெனினும் காலத்திற்கேற்ப அக்குறிப்புகளை புகுத்தியிருப்பது சிறப்பாக அமைந்துள்ளது. “ஒன்றுமே செய்ய முடியாத கையறு நிலையில் மோசமான காலத்தில் கொடூரமான மாட்டிக்கொண்டதாக கவலை பட்டுக்கொண்டிருக்காமல் வரலாறு அதன்போத்தில் தன்னை எழுதிச்செல்ல காத்திருத்தலே நன்று” என்று அன்றைய காலக்கட்டங்களில் எழுதிய வரிகள் இன்றும் பொருந்திப்போவதாக காட்டியிருக்கின்றார்.

தன் கணவனை இழந்த சோகத்தில் எகிப்திற்கு வந்த Anna பதினான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் தன் கணவனை இழந்து, நெருங்கிய நட்பான கணவனின் தங்கையையும் அவளின் குடும்பத்தையும் பிரிந்து மகளுடன் இங்கிலாந்து திரும்புவதாக முடிவடைகின்ற கதையை இரண்டு தலைமுறைக்கு பிறகு ஏற்படும் காதலோடும் நட்போடும் பிணைத்து தொய்வில்லாமல் வெகு சிறப்பாக நகர்த்தியிருக்கின்றார்.

இறுதி சில பக்கங்களை வந்தடைந்துவிட்ட தருணங்களில் விரைவில் இக்கதை முடிவடைந்துவிடுமே என்ற எண்ணத்தில் சற்று நிதானமாகவே நான் வாசித்துக்கொண்டிருக்க, தன் குடும்பத்தின் மூத்த தலைமுறையினறை பற்றி வாசிக்கும் கதைசொல்லியான அமல் அவர்கள் கதையை அறிந்திருந்தும் Anna வின் இறுதி பகுதிகளை வாசிக்க தாமதப்படுத்துகிறாள் என்ற வரிகளை வாசிக்கும் போது மெலிதான புன்னகையை தவிர்க்கமுடியவில்லை. நல்ல புத்தகங்களையும் நம்மை அதனுள் மூழ்கடித்துவிடும் எழுத்துக்களையும் பிரிய கடினமாகவே இருக்கின்றது. புத்தகம் முடியும் வரை அக்காகித மாந்தர்கள் நம்முடனேயே தங்கிவிடுகின்றனர். அதிலும் Annaவின் கணவர் கதாப்பாத்திரம் வெகு சிறப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

இப்புத்தகம் 1999 புக்கர் பரிசு தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றது. அந்த ஆண்டு J.M.Coetzeeயின் Disgrace நாவல் புக்கர் பரிசை வென்றது என்றாலும் இப்புத்தகமும் முற்றிலும் வித்தியாசமான நிறைவான அனுபவத்தை தந்தது. ஆரம்பம், ஆரம்பத்தின் முடிவு, முடிவின் ஆரம்பம், முடிவு என்று நான்கு பகுதிகளாக பிரித்து அதிலுள்ள உட்பிரிவு ஒவ்வொன்றின் ஆரம்பத்திலும் கதைக்கு ஏற்ப பொன்மொழிகளையோ பாடல் வரிகளையோ மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு.

இக்கதையின் ஆசிரியரான Adhaf Soueif இந்நாவலின் மூலம் பிரபலமாக அறியப்பட்டார் என்று சொல்லப்படுகின்றது. இவர் கட்டுரை தொகுப்புகள், நாவல்கள், சிறுகதை தொகுப்புகள் வெளியிட்டது மட்டுமல்லாமல் அரபு-ஆங்கில மொழிபெயர்ப்புகளையும் செய்துவருகின்றார். இவரை பற்றி இங்கு வாசிக்கலாம்.

Book : The Map of Love
Author : Ahdaf Soueif
Pages : 516
First Edition : 1998

Read Full Post »

10069

நீண்ட நாட்களுக்குப்பிறகு நிறைவோடு வாசித்த கவிதை தொகுப்பு பிரான்சிஸ் கிருபா எழுதிய வலியோடு முறியும் மின்னல். இதில் நூற்றிற்கும் மேற்பட்ட கவிதைகள் உள்ளன. இத்தொகுப்பு எளிதில் கடக்க கூடியதாக இருக்கப்போவதில்லையென்று யூமா வாசுகி முன்னுரை வாசித்ததுமே புரிந்துவிட்டது. தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகள் நன்றாக இருந்தன எனினும் எப்போதும் போல் வலியை சொல்லு கவிதைகளே வெகுவாகப்பிடித்துப்போனது. அதில் சில சிறிய கவிதைகளை மட்டுமே இங்கு இடுகிறேன்.

 

எப்போதோ எதற்காகவோ செய்த தவறுகளெல்லாம் தீடிரென்று நினைவிற்கு வந்து வதைத்துக்கொண்டிருப்பதுண்டு. பல குற்ற உணர்வுகளில் சிக்கி தவித்து தன்னைத்தானே வதைத்துக்கொண்டிருக்கும் மனம். அப்படி தைத்துக்கொண்டிருக்கும் மனதை நீயேனும் ஏன் மன்னிக்கூடாது என கெஞ்சுகிறது இக்கவிதை.
 

கணங்கள்தோறும்
என்னை நானே
தண்டித்துக்கொண்டிருக்கும்
போது….ஏன்
நீயேனும் கொஞ்சம்
என்னை மன்னிக்கக்கூடாது

 

பற்றிக்கொள்ள ஒரு விரல் தரும் ஆசுவாசத்தை, அதன் பின் முழுமையாய் உடனிருக்கும் மனிதனனப் பற்றிய நம்பிக்கையை அற்புதமாக நடைபடும் வழிகளையும், வீதியையும், நிலத்தையும் அவள் இல்லாமல் தான் தனித்து நடக்கும் வேதனையின் துணைக்கு புகுத்தியிருக்கிறார் இக்கவிதையில்.

 

நடைபடும் வழிகள்
கடைகள் வரை நினைக்கின்றன
பிள்ளைகள் பற்றிக்கொள்ள
ஒருவிரல் போதுமென்று

ஒற்றை விரலக்குப் பின்னே
முழுசாய் ஒரு மனுஷி ஒரு மனிதன்
வீணாயிருப்பதை
விளக்க முயல்கிறது வீதி

முயன்றாலும்
நான் மட்டும் நீயின்றி நடந்தால்
ஏனென்றே தெரியாமல்
வலியில் துவள்கிறது நிலம்
.

 

ஏற்கவோ நிராகரிக்கவோ முடியாத நிலையில் கைமீறிப்போகின்ற காலத்தை நிறுத்தமுடியாமல் தவிக்கும் மனங்களை பற்றிய கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் நீங்கிப்போகின்றவைகளை விதவிதமாக இப்படி எழுதி வாசித்துக்கொள்ள மட்டுமே முடியும் என்று சொல்லித் தேற்றிக்கொள்ள நன்றாகத்தானிருக்கிறது.

 

இரவின் ஜன்னல் வழியே
எட்டிப்பார்க்கின்றன கனவுகள்
நேரம் காலமறியாமல்
விடிந்துவிடுகிறது பொழுது.
முகத்தை சுளித்துத் திருப்பிக்கொள்கின்றன கனவுகள்.
காலையில் ஏந்தும்
முதல் காப்பிக் கோப்பையில்
கனவுப் பிணங்கள் இறந்து மிதக்கின்றன.
ஈயைப்போல் எடுத்துத் தூரப் போடவோ
அல்லது புகாரோடு
அந்த காப்பியை நிராகரிக்கவோ
முடியாமல் தவிக்கும்போது
ஆறிப்போகிறது அன்றைய சூரியன்

 

எல்லோருக்கும் வாய்த்துவிடுவதில்லை அவர்களுக்கு தேவையான அல்லது ஆசைப்படும் வாழ்வெனினும் ஏங்கித்தவிக்க தவராமல் வாய்க்கிறது யாவருக்கும். மர நாற்காலியை மட்டுமல்லாத மனித மனதின் ரணங்களை, இயலாமைகளை, ஏமாற்றங்களை, வாய்க்கப்பெறாதவைகளை இன்னும் எத்தனையோ வலிகளை தன்னுள் கொண்டுள்ளது இக்கவிதை.

பார்வை


ஆளற்ற கூடம்
அங்கே அந்த மர நாற்காலி அமர்ந்திருந்தது.
அதன் மேல்
வயலினை சாய்த்து வைத்துவிட்டு
வெளியேறியிருக்கிறான் இசைத் தொழிலாளி.
‘என்னிலும் நாலு தந்திகள் முறுக்கி
செல்லமாக தோளில் ஏந்து வைத்து
ரம்பத்தால் வருடினால் என்ன’
என்பது போல் யாரையோ
பார்க்கிறது மர நாற்காலி.
எதிரே திறந்திருக்கிறது
இசைக் குறிப்பு புத்தகம்.

 

நிறைய கவிதைகள் இத்தொகுப்பில் பிடித்திருந்தாலும் இக்கவிதையே என்னை மிகவும் ஈர்த்தது. மனதை பக்குவப்படுத்திக்கொள்ள பயன்படும் உன்னத கவிதையாக தோன்றுகிறது இது. துயரம் மிகுகையில் வார்த்தைகள் இத்தனை கச்சிதமாக தங்களை கோர்த்துக்கொள்ளுமோவென வியக்கவைத்தது.

 

முத்தமிட்டு என்னை
சாம்பலாக்கித் தந்துவிட்டு
கவலைப்படும் பூக்களாக
உன் கண்களை மாற்றிக்கொள்ளும்போது….
இலக்கின்றி நடக்கத் தொடங்குகிறேன்,
கொலை வாள் நீட்டி
மன்னித்துக் காட்டிய வழியில்

 

அடிகோடிட்ட வரிகளையெல்லாம் மீண்டும் வாசிக்கையில் எங்குமே சந்தோஷமான வரிகள் காணக்கிடைக்கவில்லை. சந்தோஷங்கள் எளிதில் கடந்து விடுகின்றனவோ, துக்கங்களும் அவநம்பிக்கைகளும் மட்டுமே சற்று தங்கிச்செல்கின்றனவோ எனத் தோன்றியது. வியக்க வைக்கும் உவமைகளைகொண்டு துயரங்களை பதித்திருக்கிறார் நிறைய கவிதைகளில். அவற்றில் சில வரிகள்…..
 

கண்ணீர் நாறிய தலையணையுறைக்குள்
பன்றிக்குட்டிகள் சிரித்துப் புரண்டன
மின்னல் கொடியிழுந்து
மேக ரதம் செலுத்தும் கற்பனையை
மூட்டைப் பூச்சியைப் போல நசுக்கினேன்.
 

**

கோபத்தை என்மீது துப்பிவிட்டுப் போகிறாய்
எச்சில் துளிகள் துப்பல் தொகுப்பில் இயல்பாக உலரும்.
அதைத் துடைத்தொழிக்க அவசரப்படமாட்டேன்
 

**
 

பெருஞ்சிரத்தையோடு வடிகட்டிய வெளிச்சத்தில்
பிச்சைப் பாத்திரம் நிரம்பிய பின்னும்
குருடனாகக் கெஞ்சும் உன் அறையை விட்டு
வெளியேறவே முதலில் விரும்புகிறேன்
 

**


பொறுக்க ஏலாமல்
அகதியான நாளின் நுனியில்
கூடடைந்த மலைத் தேனீக்களாய்
இதயத்தை மொய்த்துக் குமையும்
ஆயிரமாயிரம் வார்த்தைகள்
 

 **

 
“தேவைகள் எல்லாச் சமயங்களிலும் காலைப்பிடித்து தூக்கிவிடுகின்றன பலவீனமான தீர்மானங்களை”, “என்னைக்காணாமல் நகங்களைக் கடித்து இன்னும் கொஞ்சம் துப்பியிருக்கலாம் நீ “, “சூரியனை நம்பக்கூட தயக்கமாக இருக்கிறது சந்தேகம் எப்படிப் புலருமென்று தெரியாத பட்சத்தில் “, “மனதின் மிகப்பழைய வரைபடத்தின் வரம்புக்குள்ளேயே மலர்கின்றன பூக்கள்” என்று வெவ்வேறு கவிதைகளில் குறிப்பிடும்போது ஒரே மனம் தன் நிலைகளுக்கும் சூழலுக்கும் சம்பவங்களுக்கும் ஏற்ப எவ்வாறாக வேறுபடுகின்றதென்பதை அறியமுடிகின்றது.

 

இத்தொகுப்பில் தாங்கமுடியாத பரிசு, மரணத்தின் நிறம், கதிர் ரோமங்கள் கருகும் மெழுகுவர்த்தி, ஆளொழிந்த வீட்டில், தீயின் இறகு, புகைச்சித்திரம், கிளிகளின் தொலைபேசியில், முத்தமிட, வானத்தைத் தோற்றவன், எதிர்மிச்சம், கடலுக்குப் பெயர் வைக்கவேண்டும் போன்ற கவிதைகளும் மேலும் பல தலைப்பில்லா கவிதைளும் மிகச்சிறப்பானதாக அமைந்திருக்கின்றன.
 

‘அதிகரித்து வருகிறது முன்னறிமுகமில்லா ஒரு புன்னகைக்கான நிச்சயம்’ என்னும் பிரான்சிஸ் கிருபாவின் வரிகளுக்கேற்பவே இத்தொகுப்பை வாசிக்கும் போது நிறைவுப்புன்னகைகான நிச்சயம் அதிகரித்துக்கொண்டுதான் வருகிறது பக்கங்கள் நகர்ந்துக்கொண்டிருக்க.

Read Full Post »

waves

உரையாடல்களே இல்லாமல் முழுவதுமே எண்ணவோட்டங்களாகக் கொண்டு கதையை இத்தனை சுவாரிஸ்யமாக நகர்த்திவிட முடியுமா என்று ஆச்சரியமாக உள்ளது.  முழுக்க முழுக்க அகத்தைக்கொண்டே எழுதப்பட்ட கதையிது.  ‘நனவோடை எழுத்து’ (The Stream of Consciousness) என்ற இவ்வுத்தி மிகவும் ஈர்க்கக்கூடியதாக  உள்ளது.  
 
ஆறு நண்பர்கள்….ஒருவருடைய சிந்தனை முடிய அடுத்தவருடையது தொடங்குகிறது.  அவர்களுடைய பள்ளிப்பருவத்தி்லிருந்து துவங்கி முதுமை வரை கதை நகர்கிறது சிந்தனையிலேயே.  கால மாற்றங்கள் பற்றியும், நிகழ்வுகளை பற்றியும் எண்ணங்களின்வாயிலாகவே அறியத்தருகிறார் ஆசிரியர். 
 
பள்ளி பருவம் முடிந்து இருமுறை (இருபதுகளில் ஒரு முறையும் மத்திய வயதில் ஒரு முறையும்) அனைவரும் சேர்ந்து ஓரிடத்தில் சந்தித்துக்கொள்கிறார்கள்.  அப்பொழுதும் கூட உரையாடல்களே இல்லாமல் எண்ணவோட்டங்களாவே சிறப்பாக நகர்த்திச்சென்றிருக்கிறார்.  தொடர்வோட்டத்தில் ஒருவர் ஓடிச்சென்று அடுத்தவர் கையில் கொடுக்க அதை அவர் ஏந்திச்சென்று மற்றொருவர் கையில் ஒப்படைப்பார்.  அப்படியாகத்தான் இந்த ஆறு நபர்களின் எண்ணவோட்டங்களும் ஒருவரில் இருந்து அடுத்தவருக்கு நகர்கிறது.  ஏழாவதாக இன்னுமொரு நண்பர் இருக்கிறார். அவரை பற்றிய தகவல்கள் மற்ற ஆறு நபர்களின் எண்ணங்களிலிருந்தே அறிந்துக்கொள்ள முடிகிறது.  அவர் இடையில் இறந்தும் விடுகிறார்.   
 
கால நகர்வுக்கேற்ப அவர்களின்  சிந்தனைகளும் தெளிவாக மெருகேறிக்கொண்டே வருகிறது.  பள்ளிப்பருவத்திற்கு பிறகு அவர்கள் நெருக்கமாக யாரையும் சந்திக்கவில்லையா என்று எண்ணத்தோன்றுகிறது.  கதை முழுவதும்  வேறு எவறொருவரை பற்றிய அவர்களின் சிந்தனையும் அதிகமாகப்பதியப்படவில்லை.  ஒவ்வொரு பருவமாக அவர்கள் கடந்து சொல்லும் போதும் எல்லா எண்ணங்களும் தங்களைப்பற்றியதாகவும் தங்களின் பள்ளி நண்பர்களைபற்றியதாகவுமே பெரும்பாலும்  அமைந்திருக்கிறது.   
 
கதை முழுக்க முழுக்க கவித்துவத்தால் நிரம்பி உள்ளது.  புத்தகத்தை திறந்து எந்த ஒரு பத்தியை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம்.  நமக்கு தேவையான ஏதோ ஒன்று நிச்சயம் அப்பத்தியில் மிளிறும்.  இது ஒரு முறை வாசித்து மறக்கக்கூடிய புத்தகமாக இல்லை.  மீண்டும் மீண்டும் இதை வாசிக்க வேண்டும்.  அதுவும் கடைசி அத்தியாயமான ஒரே ஒருவர் மட்டும் நம்மிடம் உரையாடும்போது அப்படியே நெகிழச்செய்கிறது. அலைகளைப்போலவே ஓயாமல் அடித்துக்கொண்டிருக்கிறது இப்புத்கத்திலுள்ள வரிகளும். 
 
இக்கதையை சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை ஒன்பது அத்தியாயங்களாக பிரித்து வாழ்வின் ஒவ்வொரு மாற்றத்தையும் உணர்வையும் அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.   அபாரமான மொழிநடையில் எத்தனை விதமான எண்ணவெளிப்பாடுகள். புத்தகம் முழுக்க அடிக்கோடுகளால் நிரம்பின.  அவசியம் இப்படியான புத்தகங்களை தமிழிலும் வாசிக்க வேண்டும் இதே மொழிவளத்தோடு.   யார் யாரிடம் பேசுகிறார்கள் என்று ஆரம்ப சில பக்கங்களில் குழப்பமாக இருந்தாலும் சில பக்கங்களை கடந்ததுமே அந்த எழுத்துடன் நம்மால் பயணிக்க முடிகிறது.  மேலும் அவ்வெழுத்துக்கள் புத்தகத்தை மூடியபிறகும் நம்முடன் தொடர்ந்து வருகிறது.   
  
Book :  The Waves
Author : Virginia Woolf
Pages : 231
First Edition : 1931
 
வெர்ஜீனியா உல்ஃப் பற்றிய குறிப்புகளை கவிஞர் சுகுமாரனின் இக்கட்டுரையில் வாசிக்கலாம். http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=438
 
இப்புத்தகத்தை இணையத்தில் வாசிக்க விருப்பமுள்ளவர்கள் இங்கு சென்று வாசிக்கலாம்.   http://gutenberg.net.au/ebooks02/0201091h.html
 

Read Full Post »

Older Posts »