Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘Haruki Murakami’ Category

எந்த ஒரு நாளின் நடந்த அனைத்துச் சம்பவங்களையும் நிமிடத்திற்கு நிமிடம் திரும்பிப் பார்ப்போமேயானால் அன்றாட வேலைகளுக்கு நடுவில் தற்செயலாக நிகழ்ந்தவைகளும், எதார்த்தமானவைகளும், சிறிதேனும் வியப்புக்குள்ளாக்கியவைகளும், மாற்று கருத்துக்களும், புன்னகைக்கான தடங்களும், அயர்ச்சிக்கான சில துளிகளும் சிதறிக்கிடக்கும். அப்படி பார்ப்பதற்கான கால அவகாசமோ இயலாமையோ அவசியமின்மையோ விரவும் நிலையில் நடந்தவை, நடப்பவையென எல்லாவற்றையும் சுமந்து திரிவது இயலாததாகின்றது. அதனால் சில முக்கிய அல்லது பாதித்த தருணங்களை தவிர பிறவற்றை அந்தந்த இடத்திலேயே விட்டு அடுத்து வருவனவற்றுள் நம்மை புகுத்திக் கொள்கின்றோம். அப்படியல்லாது கனவுகளையும், குழப்பங்களையும், எண்ணவோட்டங்களையும் பதிவித்துக் கொண்டேயிருப்பின் அவை தொடரற்ற தொடராக நீண்டுக்கொண்டே செல்லும். அத்தகைய நீள்தொடராக அமைந்திருந்தது ஹருகி முராகமி எழுதிய The wind up bird chronicle. இக்கதை எதார்த்தத்தினூடே சர்ரியலிசத்தையும் பின்நவீனத்துவத்தையும் புகுத்திப்பார்த்திருக்கின்றது. இப்படி கூட நிகழுமா இது சாத்தியமா இது என்ன மாயாஜால வித்தையா என்றெல்லாம் ஆராயாமல் இந்த எழுத்தை அப்படியே தொடர்வோமாயின் எழுத்தப்பட்ட சொற்களினூடே விரியும் உணர்ச்சிகள் அப்படியே நம்மையும் நிச்சயம் தொற்றிக்கொள்ளும்.
இதிலுள்ள எல்லா கதா பாத்திரங்களுக்குமே நீண்ட விசித்திர கதையை வெவ்வேறு காலகட்டங்களில் புனைந்துள்ளார் ஹருகி. மையகதாபாத்திரத்தின் வீட்டில் வசிக்கும் பூனை காணாமல் போனதிலிருந்து துவங்கும் கதை அதை தேடும் முயற்சியில் வெவ்வேறு சிக்கல்களை குழப்பங்களை கதாபாத்திரங்களை கனவுகளை வினோதங்களை முடிச்சிகளாக்கிக்கொண்டே வந்து எல்லாம் சேர்ந்து சிக்கலான பிறகு ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கின்றார். கனவுகள் வழி நிகழிற்கும் நிகழ் வழி கனவிற்கும் மாய எதார்த்தத்திற்கும் மாறி மாறி பயணிக்கின்றது இக்கதை.

சப்தமற்ற தனித்த வீட்டில் கடிகாரத்தின் முள் தனது இயக்கத்தை உறக்க அறிவிப்பதை போன்று அமைதியான சூழலில் ஒற்றை ஒலி எழுப்பியவண்ணம் மையகதாபாத்திரத்தின் எண்ணங்களையும் அசைவுகளையும் நுணுக்கமாக மிக நிதானமாக பதிவித்து நகர்கின்றது கதையின் முதல் பாதி. அவருடைய பெரும்பாலான கதைகளில் பூனைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்ரியலிச கதையான The Wind Up Bird Chronicle கதை எழுத துவங்கும் போது ‘ஒரு முப்பது வயதான மனிதன் வேலையில்லாமல் வீட்டில் உணவு சமைத்து கொண்டிருக்கின்றான், தொலைபேசி மணி ஒலிக்கின்றது’ என்ற இந்த ஒன்றை வரி எண்ணம் மட்டுமே இருந்ததெனவும் அங்கு ஏதோ வினோதம் நிகழப்போவதாக உணர்ந்ததாகவும் ஹருகி கூறுகின்றார். இந்த ஒற்றைவரியிலிருந்து விரியும் இந்நாவல் இரண்டாம் உலகப்போரில் நிகழ்ந்த சம்பவங்கள், சைபீரிய சிறையில் நிகழும் அநீதிகள், மங்கோலியா மன்சூரிய ராணுவம் என பல அடுக்குகளில் பயணிக்கின்றது.

ஹருகி தன் எழுத்துகளில் வினோதங்களையும் விசித்திரங்களையும் இயல்பு நிலையிலிருந்து பிறழந்த கதாபாத்திரங்களையும் மீண்டும் மீண்டும் கட்டமைக்கின்றார். மறுபிறப்புகளிலும், கனவுகளிலும், ஜோசியங்களிலும், மாய வேற்று உலகங்களிலும் நம்பிக்கையில்லையென்ற போதிலும் எதார்த்தங்களை எழுதத்துவங்கும் போதும் இவையெல்லாமும் சேர்ந்துக்கொள்கின்றன என்கின்றார். உதாரணத்திற்கு இக்கதையில் வரும் கதாபாத்திரங்களின் சில விசித்திர தன்மைகள் :
டோரு ஒக்கடா : வேலையில்லாமல் வீட்டில் இருக்கும் இவர் யாருமற்ற அடுத்த வீட்டு நீரற்ற பாழ் கிணற்றுக்குள் நினைத்த போதெல்லாம் இறங்கி அங்கேயே தனக்கு சலிக்கும் வரை தங்குவார். கனவுகளில் கிணற்றுச்சுவர்களில் நுழைந்து மறுபுறமுள்ள மாய உலகிற்குள் பிரவேசிப்பார். அங்கு பற்பல வினோத சம்பவங்கள் நிகழும். அல்லது ஓர் இடத்தில் அமர்ந்து வரும் போகும் மனிதர்களின் முகங்களை வெறுமனே கவனித்துக் கொண்டிருப்பார்.

மே கஷாரா : ஒரு விபத்தில் தனது நண்பன் மரணித்தப்பின்னர் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு விபத்தில் உண்டான காயங்களை காரணம் காட்டி வெறுமனே வீட்டில் இருக்கின்றார். பகுதி நேர வேலையாக ஒவ்வொரு ஆணின் தலைமுடியும் வழுக்கையாவதற்கு முன்பு அதன் தரத்தின் வாயிலாக A B C என்று பகுத்து கடந்து செல்லும் ஒவ்வொரு தலையும் எப்பிரிவில் அடங்குமென்ற கணக்கெடுப்பில் பணியாற்றுகின்றார். பிறகு விக் தயாரிக்கும் கம்பெனியிலேயே நிரந்தர பணிக்கு சேர்ந்துவிடுகின்றார்.
 

மால்டா கானோ : தன்னுடைய பல வருடப்பயிற்சிகளால் சில அதீத சக்திகளை உடையவர். இவருடைய பெரும்பாலான பேச்சுகள் எல்லாமே பூடகமாவே இருக்கும்.

 

கிரீடா கானோ : மால்கடா கானோவின் தங்கையான இவர் சிறுவயதிலிருந்து சகித்துக்கொள்ள முடியாத ஏராளமான உடல் உபாதைகளை அனுபவித்து பதின்ம வயதில் தற்கொலை செய்ய முயற்சித்து தோற்கும் போது எல்லா உணர்ச்சிகளும் வலிகளும் மரத்துப்போய் சூழ்நிலையால் பாலியல் தொழிலுக்கு உட்படுகின்றார். பிறகு நடந்து ஒரு வன்புணர்வால் கிட்டத்தட்ட தன் எல்லா உணர்வுகளையும் மீட்கப்பெற்று சகஜ நிலைக்கு திரும்புகின்றார். இவர் கனவுகளில் நுழைந்து நிஜ உடல்ளோடு கலவிகொள்ளவல்லவர்.

Corporal ஹோண்டா : எதிர்காலத்தில் நிகழப்போகும் சம்பவங்களை முன்கூட்டியே அறியவல்லவர். அவர் அறியாமலேயே எதிர்காலத்தில் நிகழப்போகும் சம்பவங்களை ஓரிரு வாக்கியங்களில் குறிப்பால் உணர்த்துபவர்

Lieutenant Mamiya : இரண்டாம் உலகப்போரில் எதிரி படையினரிடம் சிக்கி துன்புறுத்தப்பட்டு பாழ் கிணற்றுக்குள் வீசியெறியப்படுபவர். அக்கிணற்றுக்குள் ஓரிரு நொடிகள் தோன்றும் சூரிய ஒளியால் தன்னுள் சில மாற்றங்களை அடைபவர். போர் சூழலில் தன் ஒரு கையை இழந்த இவர் தன் வாழ்நாள் முழுவதுமே வெறுமையின் துணையோடு மட்டுமே வாழ்பவர்.

 

நட்மெக் & சினமன் : தனது சக்தி என்னவென்றே அறியாதவர் என்றபோதிலும் நட்மெக் தன்னை நாடி வரும் உயர்தட்டு பெண்களை வாட்டும் ஏதோ ஒன்றிலிருந்து தற்காலிக நிவாரணம் அளிப்பவர். அவருடைய மகன் சினமன் ஆறுவயதிலிருந்து பேச்சை துறந்தவன். தன் தாயின் வேலைகளுக்கு உதவியாக இருப்பவன். எல்லா வேலைகளையும் மிக கச்சிதமான அதீத ஒழுங்குத்தன்மையுடன் செய்து முடிப்பவன். அவன் குரலிலிருந்து ஒலி எழும்பவில்லையென்ற போதிலும் அவன் சொல்ல வருவதை கேட்பவர் எந்த சிரமமும் இல்லாமல் புரிந்து கொள்வர்.

நோபோரு வடாயா : இவர் தனது உடன்பிறப்பும் டோருவின் மனைவியுமான குமினோவை நேரடியாக அல்லாமல் சில புரியாத மாயங்களைக்கொண்டு வினோதமுறையில் தன் கட்டுக்குள் வைத்து சீரழிப்பவர், தனது மற்றொரு உடன்பிறப்பையும் தனது கட்டுக்குள் வைக்க முயன்றதினால் சிறுவயதிலேயே அச்சித்திரவதைகள் தாளாமல் அவர் தற்கொலை செய்து கொள்கின்றார். அன்றாடம் எல்லா சேனல்களிலும் பேட்டி கொடுத்து எதைபற்றி கேட்டாலும் அதற்கு தகுந்த பதில்களை உடனடியாக ஆணித்தரமாக கூறவல்லவர். எதிலுமே ஆழமான புரிதல் இல்லையென்றபோதிலும் தனது பேச்சுத்திறமையாலும் வாதிடும் திறமையாலும் தனது கருத்துக்களுக்கு எதிர்கருத்துக்களை முளைக்கவிடாதவர்.
இத்தகைய காதாபாத்திரங்களுடே மேலும் சில வினோத கதாபாத்திரங்களும் விசித்திர சம்பவங்களும் கொண்டு பின்னப்பட்ட இக்கதை சில வேலைகளில் வாசிக்க அயர்ச்சியாக இருந்தாலும் வாசிக்க வேண்டாமென்று ஒதுக்கிவைக்க விடாமல் வாசகனை அலைகழிக்கின்றது. அதீத வன்முறைகளை எழுத்தில் என்றுமே வாசித்ததில்லை. திரையில் வரும் வன்முறை காட்சிகளை கடப்பது எளிது, வெகு சுலபமாக கண்களை மூடிக்கொண்டு ஒலியை மட்டும் கேட்டு நடந்தது என்னவென்று யூகித்துக்கொள்ளலாம். ஆனால் எழுத்தில் வரும் வன்முறைகளை எப்படி கடப்பது. வாசிக்காமல் சில பக்கங்களை கடப்பதற்கு மனது இடம் கொடுப்பதேயில்லை. வாசிக்காமல் பத்து பக்கங்கள் தாண்டிச்சென்ற பிறகும் மீண்டும் அதே பக்கத்திற்கு இழுத்து வந்துவிடுகின்றது மனது. வெகு சிரமமப்பட்டே சில பக்கங்களை வாசிக்க வேண்டியுள்ளது. இத்தகைய வன்முறைகளை இதற்கு முன்பு வாசித்திருக்கவில்லை.
போர் சூழலில் அகப்படும் எதிரி படையினரை கொள்ளும் வெவ்வேறு முறைகளை விரிவாகவே எழுதியிருக்கின்றார் ஹருகி. உயிரோடு தோல் உரிக்கப்படுவதையும், உடலுக்குள் ஈட்டியை இறக்கி எல்லாம் உறுப்புகளையும் சிதைத்து அணுஅணுவாக கொல்வதையும் வாசிக்கும் போது அதிர்ச்சியும் பயமும் மேலோங்கியது. தோலுரிக்கப்பட்ட ரத்தம் ஒழுகும் வெற்றுடல் கண்முன்னே சிறிது நாட்கள் தங்கிவிட்டது. நிச்சயம் அப்பகுதிகளை மட்டுமாவது மொழிபெயர்க்கும் எண்ணம் இருக்கின்றது. சைபீரிய சிறைகளை பற்றியும் அங்கு கைதிகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளும், அதை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள் சந்திக்க நேரிடும் கொடூர முடிவுகளும் வேறு பல கதைகளில் வாசித்திருந்ததால் அப்பகுதிகளை கடப்பது அத்தனை சிரமமானதாக இருக்கவில்லை. வேறொரு சந்தர்ப்பத்தில் விலங்கியல் பூங்காவில் இருக்கும் அபாய விலங்குகளை அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் புலிகளையும் சிறுத்தைகளையும் அதிக துப்பாக்கி குண்டுகளை செலவழித்துவிடாமல் கொல்வதையும் சொல்கின்றார்.
போர்காலத்தின் அனுபவங்களை தன் தந்தை சொல்லி கேட்டதாகவும் அக்காலகட்டங்களின் அனுபவங்களை பதிவிப்பது எழுத்தாளனின் கடமையென்கிறார் ஹருகி. எனினும் புனைவாகவே இக்கதையை எழுதியிருப்பதாகவும் தன் கற்பனை சிதைந்து விடாமல் இருப்பதற்காக புத்தகத்தை எழுதி முடித்த பின்னரே அக்கதையில் இடம்பெறும் மங்கோலிய மஞ்சூரிய எல்லைக்கு சென்று வந்ததாகவும் கூறுகின்றார்.
ஆங்கிலத்தில் இக்கதையை ‘ஜே ரூபின்’ மொழிபெயர்த்துள்ளார். ஜப்பானிய மொழியில் மூன்று பகுதிகளாக வெளியான இந்நாவலை இவர் முழுவதுமாக மொழிபெயர்த்திருப்பினும் பதிபகத்தார் இதன் நீளம் கருதி இரு அத்தியாயங்களை நீக்கிவிட்டதாக கூறுகின்றனர். நாவல், சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்லாது ஹருகி சிறந்த மொழிபெயர்ப்பாளரும் கூட. இவர் பல ஆங்கில இலக்கியங்களை ஜப்பானிய மொழிக்கு மொழிபெயர்த்திருக்கின்றார்.

2002ல் ஜப்பானிய மொழியிலும் 2005 ஆங்கிலத்திலும் வெளியான ‘Kafka on the Shore’ இவரது படைப்புகளில் மிக முக்கியமானதாகவும் சிறந்ததாகவும் கருதப்படுகின்றது. அப்புத்தகத்தை தேடி அலைந்தபோது அது கிடைக்காமல் ‘After Dark’ கிடைத்தது. அதை வாசித்துக்கொண்டிருந்த வேளையில் தற்செயலாக ‘The wind up bird chronicle’ மின் புத்தகமாக வந்தடைந்தது. இதை வாசித்துக்கொண்டிருக்கையில் இணையத்தில் அதிசயிக்கும் வண்ணம் Kafka on the shore முழு வடிவமும் கிடைத்தது. இப்புத்தகத்தில் துவங்கி இப்புத்தகத்தில் வந்து நிற்கும் இவ்வட்டத்திற்கும் ஹருகி முன்வைக்கும் வினோதங்களுக்கும் கூட சம்பந்தம் இருக்குமோ?

எழுத்தாளர்கள் பெரிதும் மதிக்கும் Franz Kafka விருதை பெற்ற இவரது நாவல் Kafka on the shore மேஜிகல் ரியலிசமும் மெட பிசிக்ஸ் தொட்டிருப்பதாக அறிந்த பின்னர் சிறிது கால அவகாசத்திற்கு பிறகு இதை வாசிப்பதே உகந்ததாக இருக்குமெனத் தோன்றியது. After dark அவ்வளவாக ஈர்க்கவில்லை. இரவு வாழ்வின் ஒரு பகுதியை பதிவிக்கும் வண்ணம் ஓர் இரவு முழுவதும் வெளியில் விழித்திருக்கும் கதாபாத்திரத்தின் வழி ஒவ்வொரு நிமிடமாக கதை நகர்ந்து விடிந்ததும் நிறைவு பெறுகின்றது. வா குவாட்டர் கட்டிங் படத்தின் உத்தி இங்கிருந்து தான் உருபெற்றிருக்குமோ?

Wind Up Bird Chronicle ‘theatre of dreams’ ஐரோப்பிய விழாக்களின் போது வெளியாகவுள்ளது. இதன் உருவாக்கம் பற்றிய குறிப்புகள் இப்பக்கத்தில் வாசிக்கலாம்.

தமிழில் ஹருகியின் சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வம்சி பதிபகத்தால் 2006 / 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கின்றது. சிறுகதை தொகுப்பின் பெயர் ‘100% பொருத்தமான யுவதியை ஓர் அழகான ஏப்ரல் காலையில் பார்த்த போது…’ ஆறு சிறுகதைகளை கொண்ட இத்தொகுப்பின் மொழிபெயர்ப்பாளர்கள் ஜி.குப்புசாமி, செழியன் மற்றும் ராஜகோபால். இப்புத்தகத்திற்கான கவிஞர் சுகுமாரன் முன்னுரை திண்ணையில் வாசிக்கலாம். இவரது சில சிறுகதைகள் ஆங்கிலத்திலும் இணையத்தில் வாசிக்க கிடைக்கின்றன.

‘The Wind Up Bird Chronicle’ e-book அனுப்பிவைத்த நேசமித்ரனுக்கு நன்றி.

நன்றி : http://www.complete-review.com/authors/murakamh.htm

Read Full Post »